பேராசை என்றால் என்ன?

ஆசைக்கும், பேராசைக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அதிகமான பணத்தை விரும்புவதுதான் பேராசை என்று பலரும் நினைக்கின்றனர். அது தவறாகும். அற்பமான செல்வத்தின் மீதுள்ள ஆசைகூட பேராசையாக அமைந்து விடும்.

ஒரு விஷயத்தை எந்த இடத்தில் வைக்க வேண்டுமோ அந்த இடத்தில் அதை வைத்து விரும்புவது ஆசையாகும். இதற்கு மார்க்கத்தில் தடை இல்லை. ஆனால் முக்கியமான விஷயத்தைப் புறக்கணித்து விட்டு முக்கியம் குறைந்தவை மீது வைக்கும் ஆசையே பேராசை எனப்படும்.

பொருளாதாரம் மிகவும் முக்கியமானது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதைவிட முக்கியமானவையும் உள்ளன. பொருளாதாரத்துக்காக அந்த முக்கியமானவைகளை ஒருவன் புறக்கணித்து விட்டு பொருளாதாரத்தின் பின்னால் சென்றால் அவனுக்குப் பொருளாதாரத்தில் பேராசை உள்ளது என்று புரிந்து கொள்ளலாம்.

தொழுகையை விட்டுவிட்டு ஒரு காரியத்தில் ஈடுபடுவதால் ஒருவனுக்குப் பணம் கிடைக்கும் என்றால் தொழுகையை விட்டுவிட்டு அந்தப் பணத்திற்கு ஆசைப்படுவது பேராசை. தொகை சிறிதாக இருந்தாலும் அது பேராசைதான். காரணம் பணத்தை அடைவதற்காக அதைவிட முக்கியமானதை அவன் விட்டு விட்டான்.

அது போல் மனைவியுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய கடமை மனிதனுக்கு உண்டு. அதில் மனிதனுக்கு ஆசையும் உண்டு. ஆனால் அதிகமான பணம் கிடைக்கிறது என்பதற்காக மனைவியை விட்டு பல வருடங்கள் பிரிந்து விட ஒருவன் முன்வந்தால் அதற்குக் காரணமும் பேராசைதான். மனைவியுடன் மகிழ்ச்சியாக இருப்பதை விட பணத்துக்கு இவன் முதலிடம் கொடுத்ததால் இது பேராசையாகி விடுகிறது.

சமூகத்தைப் பாதுகாக்கும் அவசியம் ஏற்படும்போது அதில் பங்கு பெறாவிட்டால் சமுதாயத்தைப் பாதிக்கும் என்ற நிலையில் பணம் திரட்டச் சென்றால் அதுவும் பேராசைதான்.

குடும்பத்தில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருக்கிறார். அவருக்கு உயர்தரமான சிகிச்சை அளிக்க நம்மிடம் வசதி இருக்கும்போது அரசாங்க மருத்துவ மனையில் சேர்த்தால் அதுகூட பேராசைதான்.

சுருக்கமாகச் சொன்னால் பணத்தை விட முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய விஷயங்களுடன் பணம் மோதும்போது நாம் பணத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதே பேராசையாகும்.

ஒருவனுக்கு மருத்துவ சிகிச்சைக்காக பத்து லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. இதை அடைவதற்காக அவன் ஆசைப்பட்டால் தொகை பெரிதாக இருந்தாலும் அது பேராசையாகாது. இது நியாயமான ஆசை தான். கூனிக்குறுகி கும்பிடு போட்டால் பத்து ரூபாய் கிடைக்கும் என்றால் அதற்கு ஆசைப்படுவது பேராசையாகிவிடும். ஏனெனில் மானம் மரியாதையை விட பத்து ரூபாய் இவனுக்குப் பெரிதாக தெரிகின்றது.