பால்தாக்கரேயின் மரணமும், ஊடகங்களின் குருட்டுப்பார்வையும்

மதவெறி மற்றும் ஊர்வெறியை மும்பை மக்கள் மத்தியில் தூண்டிவிட்டு, நாட்டைத் துண்டாடி அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த இந்திய நாட்டில் இரத்த ஆறு ஓட்டி பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது உயிர்களையும், உடைமைகளையும் இழக்கக் காரணமாக இருந்தவர் மதவெறி பிடித்த சிவசேனா கட்சியின் தலைவர் பால்தாக்கரே.

இவர் கடந்த 17.11.12 அன்று மாரடைப்பால் மரணமடைந்தார். இவர் மரணமடைந்ததுதான் தாமதம் இவரை ஒரு மிகப்பெரிய தேசத் தியாகியைப் போலவும், இவரைப்போல நாட்டின் மீதும், நாட்டு மக்கள் மீதும் அளவுக்கதிகமான அக்கரை கொண்ட தன்னிகரில்லாத தலைவர் யாருமில்லை என்பது போலவும் ஊடகங்கள் படம் காட்டி பில்டப் கொடுத்தனர்.

பால்தாக்கரே என்ற இவர் தலைமையேற்று நடத்திய கலவரங்கள் கொஞ்ச நஞ்சமா? அதையெல்லாம் இந்த ஊடகங்கள் மறந்து விட்டனவா?

மண்ணின் மைந்தர்கள் கோசத்தை முன்வைத்து, மும்பையில் பிறந்தவர்களுக்குத்தான் மும்பை சொந்தம் என்ற ஊர் வெறி கோசத்தை முன்வைத்து, மும்பையில் வாழ்ந்த பிற மாநில மக்கள் மீது தாக்குதல் நடத்தி சிவசேனா பால்தாக்கரே நடத்திய கலவரங்களையும், அந்த கட்சியின் தீவிரவாதத் தொண்டர்கள் தமிழர்களுடைய சொத்துக்களை சூறையாடியதையும், அதனால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் மும்பையை விட்டு உயிர் பிழைத்தால் போதும் என்று தமிழ்நாட்டிற்கு ஓடி வந்ததும் இந்த ஊடகங்களுக்குத் தெரியாதா?

1993ஆம் ஆண்டு இவர் தூண்டிவிட்டதன் அடிப்படையில் மும்பையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டார்களே! அந்த கோர சம்பவங்கள்தான் இவர் செய்த தேசத் தியாகமா? அதனால்தான் இவருக்கு தேசியக்கொடி போர்த்தி மரியாதையா?

பாபர் மஸ்ஜித் இடிப்பை தொடந்து நடைபெற்ற மும்பை கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். முஸ்லிம்களின் நிறுவனங்களும் சொத்துக்களும் சூறையாடப்பட்டன . மும்பை கலவரம் குறித்து விசாரணை நடத்திய கிருஷ்ணா கமிஷன், கலவரத்திற்கு காரணம் பால்தாக்கரே என்றும் கூறி அவரை கைது செய்ய வேண்டும் என்று தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். ஆனால் தன்னை கைது செய்தால் மும்பை நகரம் பற்றி எரியும் என்று இவர் மிரட்டினாரே! இப்படி காவல்துறைக்கும் நீதிமன்றத்திற்கும் சவால் விட்டதால்தான் இவருக்கு குண்டுகள் முழங்க அரசு மரியாதையா?

பத்திரிக்கையாளர்களை தாக்கி தீவிரவாதத்தை வெளிக்காட்டிய பால்தாக்கரேயின் தீவிரவாத முகம் அதற்குள்ளாகவா ஊடகங்களுக்கு மறந்துவிட்டது?

மும்பைக்கு பிழைப்புக்காக வந்த பீகார்காரர்களையும், வட மாநிலத்தவர்களையும் உங்கள் நாட்டுக்கு ஓடுங்கள் என்று கூறி விரட்டிவிரட்டி அடித்தார்களே சிவசேனா தீவிரவாதிகள். ஒரு ஆட்டோ டிரைவர் கூட பிற மாநிலத்தவராக இருந்தால் இங்கு இருக்கக்கூடாது என்று இந்திய அரசியல் அமைப்பு சாசனச்சட்டத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய இவர்தான் ஊடகங்களின் பார்வையில் தேசத்தியாகியா?

மும்பையின் முதலாளிகளை அன்ன தாதாக்கள் என்றும், தென்னிந்தியர்களை லுங்கிவாலாக்கள், கிரிமினல்கள், குண்டர்கள், சூதாடிகள் என்றும் கூறி மும்பை நகரத்தில் கூட்டம், கூட்டமாக நகரை விட்டு தென்னிந்தியர்களை கருவறுத்ததால்தான் தமிழகத்து ஊடகங்கள் இவருக்கு பாராட்டு மழை பொழிகின்றனவா?

இப்படி நூற்றுக்கணக்கான கேள்விகள் ஊடகங்களைப் பார்த்து நாம் கேட்க வேண்டியுள்ளது.

இந்த லட்சணத்தில் ஊடகங்களுக்கு இவர் செய்த அநியாயங்களை பட்டியல் போடுவதற்குத்தான் திராணி இல்லை; வாய்மூடி மௌனமாகவாவது இருந்துவிட்டுப் போகலாமல்லவா? அதைவிட்டு விட்டு இவர் செய்த அனைத்து அநியாயங்களையும், அக்கிரமங்களையும் அனைத்து ஊடகங்களும் பாராட்டி புகழ்ந்து தள்ளியுள்ளன.

எந்த அளவிற்கென்றால், முதன் முதலில் முஸ்லிம்களுக்கு எதிராக தற்கொலைப்படையை 2002 ஆம் ஆண்டு உருவாக்கி அதிர்ச்சி வைத்தியம் அளித்தவர்தான் இந்த பால்தாக்கரே என்றும், மண்ணின் மைந்தர்கள் கோசத்தை முதன்முதலில் முன்வைத்தவர் இந்த பால்தாக்கரேதான் என்றும், இந்த ஊடகம் நடத்துபவர்கள் புகழ்ந்து தள்ளுகின்றார்கள் என்றால் இவர்களை என்னவென்பது?

அதுமட்டுமல்லாமல், இதுவரைக்கும் சுதந்திர இந்தியாவில் பொது இடத்தில் வைத்து எவரது உடலும் தகனம் செய்யப்பட்டதில்லையாம். இந்த தியாகி(?) உடைய உடல் மட்டும்தான் சுதந்திர இந்தியாவில் பொது இடத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டுள்ளது என்றும் புகழாரம் சூட்டியுள்ளன.

அதுமட்டுமல்லாமல், பால்தாக்கரே எந்த அரசாங்கப் பொறுப்பிலும் இருக்கவில்லை. மாறாக அரசாங்கத்திற்கு எதிராகவும், நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும் போர் தொடுத்தார். அப்படிப்பட்டவருக்கு நாட்டின் தேசியக் கொடியை போர்த்தி அழகு பார்த்ததை கண்டிக்க எந்த ஒரு ஊடகங்களுக்கும் துப்பில்லை.

அதிலும் இவருக்கு அரசு மரியாதையுடன் குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலியாம். இதுவரைக்கும் எந்த அரசு பொறுப்பிலும் இல்லாத ஒரு நபருக்கு அரசு மரியாதையோடு உடல் தகனம் செய்வது இதுவே முதல் முறை என்றும் அதையும் புகழ்ந்து எழுதியுள்ளன நம் நாட்டு காவி கரை படிந்த ஊடகங்கள்.

விட்டால் இவருக்கு தேசத்தியாகி என்ற பட்டம் கொடுத்து இவரது வாழ்க்கையை பாடப் புத்தகங்களில் தனியொரு பாடமாக்கி விடுவார்கள் போலத் தெரிகின்றது.

அதுமட்டுமல்லாமல், குறிப்பாக நமது தமிழகத்து ஊடகங்களுக்கு கொஞ்சம் மொழிப்பற்று(?) அதிகம்.

பால்தாக்கரேயின் மரணமும், ஊடகங்களின் குருட்டுப்பார்வையும்

தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா! என்றெல்லாம் வெட்டி பந்தா காட்டுவார்கள்.

பால்தாக்கரே தமிழர்களை கருவறுத்த செய்திகளையாவது குறைந்தபட்சம் இவர்கள் சுட்டிக்காட்டுவார்களா என்று பார்த்தால், அவர்களிடத்திலுள்ள மதவெறி அவர்களது மொழிவெறியை மறைத்துவிட்டது என்று சொல்லக்கூடிய அளவிற்கு தமிழர்கள் குறித்தும் எந்த ஊடகமும் வாய்திறக்கவில்லை.

தமிழனத் தலைவர்(?) என்று பீற்றிக்கொள்ளும் கருணாநிதியும் இவருக்கு இரங்கல் தெரிவித்து புகழாரம் சூட்டி தான் ஒரு மிகச்சிறந்த அரசியல்வாதி என்பதை நிரூபித்துள்ளார்.

இப்படி ஊடகத்துறையே ஒன்று சேர்ந்து தேசத்தின் இறையாண்மைக்கு எதிராக களம் கண்ட ஒருவருக்கு ஆதரவாக, அவரைத் தேசத்தியாகியாக சித்தரித்து செய்திகள் வெளிவந்த நிலையில் ஒரே ஒரு விஷயம் மட்டும் நமக்கு ஆறுதல் தந்தது.

ஆம்! இந்திய பிரஸ் கவுன்சிலின் தலைவராக உள்ள முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு விடுத்த அறிக்கைதான் அந்த ஆறுதலான விஷயம்.

மண்ணின் மைந்தர்கள் கோசத்தை முன்வைத்து இந்திய நாட்டினரை துண்டாட முயன்று தேசத்துரோகத்தைச் செய்த பால்தாக்கரேக்கு இரங்கல் தெரிவிக்க இயலாது என்றும், இறந்துவிட்டார் என்பதால் அவரைப்பற்றி நல்ல வார்த்தை கூற தன்னால் இயலாது என்றும் மார்க்கண்டேய கட்ஜு துணிச்சலாக அறிவித்துள்ளார்.

மார்க்கண்டேய கட்ஜுவைப் போல துணிச்சலாக உண்மையைப் போட்டு உடைக்கும் தன்மை அனைத்து ஊடகங்களுக்கும் வரவேண்டும். இல்லையென்றால் காலப்போக்கில் கோட்சே கூட தேசத்தியாகியாக மாறினால் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இன்னும் திருந்தாத கூட்டம் :

சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் இறுதிச் சடங்கு நடக்கையில் மும்பையில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மேலும் அவர் கவலைக்கிடமாக இருந்த நாட்களிலும் பதற்றம் காணப்பட்டு மும்பையில் கடைகள் அடைக்கப்பட்டே இருந்தன. இது குறித்து ஃபேஸ்புக்கில் கேள்வி எழுப்பிய இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது உறவினரின் மருத்துவமனையை சிவசேனா தொண்டர்கள் அடித்து நொறுக்கினர்.

பால்தாக்கரே மரணமடைந்ததையடுத்து மும்பையில் உள்ள அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன. இந்நிலையில் 21 வயது பெண் ஒருவர் இந்த முழு அடைப்பை எதிர்த்து ஃபேஸ்புக்கில் கமெண்ட் கொடுத்துள்ளார்.

ஃபேஸ்புக்கில் அவர் கூறியிருந்ததாவது,

தினமும் ஒரு தாக்கரே பிறந்து, இறக்கிறார். அதற்காக எல்லாம் பந்த் நடத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு ஃபேஸ்புக்கில் ஒரு பெண் லைக் கொடுத்திருந்தார்.

இந்த கருத்து வெளியான ‘பேஸ் புக்’ கணக்கின் முகவரி ஒரு மூட்டு சிகிச்சை மையத்தின் பெயரில் இருந்தது. இதை மோப்பம் பிடித்த சிவசேனா குண்டர்கள் அந்த மருத்துவமனைக்குத் திரண்டு சென்றனர்.

யார் ஃபேஸ் புக்கில் இந்தக் கருத்தை எழுதியது என்று கேட்டு மிரட்டவே, 21 வயது பெண் ஒருவர் வந்து, ‘என் மனதில் பட்டதை தவறுதலாக பேஸ் புக்கில் வெளியிட்டேன். அந்த கருத்தை நீக்கி விடுகிறேன்’. என்று கூறி வந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

இருந்தாலும் அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். இந்தக் கருத்தை ஆமோதித்து ‘லைக்’ கொடுத்த இன்னொரு பெண்ணும் கைது செய்யப்பட்டார். 2 பெண்கள் மீதும், மத உணர்வுகளை காயப்படுத்துதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கமெண்ட் போட்ட பெண் அதை வாபஸ் பெற்றதுடன் மன்னிப்பும் கேட்டபோதிலும் பால்கர் பகுதியில் உள்ள அவரது உறவினரின் மருத்துவமனையை சுமார் 2,000 சிவசேனா தொண்டர்கள் சேர்ந்து அடித்து, நொறுக்கியுள்ளனர்.

பால்தாக்கரே செய்த தேச விரோதச் செயல்களை அந்தப் பெண் பட்டியல் போடவில்லை. இவர் இறந்ததற்கு எதற்கு கடையடைப்பு நடத்த வேண்டும் என்று கேள்வி கேட்ட பெண்ணையும், அதை லைக் என்று கிளிக் செய்த பெண்ணையும் மாநில அரசாங்கம் கைது செய்துள்ளது.

அந்த அப்பாவிப் பெண்கள் மீது எந்தப் பிரிவுகளில் வழக்குப்பதிந்துள்ளனர் என்பதைக் கேட்டால் உலகமே காரித்துப்பும். அதாவது மத உணர்வுகளை காயப்படுத்துதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் அந்த அப்பாவிப் பெண்கள் மீது காவல்துறையினர் வழக்குப்போட்டுள்ளார்களாம்.

சிவசேனா கட்சித் தலைவர் பால்தாக்கரேயும், அவர்களது காட்டுமிராண்டி தொண்டர்களும் எத்தனை பேருடைய மத உணர்வுகளை புண்படுத்தியிருப்பார்கள்? அது இந்த மாநில அரசுக்குத் தெரியவில்லை. மாறாக அந்தப் பெண் கேட்ட நியாயமான கேள்வி இவர்களது மனதை புண்படுத்திவிட்டதாம்.

இவ்வளவுக்கு அந்தப் பெண் தான் எழுதியதற்காக மன்னிப்புக் கேட்ட பிறகும் அந்தப் பெண்ணின் உறவினரது மருத்துவமனையை சூறையாடியுள்ளனர் இந்த குண்டர்கள்.

அதே நேரத்தில் மருத்துவமனையை அடித்து நொறுக்கிய சண்டாளர்களை காவல்துறை ஒன்றும் செய்யவில்லை. இத்தகைய மிகக்கேவலமான நிலைதான் இந்நாட்டில் நிலவுகின்றது எனும்போது இன்னும் பல கோட்சேக்கள் தேசத்தியாகிகளாக ஆவதற்கு இந்நாட்டில் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

கோட்சேக்களுக்கு கொண்டாட்டம்தான்.

அறிந்து கொண்டே சரியானதைத் தவறானதுடன் கலக்காதீர்கள்! உண்மையை மறைக்காதீர்கள்!

அல்குர்ஆன் 2:42