பெண்கள் பருவமடையும் விழாவினால் தான் மாப்பிள்ளைகள் அமையும் என்பது சரியா?

பெண்கள் பருவமடையும் போது அதை விளம்பரம் செய்தால் தான் பெண் கேட்டு வருவார்கள். இந்த வீட்டில் திருமணத்துக்குத் தகுதியான ஒரு பெண் இருக்கிறாள் என்பது அப்போது தான் தெரியும் என்று இதற்கு காரணம் கூறுகிறார்கள். இது சரியா?

அப்துல் அலீம் அய்யம்பேட்டை

முஸ்லிம்களைப் பொருத்த வரை தங்களின் அனைத்து காரியங்களையும் அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டிய வழியில் தான் நடத்த வேண்டும். சில காரணங்களை நாமாகக் கற்பனை செய்து கொண்டு சடங்குகளை உருவாக்கக் கூடாது.

பெண்கள் புகுந்த வீட்டில் சிரமப்படக் கூடாது என்பதற்காகவே வரதட்சணை கொடுக்கிறோம் என்று கூறுவது போலவும், கள்ளச் சாராயம் குடித்து சாகக் கூடாது என்பதற்காகவே டாஸ்மாக் கடை திறந்துள்ளோம் என்பது போலவும் எல்லா தவறான காரியங்களுக்கும் காரனங்கள் கூறப்படுகின்றன. இந்தக் காரணங்களில் சிறிதும் உண்மை இல்லை.

உலகில் இந்தியா தவிர வேறு நாடுகளில் பருவ வயது அடைவதற்கு விழாக்கள் இல்லை. அங்கெல்லாம் பெண்களுக்கு வரண் கிடைக்கவில்லையா?

ஆணுக்குத் திருமணம் செய்ய எண்ணும் பெற்றோர் எந்த வீட்டில் பெண் இருக்கிறார் என்று விசாரித்துப் பார்த்து பெண் கேட்டு வருவார்கள். அது போல் பெண் வீட்டாரும் விசாரித்துப் பார்த்து மாப்பிள்ளை பேசுவார்கள். பூபெய்தல் விழாவுக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை.

பெண்ணுக்கு மாப்பிள்ளை அவசியம் என்பது போல் ஆணுக்கும் பெண் அவசியம் தானே? அப்படியானால் எங்கள் வீட்டில் வயசுக்கு வந்த ஆண் இருக்கிறான் என்பதற்காக ஏன் விழா நடத்தவில்லை?

கொடுத்த அன்பளிப்பை மொய் எனும் பெயரில் திரும்பப் பெறுவதற்காகவே இது போன்ற விழாக்களை மற்ற மதத்தவர்கள் உருவாக்கினார்கள். கொடுத்த அன்பளிப்பை திரும்பக் கேட்கக் கூடாது என்ற கொள்கையுடைய இஸ்லாத்தில் இந்த விழா தேவையற்றது.