பெருநாள் தினத்தில் மட்டுமே குர்பானி!
வசதி படைத்தவர்கள் ஹஜ் பெருநாள் தினத்தில் குர்பானி கொடுப்பது கட்டாயக் கடமையாகும்.
ஹஜ்ஜுப் பெருநாளை அடுத்து வரும் 11, 12, 13 ஆகிய நாட்களிலும் குர்பானி கொடுக்கலாமா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.
பெருநாள் தினத்தில் மட்டுமே குர்பானி கொடுக்க வேண்டும்; 11,12, 13 ஆகிய நாட்களில் கொடுப்பது குர்பானி ஆகாது; அப்படிச் செய்தால் குர்பானிக் கடமை நிறைவேறாது என்பதே சரியான கருத்தாகும்.
இது பற்றி விளக்குவதற்காகவே இப்பிரசுரம் வெளியிடப்படுகிறது.
குர்பானியின் முன்னோடி இப்ராஹீம் (அலை)
இப்ராஹீம் நபியவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டுதல்படி தமது மகனை அறுத்துப் பலியிட முன்வந்து அறுக்க முனையும் போது அல்லாஹ் ஒரு பலிப்பிராணியை இறக்கி அதை அறுக்கச் செய்தான். இது தான் குர்பானியின் பின்னணியாகும்.
இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, “இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்” என்று அவரை அழைத்துக் கூறினோம். இது தான் மகத்தான சோதனை. பெரிய பலிப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம். பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம்.
திருக்குர்ஆன் 37:103-107
இப்ராஹீம் நபியவர்கள் பலியிட்டதைப் பின்பற்றி குர்பானி கொடுப்பதைச் சட்டமாக்கி அல்லாஹ் அவர்களின் புகழை நிலைக்கச் செய்தான்.
இப்ரஹீம் நபியவர்கள் நான்கு நாட்கள் குர்பானி கொடுத்திருப்பார்களா? நிச்சயமாக ஒரு நாளில் தான் குர்பானி கொடுத்திருக்க முடியும்.
எனவே குர்பானி கொடுக்கும் நாள் இப்ராஹீம் நபியவர்கள் குர்பானி கொடுத்த அந்த ஒரு நாள் தான். நான்கு நாட்கள் அல்ல என்பது உறுதி.
இப்ராஹீம் நபி குர்பானி கொடுத்த நாளில் தான் நாமும் குர்பானி கொடுக்க வேண்டும் என்றால் இப்ராஹீம் நபி ஆட்டையோ, மாட்டையோ ஒட்டகத்தையோ ஏதோ ஒன்றைத் தான் குர்பானி கொடுத்திருப்பார்கள். நாம் அந்த ஒன்றைக் கொடுக்காமல் ஆடு மாடு ஒட்டகம் ஆகியவற்றில் எதையும் கொடுக்கலாம் என்று சொல்வது ஏன் என்று சிலர் எதிர்க் கேள்வி கேட்கிறார்கள்.
ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில் ஏதோ ஒன்றைத் தான் இப்ராஹீம் நபி குர்பானி கொடுத்திருப்பார்கள் என்பது சரிதான். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆடு, மாடு ஒட்டகங்களில் எதையும் கொடுக்கலாம் என வழிகாட்டியுள்ளனர். மூன்றில் எதையும் கொடுக்கலாம் என்று நபிகளின் வழிகாட்டுதல் உள்ளதால் இப்ராஹீம் நபி கொடுத்த பிராணியைத் தான் கொடுக்க வேண்டும் என்ற வாதம் எடுபடாது.
ஆனால் குர்பானி கொடுக்கும் நாளைப் பொருத்தவரை பெருநாள் தவிர வேறு நாட்களில் கொடுக்க ஆதாரம் இல்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.
அந்த ஒரு நாள் எது?
இப்ராஹீம் நபியவர்கள் குர்பானி கொடுத்த அந்த ஒரு நாள் எதுவாக இருக்கும்?
இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விளக்கி விட்டார்கள்.
صحيح البخاري
67 – حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا بِشْرٌ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، ذَكَرَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَعَدَ عَلَى بَعِيرِهِ، وَأَمْسَكَ إِنْسَانٌ بِخِطَامِهِ – أَوْ بِزِمَامِهِ – قَالَ: «أَيُّ يَوْمٍ هَذَا»، فَسَكَتْنَا حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ سِوَى اسْمِهِ، قَالَ: «أَلَيْسَ يَوْمَ النَّحْرِ» قُلْنَا: بَلَى، قَالَ: «فَأَيُّ شَهْرٍ هَذَا» فَسَكَتْنَا حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ، فَقَالَ: «أَلَيْسَ بِذِي الحِجَّةِ» قُلْنَا: بَلَى، قَالَ: «فَإِنَّ دِمَاءَكُمْ، وَأَمْوَالَكُمْ، وَأَعْرَاضَكُمْ، بَيْنَكُمْ حَرَامٌ، كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا، فِي شَهْرِكُمْ هَذَا، فِي بَلَدِكُمْ هَذَا، لِيُبَلِّغِ الشَّاهِدُ الغَائِبَ، فَإِنَّ الشَّاهِدَ عَسَى أَنْ يُبَلِّغَ مَنْ هُوَ أَوْعَى لَهُ مِنْهُ»
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓர் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருக்க, ஒரு மனிதர் அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இது எந்த நாள்? என்று கேட்டார்கள். அந்த நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று எண்ணுமளவுக்கு நாங்கள் மௌனமாக இருந்தோம். இது நஹ்ருடைய (அறுப்பதற்குரிய) நாள் அல்லவா? என்று கேட்டார்கள். நாங்கள் ஆம்’ என்றோம். …….
நூல் : புகாரி 67, 968, 1640, 1691
துல்ஹஜ் மாதம் பத்தாம் நாளைப் பற்றி இது எந்த நாள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேள்வி எழுப்பி இது நஹ்ருடைய (அறுப்பதற்குரிய) நாள் என்று விடையும் சொல்லி விட்டார்கள்.
பெருநாளில் தான் அறுக்க வேண்டும் என்பதும், அந்த நாளில் தான் இப்ராஹீம் நபி அறுத்துப் பலியிட்டார்கள் என்பதும் இதிலிருந்து தெரிகிறது.
குர்பானி கொடுக்க நான்கு நாட்கள் உள்ளன என்றால் இது அறுப்பதற்குரிய நான்கு நாட்களில் ஒரு நாள் அல்லவா என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி இருப்பார்கள்.
இந்த ஹதீஸ் மூலம் ஒரு நாள் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் உறுதியாகிறது.
நான்கு நாட்கள் குர்பானி கொடுக்கலாம் என்போரின் ஹதீஸ் ஆதாரங்கள்.
தஷ்ரீகுடைய நாட்கள் (11,12,13) அனைத்தும் அறுப்பதற்குரிய நாளாகும் என்ற கருத்தில் பல அறிவிப்புகள் உள்ளன. அவற்றைத் தங்களின் ஆதாரமாக முன் வைக்கிறார்கள்.
முதல் அறிவிப்பு
16751 – حَدَّثَنَا أَبُو الْمُغِيرَةِ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، قَالَ: حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ مُوسَى، عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” كُلُّ عَرَفَاتٍ مَوْقِفٌ، وَارْفَعُوا عَنْ بَطْنِ عُرَنَةَ ، وَكُلُّ مُزْدَلِفَةَ مَوْقِفٌ، وَارْفَعُوا عَنْ مُحَسِّرٍ، وَكُلُّ فِجَاجِ مِنًى مَنْحَرٌ، وَكُلُّ أَيَّامِ التَّشْرِيقِ ذَبْحٌ “
தஷ்ரீக்கின் அனைத்து நாட்களும் (11,12,13) அறுப்பதற்குரிய நாட்களாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : அஹ்மத்
இந்த ஹதீஸ் பைஹகீ, 10226, பைஹகீ 19236 ஆகிய நூல்களிலும் உள்ளது.
அஹ்மத், பைஹகீ ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்ட இந்த ஹதீஸை ஜுபைர் பின் முத்இம் என்ற நபித்தோழர் கூறியதாக சுலைமான் பின் மூஸா அறிவிக்கிறார். இவர் அந்த நபித்தோழரைச் சந்தித்ததில்லை என்று புகாரி, இப்னு கஸீர் உள்ளிட்ட அறிஞர்கள் கூறுகின்றனர். இதனால் இது தொடர்பு அறுந்த பலவீனமான ஹதீஸ் ஆகும் என்று இப்னு ஹஜர் கூறுகிறார்.
இரண்டாவது அறிவிப்பு
المعجم الكبير للطبراني
1562- حَدَّثَنَا أَحْمَدُ بن يَحْيَى بن خَالِدِ بن حَيَّانَ الرَّقِّيُّ ، حَدَّثَنَا زُهَيْرُ بن عَبَّادٍ الرُّوَاسِيُّ ، حَدَّثَنَا سُوَيْدُ بن عَبْدِ الْعَزِيزِ ، عَنْ سَعِيدِ بن عَبْدِ الْعَزِيزِ ، عَنْ سُلَيْمَانَ بن مُوسَى ، عَنْ نَافِعِ بن جُبَيْرٍ ، عَنْ أَبِيهِ ، أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : كُلُّ عَرَفَةَ مَوْقِفٌ ، وَارْفَعُوا عَنْ عُرَنَةَ ، وَكُلُّ مُزْدَلِفَةَ ، مَوْقِفٌ ، وَارْفَعُوا عَنْ بَطْنِ مُحَسِّرِ ، وَكُلُّ أَيَّامِ التَّشْرِيقِ ذَبْحٌ ، وَكُلُّ فِجَاجِ مَكَّةَ ، مَنْحَرٌ.
தஷ்ரீக்கின் அனைத்து நாட்களும் (11,12,13) அறுப்பதற்குரிய நாட்களாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
தப்ரானி கபீர்
இதன் அறிவிப்பாளர் தொடரில் சுவைத் பின் அப்துல் அஸீஸ் என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார்.
இவர் விடப்பட்டவர் (அதாவது பொய்யர் என சந்தேகிக்கப்பட்டவர்) என்று அஹ்மத் பின் ஹம்பல் கூறுகிறார். இவர் நம்பகமானவர் அல்ல, பலவீனமானவர் என்று இப்னு மயீன், இப்னு சஅது, புகாரி, நஸாயீ, அபூஹாத்தம், யாகூப் பின் சுஃப்யான், ஹாகிம், இப்னு ஹிப்பான், பஸ்ஸார் உள்ளிட்ட அறிஞர்கள் கூறுகின்றனர். இவர் ஹதீஸ்களில் அதிகம் தவறிழைப்பவர் என்று திர்மிதீ கூறுகிறார்.
எனவே இந்த ஹதீஸும் ஆதாரப்பூர்வமானது அல்ல.
மூன்றாவது அறிவிப்பு
ابن حبان
(3942)- [3854] أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ عَبْدِ الْجَبَّارِ الصُّوفِيُّ بِبَغْدَادَ، حَدَّثَنَا أَبُو نَصْرٍ التَّمَّارُ عَبْدُ الْمَلِكِ بْنِ عَبْدِ الْعَزِيزِ الْقُشَيْرِيُّ فِي شَوَّالٍ سَنَةَ سَبْعٍ وَعِشْرِينَ وَمِائَتَيْنِ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي حُسَيْنٍ، عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” كُلُّ عَرَفَاتٍ مَوْقِفٌ، وَارْفَعُوا عَنْ عُرَنَةَ، وَكُلُّ مُزْدَلِفَةَ مَوْقِفٌ، وَارْفَعُوا عَنْ مُحَسِّرٍ، فَكُلُّ فِجَاجِ مِنًى مَنْحَرٌ، وَفِي كُلِّ أَيَّامِ التَّشْرِيقِ ذَبَحٌ “
தஷ்ரீக்கின் அனைத்து நாட்களிலும் (11,12,13) அறுத்தல் உண்டு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : இப்னு ஹிப்பான்
இப்னு அதீ, பஸ்ஸார் ஆகிய அறிஞர்களும் இந்த ஹதீஸைப் பதிவு செய்துள்ளனர்.
இதை அப்துர்ரஹ்மான் பின் அபீ ஹுஸைன் என்பார் அறிவிக்கிறார்.
இந்த ஹதீஸை ஜுபைர் பின் முத்இம் என்ற நபித்தோழர் வழியாக அப்துர்ரஹ்மான் பின் அபீ ஹுசைன் அறிவிக்கிறார். ஆனால் இவர் அந்த நபித்தோழரைச் சந்தித்ததில்லை என்று பஸ்ஸார் கூறுகிறார். இதுவும் தொடர்பு அறுந்த ஹதீஸாகும்.
நான்காவது அறிவிப்பு
سنن الدر قطني
(4190)- [4713] حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ، نَا أَحْمَدُ بْنُ عِيسَى الْخَشَّابُ، نَا عَمْرُو بْنُ أَبِي سَلَمَةَ، نَا أَبُو مُعَيْدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى، أَنَّ عَمْرَو بْنَ دِينَارٍ، حَدَّثَهُ، عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” كُلُّ أَيَّامِ التَّشْرِيقِ ذَبْحٌ “
தஷ்ரீக்கின் அனைத்து நாட்களும் (11,12,13) அறுப்பதற்கு உரிய நாட்களாகும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்
நூல் : தாரகுத்னீ
இந்த ஹதீஸ் பைஹகீயிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஹதீஸ் சரியான ஹதீஸ் என்று இப்னு ஹஜர் கூறியுள்ளார். ஆனால் உண்மையில் இது பலவீனமான ஹதீஸ் ஆகும்.
فتح الباري – ابن حجر
وفي كل أيام التشريق ذبح أخرجه أحمد لكن في سنده انقطاع ووصله الدارقطني ورجاله ثقات
தஷ்ரீகுடைய நாட்களில் அறுத்துப் பலியிடலாம் என்ற ஹதீஸை அஹ்மத் பதிவு செய்துள்ளார். இது அறிவிப்பாளர் தொடர்பு அறுந்ததாகும். ஆனால் தாரகுத்னீ தொடர்பு அறுபடாத ஹதீஸைப் பதிவு செய்துள்ளார். அதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்று இப்னு ஹஜர் கூறுகிறார்.
நூல் : ஃபத்ஹுல் பாரி
இந்த அறிவிப்பாளர் தொடர் நம்பகமானவர்களைக் கொண்டது என்று இப்னு ஹஜர் கூறுவது முற்றிலும் தவறாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் உள்ள அஹ்மத் பின் ஈஸா அல் கஷ்ஷாப் என்பார் நம்பகமானவர் அல்ல. இப்னு ஹஜர் இதைக் கவனிக்கத் தவறிவிட்டார்.
المجروحين لابن حبان
76 – احْمَد بْن عِيسَى الخشاب التنيسِي من أهل تنيس يروي عَن عُمَر بْن أَبِي سَلمَة وَعبد اللَّه بن يُوسُف أخبرنَا عَنهُ بن قُتَيْبَة وَغَيره من شُيُوخنَا يروي عَن المجاهيل الْأَشْيَاء الْمَنَاكِير وَعَن الْمَشَاهِير الْأَشْيَاء المقلوبة لَا يَجُوز عِنْدِي الِاحْتِجَاج بِمَا انْفَرد بِهِ من الْأَخْبَار
அஹ்மத் பின் ஈஸா அல் கஷ்ஷாப் என்பார் பிரபலமானவர்கள் பெயரிலும், யாரென அறியப்படாதவர்கள் பெயரிலும் பல இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை அறிவித்துள்ளார். இவர் தனித்து அறிவிக்கும் ஹதீஸ்களில் இவரை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது என்று இப்னு ஹிப்பான் கூறுகிறார்.
நூல் : அல்மஜ்ரூஹீன்
الكامل في ضعفاء الرجال
وَهَذَا حَدِيثٌ بَاطِلٌ بِهَذَا الإِسْنَادِ مَعَ أَحَادِيثَ أُخَرَ يَرْوِيهَا عَنْ عَمْرو بْنِ أَبِي سَلَمَةَ بَوَاطِيلَ
அஹ்மத் பின் ஈஸா அல்கஷ்ஷாப் என்பார் அம்ரு பின் ஸலமா வழியாக பொய்யான பல செய்திகளை அறிவித்துள்ளார் என்று இப்னு அதீ கூறுகிறார்.
நூல் : அல்காமில்
மேற்கண்ட ஹதீஸும் அம்ரு பின் ஸலமா வழியாக அவர் அறிவிப்பதாகவே உள்ளது.
معرفة التذكرة
282 – إِن للقلب فرحة عِنْد أكل اللَّحْم: فِيهِ أَحْمد بن عِيسَى الخشاب التنيسِي هُوَ كَذَّاب.
இறைச்சி சாப்பிடும் போது மனதுக்கு நிறைவு ஏற்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) சொன்னதாக அறிவிக்கப்படும் செய்தியில் அஹ்மத் பின் ஈஸா அல்க்ஷ்ஷாப் எனும் பெரும் பொய்யர் இடம் பெற்றுள்ளார்.
நூல் : மஃரிபது தத்கிரா
معرفة التذكرة
361 – الْأُمَنَاء عِنْد الله ثَلَاثَة أَنا وَجِبْرِيل وَمُعَاوِيَة: فِيهِ أَحْمد بن عِيسَى الخشاب هُوَ كَذَّاب يضع الحَدِيث.
அல்லாஹ்வின் நம்பிக்கைக்கு உரியவர்கள் நான், ஜிப்ரீல், முஆவியா ஆகிய மூவர் தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதாக அறிவிக்கப்படும் செய்தியில் அஹ்மத் பின் ஈஸா அல் கஷ்ஷாப் இடம் பெற்றுள்ளார். இவர் பெரும் பொய்யராவார்.
நூல் : மஃரிஃபது தத்கிரா
اللآلىء المصنوعة في الأحاديث الموضوعة
وَقَدْ رَوَاهُ أَحْمَد بْن عِيسَى الخشاب عَنْ مُصْعَب بْن ماهان عَنِ الثَّوْرِيّ وأَحْمَد مُنكر الحَدِيث
அஹ்மத் பின் ஈஸாவின் ஹதீஸ்கள் நிராகரிக்கத்தக்கவை என்று சுயூத்தி கூறுகிறார்.
நூல் : அல் லஆலில் மஸ்னூஆ
இந்தக் கருத்தில் மற்றொரு அறிவிப்பு தாரகுத்னீ, பைஹகி ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ஹதீஸும் அஹ்மத் பின் ஈஸா அல் கஷ்ஷாப் என்பார் வழியாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸாகும்.
ஐந்தாவது அறிவிப்பு
السنن الكبرى للبيهقي
19271- ورَواه مُعَاوِيَةُ بن يَحيَى الصَّدَفِيُّ، عَن الزُّهْرِيِّ، عَن سَعِيدِ بن المُسَيَّبِ، مَرَّةً، عَن أَبِي سَعِيدٍ وَمَرَّةً، عَن أَبِي هُرَيْرَةَ رَضيَ الله عَنهمَا، عَن النَّبِيِّ صَلى الله عَلَيهِ وَسَلمَ: أَيَّامُ التَّشْرِيقِ كُلُّهَا ذَبْحٌ.
أَخبَرناهُ أَبو سَعْدٍ المَالِينِيُّ، أَخبَرنا أَبو أَحمَدَ بن عَدِيٍّ الحَافِظُ، أَخبَرنا عَبدُ اللهِ بن مُحَمَّدِ بن مُسْلِمٍ، حَدَّثنا دُحَيْمٌ، حَدَّثنا مُحَمَّدُ بن شُعَيْبٍ، حَدَّثنا مُعَاوِيَةُ بن يَحيَى، فَذَكَرَهُ وَقَالَ: عَن أَبِي سَعِيدٍ.
தஷ்ரீகுடைய நாட்கள் அனைத்தும் அறுப்பதற்குரிய நாட்களாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
நூல் : பைஹகீ
இதை முஆவியா பின் யஹ்யா அஸ்ஸதஃபீ என்பார் அறிவிக்கிறார். இவர் பலவீனமானவர் என்றும், ஹதீஸ்களைத் திருடி தன் பெயரில் அறிவிப்பவர் என்றும் பல குற்றச்சாட்டுக்கு உள்ளானவர். இதனால் இவர் பலவீனமானவர் என்று பைஹகீ, இப்னு ஹிப்பான், ஸாஜீ உள்ளிட்ட பல அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே இந்தக் கருத்தில் உள்ள ஹதீஸ்களில் ஒன்று கூட ஆதாரப்பூர்வமாக இல்லை.
பொருத்தமற்ற ஆதாரங்கள்
11,12,13 ஆகிய நாட்களிலும் குர்பானி கொடுக்கலாம் என்ற கருத்துடையோர் வேறு சில ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். அந்த ஹதீஸ்கள் சரியானதாக இருந்தாலும் குர்பானி கொடுக்கும் நாட்களைப் பற்றி அந்த ஹதீஸ்கள் பேசவில்லை.
صحيح مسلم
144 – (1141) وحَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا خَالِدٌ، عَنْ أَبِي الْمَلِيحِ، عَنْ نُبَيْشَةَ الْهُذَلِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيَّامُ التَّشْرِيقِ أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ»
தஷ்ரீகுடைய நாட்கள் உண்பதற்கும், பருகுவதற்கும் உரிய நாட்களாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : முஸ்லிம்
முஸ்லிம் உட்பட பல நூல்களில் இந்தக் கருத்துடைய ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை ஆதாரப்பூர்வமாக உள்ளன. ஆனால் இது குர்பானி கொடுப்பது பற்றிப் பேசவில்லை.
உண்ணுவதற்கும், பருகுவதற்கும் உரிய நாட்கள் என்றால் அந்த நாட்களில் நோன்பு நோற்கக் கூடாது என்ற கருத்தையே தரும். குர்பானி கொடுக்கும் நாட்கள் என்ற கருத்தை இது தராது. இதன் பொருள் என்ன என்பதைப் பின்வரும் ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே விளக்கி விட்டார்கள்.
مسند أحمد
567 – حَدَّثَنَا أَبُو سَعِيدٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ سَلَمَةَ بْنِ أَبِي الْحُسَامِ، – مَدَنِيٌّ مَوْلًى لِآلِ عُمَرَ – حَدَّثَنَا يَزِيدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ الْهَادِ عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ عَنْ أُمِّهِ، قَالَتْ: بَيْنَمَا نَحْنُ بِمِنًى إِذَا عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُ، يَقُولُ: إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: ” إِنَّ هَذِهِ أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ، فَلا يَصُومُهَا أَحَدٌ ” وَاتَّبَعَ النَّاسَ عَلَى جَمَلِهِ يَصْرُخُ بِذَلِكَ
இந்த நாட்கள் உண்பதற்கும், பருகுவதற்கும் உரிய நாட்களாகும். எனவே இந்நாட்களில் யாரும் நோன்பு நோற்க வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவிக்கச் செய்தார்கள்.
நூல் : அஹ்மத்
எனவே இது குர்பானி கொடுப்பதைப் பற்றிப் பேசவில்லை. உண்பதற்குரிய நாட்கள் என்பதற்கு இந்த நாட்களில் நோன்பு நோற்கக் கூடாது என்பது தான் பொருள் என நபிகளே விளக்கி விட்டார்கள்
ஆனால் நாம் காட்டும் ஆதாரங்கள் குர்பானியைப் பற்றி நேரடியாகவே பேசுகின்றன.
குர்ஆனில் ஆதாரம் உள்ளதா?
அடுத்து 22:28 வசனத்தில் இதற்கு ஆதாரம் உள்ளதாக வாதிடுகின்றனர்.
அந்த வசனம் இதுதான்:
அவர்கள் தங்களுடைய பயன்களை அடைவதற்காகவும், சாதுவான கால்நடைகளை அவர்களுக்கு அளித்ததற்காகக் குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும் (வருவார்கள்.) அதை நீங்களும் உண்ணுங்கள்! கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்!
திருக்குர்ஆன் 22:28
கால்நடைகளை வழங்கியதற்காக குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை நினைவு கூர்வதற்கு வருவார்கள் என்று இவ்வசனம் கூறுகிறது. குறிப்பிட்ட நாட்கள் என்று பன்மையாக உள்ளதால் குர்பானிக்கு உரிய நாட்கள் ஒரு நாள் அல்ல என்று வாதம் செய்கின்றனர்.
இவர்கள் வாதம் முற்றிலும் தவறானது என்பதையும், குர்பானியை இவ்வசனம் குறிக்காது என்பதையும் மிக எளிதாக நாம் புரிந்து கொள்ளலாம்.
இவ்வசனம் இப்ராஹீம் நபியவர்கள் ஹஜ்ஜுக்கு அழைப்பு விட்டது பற்றி பேசும் வசனமாகும். அந்த அழைப்பை ஏற்று ஹஜ்ஜுக்கு வருவோர் செய்ய வேண்டிய காரியங்கள் யாவை என்பது குறித்து இவ்வசனம் பேசுகிறது.
இதை யாரும் மறுக்கவில்லை, மறுக்கவும் முடியாது.
ஹஜ்ஜுடைய காரியங்களைப் பேசும் வனங்களில் குர்பானியைக் குறித்துப் பேசுவதாக இருந்தால் ஹஜ்ஜின் கடமைகளில் குர்பானியும் அடங்கி இருக்க வேண்டும்.
ஆனால் ஹஜ், உம்ராவைச் சேர்த்து செய்யும் போது மட்டும் தான் பலியிடுதல் கடமை. ஹஜ் மட்டும் ஒருவர் செய்தால் பலியிடுதல் கடமை இல்லை. முஸ்லிம்களில் உள்ள எந்தப் பிரிவும் ஹஜ்ஜுக்கு குர்பானி அவசியம் என்று கூறவே இல்லை.
இந்த வசனம் குர்பானியைப் பற்றி பேசுகிறது என்ற கொள்கை உடையவர்கள் ஹஜ்ஜுக்கு குர்பானி அவசியமா என்று கேட்டால் இல்லை என்கிறார்கள். எனவே இது குர்பானியைப் பற்றி பேசும் வசனம் அல்ல என்பதை அவர்களே ஒப்புக் கொண்டு விட்டார்கள்.
குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்தல் என்பது தான் இதன் பொருளாகும். ஹஜ்ஜின் குறிப்பிட்ட நாட்களில் தவாஃப், தல்பியா, திக்ரு, தக்பீர் என அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்வதைத் தான் குறிக்கிறது.
ஹஜ்ஜுக்கும், குர்பானிக்கும் சம்மந்தம் இல்லை என்பதில் ஒட்டு மொத்த இஸ்லாமிய அறிஞர்களும் ஒரே கருத்தில் உள்ளார்கள்.
ஹஜ்ஜையும், உம்ராவையும் சேர்த்துச் செய்பவருக்கு மட்டும் தான் பலியிடுதல் உண்டு; அது கூட இயன்றால் தான் கொடுக்க வேண்டும். இயலாவிட்டால் பத்து நோன்பு நோற்கலாம். எனவே இது குர்பானியில் வராது. ஹஜ், உம்ராவைச் சேர்த்துச் செய்வதற்கு உரிய பரிகாரமாகும்.
எனவே இப்ராஹீம் நபி ஹஜ்ஜுக்கு மக்களை அழைக்கும் வசனத்தில் கூறப்பட்ட குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுதல் என்பதற்கு குர்பானி கொடுத்தல் என்ற அர்த்தம் கொள்ள முடியாது. அப்படி அர்த்தம் கொள்வார்களானால் ஹஜ்ஜுக்கு குர்பானி அவசியம் எனக் கூற வேண்டும். அப்படி அவர்களே கூறுவதில்லை.
நாம் செய்யும் பொருளே சரியானது என்பதற்கும், மாற்றுக் கருத்துள்ளவர்கள் செய்யும் பொருள் தவறானது என்பதற்கும் 2:196 வசனம் ஆதாரமாக அமைந்துள்ளது.
உங்களில் அச்சமற்ற நிலையை அடைந்து ஹஜ்ஜையும், உம்ராவையும் தமத்துவ் முறையில் செய்பவர், இயன்ற பலிப்பிராணியை (பலியிட வேண்டும்) அது கிடைக்காதவர் ஹஜ்ஜின் போது மூன்று நோன்புகளும் (ஊர்) திரும்பிய பின் ஏழு நோன்புகளும் நோற்க வேண்டும். இதனால் பத்து முழுமை பெறும். இ(ச்சலுகையான)து (கஅபா எனும்) புனிதப்பள்ளியில் யாருடைய குடும்பம் வசிக்கவில்லையோ அவருக்குரியது. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
திருக்குர்ஆன் 2:196
ஹஜ் மட்டும் செய்பவர் குர்பானி கொடுக்கத் தேவையில்லை. ஹஜ்ஜையும், உம்ராவையும் சேர்த்துச் செய்பவர் தான் பலியிட வேண்டும் என இவ்வசனம் கூறுகிறது.
அது இயலாவிட்டால் பரிகாரமாக மூன்று நாட்கள் ஹஜ்ஜிலும், ஏழு நாட்கள் ஊர் சென்ற பின்பும் நோன்பு நோற்க வேண்டும். இவ்வாறு பத்து நோன்புகள் இதற்கான பரிகாரமாகும்.
அதாவது ஹஜ் மட்டும் செய்பவருக்கு குர்பானி இல்லை என்று இவ்வசனம் கூறுகிறது.
மாற்றுக் கருத்துடையவர்கள் மொழிபெயர்ப்பின் படி 22:28 வசனம் குர்பானியைப் பற்றி பேசுகிறது என்றால் அது இவ்வசனத்துக்கு நேர்முரணாக அமைந்து விடும்.
ஹஜ் மட்டும் செய்தால் குர்பானி கொடுத்தல் இல்லை என்று 2:196 வசனம் சொல்கிறது. 22:28 வசனத்துக்கு இவர்கள் செய்த அர்த்தத்தின் படி ஹஜ் மட்டும் செய்தால் குர்பானி அவசியம் அர்த்தம் வருகிறது.
நாம் செய்த அர்த்தத்தின் படி இரண்டு வசனங்களுக்கிடையே எந்த முரண்பாடும் இல்லாமல் பொருந்திப் போகிறது.
ஹஜ்ஜுக்குச் செல்வோர் குறிப்பிட்ட நாட்களில் தக்பீர், தல்பியா, மற்றும் பல திக்ருகள் மூலம் அல்லாஹ்வைத் துதிக்க வருவார்கள் என்ற கருத்து 2:196 வசனத்துடன் மோதாமல் பொருந்திப் போகிறது.
நபிகள் நயகம் (ஸல்) அவர்களும் ஹஜ் மட்டும் செய்பவர் குர்பானி கொடுக்க வேண்டியதில்லை என வழிகாட்டியுள்ளனர்.
1691 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
விடைபெறும்’ ஹஜ்ஜின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உம்ராவுடன் ஹஜ்ஜையும் செய்தார்கள். (மதீனாவாசிகளின் எல்லையான துல்ஹுலைஃபாவிலிருந்தே தம்முடன் குர்பானிப் பிராணியை ஓட்டிச் சென்று குர்பானியையும் கொடுத்தார்கள். முதலில் உம்ராவுக்காக தல்பியா கூறி, பிறகு ஹஜ்ஜுக்காக தல்பியா கூறினார்கள். மக்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் உம்ராவுக்கும் ஹஜ்ஜுக்குமாகச் சேர்த்து இஹ்ராம் கட்டினார்கள். மக்களில் சிலர் குர்பானி கொடுப்பவர்களாக இருந்தனர். எனவே, குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்திருந்தனர். மற்ற சிலரோ, குர்பானி கொடுப்பவர்களாக இல்லை. (ஆகவே, அவர்கள் குர்பானிப் பிராணியைத் தம்முடன் கொண்டுவரவில்லை); நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்ததும் மக்களிடம், உங்களில் யார் குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்துள்ளார்களோ அவர் தமது ஹஜ்ஜை நிறைவேற்றாத வரை இஹ்ராமிருந்து விடுபடக் கூடாது; யார் குர்பானிப் பிராணியைக் கொண்டு வரவில்லையோ அவர் கஅபாவை தவாஃப் செய்து ஸஃபா-மர்வாவுக்கிடையே சஈ’யீ செய்துவிட்டு, தலை முடியைக் குறைத்துக் கொண்டு, இஹ்ராமைக் களைந்துவிட்டு, ஹஜ்ஜுக்காக மீண்டும் இஹ்ராம் கட்டிக்கொள்ளட்டும்! யாருக்கு குர்பானிப் பிராணி கிடைக்கவில்லையோ அவர் ஹஜ்ஜுடைய நாட்களில் மூன்று நோன்புகளும் (ஹஜ்ஜை நிறைவு செய்துவிட்டு) தமது வீடு திரும்பியதும் ஏழு நோன்புகளும் நோற்கட்டும்! என்று கூறினார்கள்.
நூல் : புகாரி
ஒன்றுக்கு மேற்பட்ட நாட்களில் குர்பானி கொடுக்கலாம் என்று வாதிடுவோர் எடுத்து வைத்த வசனம் குர்பானியைப் பற்றிப் பேசவில்லை என்பதால் இந்த வாதமும் அடிபட்டுப் போகிறது.
அறியப்பட்ட நாட்கள் என்பது எது?
இது பற்றி குர்ஆன் ஹதீஸில் கூறப்படவில்லை. அறியப்பட்ட நாட்கள் என்ற சொல்லில் இருந்து அந்த நாட்கள் நாட்கள் யாவை என்று அன்றைய சமுதாயம் அறிந்து வைத்திருந்தது என்பதை அறிய முடியும்.
அவர்கள் அறியப்பட்ட நாட்களாக எதை அறிந்து வைத்திருந்தனர்?
تفسير ابن كثير
وَقَوْلُهُ: وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَعْلُوماتٍ عَلى مَا رَزَقَهُمْ مِنْ بَهِيمَةِ الْأَنْعامِ، قَالَ شُعْبَةُ وَهُشَيْمٌ عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدٍ، عَنِ ابن عباس رضي الله عنهما: الْأَيْامُ الْمَعْلُومَاتُ أَيْامُ الْعَشْرِ، وَعَلَّقَهُ الْبُخَارِيُّ عَنْهُ بصيغة الجزم به. وروي مثله عن أبي موسى الأشعري ومجاهد وقتادة وعطاء وسعيد بن جبير والحسن وَالضَّحَّاكِ وَعَطَاءٍ الْخُرَاسَانِيِّ وَإِبْرَاهِيمِ النَّخَعِيِّ، وَهُوَ مَذْهَبُ الشَّافِعِيِّ وَالْمَشْهُورُ عَنِ أَحْمَدَ بْنِ حَنْبَلٍ. وَقَالَ الْبُخَارِيُّ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ، حَدَّثَنَا شُعْبَةُ عن سليمان، عن مسلم البطين، عن سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا الْعَمَلُ فِي أَيْامٍ أَفْضَلَ مِنْهَا فِي هَذِهِ» قَالُوا: وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ؟ قَالَ: «وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ إِلَّا رَجُلٌ يَخْرُجُ يُخَاطِرُ بِنَفْسِهِ وَمَالِهِ فَلَمْ يَرْجِعْ بِشَيْءٍ» «1» ، رَوَاهُ الْإِمَامُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ بنحوه. وَقَالَ التِّرْمِذِيُّ: حَدِيثٌ حَسَنٌ، غَرِيبٌ، صَحِيحٌ، وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ وَأَبِي هُرَيْرَةَ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَجَابِرٍ.
துல்ஹஜ் பத்து நாட்களுக்கு சிறப்பு உள்ள ஹதீஸை எடுத்துக் காட்டி அறியப்பட்ட நாட்கள் துல்ஹஜ் பத்து நாட்கள் என்று இப்னு அப்பாஸ், அபூ மூஸல் அஷ்அரி, முஜாஹித், கதாதா, அதா, ஸயீத் பின் ஜுபைர், ஹஸன், ளஹ்ஹாக், அதாவுல் குராசானி, இப்ராஹீம் நகயீ, ஷாஃபி, அஹ்மத் பின் ஹம்பல் உள்ளிட்டோர் கூறுகின்றனர்.
நூல் : இப்னு கஸீர்
التفسير البسيط
وقال الحسن وقتادة: الأيام المعلومات أيام عشر ذي الحجة
ஹஸன் கதாதா ஆகியோர் அறியப்பட்ட நாட்கள் என்பது துல்ஹஜ் பத்து நாட்கள் என்கின்றனர்.
تفسير الرازي
المسألة الرابعة : أكثر العلماء صاروا إلى أن الأيام المعلومات عشر ذي الحجة
அதிகமான அறிஞர்கள் துல்ஹஜ் பத்து நாட்கள் என்கின்றனர்.
நூல் : தஃப்ஸீர் ராசீ
அறியப்பட்ட நாட்கள் துல்ஹஜ் பத்து நாட்களைத் தான் குறிக்கும் என்றால் நிச்சயம் 11,12,13 ஆகிய நாட்களைக் குறிக்காது.
துல்ஹஜ் பத்து நாட்கள் தான் அறியப்பட்ட நாள் எனும் போது இவ்வசனம் குர்பானியைப் பற்றிப் பேசவில்லை என்பது உறுதியாகிறது. தஷ்ரீகுடைய நாட்களைப் பற்றியும் பேசவில்லை என்பதும் உறுதியாகிறது.
தஷ்ரீக் நாட்களில் கொடுப்பது குர்பானியில் சேராது
தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் பெருநாள் தினத்தில் மட்டுமே குர்பானி கொடுக்க வேண்டும்: அது அல்லாத நாட்களில் கொடுத்தால் நமது தேவைக்கு அறுத்ததாக ஆகுமே தவிர குர்பானி கொடுத்ததாக ஆகாது.
குர்பானி கொடுக்கும் ஆரம்ப நேரம் தொழுகை முடிந்த பிறகு ஆரம்பமாகிறது.
இதை மீறி தொழுகைக்கு முன்பே ஒருவர் அறுத்துப் பலியிட்டதைப் பற்றி நபியவர்கள் கூறும் போது இது உணவுக்காக அறுக்கப்பட்டது குர்பானி அல்ல என்று அறிவித்துள்ளார்கள். பார்க்க : புகாரி 955, 983, 5556
பெருநாள் தினம் குர்பானிக்கு உரிய நாளாக இருந்தும் தொழுகைக்கு முன்னர் அறுத்ததால் அது செல்லாது என்று நபியவர்கள் கூறி விட்டார்கள் என்றால் குர்பானிக்குரிய நாள் அல்லாத வேறு நாட்களில் அறுத்தால் அது குர்பானியில் சேருமா என்று சிந்தித்து உங்கள் அமல்களைக் காத்துக் கொள்க!
வெளியீடு :தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு