பெண்கள் ஆட்சிக்கு வருவதற்கு வாக்களிக்கலாமா?
பெண்களை ஆட்சியில் அமர்த்தக் கூடாது என்பது மார்க்கத்தின் நிலை. அப்படியிருக்க கடந்த தேர்தலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஏன் ஜெயலலிதாவை ஆதரித்தது?
ஃபஹத்
பதில் :
பெண்களை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்துவது கூடாது என்று மார்க்கத்தில் சொல்லப்பட்டிருப்பதைப் போல் இறை மறுப்பாளர்களையும் ஆட்சியில் அமர்த்தக் கூடாது என்று சொல்லப்பட்டிருக்கின்றது.
لَا يَتَّخِذْ الْمُؤْمِنُونَ الْكَافِرِينَ أَوْلِيَاءَ مِنْ دُونِ الْمُؤْمِنِينَ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَلَيْسَ مِنْ اللَّهِ فِي شَيْءٍ إِلَّا أَنْ تَتَّقُوا مِنْهُمْ تُقَاةً وَيُحَذِّرُكُمْ اللَّهُ نَفْسَهُ وَإِلَى اللَّهِ الْمَصِيرُ(28)3
நம்பிக்கை கொண்டோர், நம்பிக்கை கொண்டோரை விட்டு விட்டு (ஏக இறைவனை) மறுப்போரைப் பொறுப்பாளர்களாக ஆக்கக் கூடாது. இவ்வாறு செய்பவருக்கு அல்லாஹ்விடமிருந்து (பாதுகாப்பு) எதுவுமில்லை. அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக தவிர. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறான். திரும்புதல் அல்லாஹ்விடமே உள்ளது.;
திருக்குர்ஆன் 3:28
இறை மறுப்பாளர்களை நமது பொறுப்பாளர்களாக ஆக்கிக் கொள்ளக்கூடாது என்று இவ்வசனம் கூறுகிறது.
இஸ்லாம் வலியுறுத்தும் தகுதியில் வேட்பாளர்கள் களத்தில் நிற்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய கட்டளையே இது. சரியான முஸ்லிமை இந்த நாட்டின் அதிபராக தேர்வு செய்ய வாய்ப்பு இருந்தால் தான் இதைச் செயல்படுத்த முடியும்.
முஸ்லிம்கள் சிறுபான்மையாக உள்ள நாடுகளில் களத்தில் நிற்பவர்களில் யார் குறைவான தீமை செய்பவர்கள் என்ற அடிப்படையிலோ அதிக நன்மை செய்பவர் யார் என்ற அடிப்படையிலோ தான் ஒருவரை தேர்வு செய்ய முடியும்.
ஒரு ஆண் முஸ்லிம்களை அழித்து ஒழிப்பதை தனது கொள்கையாக வைத்துள்ளார். அவருக்கு எதிராக நிற்கும் பெண் முஸ்லிம்களை அழிக்கத் திட்டமிட மாட்டார் என்றால் இப்போது நாம் பெண்ணைத் தான் ஆதரிக்க வேண்டும்.
எனவே பெண் என்ற காரணத்தால் ஜெயலலிதாவை ஆதரிக்கக் கூடாது என்றால் இறை மறுப்பாளர் என்ற காரணத்தால் கருணாநிதியையும் முஸ்லிம் அல்லாத மற்ற தலைவர்களையும் ஆதரிப்பது கூடாது என்றே கூற வேண்டும். மொத்தத்தில் மத்திய தேர்தலிலும், மாநிலத் தேர்தலிலும் வாக்களிக்கக் கூடாது என்றே கூற வேண்டும்.
ஆனால் இவ்வாறு நாம் முடிவெடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் மேற்கண்ட வசனத்தில் அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக தவிர என்று விதிவிலக்கு கூறப்படுகின்றது. அதாவது நம்முடைய பாதுகாப்பிற்காக ஒரு இறைமறுப்பாளரை ஆட்சித் தலைவராக ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழல் வந்தால் அவரை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை என்று இவ்வசனம் கூறுகின்றது.
தற்போது சமுதாயத்தின் பாதுகாப்பு கருதியே கருணாநிதியாக இருந்தாலும் ஜெயலலிதாவாக இருந்தாலும் அவர்களை நாம் ஆதரிக்கின்றோம்.
யாருக்கும் ஓட்டுப்போட வேண்டாம் என்ற நிலைபாட்டை எடுத்தால் முஸ்லிம்களின் வாக்குகள் பதிவு செய்யப்படாது. எனவே நம் சமுதாயத்தை அழிக்க நினைப்பவர்களும், நமக்கு அதிகத் தீங்கு செய்யக் கூடியவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விடுவார்கள்.
போட்டியிடுபவர்களில் யார் நமது சமுதாயத்துக்கு நன்மை செய்வார்? நன்மை செய்யாவிட்டாலும் யார் தீமை செய்யாமல் இருப்பார்? அல்லது குறைந்த தீமை செய்பவர் யார் என்று பார்த்து அதற்குத் தகுதியானவர்களுக்கு நாம் வாக்களித்தால் நமது வாக்குகள் அவர்கள் வெற்றி பெறுவதற்கும், பெரிய எதிரிகள் தோல்வியுறுவதற்கும் காரணமாக அமையும்.
அரசியல்வாதிகள் ஓட்டுக்காக மட்டுமே மக்களை நாடிவருகிறார்கள். அதிக ஓட்டு கிடைக்கும் என்றால் அதற்காக எதையும் செய்யத் தயாராகிறார்கள். எனவே இதைப் பயன்படுத்தி ஒவ்வொரு தேர்தலிலும் நமது சமுதாயத்துக்கு நன்மையை நம்மால் பெற்றுத் தர முடியும்.
எனவே பாதுகாப்புக் கருதி கருணாநிதியையோ, ஜெயலலிதாவையோ ஆதரித்தால் அது குற்றமாகாது.