பிறை காலண்டர் பித்தலாட்டம்
பிறை பார்த்து நோன்பையும் பெருநாளையும் முடிவு செய்ய வேண்டும் என்ற நபிவழியைக் குழி தோண்டிப் புதைத்து முன்னரே கணிக்கும் வகையில் காலண்டர் வெளியிட்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர். அதை நியாயப்படுத்த சில குதர்க்க வாதங்களையும் முன்வைக்கிறார்கள். அந்த வாதங்கள் அனைத்துமே தவறானவை என்பதை கீழே விளக்கியுள்ளோம்.
பிறை குறித்து அல்லாஹ்வின் தூதர் காட்டிய வழிமுறை இதுதான்
صحيح البخاري
1909 – حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَوْ قَالَ: قَالَ أَبُو القَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ، فَإِنْ غُبِّيَ عَلَيْكُمْ فَأَكْمِلُوا عِدَّةَ شَعْبَانَ ثَلاَثِينَ»
அதை (பிறையை) நீங்கள் காணும் போது நோன்பு பிடியுங்கள். அதை (மறு பிறையைக்) காணும் போது நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1909
صحيح البخاري
1906 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ رَمَضَانَ فَقَالَ: «لاَ تَصُومُوا حَتَّى تَرَوُا الْهِلَالَ، وَلاَ تُفْطِرُوا حَتَّى تَرَوْهُ، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدُرُوا لَهُ»
பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1906
صحيح البخاري
1907 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ لَيْلَةً، فَلاَ تَصُومُوا حَتَّى تَرَوْهُ، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَكْمِلُوا العِدَّةَ ثَلاَثِينَ»
மாதத்திற்கு இருபத்தி ஒன்பது நாட்களாகும். எனவே பிறையைக் காணாமல் நோன்பு பிடிக்காதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்துங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1907
صحيح مسلم
2582 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا غُنْدَرٌ عَنْ شُعْبَةَ ح وَحَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى وَابْنُ بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ قَالَ سَمِعْتُ أَبَا الْبَخْتَرِىِّ قَالَ أَهْلَلْنَا رَمَضَانَ وَنَحْنُ بِذَاتِ عِرْقٍ فَأَرْسَلْنَا رَجُلاً إِلَى ابْنِ عَبَّاسٍ – رضى الله عنهما – يَسْأَلُهُ فَقَالَ ابْنُ عَبَّاسٍ – رضى الله عنهما – قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِنَّ اللَّهَ قَدْ أَمَدَّهُ لِرُؤْيَتِهِ فَإِنْ أُغْمِىَ عَلَيْكُمْ فَأَكْمِلُوا الْعِدَّةَ ».
நாங்கள் தாதுஇரக் எனும் இடத்தில் ரமளான் பிறை பார்த்தோம். இது பற்றி விளக்கம் பெறுவதற்காக ஒருவரை இப்னு அப்பாஸ் (ரலி)யிடம் அனுப்பினோம். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பிறையைப் பார்ப்பது வரை (முந்தைய) மாதத்தை அல்லாஹ் நீட்டி விட்டான். எனவே மேகமூட்டம் ஏற்பட்டால் எண்ணிக்கையை முழுமையாக்குங்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாகக் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: அபுல்பக்தரீ
நூல்: முஸ்லிம்
இந்த நபிமொழிகளுக்கு தங்கள் இஷ்டப்படி விளக்கம் கொடுத்து ஹதீஸைச் சாகடித்து விட்டு தர்க்க ரீதியான சில வாதங்களை முன் வைக்கிறார்கள். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
உலகமெல்லாம் ஒரே சூரியன்; உலகமெல்லாம் ஒரே சந்திரன்
உலகத்தில் ஒரே ஒரு சந்திரன் தான் உள்ளது. எனவே உலகில் எங்காவது அது பிறந்து விட்டால் முழு உலகுக்கும் அது பிறந்து விட்டதாகத் தான் பொருள்.
விஞ்ஞான அடிப்படையில் கணித்து, இன்று தலைப்பிறை என்று அறிவித்தால் அதை உலகமே ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உலகமெல்லாம் ஒரே சந்திரன் என்பது அடிபட்டுப் போய் விடும் என்று சிலர் வாதிடுகின்றனர்.
வானியல் அறிவு இல்லாத மக்களுக்கு இது பெரிய விஞ்ஞான உண்மை போலவும், அறிவுப்பூர்வமான வாதம் போலவும் தோன்றுகிறது.
ஆனால் சிந்தித்துப் பார்க்கும் போது இதை விட அபத்தமான வாதம் ஏதும் இருக்க முடியாது. இதில் எந்த விஞ்ஞானமும் இல்லை. அறிவுப்பூர்வமான வாதமும் இல்லை.
உலகத்தில் ஒரே சந்திரன் தான் உள்ளது என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. சந்திரன் எப்படி உலகுக்கெல்லாம் ஒன்று தான் உள்ளதோ அது போல் உலகம் முழுவதற்கும் ஒரு சூரியன் தான் உள்ளது.
சந்திரன் எப்படி காலத்தைக் காட்டுவதாக உள்ளதோ அது போல் தான் சூரியனும் நமக்குக் காலம் காட்டியாக உள்ளது.
அவனே காலைப் பொழுதை ஏற்படுத்துபவன். இரவை அமைதிக் களமாகவும், சூரியனையும் சந்திரனையும் காலம் காட்டியாகவும் அமைத்தான். இது மிகைத்தவனாகிய அறிந்தவனின் எற்பாடு.
அல்குர்ஆன் 6:96
சூரியனும், சந்திரனும் கணக்கின் படி இயங்குகின்றன.
அல்குர்ஆன் 55:6
இந்த வசனங்களில் சூரியன், சந்திரன் ஆகிய இரண்டுமே நமக்குக் காலம் காட்டிகள் என்று அல்லாஹ் கூறுகிறான்.
சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவில் இருள் சூழும் வரையில் தொழுகையையும் பஜ்ரு (தொழுகையில்) குர்ஆனையும் நிலை நாட்டுவீராக! பஜ்ரு (தொழுகையில்) குர்ஆன் சாட்சி கூறப்படுவதாக இருக்கிறது
அல்குர்ஆன் 17:78
(முஹம்மதே!) அவர்கள் கூறுவதைச் சகித்துக் கொள்வீராக! சூரியன் உதிப்பதற்கு முன்பும், அது மறைவதற்கு முன்பும், இரவு நேரங்களிலும் உமது இறைவனைப் போற்றிப் புகழ்வீராக! பகலின் ஓரங்களிலும் துதிப்பீராக! இதனால் (கிடைக்கும் கூலியில்) நீர் திருப்தியடையலாம்.
அல்குர்ஆன் 20:130
இந்த வசனங்களில் சூரிய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நமது வணக்கங்கள் அமைக்கப்பட்டதாகக் கூறுகிறான்.
இரண்டுமே காலம் காட்டிகள் என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை.
இரண்டும் எவ்வாறு காலம் காட்டிகளாக உள்ளன என்பதைத் தான் பலரும் அறியாமல் உள்ளனர்.
சூரியன் நமக்கு இரவு, பகலைக் காட்டுகிறது. காலை, மாலை, நண்பகல் போன்ற நேரங்களையும் காட்டுகிறது. எப்படிக் காட்டுகிறது என்றால் நமது ஊரிலிருந்து அது எந்தக் கோணத்தில் உள்ளது என்பது தான் காலத்தைக் காட்டுமே தவிர சூரியனே காலத்தைக் காட்டாது.
நமது தலைக்கு நேராக 0 டிகிரியில் அது இருந்தால் நண்பகல் என்கிறோம்.
நமது தலையிலிருந்து கிழக்கே 90 டிகிரியில் இருந்தால் அதை அதிகாலை என்கிறோம்.
நமது தலையிலிருந்து மேற்கே 90 டிகிரியில் இருந்தால் அதை இரவின் துவக்கம் என்கிறோம்.
அதாவது சூரியனும் அது அமைந்துள்ள கோணமும் சேர்ந்து தான் காலம் காட்டுகிறது.
சூரியன் நமது தலைக்கு மேல் இருக்கும் போது, நமக்குக் கிழக்கே 90 டிகிரியில் உள்ளவர்களின் பார்வையில் மறைந்து கொண்டிருப்பதாகக் காட்சியளிக்கும். அதாவது அவர்கள் இரவின் துவக்கத்தை அடைவார்கள்.
நம் தலைக்கு மேல் உள்ள இதே சூரியன், நமக்கு மேற்கே 90 டிகிரியில் வாழ்கின்ற மக்களுக்கு, அப்போது தான் உதிப்பதாகக் காட்சியளிக்கும்.
உலகத்துக்கு எல்லாம் ஒரே சூரியன் தான். ஆனால் அது நமக்கு நண்பகல் நேரத்தைக் காட்டும் போது சிலருக்கு அதிகாலை நேரத்தைக் காட்டுகிறது. மற்றும் சிலருக்கு அந்தி மாலை நேரத்தைக் காட்டுகிறது.
நமக்கு நண்பகலைக் காட்டும் நேரத்தில் பாதி உலகுக்கு அது அறவே தென்படாமல் இரவைக் காட்டிக் கொண்டிருக்கும்.
எனக்கு நண்பகல் என்பதால் அது முழு உலகுக்கும் நண்பகல் தான் என்று எவரேனும் வாதிட்டால் அவனை விட முட்டாள் யாரும் இருக்க முடியாது.
நமது நண்பர் சவூதியில் இருக்கிறார். சென்னையில் சூரியன் மறைந்தவுடன் நாம் நோன்பு துறக்க வேண்டும். நமது சவூதி நண்பருக்குப் போன் செய்து, சூரியன் மறைந்து விட்டது; நோன்பு துறங்கள்’ என்று கூற மாட்டோம். கூறினால் அவர் கேட்க மாட்டார். ஏனெனில் நாம் நோன்பு துறக்கும் நேரத்தில் தான் அவர் அஸர் தொழுதிருப்பார். அவருக்கு சூரியன் மறைய இன்னும் இரண்டரை மணி நேரம் காத்திருக்க வேண்டும்.
இது, ஒரே சூரியன் என்பதை மறுத்ததாக ஆகுமா?
இதே போல் தான் சந்திரனும் காலம் காட்டும்.
சவூதியில் காட்சி தந்த சந்திரன் அத்தோடு உலகை விட்டு ஓடி ஒளிந்து விடாது. சூரியனைப் போன்று ஒவ்வொரு வினாடியும் பூமியைச் சுற்றி, பூமி முழுமைக்கும் காட்சி தர தன் பயணத்தைத் தொடர்கிறது. அந்தச் சந்திரன் நமக்கு நேராக எப்போது வருகிறதோ அப்போது தான் அது நமக்குக் காலத்தைக் காட்டும்.
சூரியன் காலம் காட்டுகிறது என்றால் சூரியனும், நமது பகுதியில் அது அமைந்துள்ள கோணமும் சேர்ந்து தான் காலம் காட்டுகிறது.
சந்திரன் காலம் காட்டுகிறது என்றால் சந்திரனும், நமது பகுதியில் அது அமைந்துள்ள கோணமும் சேர்ந்து தான் காலம் காட்டுகிறது.
இந்த அறிவியல் உண்மை விளங்காத காரணத்தால் தான் உலகமெல்லாம் ஒரே பிறை என்று அறிவீனமான உளறலை, அறிவியல் முகமூடி அணிந்து மக்களைச் சிலர் வழி கெடுக்கின்றனர்.
இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும்.
சந்திரனில் எவ்வாறு ஒளி தோன்றுகிறது? சந்திரன் பூமியைப் போன்ற மண் உருண்டை தான். அதில் வெளிச்சம் தருவதற்கு ஒன்றுமே இல்லை.
நாம் ஒரு டார்ச் லைட் வெளிச்சத்தை ஒரு சுவரில் பாய்ச்சினால் அதன் மீது வெளிச்சம் பட்டு அதிலிருந்து இலேசான வெளிச்சம் பிரதிபலிக்கும்.
அது போல் தான் சூரியனின் வெளிச்சம் சந்திரன் மீது படும் போது சந்திரனிலிருந்து அவ்வெளிச்சம் பூமியை நோக்கி எதிரொளிக்கப்படுகிறது. அதன் காரணமாகவே சந்திரனில் நாம் வெளிச்சத்தைக் காண்கிறோம்.
மற்றபடி சந்திரனில் நெருப்போ, வெளிச்சம் தரும் வேறு எதுவுமோ கிடையாது. சந்திரனில் ஆம்ஸ்ட்ராங் இறங்கி எடுத்து வந்தது மண்ணைத் தான்.
ஓர் உருண்டை வடிவமான பொருள் மீது நாம் வெளிச்சம் பாய்ச்சினால் அவ்வுருண்டையின் சரிபாதியின் மீது மட்டுமே வெளிச்சம் பாய்ச்ச முடியும். இன்னொரு பாதியின் மீது வெளிச்சம் படாது. இதையும் நாம் அறிந்து வைத்திருக்கிறோம்.
அதனால் தான் எந்த நேரமும் பூமியின் பாதிப் பகுதி பகலாகவும், பாதிப் பகுதி இரவாகவும் உள்ளது.
இதே அடிப்படையில் தான் எல்லா நாட்களிலும் சூரியனின் ஒளி சந்திரனின் சரிபாதியில் பட்டுத் தெரிந்து கொண்டிருக்கிறது.
பவுர்ணமி தினத்தில் எப்படி பாதி சந்திரன் மீது ஒளி பட்டு பூமியை நோக்கித் தெரிகிறதோ அது போலவே அமாவாசையின் போதும் பாதி சந்திரன் மீது சூரிய ஒளி பூமிக்கு எதிர்த் திசையில் பாய்ச்சிக் கொண்டிருக்கிறது.
முதல் பிறையின் போதும் பாதி சந்திரன் மீது ஒளி பட்டுக் கொண்டிருக்கிறது.
365 நாட்களும் சந்திரனின் சரிபாதியானது, வெளிச்சத்தைப் பிரதிபலிக்கக் கூடியதாகவும், மற்றொரு பாதி இருட்டாகவும் இருக்கிறது.
பவுர்ணமியில் சந்திரன் மீது வெளிச்சம் படும் போது, வெளிச்சம் படும் பகுதியை முழுமையாகப் பூமியை நோக்கி சந்திரன் காட்டுகிறது. அமாவாசையின் போது சூரிய ஒளி பட்ட பகுதியை பூமியின் எதிர்த் திசையில் காட்டி விட்டு வெளிச்சம் படாத பகுதியை நம்மை நோக்கிக் காட்டுகிறது.
அமாவாசையில் நமக்குத் தான் வெளிச்சம் தெரியவில்லையே தவிர சந்திரனில் எப்போதும் வெளிச்சம் இருந்து கொண்டு தான் உள்ளது.
நாம் ஒருவரை நேருக்கு நேராகப் பார்த்தால் நமது மூக்கு முழுமையாக அவருக்குக் காட்சி தருகிறது. நாம் சற்றே திரும்பினால் நமது மூக்கின் ஒரு பகுதி அவருக்குத் தெரிகிறது. நாம் முகத்தைத் திருப்பிக் கொண்டு முதுகைக் காட்டினால் அவருக்கு நமது மூக்கு தெரியாது. அவருக்கு மூக்கு தெரியாததால் நமக்கு மூக்கே இல்லை என்று கூற முடியாது.
அது போல் தான் சந்திரன் மீது படும் வெளிச்சத்தில் பெரும் பகுதியை பூமிக்கு எதிர்த் திசையில் காட்டி விட்டு, பூமியை நோக்கி ஓரமாகக் காட்டினால் அதை முதல் பிறை என்கிறோம். ஒவ்வொரு நாளும் காட்டும் அளவை அதிகரிக்கும் போது நாட்களின் எண்ணிக்கையையும் கூட்டிக் கொள்கிறோம்.
இந்த விபரங்களை எதற்குச் சொல்கிறோம் என்றால், சந்திரனில் காலத்தைக் காட்ட ஒன்றுமே இல்லை. அது எல்லா நாளிலும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது. அது நம்மை நோக்கி எந்த அளவு திரும்புகிறது என்ற அடிப்படையில் தான் காலம் காட்டுகிறது.
எனவே நம்மை நோக்கி அது திரும்பி விட்டதா? என்பதன் அடிப்படையில் தான் நாளைத் தீர்மானிக்க வேண்டுமே தவிர, யாரையோ நோக்கித் திரும்பியதை நம்மை நோக்கித் திரும்பியதாகக் கருதக் கூடாது.
இதைப் புரிந்து கொண்டால் இவர்களின் அறியாமையை அனைவரும் புரிந்து கொள்வார்கள்.
பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?
தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது.
ஹதீஸ்களை நிராகரித்து விட்டு விஞ்ஞானக் கணிப்பின் படி தலைப்பிறையைத் தீர்மானிக்க வேண்டும் என்று சிலர் வாதிடுகின்றனர். இவர்களின் இந்த முடிவு சரியானதா என்பதை அறிவதற்கு முன்னால் இவர்கள் எடுத்து வைக்கும் வாதங்களை ஒவ்வொன்றாக அலசுவோம்.
பிறை பார்த்து நோன்பு நோற்க வேண்டும் என்ற கருத்தில் அமைந்த இத்தனை ஹதீஸ்களுமே ஆதாரப்பூர்வமானவை தான். ஆனாலும் வானியல் அறிவு வளராத காலகட்டத்தில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள். இன்றைக்கு வானியல் அறிவு பெருகியுள்ள சூழ்நிலையில் அதை ஏற்பது தான் சரி என்று அவர்கள் வாதிடுகின்றார்கள்.
வானியல் அறிவு வளர்ச்சி பெறாத காலத்துக்கு மட்டுமே பிறை பார்த்தல் பொருந்தும். இன்றைய காலத்துக்குப் பொருந்தாது என்பது உங்கள் சொந்த யூகமா? அல்லது அல்லாஹ்வோ அவனது தூதரோ இவ்வாறு கூறியுள்ளார்களா? என்று நாம் அவர்களிடம் கேட்டால் எங்கள் சொந்த யூகமல்ல. அல்லாஹ்வின் தூதர் தான் இதைக் கூறியுள்ளார்கள் என்று கூறி கீழ்க்கண்ட நபிமொழியை எடுத்துக் காட்டுகின்றனர்.
صحيح البخاري
1913 – حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا الأَسْوَدُ بْنُ قَيْسٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَمْرٍو، أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: «إِنَّا أُمَّةٌ أُمِّيَّةٌ، لاَ نَكْتُبُ وَلاَ نَحْسُبُ، الشَّهْرُ هَكَذَا وَهَكَذَا» يَعْنِي مَرَّةً تِسْعَةً وَعِشْرِينَ، وَمَرَّةً ثَلاَثِينَ
நாம் உம்மி சமுதாயமாவோம். நமக்கு எழுதவும் தெரியாது. வானியலையும் அறிய மாட்டோம். மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதாவது ஒரு தடவை 29 ஒரு தடவை 30 என்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1913
இது தான் இவர்கள் தமது வாதத்தை நிறுவிட எடுத்து வைக்கும் ஆதாரம்.
இந்த ஆதாரத்திலிருந்து இவர்கள் எடுத்து வைக்கும் வாதம் என்ன?
எழுதவும் தெரியாத வானியலையும் அறியாத சமுதாயமாக நாம் இருந்தால் பிறை பார்த்து நோன்பு வைக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அந்த நிலையை விட்டும் சமுதாயம் உயர்ந்து விட்டால் அப்போது பிறை பார்க்கத் தேவையில்லை. வானியல் அறிவின் மூலமே தீர்மானம் செய்து கொள்ளலாம். வானியல் அறிவு அன்றைக்கு இல்லாததால் தான் பிறை பார்க்கும் வழிமுறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தனர். அந்தக் காரணம் இன்று இல்லாததால் நாம் கணித்தே முடிவு செய்யலாம் என்பது தான் இவர்களின் வாதம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட காரணத்தைக் கூறி ஒரு சட்டத்தைக் கூறியிருந்தால் அந்தக் காரணம் நீங்கும் போது அந்தச் சட்டமும் நீங்கி விடும் என்ற வாதத்தை நாம் மறுக்க மாட்டோம். மறுக்கவும் கூடாது. ஆனால் இந்த ஹதீஸில் அத்தகைய காரணம் கூறப்பட்டிருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை.
இந்த ஹதீஸுக்கு தவறான பொருளைத் தருவதால் தான் இப்படி ஒரு தோற்றம் ஏற்படுகிறது.
அதை இங்கே அலசுவோம்.
இன்னா உம்மதுன் உம்மியதுன் என்பதற்கு நாம் உம்மி சமுதாயமாவோம் என்று மொழி பெயர்த்துள்ளனர். இது சரியான மொழி பெயர்ப்பு தான். (ஆனாலும் இதன் கருத்தாழத்தை இவர்கள் கவனிக்கவில்லை என்பதைப் பின்னர் விளக்கிக் காட்டுவோம்.)
அடுத்ததாக லா நக்துபு என்பதற்கு நாம் எழுதுவதை அறிய மாட்டோம்’ என்று மொழி பெயர்த்துள்ளனர். இந்த மொழி பெயர்ப்பும் சரியானது தான்.
அடுத்ததாக வலா நஹ்சுபு என்ற வாசகத்துக்கு வானியலையும் அறிய மாட்டோம் என்று மொழி பெயர்த்துள்ளனர். இவ்வாறு மொழி பெயர்த்ததன் அடிப்படையில் தான் தங்கள் வாதத்தையே இவர்கள் நிலை நிறுத்துகிறார்கள். இந்த மொழி பெயர்ப்பு தவறு என்பது நிரூபணமானால் இவர்களின் வாதமே சுக்கு நூறாக நொறுங்கிப் போய்விடும்.
நஹசுபு என்று வார்த்தை இந்த ஹதீஸில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஹஸிப என்ற மூலத்திலிருந்து பிறந்ததாகும். ஹிஸாப் என்ற சொல்லும் இதிலிருந்து பிறந்ததாகும்.
இன்றைக்குச் சிலர் ஹிஸாப் என்ற வார்த்தையை வானியல் என்ற பொருளிலும் கையாண்டு வருகின்றனர். வானியல் அறிவு பெருகிவிட்ட காலத்தில் அதற்கென ஒரு வார்த்தை அவசியம் எனக் கருதி ஹிஸாப் என்ற வார்த்தையை வானியலுக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் ஹிஸாப் என்ற வார்த்தை வானியலைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதே இல்லை. எந்த மொழியாக இருந்தாலும் ஒரு வார்த்தைக்குப் பொருள் கொள்ளும் போது அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்ட காலத்தில் அதற்கு அந்தப் பொருள் இருந்ததா? என்பதைக் கவனிப்பது அவசியம்.
இதைப் புரிந்து கொள்வதற்கு ஓர் உதாரணத்தைப் பார்ப்போம்.
துப்பாக்கி என்பது ஒரு வகையான ஆயுதம் என்பதை நாம் அறிவோம். துப்பாக்கி என்ற வார்த்தை ஒரு நூலில் பயன்படுத்தப்பட்டால் குறிப்பிட்ட அந்த ஆயுதம் என்று நாம் பொருள் செய்து கொள்வோம்.
ஆனால் திருக்குறளில் துப்பார்க்கு எனத் துவங்கும் குறளில் துப்பாக்கி என்ற வார்த்தை வருகிறது. இந்த வார்த்தைக்கு ஆயுதம் என்று பொருள் கொள்ள மாட்டோம். வள்ளுவர் காலத்தில் இந்த ஆயுதம் இருக்கவில்லை. அல்லது இந்த ஆயுதத்தைக் குறிக்க இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டதில்லை. உணவாக ஆக்கி’ என்ற பொருளில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அடிப்படையில் திருக்குர்ஆனிலோ, நபிமொழியிலோ பயன்படுத்தப்பட்ட வார்த்தைக்குப் பொருள் கொள்ளும் போது அந்தப் பொருளில் அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்டதா என்பதைக் கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
திருக்குர்ஆனில் ஹஸிப என்ற மூலத்திலமைந்த சொற்கள் நான்கு பொருட்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
1 போதும், போதுமானது, போதுமானவன் என்பது போன்றவை முதலாவது பொருள். (உதாரணம்: அல்லாஹ் உனக்குப் போதுமானவன்.) 2.206, 2.173, 5.104, 8.62, 8.64, 9.59, 9.68,9.129, 39.38, 58.8, 65.3, ஆகிய பதினோரு இடங்களில் ஹஸிப என்ற மூலத்திலமைந்த சொற்கள் மேற்கண்ட அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
2. மனதால் நினைப்பது, கருதுவது, தீர்மானிப்பது போன்றவை இரண்டாவது பொருளாகும்.
2.214, 2.273, 3.78, 3.142, 3.169, 3.178, 3.180, 3.188, 5.71, 7.30, 8.59, 9.16, 14.42, 14.47, 18.9, 18.18, 18.102,18.104, 23.55, 23.115, 24.11, 24.15, 24.39, 24.57, 25.44, 27.44, 27.88, 29.2, 29.4, 33.20, 39.47, 43.37,43.80, 45.21, 47.29, 58.18, 59.2, 59.14, 65.3, 75.3, 75.36, 76.9, 90.5, 90.7, 104.3
இந்த வசனங்களில் எல்லாம் மனதால் நினைப்பது, கருதுவது என்ற பொருளில் ஹஸிப என்ற வேர்ச் சொல்லிலிருந்து பிறந்த வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
3.கஹ்ப் அத்தியாயத்தில் ஓர் இடத்தில் மட்டும் ஹஸிப என்ற வேர்ச் சொல்லிலிருந்து பிறந்த வார்த்தை வேதனை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
4.திருக்குர்ஆனில் இதைத் தவிர உள்ள ஏனைய இடங்களில் இந்த வார்த்தை கணக்கு, எண்ணிக்கை, கேள்வி கணக்கு என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இறைவன் விரைந்து கேள்வி கணக்கு கேட்பவன், கேள்வி கணக்கு கேட்கப்படும் நாள், உங்களிடம் கணக்கு கேட்பான், கணக்கின்றி வாரி வழங்குபவன், சூரியனும், சந்திரனும் ஒரு கணக்கின் படி இயங்குகின்றன என்பது போன்ற இடங்களில் இந்த வார்த்தை தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
2.202, 2.212, 2.284, 3.19, 3.27, 3.37, 3.199, 4.6, 4.86, 5.4, 6.52, 6.62, 6.69, 10.5, 13.18, 13.21, 13.40, 13.41,14.41, 14.51, 17.12, 17.14, 21.1, 21.47, 23.117, 24.38, 24.39, 26.39, 33.39, 38.16, 38.26, 38.39, 38.53, 39.10,40.17, 40.27, 40.40, 55.5, 65.8, 69.20, 69.26, 78.27, 78.36, 84.8, 88.26 ஆகிய 46 இடங்களில் கணக்கு, எண்ணிக்கை, கணக்குக் கேட்டல் என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. திருக்குர்ஆனின் எந்த இடத்திலும் வானியல் என்ற பொருளில் இந்த வார்த்தை பயன்படுத்தப்படவே இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை ஆராய்ந்தால் அவர்கள் எந்த இடத்திலும் ஹிஸாப் ஹஸிப போன்ற வார்த்தைகளை வானியல் என்ற கருத்தில் பயன்படுத்தியதே இல்லை.
உதாரணத்திற்கு புகாரியில் 25, 393, 1400, 2946, 6924, 7285, 103, 1500, 6979, 7197, 2412, 2641, 2718, 2933, 3221, 3415, 3700, 4115, 6392, 7489, 4666, 4712, 4939,6536, 6537, 5253, 5312, 5350, 5655, 5705, 5752, 472, 6541 ஆகிய இடங்களில் கணக்கு எண்ணிக்கை என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மற்ற இடங்களில் நன்மையை நாடி காரியமாற்றுதல், கருதுவது, போதுமானது, பாரம்பரியம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. கணக்கு, எண்ணிக்கை என்ற பொருளில் அல்லாது மேற்கண்ட பொருளில் சுமார் 125 இடங்களில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
கணக்கு, எண்ணிக்கை என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்ட இடங்களானாலும் மற்ற 125 இடங்களானாலும் எந்த இடத்திலும் வானியல் என்ற கருத்தில் பயன்படுத்தப்படவில்லை.
மேற்கூறிய இடங்களில் வீம்புக்காக யாராவது வானியல் என்று பொருள் செய்தாலும் அது பொருந்தக் கூடியதாக இருக்காது என்பதை எல்லோரும் விளங்கிக் கொள்ளலாம்.
உதாரணமாக அல்லாஹ் உங்களிடம் கணக்கு கேட்பான் என்பதற்கு வானியலைப் பற்றி கேட்பான் என்று கூற முடியாது. அது போல் அல்லாஹ் கணக்கின்றி கொடுப்பவன் என்பதற்கு வானியல் இல்லாமல் கொடுப்பான் என்று கூற முடியாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வானியலைக் குறிப்பிட ஹிஸாப் என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை எனும் போது, ஆயிரக்கணக்கான தடவை இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டிருந்தும் ஒரு தடவை கூட வானியல் என்ற கருத்தில் பயன்படுத்தப்படவில்லை எனும் போது லா நஹ்சுபு என்ற வார்த்தை இடம் பெறும் இந்த ஹதீசுக்கு மட்டும் வானியல் அறிய மாட்டோம் என்று பொருள் கொள்வது ஏற்புடையதல்ல.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இந்த வார்த்தை வானியல் என்ற பொருளில் பயன்படுத்தப்படவில்லை என்பது மட்டுமே இவ்வாறு பொருள் கொள்வதை நிராகரிக்க ஏற்றதாகி விடும். ஆனால் இது தவிர வேறு காரணங்களாலும் வானியல் அறிய மாட்டோம்’ என்று பொருள் கொள்வது பொருத்தமற்றதாகும்.
நாம் உம்மி சமுதாயமாவோம் என்று ஹதீஸின் வாசகம் துவங்குகிறது. உம்மு என்றால் தாய் என்று பொருள். உம்மீ என்றால் தாயைச் சார்ந்திருப்பவன் என்பது நேரடிப் பொருள். தாயைச் சார்ந்திருக்கும் கைக்குழந்தைக்கு எப்படி கல்வி ஞானம் இருக்காதோ அது போன்ற நிலையில் இருக்கும் சமுதாயம் என்ற கருத்தில் உம்மி சமுதாயம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக எழுதவும் படிக்கவும் தெரியாத சமுதாயம் என்ற கருத்தில் இது பயன்படுத்தப்படும்.
நாம் உம்மி சமுதாயம் (அதாவது பாமர சமுதாயம்) என்று கூறிவிட்டு பாமரத்தனத்தை உறுதிப்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்துவது தான் பொருத்தமாக இருக்கும்.
எழுதவும், படிக்கவும் தெரியாத ஒரு சமுதாயத்திடம் போய் நீங்கள் வடிகட்டிய பாமரர்களாக இருக்கிறீர்கள். உங்களுக்கு எழுதவும் தெரியவில்லை. கம்யூட்டர் சயின்சும் தெரியவில்லை என்று யாரும் கூற மாட்டார்கள். எழுதவும் தெரியவில்லை; படிக்கவும் தெரியவில்லை என்று கூறினால் அது பொருத்தமாக இருக்கும்.
நீங்கள் பாமரர்களாக இருக்கிறீர்கள் என்று கூறிய பிறகு அதை உறுதி செய்ய சாதாரண அடிப்படை அறிவு கூட இல்லையே என்று தான் கூறுவோம்.
இது போல் தான் நாம் உம்மி சமுதாயம் என்று நபிகள் நாயகம் (ஸல்) ஆரம்பம் செய்கிறார்கள். அதாவது ஏதுமறியாத சமுதாயம் என்று ஆரம்பம் செய்கிறார்கள். எதனால் உம்மியாக இருக்கிறோம் என்பதை இரண்டு காரணங்களைக் கொண்டு நிரூபிக்கிறார்கள். ஒன்று நமக்கு எழுதத் தெரியாது. மற்றொன்று நமக்கு ஹிஸாப் தெரியாது. ஹிஸாப் என்பதற்கு வானியல் என்று பொருள் கொள்வோமானால் அது எப்படிப் பொருந்தும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்?
இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா?
எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு நமக்கு இல்லை. அது போல் சாதாரணமான ஹிஸாப் (அதாவது எண்ணிக்கை) என்ற அறிவும் இல்லை. எனவே நாம் உம்மி சமுதாயமாக உள்ளோம் என்று கூறினால் அது பொருந்திப் போகிறது.
ஹிஸாப் என்பதற்கு வானியல் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாத புதிய பொருளைக் கொள்வதை விட எண்ணிக்கை என்று அன்றைய காலத்தில் இந்த வார்த்தைக்கு கொடுக்கப்பட்டு வந்த சாதாரண பொருளைச் செய்து பாருங்கள். எவ்வளவு அற்புதமாக பொருந்திப் போகிறது என்பதை உணர்வீர்கள்.
அதாவது எழுதவும் தெரியாத எண்ணிக்கையும் தெரியாத உம்மி சமுதாயமாக நாம் இருக்கிறோம் என்பது தான் இதன் பொருள்.
அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்து மக்களில் பலருக்கு ஒன்று இரண்டு என்று வரிசையாக எண்ணத் தெரியாது. இன்றைக்கும் கூட சுவற்றில் தினம் ஒரு கோடு வரைந்து பால் கணக்குப் பார்க்கக் கூடியவர்கள் உள்ளனர். 1400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயத்தில் எண்ணத் தெரியாதவர்கள் இருந்ததில் யாரும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.
புகாரி அல்லாத மற்ற நூல்களில் உள்ள அறிவிப்புகள் எண்ணத் தெரியாத சமுதாயம் என்ற கருத்திலேயே இவ்வாசகம் பயன்படுத்தப்பட்டதை மேலும் உறுதிப்படுத்துகிறது.
நாம் உம்மி சமுதாயமாவோம். நமக்கு எழுதவும் தெரியாது. எண்ணவும் தெரியாது. மாதம் என்பது (பத்து விரல்களையும் விரித்துக் காட்டி) இப்படி, (மீண்டும் விரித்துக் காட்டி) மீண்டும் இப்படி (மீண்டும் விரித்துக்காட்டி) மீண்டும் இப்படி” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மூன்றாவது தடவை கட்டை விரலை மடக்கிக் கொண்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: முஸ்லிம்
நாம் உம்மி சமுதாயமாவோம். நமக்கு எழுதவும் தெரியாது. எண்ணவும் தெரியாது. மாதம் என்பது இப்படியும் இப்படியும் இருக்கும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி 29 வரை குறிப்பிட்டார்கள். இரு கைகளையும் மூன்று தடவை விரித்து மடக்கினார்கள். மூன்றாவது தடவை கட்டை விரலை மடக்கிக் கொண்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: அஹ்மத்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரு கைவிரல்களையும் விரிக்கிறார்கள். மீண்டும் இரு கைவிரல்களை விரிக்கிறார்கள். மீண்டும் இரு கை விரல்களை விரிக்கும் போது ஒரு விரலை மடக்கிக் கொள்கிறார்கள். மறுபடியும் அதே போல் மூன்று தடவை கைவிரல்களை விரித்துக் காட்டுகிறார்கள் இது தான் மாதம் எனவும் கூறுகிறார்கள்.
ஒன்று, இரண்டு என்று முப்பது வரை கூட எண்ணத் தெரியாத சமுதாயத்துக்கு முதலில் பத்து விரல்களைக் காட்டுகிறார்கள். மீண்டும் பத்து விரல், மீண்டும் பத்து விரல் காட்டி விளக்குகிறார்கள். அடுத்த மாதத்துக்கு ஒரு விரலை மடக்கிக் காட்டுகிறார்கள். எண்ணத் தெரிந்த சமுதாயமாக இருந்தால் 29 அல்லது 30 என்று கூறினால் போதாதா? (சில சமயங்களில் அதைப் புரிந்து கொள்ளும் மக்கள் இருந்த சபையில் அப்படியும் கூறியுள்ளார்கள்) எண்ணத் தெரிந்த சமுதாயத்திடம் போய் முப்பது என்பதை மூன்று தடவை விரல்களைக் காட்டி யாரேனும் விளக்குவதுண்டா?
எண்ணத் தெரிந்தவரிடம் முப்பது ரூபாய் கடன் கேட்கும் போது மூன்று தடவை விரல்களை விரித்துக் காட்டி இந்த ரூபாயையும் இந்த ரூபாயையும் இந்த ரூபாயையும் தா என்று கேட்டால் நமக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று அவன் நினைப்பான். நாம் ஒரு கடைக்குச் சென்று ஒரு பொருளின் விலை கேட்கிறோம். அதற்கு கடைக்காரர் தனது விரல்களை ஐந்து தடவை விரித்துக்காட்டி இவ்வளவு விலை என்று சொன்னால் நாம் என்ன செய்வோம்?
ஆனால் அதே சமயம் எண்ணத் தெரியாதவர்களிடம் இப்படித் தான் கேட்க முடியும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்து மக்களுக்கு வானியல் தான் தெரியாது. மற்றபடி எண்ணிக்கையெல்லாம் அத்துபடி என்று வாதிடுவோமேயானால், எண்ணிக்கை அறிந்த சமுதாயத்திடம் போய் ஒருவன் 29ஐயும் 30ஐயும் இப்படிக் கூறினால் அவனது நிலை என்னவாகும்? அந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கருதப்பட்டாலும் பரவாயில்லை நான் இப்படித் தான் பொருள் செய்வேன் என்று எந்த முஸ்லிமும் சொல்ல மாட்டான். எனவே எப்படிப் பார்த்தாலும் மேற்கண்ட ஹதீஸிற்கு வானியலை அறிய மாட்டோம் என்ற பொருளைக் கொள்வது எந்த வகையிலும் ஏற்றதல்ல.
கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?
விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள்.
நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை பார்த்து நோன்பு விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டமாக இருந்தால் கணித்துக் கொள்ளுங்கள் என்பதே அந்த நபிமொழி.
இந்த நபிமொழியில் மேகமூட்டமாக இருக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே கணித்துக் கொள்ளச் சொல்லி விட்டதால் வானியல் கணிப்பை ஏற்கலாம் என்று வாதிடுகிறார்கள்.
இவ்வாறு கூறுவது அவர்களுடைய வாதத்திற்கே முரண்பாடானது என்பதைப் பற்றி இவர்கள் சிந்திப்பதில்லை.
நாம் உம்மி சமுதாயம். நமக்கு வானியல் தெரியாது என்று முந்தைய வாதத்தில் கூறினார்கள். வானியல் தெரியாத அந்த சமுதாயம் மேகமூட்டம் ஏற்படும் போது கணித்துக் கொள்ள வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் என்றும் கூறினார்கள். இவர்களது வாதப்படி வானியல் தெரியாத சமுதாயத்திடம் கணித்துக் கொள்ளுங்கள் என்று எப்படிக் கூற முடியும்?
இவர்கள் ஆதாரமாக எடுத்துக் காட்டும் ஹதீஸில் நீங்கள் கணித்துக் கொள்ளுங்கள் என்று பொருள் செய்த இடத்தில் ஃபக்துரூ என்ற வாசகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாசகத்துக்கு எண்ணிக்கையை எண்ணுதல், மதிப்பிடுதல் என்றெல்லாம் பொருள் உண்டு.
எண்ணிக்கை கூட தெரியாதவர்கள் வாழ்ந்த ஒரு சமுதாயத்திடம் மதிப்பிட்டுக் கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள். மற்ற அறிவிப்புகளில் மேகமூட்டமாக இருந்தால் முப்பதாக எண்ணிக் கொள்ளுங்கள். ஷஅபானை முப்பது நாட்கள் என்று முழுமையாக்குங்கள் என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்புகளையும் கவனத்தில் கொண்டு, எந்தச் சமுதாயத்திடம் இது முதலில் கூறப்பட்டதோ அந்தச் சமுதாயம் கணித்து முடிவு செய்யும் நிலையில் இருந்ததா என்பதையும் கவனத்தில் கொண்டு இந்த ஹதீஸை ஆராய்ந்திருந்தால் ஃபக்துரூ என்பதற்கு மேகமாக இருக்கும் போது முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ளுங்கள் என்று பொருள் செய்திருக்க வேண்டும். இன்னும் சொல்வதானால் மற்றொரு அறிவிப்பில் ஃபக்துரூ என்பதுடன் ஸலாஸீன என்ற வாசகமும் சேர்ந்து இடம் பெற்றுள்ளது. ஸலாஸீன என்றால் முப்பதாக என்று பொருள். முப்பதாக எண்ணிக் கொள்ளுங்கள் என்று பொருள் செய்தால் அது பொருத்தமாக உள்ளது. முப்பது நாட்களாகக் கணியுங்கள் என்றால் அதற்கு அர்த்தமே இல்லாமல் போய் விடுகிறது. எண்ணிக்கையைத் திட்டவட்டமாகக் கூறிய பிறகு அங்கே கணிப்புக்கு என்ன வேலை இருக்கும்?
லா நஹ்ஸிபு என்பதற்கு வானியலை அறிய மாட்டோம் என்று ஒரு வாதத்துக்காக பொருள் கொண்டாலும் இவர்களுக்கு எதிராகத் தான் இந்த ஹதீஸ் அமைந்துள்ளது.
நாம் உம்மி சமுதாயம் என்று இந்த ஹதீஸ் துவங்குகிறது. நாம் எழுதுவதை அறிய மாட்டோம். ஹிஸாபையும் அறிய மாட்டோம் என்று ஒரே தொடராகக் கூறப்பட்டுள்ளது. எழுதுவதை அறிய மாட்டோம் என்பதற்கு எப்படிப் பொருள் கொள்கிறோமோ அதே போன்று தான் ஹிஸாபை அறிய மாட்டோம் என்ற வாசகத்திற்கும் பொருள் கொள்ள வேண்டும்.
எழுதுவதை அறிய மாட்டோம் என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் யாருக்குமே எழுதத் தெரியாது என்ற பொருள் அல்ல. ஏனென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் எழுதத் தெரிந்தவர்களும் இருந்தார்கள். குர்ஆன் எழுதப்பட்டது எழுதத் தெரிந்த நபித்தோழர்களால் தான்.
அதே போல் ஹிஸாபையும் அறிய மாட்டோம் என்பதற்கு வானியல் அறிய மாட்டோம் என்ற பொருளைக் கொடுத்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய சமுதாயத்தில் வானியல் தெரிந்தவர்களும் இருந்தார்கள் என்று தான் அர்த்தமாகிறது. எண்ணிக்கையில் குறைவாக இருந்தார்கள் என்று வேண்டுமானால் கூறலாம்.
ஹிஸாபையும் அறிய மாட்டோம் என்பதற்கு வானியல் அறிய மாட்டோம் என்ற பொருளின் படி வானியல் கணிப்பு தெரிந்த சிலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் இருந்த போதிலும் அவர்களிடம் கேட்டு பிறையைத் தீர்மானிக்காமல் பிறையைப் பார்க்க வேண்டும்; அல்லது மாதத்தை முப்பதாகப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
எனவே கணிப்பு தெரிந்தவர்களாக சிலர் இருந்தாலும் அதன் அடிப்படையில் செயல்படக் கூடாது ஓட்டு மொத்த சமுதாயமும் என்றைக்கு வானியல் மேலோங்கி இருக்கிறதோ அப்போது தான் வானியல் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று தான் இவர்கள் வாதப்படி கூற வேண்டும். இது எந்தக் காலத்திலும் சாத்தியமில்லை.
அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்
அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் பரிசீலிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
அவனே காலைப் பொழுதை ஏற்படுத்துபவன். இரவை அமைதிக் களமாகவும், சூரியனையும் சந்திரனையும் காலம் காட்டியாகவும் அமைத்தான். இது மிகைத்தவனாகிய அறிந்தவனின் எற்பாடு.
அல்குர்ஆன் 6:96
ஆண்டுகளின் எண்ணிக்கையையும், (காலக்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும், சந்திரனை ஒளியாகவும் அமைத்தான். சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தினான். தக்க காரணத்துடன் அல்லாஹ் இதைப் படைத்துள்ளான். அறிகின்ற சமுதாயத்திற்கு வசனங்களை அவன் தெளிவாக்குகிறான்.
அல்குர்ஆன் 10:5
தொடர்ந்து இயங்கும் நிலையில் சூரியனையும், சந்திரனையும் உங்களுக்குப் பயன்படச் செய்தான். இரவையும், பகலையும் உங்களுக்காகப் பயன்படச் செய்தான்.
அல்குர்ஆன் 14:33
அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான்வெளியில் நீந்துகின்றன.
அல்குர்ஆன் 21:33
இரவும் அவர்களுக்கு ஓரு சான்று. அதிலிருந்து பகலை உரித்தெடுக்கிறோம். உடனே அவர்கள் இருளில் ஆழ்ந்து விடுகிறார்கள். சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும். சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தியுள்ளோம். முடிவில் அது காய்ந்த பேரீச்சம் பாளை போல் ஆகிறது. சூரியனால் சந்திரனை அடைய முடியாது. இரவு, பகலை முந்தாது. ஒவ்வொன்றும் ஆகாயத்தில் நீந்துகின்றன.
அல்குர்ஆன் 36:36, 37, 38, 39, 40
சூரியனும், சந்திரனும் கணக்கின் படி இயங்குகின்றன.
அல்குர்ஆன் 55:5
பிறைகளைப் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். அவை மக்களுக்கும், (குறிப்பாக) ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்” எனக் கூறுவீராக!
அல்குர்ஆன் 2:189
வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கு இழைத்து விடாதீர்கள்!
அல்குர்ஆன் 9.36
இரவையும், பகலையும் இரண்டு சான்றுகளாக்கினோம். உங்கள் இறைவனிடமிருந்து அருளைத் தேடவும், ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக் கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும் இரவின் சான்றை ஒளியிழக்கச் செய்து பகலின் சான்றை வெளிச்சமாக்கினோம். ஒவ்வொரு பொருளையும் நன்கு தெளிவுபடுத்தினோம்.
அல்குர்ஆன் 17:12
வானத்தில் நட்சத்திரங்களை ஏற்படுத்தி, அதில் விளக்கையும், ஒளி சிந்தும் சந்திரனையும் ஏற்படுத்தியவன் பாக்கியமானவன்.
அல்குர்ஆன் 25:61
என்பன போன்ற வசனங்களை ஆதாரமாகக் காட்டுகின்றனர். அல்லாஹ் சந்திரனுக்குப் பல படித்தரங்களை ஏற்படுத்தியுள்ளான். அந்தப் படித்தரங்கள் நாட்களை அறிந்து கொள்வதற்குத் தானே? வானியல் முடிவுப்படி நாட்களைக் கணித்தால் தானே அது காலம் காட்டியாக இருக்க முடியும்?
சந்திரன் காலம் காட்டி என்று அல்லாஹ் கூறுவது உண்மை தான். இதில் யாருக்கும் இரண்டாவது கருத்து இல்லை.
2007 முதல் தான் சந்திரன் காலத்தைக் காட்ட ஆரம்பித்துள்ளதா? அல்லது சந்திரனை அல்லாஹ் படைத்தது முதல் காலம் காட்டுகிறதா? என்று சிந்தித்தாலே இந்த வாதத்தின் பலவீனத்தை உணர முடியும்.
அல்லாஹ் சந்திரனை எப்போது படைத்தானோ அப்போது முதல் அது காலம் காட்டியாகத் தான் இருக்கிறது. அந்த காலம் முதல் அதைப் பார்த்துத் தான் மக்கள் நாட்களைத் தீர்மானித்துக் கொண்டனர். ஹஜ் எப்போது கடமையாக்கப்பட்டதோ அப்போது முதல் ஹஜ்ஜின் காலத்தைக் காட்டக் கூடியதாகவும் பிறை அமைந்துள்ளது.
என்னவோ இவ்வளவு நூற்றாண்டுகளாக பிறை காலம் காட்டாமல் இருந்தது போலவும் 2007ல் வானியல் அறிவு வளர்ந்த பின் தான் அது காலத்தைக் காட்டக் கூடியதாக ஆகி விட்டது போலவும் இவர்கள் நினைக்கிறார்கள் போலும்.
வருங்காலத்தில் காலம் காட்டியாக இருந்தால் மட்டும் போதாது எந்தக் காலத்தில் இது கூறப்பட்டதோ அந்தக் காலத்தில் நிச்சயம் காலம் காட்டியாக அமைந்திருப்பது அவசியம். இல்லையென்றால் அன்றைக்கு இந்த வசனம் அருளப்பட்ட போது உண்மையில்லாத செய்தியை அது கூறியதாக ஆகி விடும்.
பிறை எவ்வாறு காலம் காட்டியாக இருக்கிறது என்பதை மிகத் தெளிவாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கி விட்டனர். (இதை முன்னர் நாம் விளக்கியுள்ளோம்) அவர்கள் காலத்தில் அது எப்படி காலம் காட்டியாக இருந்ததோ அப்படியே இன்றளவும் இனி சந்திரன் உள்ளளவும் அது காலம் காட்டியாக இருக்கும்.
இன்னும் சொல்வதானால் அன்றைக்கு எப்படி சந்திரன் சிறிதாகத் தோன்றி பின்னர் படிப்படியாக வளர்ந்து பின்னர் தேய ஆரம்பித்ததைக் கண்ணால் பார்த்து காலத்தைக் கணித்துக் கொண்டார்களோ அதே போல் இன்றைக்கும் கண்களால் பார்த்துத் தான் காலத்தை அறிந்து கொள்ள வேண்டும். மேற்கண்ட வசனங்கள்அனைத்தும் இதைத் தான் கூறுகின்றன.
சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?
பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
சூரியன் விஷயத்தில் கணிப்பை ஏற்றுக் கொள்ளும் நாம் சந்திரன் விஷயத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று வேறுபடுத்திக் கூறுவது சரி தான். ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறையைப் பார்த்துத் தான் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்று கூறி விட்டார்கள்.
சூரியன் மறைந்தவுடன் மக்ரிப் தொழ வேண்டும் என்பது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையாகும். சூரியன் மறைந்தது என்பதை எப்படித் தீர்மானிக்க வேண்டும் என்பது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த உத்தரவையும் இடவில்லை.
மேக மூட்டமான நாட்களில் சூரியன் தென்படாத பல சந்தர்ப்பங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வந்ததுண்டு. அது போன்ற நாட்களில் சூரியன் மறைவதைக் கண்டால் மக்ரிப் தொழுங்கள். இல்லாவிட்டால் அஸர் நேரம் என்றே அதைக் கருதிக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. அது போல் சூரியன் மறைவதைக் கண்ணால் கண்ட பின் தான் நோன்பு துறக்க வேண்டும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்கள் துஆச் செய்தவுடன் மழை பெய்ய ஆரம்பித்து ஆறு நாட்கள் நாங்கள் சூரியனையே பார்க்கவில்லை என்று புகாரியில் ஹதீஸ் உள்ளது.
(பார்க்க: புகாரி 1013, 1014)
ஆறு நாட்களும் சூரியனையோ அது உதிப்பதையோ மறைவதையோ பார்க்க முடியவில்லை. இந்த ஆறு நாட்களும் கணித்துத் தான் தொழுதிருக்க முடியும். அனேகமாக சூரியன் மறைந்திருக்கும் என்று கருதும் நேரத்தில் தான் மக்ரிப் தொழதிருக்க முடியும்.
மேகம் சூரியனை மறைத்தது போல் சந்திரனையும் மறைக்கிறது. சந்திரன் மறைக்கப்படும் போது எப்படியாவது கணித்துக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறவில்லை. பிறை தெரியாததால் மேகத்தின் உள்ளே பிறை இருந்தாலும் அது முப்பதாம் நாள் தான். முதல் நாள் அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி விட்டனர்.
சூரியனை மேகம் மறைத்த போது கணித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்திரனை மேகம் மறைத்த போது கணிக்கக் கூடாது. அது முப்பதாம் நாள் தான் என்று தெளிவாகப் பிரகடனம் செய்து விட்டனர். எனவே தொழுகைக்கும் நோன்புக்கும் ஒரே மாதிரியான அளவு கோல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
வானியல் கணிப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுபவர்கள் சுபுஹ் வரை தகவலை எதிர்பார்க்க வேண்டும் என்று கூறுவது ஏன்? கணிப்பை ஏற்றுச் செயல்பட வேண்டியது தானே? வானியல் மூலம் 1000 வருடங்களுக்குப் பிறகுள்ள பிறையையும் கணித்து விடலாம் அல்லவா?
தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?
….அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ஒரு வருடம் போன்றும், மற்றொரு நாள் ஒரு மாதம் போன்றும், அடுத்த நாள் ஒரு வாரம் போன்றும், ஏனைய நாட்கள் இன்றைய நாட்களைப் போன்றும் இருக்கும்” என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஒரு வருடத்தைப் போன்ற அந்த நாளில் ஒரு நாள் தொழுகை எங்களுக்குப் போதுமா?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், போதாது; அதற்குரிய அளவை அதற்காக (தொழுகைக்காக) கணித்துக் கொள்ளுங்கள்” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி)
நூல்: முஸ்லிம்
நாட்களைக் கணித்துக் கொள்ளலாம் என்று இந்த ஹதீஸிலிருந்து தெரிகிறது.
மேலும் சந்திர மண்டலத்தில் வசிக்கும் நிலை ஏற்பட்டால் அப்போது சந்திரனைப் பார்த்து மாதம் மற்றும் நாட்களைத் தீர்மானிப்பது சாத்தியமற்றதாகி விடும். எனவே கணிப்புகள் அடிப்படையில் முடிவு செய்வது தான். நவீன யுகத்திற்கு ஏற்றதாகும் என்ற அடிப்படையில் பிறையை நாம் கணித்துக் கொள்வதில் என்ன தவறு என்று சிலர் வாதிடுகின்றனர்.
இந்த ஹதீஸில் கணித்துக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியது உண்மை தான்.
எப்போது கணிக்கச் சொன்னார்கள்? ஒரு நாள் ஒரு வருடம் போன்று நீண்டதாக (அதாவது ஆறு மாத அளவு பகலாகவும் ஆறு மாத அளவு இரவாகவும்) இருக்கும் போது தான் கணிக்கச் சொன்னார்கள். இந்த இடத்தில் கணிப்பதைத் தவிர வேறு வழி இருக்காது. இதே அடிப்படையில் துருவப் பிரதேசத்தில் ஆறு மாதம் பகலாகவும் ஆறு மாதம் இரவாகவும் இருக்கும். அங்கே மக்கள் வாழ்ந்தால் அவர்களும் கூட ஒரு வருடம் முழுவதற்கும் ஐந்து வேளை மட்டுமே தொழ வேண்டும் என்று கூற முடியாது. அவர்கள் கணித்துக் தான் தொழுகை, நோன்பு போன்ற வணக்க வழிபாடுகளை நிறைவேற்ற முடியும்.
இவர்கள் குறிப்பிடுவது போல சந்திரனில் வாழ்கின்ற சூழ்நிலை இல்லை. ஒருவேளை அப்படி ஒரு நிலை ஏற்பட்டாலும் அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி கணிப்பது தான். தினந்தோறும் சூரியன் உதித்து மறையக் கூடிய பகுதிகளில் வாழக் கூடிய நமக்கு இந்தச் சலுகை உண்டா? என்று கேட்கக் கூடாது.
முடவர், நொண்டி, குருடர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட சலுகைகளை கை, கால்கள் சுகமாக உள்ளவர், நல்ல கண் பார்வையுள்ளவர் கேட்பது போல் தான் இது ஆகும்.
சந்திர மண்டலத்தில் வசிக்கும் நிலை ஏற்பட்டால் அங்கிருந்து கொண்டு கஃபாவை நோக்கித் தொழும் வாய்ப்பில்லை. அதனால் அங்கே வசிப்பவர் எந்தத் திசையை நோக்கியும் தொழலாம் என்று தான் கூறியாக வேண்டும். நானும் அது போல் தொழுவேன் என்று பூமியில் இருந்து கொண்டு கஃபாவை நோக்கும் வாய்ப்புள்ளவர் கூறக் கூடாது. நிர்பந்தத்தில் மாட்டிக் கொண்டவருக்கு வழங்கப்பட்ட சலுகைகளை சாதாரண நிலையில் உள்ளவர் சட்டமாக எடுத்துக் கொள்வது அறிவீனமாகும்.
துருவப் பிரதேசத்தில் வாழ்பவன் ஒரு நிர்பந்தத்திற்கு உள்ளாகியிருக்கின்றான். அவன் கை, கால் ஊனமுற்ற முடவனைப் போன்றவன். பிறை பார்க்கக் கூடிய வாய்ப்பு அவனுக்கு அறவே கிடையாது என்பதால் அவனுக்கு இந்த ஹதீஸ் கணித்தல் என்ற சலுகையை வழங்கியிருக்கின்றது. பிறை பார்க்கும் வசதியுள்ள நமக்கு இந்த கணிப்பு என்ற சலுகை ஒரு போதும் பொருந்தாது.
வானியல் கணிப்பு பொய்யா?
வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். வானியல் நிபுணர்களால் கணிக்கவே முடியாது என்று நாம் வாதிடுவதாகக் கருதக் கூடாது.
பல நூறு வருடங்களுக்குப் பின்னால் சென்னையில் தோன்றக் கூடிய சந்திர கிரகணத்தை இன்றைக்கே அவர்களால் கணித்துச் சொல்ல முடியும். எத்தனை மணி, எத்தனை நிமிடத்தில் தோன்றும் என்று கணிக்கிறார்களோ அதில் எந்த மாற்றமுமின்றி அது நடந்தேறும். அந்த அளவுக்கு வானியல் வளர்ந்துள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்வோம்.
இன்று இந்தப் பகுதியில் பிறை தென்படும் வகையில் இருக்கும் என்று கணித்துக் கூறினால் அந்தப் பகுதியினர் காணும் வகையில் ஆகாயத்தில் நிச்சயம் இருக்கும். ஏனெனில் அந்த அளவுக்குத் துல்லியமாக கணிக்க இயலும். மேகம் மற்றும் சில புறக் காரணங்களால் நமது பார்வைக்குத் தெரியாமல் போகவும் கூடும்.
அவர்களது கணிப்பு சரியானது தான் என்பதை ஏற்றுக் கொள்ளும் அதே சமயத்தில் தலைப் பிறையைத் தீர்மானிக்க அதை அளவுகோலாக கொள்ளக் கூடாது என்பது தான் நமது வாதம். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் மாதத்தின் முதல் தினத்தைத் தீர்மானிப்பதற்கு கண்களால் பார்க்க வேண்டும் என்று வரையறுத்து விட்டனர்.
வானியல் கணிப்பின் படி எங்கே எப்போது பார்க்க முடியும் என்று கூறுகிறார்களோ அதை நம்பி அங்கே அப்போது பார்க்க முயற்சிக்கலாமே தவிர பார்க்காமல் தலைப்பிறை என்ற தீர்மானத்திற்கு வரக் கூடாது. நபி (ஸல்) அவர்கள் வானியல் வளர்ச்சியடையாத காலத்துக்குத் தான் அவ்வாறு கூறினார்கள் என்று ஹதீஸுக்கு விளக்கம் கூறித் தான் இவர்கள் இதை நியாயப்படுத்தினார்கள். அந்த விளக்கம் சரியில்லை எனும் போது நிலையை மாற்றிக் கொள்வது தான் இறையச்சமுடையோரின் செயலாக இருக்கும்.
வானியல் கணிப்பின் படி முடிவு செய்யலாம் என்ற கருத்தை ஏற்கக் கூடியவர்களுக்கு மற்றொரு விஷயத்தையும் நாம் நினைவுபடுத்த விரும்புகிறோம்.
வானியல் வாதம் புரிவோரின் கருத்துப்படி பிறையைப் பார்த்து நோன்பைத் தீர்மானிப்பது பாவமான காரியம் அல்ல. பிறை பார்த்து நோன்பு நோற்பது குற்றம் என்று அவர்களால் கூற முடியாது. அதற்கு ஆதாரம் காட்டவும் முடியாது.
பிறையைப் பார்த்து நோன்பு நோற்க வேண்டும் என்ற கருத்துக் கொண்டவர்களின் பார்வையில் பிறை பார்க்காமல் கணித்து முடிவு செய்வது குற்றமாகும். ஏராளமான நபிமொழிகளுக்கு எதிரானதாகும்.
அதாவது இரண்டு சாராரின் கருத்துப்படியும் பிறை பார்த்து நோன்பைத் தீர்மானிப்பது குற்றச் செயல் அல்ல. ஆனால் பிறை பார்க்காமல் கணித்து நோன்பு நோற்பது ஒரு சாரார் பார்வையில் குற்றச் செயலாகும். மறுமையில் வெற்றி பெற வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்ட ஒரு முஸ்லிம், இரு சாராரின் கருத்துப்படியும் எது குற்றமற்றதோ எவரது கருத்துப் படியும் எது குற்றமில்லையோ அதைத் தான் செய்வார். செய்ய வேண்டும்.
எனவே பிறை பார்த்து நோன்பு நோற்று நபி (ஸல்) அவர்களின் போதனையை உலகம் உள்ளளவும் கடைப்பிடித்தவர்களாவோம்.
சில சந்தேகங்களும் விளக்கங்களும்
பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி பதில் வடிவில் பதில் அளித்துள்ளோம்.
உலகமெல்லாம் ஒரே கிழமை
உலகம் முழுவதும் ஒரே கிழமை தான் வருகின்றது. சவூதியில் வெள்ளிக்கிழமை என்றால் உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமையாகத் தான் உள்ளது. அங்கே வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழும் போது இங்கேயும் ஜும்ஆ தொழுகின்றோம். பெருநாளை மட்டும் அங்கே வெள்ளிக்கிழமை என்றால் இங்கே சனிக்கிழமை எப்படி கொண்டாட முடியும்?
உலகம் முழுவதும் ஒரே பிறை என்று வாதிடக் கூடியவர்கள் இதையே பெரிய ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.
உலகம் சுருங்கி விட்டது விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. தகவல் தொடர்பு சாதனங்கள் பெருகி விட்டன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் போல் நாம் உம்மியல்ல. நாங்கள் அறிவியல் மேதைகள் என்று கூறுபவர்களின் விஞ்ஞான அறிவு எந்த அளவுக்கு உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள அவர்களின் இந்தக் கேள்வி போதுமானது.
உலகம் முழுவதும் ஒரே கிழமையாகத் தான் உள்ளது என்ற அவர்களது வாதம் எவ்வளவு அபத்தமானது என்பதை முடிவு செய்யப் பெரிய அறிவியல் ஞானம் ஒன்றும் தேவையில்லை. சாதாரணமாகச் சிந்தித்தாலே போதும்.
இஸ்லாமிய அடிப்படையில் ஒரு நாள் என்பது மக்ரிபிலிருந்து துவங்குகிறது. உதாரணமாக வெள்ளிக்கிழமை மாலையில் சூரியன் மறைந்ததும் சனிக்கிழமை உதயமாகி விடுகின்றது. இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான்.
இப்போது சென்னையில் வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு சூரியன் மறைந்து விட்டால் சனிக்கிழமை உதயமாகி விடுகின்றது. அந்த நேரத்தில் சவூதியில் வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணியாக இருக்கும்.
சென்னையில் சனிக்கிழமையாக இருக்கும் அதே நேரத்தில் சவூதியில் வெள்ளிக்கிழமையாக இருக்கிறது. (சூரியக் கணக்கு அடிப்படையில் பார்த்தால் நள்ளிரவு பன்னிரண்டு மணியை உதாரணமாகக் கொள்ள வேண்டும்.)
இதைப் புரிந்து கொள்வதற்கு சில விஞ்ஞான விளக்கங்களைப் பார்ப்போம்.
உருண்டை வடிவிலுள்ள பூமி தன்னைத் தானே சுற்றுவதால் இரவு பகல் ஏற்படுகின்றது. பூமி சுற்றிக் கொண்டேயிருப்பதால் இந்தியாவில் சூரியன் உதயமாகும். அதே நேரத்தில் இந்தியாவிற்கு எதிர் கோடியிலுள்ள மற்றொரு நாட்டில் சூரியன் அஸ்தமனமாகிக் கொண்டிருக்கும்.
இப்படி ஒவ்வொரு நாட்டிலும் இரவு பகல் மாறி மாறி வந்து கொண்டிருக்கும் போது ஒரு நாள் என்பதை எதிலிருந்து துவக்குவது என்பதில் தடுமாற்றம் ஏற்பட்டது.
இதனால் ஒரு சீரான நிலையை ஏற்படுத்துவதற்காக பூமியின் ஓர் இடத்தை மையமாக வைத்து அதிலிருந்து தேதியைக் கணக்கிட வேண்டும் என்ற முடிவுக்கு புவியியல் விஞ்ஞானிகள் வந்தனர். அந்த அடிப்படையில் ஒரு கடல் பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்கே சர்வதேச தேதிக்கோடு (Date line ) என்ற மையத்தை உருவாக்கி அந்த இடத்தை தேதி கிழமை மாறும் இடமாக உலகம் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தார்கள்.
1884ஆம் ஆண்டு இந்த முடிவு எட்டப்பட்டது. இதன்படி சர்வதேச தேதிக் கோட்டில் நள்ளிரவு 12 மணியைக் கடக்கும் நேரத்தில் ஒரு நாள் பிறப்பதாகக் கணக்கிடப்படுகிறது.
சர்வதேச தேதிக் கோட்டினை பூமி கடக்கின்ற அந்த ஒரு மைக்ரோ வினாடி மட்டுமே உலகம் முழுவதும் ஒரே கிழமையாக இருக்கும். அதாவது அந்த வினாடியில் தேதிக் கோட்டின் கிழக்குப் புறத்தில் உள்ள நாடு வெள்ளிக்கிழமையின் ஆரம்பத்திலும், மேற்குப்புறம் உள்ள நாடு வெள்ளிக்கிழமையின் இறுதியைக் கடந்து சனிக்கிழமையைச் சந்தித்துக் கொண்டிருக்கும்.
சவூதிக்கும், இந்தியாவிற்கும் இரண்டரை மணி நேரம் வித்தியாசப்படுவது போல் தேதிக் கோட்டின் கிழக்கு மற்றும் மேற்குப் புறத்தில் உள்ள இரண்டு நாடுகளுக்கும் இடையில் 24 மணி நேரம் வித்தியாசப்படுகிறது. இதனால் பக்கத்து பக்கத்து இரு நாடுகளுக்கிடையில் ஒரு நாள் வித்தியாசம் ஏற்படுகின்றது.
இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் இங்கிருந்து சவூதி சென்றவுடன் 2.30 மணி நேரத்தை உங்கள் கடிகாரத்தில் குறைத்துக் கொள்ளுங்கள் என்று விமானத்தில் அறிவிப்புச் செய்வார்கள். அதே போல் விமானத்தில் சர்வதேச தேதிக் கோட்டைக் கடந்து செல்லும் போது நேரத்தை மாற்றச் சொல்வதில்லை. மாறாக ஒரு தேதியை ஒரு கிழமையை மாற்றிக் கொள்ளச் சொல்வார்கள்.
உதாரணமாக சர்வதேச தேதிக் கோட்டிற்கு அருகிலிருக்கும் நியூசிலாந்து ஹானலுலு ஆகிய இரு தீவுகளை எடுத்துக் கொள்வோம்.
நியூசிலாந்தில் காலை எட்டு மணியாக இருக்கும் போது ஹானலுலுவில் காலை நேரம் 10 மணியாக இருக்கும்.
ஆனால் நியூசிலாந்தில் வெள்ளிக்கிழமையாகவும் ஹானலுலுவில் வியாழக்கிழமையாகவும் இருக்கும்.
இரண்டு நாடுகளிலும் ஒரே இரவில் முதல் பிறை தென்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு தென்பட்டால் நியூசிலாந்து ஹானலுலு ஆகிய இரு நாடுகளிலும் ஒரே நாளில் தான் நோன்பு வைக்க வேண்டும்.
ஆனால் நியூசிலாந்தில் வெள்ளிக்கிழமையாகவும் ஹானலுலுவில் வியாழக்கிழமையாகவும் இருக்கும்.
நியூசிலாந்தில் பிறை பார்த்து, ஹானலுலுவில் பிறை பார்க்காவிட்டால் அப்போது இரண்டு நாட்கள் வித்தியாசம் ஏற்படும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
உலகம் முழுவதும் ஒரே நாள் தான் என்று வாதம் செய்பவர்களிடம் நாம் கீழ்க்கண்ட கேள்விகளை எழுப்புகிறோம்.
ஹானலுலு நாட்டில் வியாழக்கிழமை அன்று சுப்ஹு தொழுதுவிட்டு அன்றைய லுஹருக்கு நியூசிலாந்த் நாட்டிற்குச் சென்று விடுகின்றோம். ஆனால் அங்கே வெள்ளிக்கிழமை. இப்போது நாம் ஜும்ஆ தொழ வேண்டுமா?
வியாழக்கிழமையின் லுஹர் அஸர் மக்ரிப் இஷா மறுநாள் சுப்ஹு ஆகிய தொழுகைகளைக் களாச் செய்ய வேண்டுமா?
நியூசிலாந்து நாட்டில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுது விட்டு அன்றே ஹானலுலு செல்கிறோம். அங்கே மறு நாள் ஜும்ஆ அதனால் அது வரையிலான தொழுகைகளை நிறைவேற்றாமல் விட்டுவிட்டு மறுநாள் அஸர் தொழுகையிலிருந்து தொழுதால் போதுமா? அல்லது அடுத்தடுத்த நாளில் இரண்டு ஜும்ஆக்கள் தொழ வேண்டுமா?
நியூசிலாந்து நாட்டில் வியாழக்கிழமை காலை பத்து மணிக்கு ஒளிபரப்பும் கிரிக்கெட்டை ஹானலுலுவில் புதன்கிழமையே பார்க்கிறோம். வியாழனில் நடப்பதை புதனில் (அதாவது விளையாட்டு நடப்பதற்கு முன்பே) எப்படிப் பார்க்க முடிகிறது.
ஹானலுலு நாட்டில் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 22ந் தேதி காலை பத்து மணிக்குத் துவங்குகிறது. அதே நாளில் காலை எட்டு மணிக்கு நியூசிலாந்து தொலைக்காட்சியில் அதன் நேரடி ஒளிபரப்பைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது 23ம் தேதியின் காலை எட்டு மணி. இது எப்படி சாத்தியம்?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் உலகம் முழுவதும் ஒரே நாள் என்று வாதிடுபவர்கள் பதில் சொல்ல வேண்டும். சம்பந்தமில்லாத நான்கு குர்ஆன் வசனங்களைப் போட்டுவிட்டு ஒரே சூரியன் ஒரே சந்திரன் என்று வியாக்கியானம் செய்பவர்களும் அது தங்களுடைய கருத்துக்கு ஆதரவாக இருக்கிறது என்ற ஒரே காரணத்தால் அதற்கு அணிந்துரை மதிப்புரை எழுதுபவர்களும் மேலே நாம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
இதில் வேடிக்கை என்னவென்றால் சர்வதேச தேதிக்கோடு மனிதர்களால் வரையப்பட்ட கற்பனையான கோடு தான். இந்தக் கோடு ஏதேனும் ஒரு நாடு வழியாகச் சென்றால் ஒரே நாட்டில் ஒரே நாளில் வெவ்வேறு தேதி வெவ்வேறு கிழமை ஏற்பட்டு அதனால் குழப்பங்கள் தோன்றும் இதைத் தவிர்ப்பதற்காக சர்வதேச தேதிக் கோடு எந்த நாடு வழியாகவும் செல்லாத வண்ணம் ஒரு கடல் பகுதியைத் தேர்ந்தெடுத்து வரையப்பட்டது. இந்த தேதிக் கோடு இந்தியாவிற்கும் சவூதிக்கும் மத்தியில் வரையப்பட்டிருந்தால் இரண்டரை மணி நேர வித்தியாசத்திலேயே வெவ்வேறு கிழமைகளை வெவ்வேறு தேதிகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதையும் மறந்து விடக் கூடாது.
உலகம் எப்போது அழியும்?
உலகம் ஒரு நாளில் அழிக்கப்படும் என்று 83:5, 69:15 வசனங்களில் கூறப்படுகிறது பிறை 1ல் உலகம் அழிக்கப்படும் என்று வைத்துக் கொண்டால் சவூதி பிறை ஒன்றிலா? அல்லது இந்தியா பிறை ஒன்றிலா?
உலகம் வெள்ளிக்கிழமை தான் அழிக்கப்படும் என்று ஹதீஸ்களில் உள்ளது. இது ஒரே கிழமையில் தான் நிகழும் எனும் போது உலகம் முழுவதும் ஒரே கிழமை தான் என்பதில் என்ன சந்தேகம்? என்றும் கேட்கின்றனர்.
உலகம் முடிவு நாள் வெள்ளிக்கிழமை நடக்கும் என்று ஹதீஸ் உள்ளது. ஆனால் பிறைக் கணக்கில் 1ல் தான் அழிக்கப்படும் என்றோ 2ல்தான் அழிக்கப்படும் என்றோ ஹதீஸ் இல்லை.
குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விஞ்ஞானத்தை உரிய முறையில் விளங்கினால் நிச்சயமாக இந்தக் கேள்விகளுக்குப் பதில் கூற முடியும்.
ஒவ்வொரு நாளும் தேதிக் கோட்டை பூமி கடக்கும் அந்த மைக்ரோ வினாடியில் உலகம் முழுவதும் ஒரே கிழமை. தேதியில் இருக்கும் என்பதை முன்னர் கூறியுள்ளோம். அதாவது இந்த நிலையை அடையும் போது தேதிக் கோட்டின் கிழக்குப் புறம் உள்ள பகுதி கிழமையின் துவக்கத்திலும் தேதிக் கோட்டின் மேற்குப்புறம் உள்ள பகுதி அதே கிழமையின் இறுதியிலும் இருக்கும்.
இந்த விநாடியில் மட்டுமே உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமையாக இருக்கும். இது மனிதன் வரைந்த கற்பனையான கோட்டின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட வெள்ளிக்கிழமை.
அல்லாஹ் பூமியைப் படைத்து நாள் கணக்கைத் துவக்கிய அந்த நேரத்தை அவன் தான் அறிவான். அல்லாஹ் அமைத்த உண்மையான அந்தத் தேதிக் கோட்டின் அடிப்படையில் ஒரு வினாடியில் உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமையாக இருக்கும் போது உலகத்தை அழிப்பது அவனுக்குச் சிரமமான காரியமில்லை.
ஆதம் (அலை) அவர்கள் குறித்த ஹதீஸுக்கும் இதே விளக்கத்தைக் கொடுக்க முடியும். அல்லாஹ் மிக அறிந்தவன்.
இரண்டு நாள் வித்தியாசம் ஏன்?
சவூதிக்கும் நமக்கும் இரண்டரை மணி நேரம் வித்தியாசம் ஆனால் சவூதி பிறைக்கும் நமது பிறைக்கும் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் வித்தியாசம் வருகின்றதே அது எப்படி? உதாரணமாக சவூதியில் 8ந் தேதி பெருநாள் என்றால் நமக்கு 9 அல்லது 10ந் தேதியில் தான் பெருநாள் வருகிறது. அது எப்படி?
முதலில் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். சவூதிக்கும் நமக்கும் இரண்டரை மணி நேரம் வித்தியாசம் என்பது சூரியனுடைய கணக்கின் அடிப்படையில் ஏற்படுவதாகும். சூரியனின் உதயம் அஸ்தமனம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து நேரத்தைத் தீர்மானிக்கிறோம். அதாவது சென்னையில் சூரியன் மறைந்து கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் கழித்து சவூதியில் சூரியன் மறையும். இது சூரியக் கணக்கு இதை பிறை தென்படுவதற்கு அளவு கோலாக எடுக்க முடியாது.
உதாரணமாக சவூதியில் 8ந் தேதி மாலை 6.30 மணிக்கு முதல் பிறை பிறக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த நேரத்தில் நமது நாட்டில் இரவு 9.00 மணி. அதாவது சவூதியில் பிறை பார்த்த நேரத்தை விட இரண்டரை மணி நேரத்தைக் கடந்திருப்போம். தலைப்பிறையை ஒன்பது மணிக்கெல்லாம் பார்க்க முடியாது. சவூதியில் பார்த்த பிறையை நாம் பார்க்க வேண்டுமானால் நமது நாட்டில் மறுநாள் (9ந் தேதி) மாலை 6.30 அல்லது ஏழு மணிக்குத் தான் பார்க்க முடியும்.
சூரிய உதயத்தை நாம் சவூதியை விட இரண்டரை மணி நேரம் முன்னதாக அடைகிறோம். அதே சமயத்தில் சந்திரன் தென்படும் நிலையை அவர்களை விட சுமார் 21.30 மணி நேரம் பிந்தி அடைகிறோம். இதனால் நமது நாட்டில் பிறை தென்படும் நாளில் சவூதியில் பிறை 2 ஆக இருக்கும் வாய்ப்பிருக்கிறது. (ஒரே நாளிலும் தெரியலாம்) எனவே சந்திரன் அடிப்படையில் மாதத்தைத் தீர்மானிக்கும் போது சூரியக் கணக்கில் உள்ள நேர வித்தியாசத்தைப் பொருத்திப் பார்க்கக் கூடாது.
சவூதிக்கும் நமக்கும் ஒரு நாள் வித்தியாசம் ஏற்படுவது இயற்கையானது தான். அல்லாஹ்வும் அதனால் தான் அம்மாதத்தை யார் அடைகிறாரோ என்று கூறுகின்றான். இதை ஏற்கனவே கூறியுள்ளோம்.
இரண்டு நான் வித்தியாசம் வருகின்றதே இது எப்படி?
எப்படிப் பார்த்தாலும் ஒரு நாளுக்கு மேல் வித்தியாசம் ஏற்பட சாத்தியமில்லை என்பது உண்மை தான். இரண்டு நாள் வித்தியாசம் ஏற்படுவதற்கு ஒரு தரப்பில் ஏற்படும் தவறுகள் தான் காரணம்.
பொதுவாக அமாவாசை முடிந்து 15 மணி நேரம் ஆவதற்கு முன்னால் உலகில் எந்தப் பகுதியிலும் பிறை தென்படுவதற்கு வாய்ப்பில்லை. 15 மணி நேரத்திற்குப் பின் ஏதேனும் ஒரு நாட்டில் பிறை தெரிய ஆரம்பித்து எல்லா நாட்டிற்கும் தெரிவதற்கு சுமார் 15 மணி நேரம் ஆகும். அதாவது அமாவாசை முடிந்த பின்னர் பிறை தென்படுவதற்கு சுமார் 15 மணி நேரத்திலிருந்து நாற்பது மணி நேரம் வரை ஆகும். இந்த காலவரையறைக்கு முன்னதாக யாராவது பிறை பார்த்ததாகக் கூறினால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது.
சவூதி அரேபியாவைப் பொறுத்தவரை இது வரை பிறை பார்த்ததாக அறிவித்த பல ஆண்டுகளில் பிறை தென்படுவதற்கே வாய்ப்பில்லாத நேரத்தில் பிறை பார்க்கப்பட்டதாகத் தான் அறிவித்துள்ளார்கள். இதை நாம் சுயமாகச் சொல்லவில்லை. லண்டனிலிருந்து வெளியாகும் என்ற ஈழ்ங்ள்ஸ்ரீங்ய்ற் என்ற பத்திரிகையும் மலேசியாவிலுள்ள சர்வதேச இஸ்லாமிய தேதி கவுன்சில் என்ற அமைப்பும் மற்றும் நமது நாட்டிலுள்ள வானியல் ஆராய்ச்சி நிறுவனங்களும் உறுதி செய்துள்ளன.
சவூதி எந்த அடிப்படையில் இவ்வாறு அறிவிக்கின்றது என்பது நமக்குத் தெரியவில்லை.
சந்திர சுழற்சியின் அடிப்படையில் சவூதிக்கும் நமக்கும் இடையில் ஒரு நாள் வித்தியாசம் ஏற்படுகின்றது. சவூதியின் தவறான நிலைபாட்டினாலும் ஒரு நாள் வித்தியாசம் ஏற்படுகின்றது. இதனால் தான் சவூதி அரசாங்கம் பிறை பார்த்ததாக அறிவித்த நாளுக்கும் நாம் பிறை பார்க்கும் நாளுக்கும் இரண்டு நாட்கள் வித்தியாசம் ஏற்படுகின்றது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிறை பார்த்து அல்லது குறிப்பிட்ட பகுதிகளிலிருந்து தகவல் வந்தால் அதை ஏற்று மக்கள் செயல்பட்டுக் கொண்டிருந்த போது ஒரு பகுதிக்கும் மற்றோர் பகுதிக்குமிடையில் ஒரு நாள் மட்டுமே வித்தியாசம் இருந்து வந்தது.
புதிதாக சவூதியிலிருந்து நோன்பு, பொருநாள் ஆகியவற்றை இறக்குமதி செய்ததால் தான் தமிழ்நாட்டிற்குள்ளேயே இரண்டு நாட்கள் வித்தியாசம் ஏற்பட ஆரம்பித்தது.
உலகம் முழுவதும் ஒரே நாளில் பெருநாளைக் கொண்டு வர வேண்டும் என்று கூறி அறிமுகப்படுத்தப்பட்டது தான் சவூதி பெருநாள் கொள்கை. இதன் மூலம் இரண்டு நாட்களில் பெருநாளைச் சந்தித்துக் கொண்டிருந்த தமிழகத்தில் மூன்று நாட்கள் பெருநாள் ஏற்படுவதற்கு வழி வகுத்ததைத் தவிர வேறு எந்தச் சாதனையையும் இந்தக் கொள்கை ஏற்படுத்தவில்லை என்பது நிதர்சனமாக உண்மையாகும்.
பிறையை ஒவ்வொரு பகுதியிலும் பார்த்தே தீர்மானிக்க வேண்டும். பிறை தென்படாத பகுதிகள் முந்தைய மாதத்தை முப்பதாகப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் கூறியுள்ளோம். மார்க்கம் நமக்குக் கற்றுத் தந்த இந்த எளிமையான நடைமுறையை ஒவ்வொரு பகுதியினரும் கடைப்பிடிக்க ஆரம்பித்து விட்டால் உலகம் முழுவதும் ஒரு நாளுக்கு மேல் வித்தியாசம் ஏற்பட வாய்ப்பில்லை. அந்த நிலை விரைவில் ஏற்பட்டுவிடும் என்று நம்புவோம். இன்ஷாஅல்லாஹ்.
எத்தனை லைலத்துல் கத்ர்?
லைலத்துல் கத்ர் என்ற பாக்கியமிக்க இரவு ஒற்றைப்படை இரவுகளில் தான் அமையும் என்பது நபிமொழி. ஆளுக்கு ஒரு தலைப்பிறை இருந்தால் பாதிப் பேருக்கு லைலத்துல் கத்ர் கிடைக்காதே? எனவே உலகம் முழுவதும் ஒரே நாளில் தான் நோன்பைத் துவக்க வேண்டும். இன்றிரவு இங்கே பிறை பார்க்கிறோம். இந்த நேரத்தில் அமெரிக்காவில் பகலாக இருக்கும். பகல் எப்படி லைலத்துல் கத்ராக, அதாவது கத்ருடைய இரவாக ஆகும்?
அடுத்து வரும் இரவில் தான் பிறை என்று கூறினால் இங்கே லைலத்துல் கத்ர் ஏற்பட்டு 24 மணி நேரம் கழித்துத் தானே அமெரிக்காவில் ஏற்படுகிறது.?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் மதீனாவில் ஒரு நாளும் மற்ற ஊர்களில் ஒரு நாள் முன்னதாகவும் பிறை காணப்பட்டுள்ளது. வாகனக் கூட்டம் பற்றிய ஹதீஸ் இதற்குப் போதிய ஆதாரமாகும்.
முதலில் பிறை பார்த்தவர்கள் கணக்குப் படி ஒற்றைப்படை நாட்களில் லைலத்துல் கத்ர் வந்து விடுகிறது. இவர்களுக்கு ஒற்றைப்படையாக அமையும் நாட்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இரட்டைப்படை நாட்களாக அமையுமே? அப்படியானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு லைலத்துல் கத்ர் பாக்கியம் கிட்டாதா?
அல்லாஹ் ஒரு பாக்கியத்தை வழங்கினால் அனைவரும் அடைந்து கொள்ள ஏற்ற வகையில் தான் அருளுவான். முஸ்லிம்கள் பரந்து விரிந்த அந்தக் காலத்தில் ஒரு பகுதியில் காணப்பட்ட பிறை மறு பகுதிக்குத் தெரியாது. இருவேறு நாட்களில் தான் நோன்பு ஆரம்பமாகியிருக்கும். அப்படியானால் யாருடைய கணக்கு ஒற்றைப்படை? ஒரு சாரார் அதை அடைந்து மறு சாரார் அடைய மாட்டார்கள் என்பது தான் பொருளா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்களும் மக்களும் எப்படி லைலதுல் கத்ரை அடைந்தார்களோ அவ்வாறே நாமும் அடைய முடியும். குர்ஆன் இறங்கிய அந்த இரவு தான் லைலதுல் கத்ர். அந்த இரவே நிச்சயமாக திரும்பாது. அந்த இரவே திரும்பினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்போது வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். எனவே சென்று போன அந்த இரவே திரும்பி வரும் என்று கருதக் கூடாது. அந்த இரவை மதிக்கும் வகையில் நாம் வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் போது அல்லாஹ் 1000 மாதங்களுக்கு நிகரான நன்மையைத் தருகிறான் என்பது தான் இதன் கருத்தாகும்.
அந்த நாள் திரும்பாது. அந்த இரவை மதிக்கும் வகையில் நாம் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதே இதன் நோக்கம் என்று ஆகும் போது நாம் எதை ஒற்றைப்படை என்று கருதுகிறோமோ அந்த இரவில் அந்த நன்மைகளை இறைவன் வாரி வழங்கி விடுவான். இப்படிக் கருதும் போது இறைவனது அருளில் எந்தப் பாரபட்சமும் இல்லை.
யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற வசனம் மாதத்தை அடைவதில் முன்பின்னாக இருக்கும் என்று ஒத்துக் கொள்கிறது. ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி முதல் பிறை என்றால் தனித்தனி ஒற்றைப்படையும் வரத் தான் செய்யும். இதை உணர்ந்தால் குழப்பம் இருக்காது.
எந்தக் கணக்கின் அடிப்படையிலும் உலகம் முழுவதும் ஒரே நாளில் தலைப்பிறை என்பது சாத்தியமில்லை என்பதை பலமுறை விளக்கியுள்ளோம்.
மக்காவைப் புறக்கணிக்கலாமா?
மக்காவைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் உம்முல் குரா கிராமங்களின் தாய் என்று வர்ணித்துக் கூறுகின்றான். அந்த மக்காவில் தான் இறை வணக்கத்திற்காக முதன் முதலில் கட்டப்பட்ட கஃபா அமைந்துள்ளது. ஹஜ் செய்வதற்காக உலகம் முழுவதிலிருந்தும் அங்கு தான் மக்கள் செல்ல வேண்டும். உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் கஃபாவை நோக்கியே தொழ வேண்டியிருக்கிறது.
இப்படி எல்லா வகையிலும் மக்காவிற்கு அல்லாஹ் ஒரு மகத்துவத்தை வழங்கியிருக்கிறான். பூகோள ரீதியாகவும் மக்கா நடு நாயகமாக அமைந்துள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு மக்காவில் காணப்பட்ட பிறையை உலகம் முழுவதும் ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது?
மக்கா என்பது உம்முல் குரா என்பதிலும் கஃபா தான் உலகம் முழுவதற்கும் கிப்லா என்பதிலும் ஹஜ் செய்வதற்கு அங்கு தான் செல்ல வேண்டும் என்பதிலும் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை. ஏன் கஃபாவை கிப்லாவாக ஏற்றுக் கொண்டுள்ளோம்? ஏன் ஹஜ் செய்வதற்கு கஃபாவிற்குச் செல்கிறோம்? அல்லாஹ் அவ்வாறு கட்டளையிட்டுள்ளான். அதனால் அதை ஏற்று நாம் செயல்படுத்துகிறோம்.
இதையெல்லாம் கூறிய அல்லாஹ் இவர்கள் கேட்பது போல் மக்காவில் பார்க்கப்பட்ட பிறையை உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலை இருந்தால் அதையும் கூறியிருப்பான். உம்முடைய இறைவன் எதையும் மறப்பவன் அல்ல என்று குர்ஆன் கூறுகின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் வாழ்ந்த போதெல்லாம் மக்காவில் பிறை பார்த்து விட்டார்களா என்று பார்த்து தங்களுடைய நோன்பு மற்றும் பெருநாளைத் தீர்மானிக்கவில்லை.
அல்லாஹ்வோ அவனது தூதரோ கட்டளையிடாத ஒரு விஷயத்தை நாமாக ஏற்படுத்துவது அல்லாஹ்வையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் குறை கூறுவதாகும்.
இவர்கள் கூறிய சிறப்பெல்லாம் மக்காவிற்கு இருக்கிறது என்பதால் மக்காவில் கஃபாவில் அஸர் தொழும் போது தான் நாமும் அஸர் தொழ வேண்டும் என்று யாரும் கூற மாட்டார்கள். நமது ஊரில் எப்போது அஸர் தொழுகையின் நேரம் வருகின்றதோ அப்போது தான் தொழ வேண்டும். இதே அளவுகோல் தான் பிறைக்கும்.
மக்காவில் பிறை தென்படும் நாள் வேறு. நமது ஊரில் பிறை தென்படும் நான் வேறு. கஃபாவை எதற்குப் பயன்படுத்த வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றானோ அதற்குத்தான் பயன்படுத்த வேண்டும். மக்காவில் என்றைக்குப் பிறை பார்க்கின்றார்களோ அதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற வசனத்திற்கும் நாம் எடுத்துக்காட்டிய நபிமொழிகளுக்கும் மாற்றமானதாகும்.
மக்கா உலகின் மையமாக இருக்கிறது என்று கூறுவது அறிவியலுக்கு முரணானது; அடிப்படையில்லாதது. உருண்டையான பூமியில் எது மையப்பகுதி என்று யாராலும் கூற முடியாது. அப்படியே மையப்பகுதி என்று கூறுவதாக இருந்தால் பூமத்திய ரேகைப் பகுதியைச் சொல்லலாம். பூமத்திய ரேகை ஓடும் பகுதியில் ஒரு குறிப்பிட்ட ஊர் மட்டும் இல்லை. பல நாடுகள் உள்ளன. இந்த பூமத்திய ரேகை ஓடும் நாடுகளை எடுத்துப் பார்த்தால் அதிலும் மக்கா இல்லை. அப்படியே மக்கா அதில் அமைந்திருந்தாலும் அதன் காரணமாக மக்காவைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுவது ஆதாரமற்ற வாதமாகும்.
காலத்திற்கேற்ப மார்க்கம் மாறுமா?
பிறை பார்த்து நோன்பு வையுங்கள் என்பதெல்லாம் அந்தக் கால மக்களைக் கருத்தில் கொண்டு சொல்லப்பட்டதாகும். அறிவியல் வளர்ச்சி கண்ட இந்தக் காலத்திற்குப் பொருந்தாது அல்லவா?
அது மிகவும் ஆபத்தான வாதமாகும். இபாதத் சம்பந்தமான மார்க்கக் கட்டளையை காலத்துக்குத் தக்கவாறு மாற்றுவது என்று சொன்னால் மோசமான விளைவுகளை இது ஏற்படுத்திவிடும்.
ஜகாத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தோடு முடிந்து விட்டது என்று வியாக்கியானம் கொடுத்த கூட்டத்துடன் அபூபக்கர் (ரலி) போர் நடத்திய வரலாறு அறிவோம்.
அந்தக் காலத்தில் உள்ள அரபியருக்குக் கொழுப்பு அதிகம். அதைக் குறைக்கத் தான் நோன்பு வைக்கச் சொன்னார்கள். இப்போது அது தேவையில்லை என்று வாதிட்டால் நாம் ஏற்க மாட்டோம். பிறை விஷயத்திலும் இப்படித் தான் முடிவெடுக்க வேண்டும்.
அறிவியல் முடிவை பிறை விஷயத்தில் ஏன் ஏற்கக்கூடாது என்பதை முன்னர் விளக்கியுள்ளோம்.
பூதக்கண்ணாடியும் மூக்குக்கண்ணாடியும்
பூதக் கண்ணாடிகளால் பிறையைப் பார்த்து முடிவு செய்யலாமா?
பிறை தோன்றி விட்டாலும் நம் கண்களுக்குத் தெரியும் அளவுக்கு வளர்ந்த பிறையையே நாம் தலைப்பிறை என்கிறோம். பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது இந்தப் பிறையைத் தான். கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு இருப்பதைப் பார்க்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருக்க மாட்டார்கள்.
பூதக் கண்ணாடியைப் பொறுத்தவரை சாதாரண கண்ணுக்குத் தெரிவதையும் அது காட்டும். சாதாரண கண்ணுக்குத் தெரியாததையும் அது காட்டும். சாதாரணக் கண்ணுக்குத் தெரியாத சிறிய அளவிலான பிறையையும் காட்டும்.
கண்ணுக்குத் தெரியாத அளவில் உள்ள பிறையைப் பூதக் கண்ணாடியால் பார்த்து முடிவு செய்யக் கூடாது. கண்ணுக்குத் தெரியாத பிறை தலைப்பிறையைத் தீர்மானிக்க உதாவது.
சாதாரணக் கண்களால் பார்க்கும் அளவுக்கு வளர்ந்த பிறையைப் பூதக்கண்ணாடியால் பார்க்கலாமா? என்றால் பார்ப்பதில் தவறு இல்லை.
ஆனால் பூதக் கண்ணாடியிலிருந்து கண்களை விலக்கி நேரடியாகப் பார்த்து நிருபிக்க வேண்டும். பூதக் கண்ணாடியால் தெரிந்தது சாதாரணக் கண்களுக்குத் தெரியாவிட்டால் பார்க்கும் அளவுக்குப் பிறை வளரவில்லை என்று பொருள்.
பூதக் கண்ணாடியால் பிறை இருப்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியும். அவ்வாறு கண்டுபிடித்த பின் அதே இடத்தில் சாதாரணக் கண்களால் பார்க்கலாம். இதற்கு மட்டும் தான் பூதக் கண்ணாடி உதவும்.
கண்ணாடி அணிந்து பிறை பார்த்தவரின் சாட்சியத்தை ஏற்கலாமா? என்று குதர்க்கமாகக் கேட்கிறார்கள்.
ஏற்கனவே எழுதப்பட்டவற்றிலேயே இதற்கான விளக்கமும் அடங்கியுள்ளது.
ஒரு பொருளை சாதாரணக் கண்களால் பார்க்கும் போது எப்படி இருக்குமோ அப்படிப் பார்ப்பதற்குத் தான் கண்ணாடி அணிகிறோம். சிறியதைப் பெரியதாகக் காட்டவோ தொலைவில் உள்ளதை அருகில் பார்க்கவோ யாரும் கண்ணாடி அணிவதில்லை. இயல்பான பார்வையைப் பெறுவது தான் கண்ணாடியின் தன்மை.
பார்வைக் குறைவு ஏற்பட்டவர் கண்ணாடி அணிந்து பார்ப்பதும் பார்வைக் குறைவு அற்றவர் கண்ணாடியில்லாமல் பார்ப்பதும் சமமானவை தான் இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.
இயல்பான பார்வையின் தன்மையை அடைவதற்காக இல்லாமல் சிறியதைப் பெரிதாகக் காட்டும் கண்ணாடியையோ தூரத்தில் உள்ளதை அருகில் காட்டும் கண்ணாடியையோ அணிந்து பிறை பார்த்தால் அதை ஏற்க முடியாது.
சேரமான் பெருமாள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது. இதன் மூலம் உலகம் முழுவதும் ஒரே சந்திரன் தான் என்பது தெளிவாகிறது. ஏன் நாட்டுக்கு நாடு பிறை வேறுபட வேண்டும்?
பிறையைத் தீர்மானிப்பதற்கு அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழிமுறைகள் என்ன என்பதை விட்டுவிட்டு இது போன்ற அபத்தமான வாதங்களையெல்லாம் ஆதாரமாகக் காட்டும் அளவுக்கு வந்து விட்டனர். அல்லாஹ்வும், அவனது தூதரும் சேரமான் பெருமாளை ஆதாரமாக ஏற்குமாறு கூறவில்லை என்பது மட்டுமே இதற்குரிய மறுப்பாகி விடும். ஆயினும் இதிலுள்ள அபத்தங்களையும் இவ்வாறு கேள்வியெழுப்வோரின் அறியாமையையும் சுட்டிக்காட்டித் தான் ஆக வேண்டும்.
பௌர்ணமி நிலவு பிளந்ததை உலகின் பல பாகங்களில் காண முடியும். காரணம் பௌர்ணமி நிலவு வானில் நீண்ட நேரம் காட்சி தரும். ஆனால் தலைப்பிறை சில நிமிடங்களில் மட்டுமே தெரியும். அதுவும் சூரியன் மறைந்த உடன் தான் அதைக் காண முடியும். எனவே சேரமான் பெருமாள் பார்த்தாலும் அது தலைப்பிறையைத் தீர்மானிக்கப் போதிய ஆதாரமாகாது.
விண்ணில் பறந்து…
மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா?
வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த அமாவாசை தினத்தில் சூரிய ஒளி சந்திரன் மீது படாது என்று இவர்கள் நினைக்கிறார்கள். அவ்வாறில்லை. பௌர்ணமி தினத்தில் சூரிய ஒளி சந்திரனில் படுவது போல் தான் அமாவாசையிலும் படுகிறது. சந்திரனில் பிரதிபலிக்கவும் செய்கிறது. ஆனால் அது பூமியின் எதிர்த் திசையில் பிரதிபலிக்கிறது.
பூமியின் பக்கம் உள்ள சந்திரன் இருட்டாக உள்ளது. ஆனால் சந்திரனின் அடுத்த பக்கம் பௌர்ணமியாக உள்ளது. ராக்கெட்டில் மேலே போய் பார்க்கலாம் என்றால் குறிப்பிட்ட இடத்துக்கு ராக்கெட்டில் போனால் அமாவாசை தினத்திலே பௌர்ணமியைக் காணலாம். குறிப்பிட்ட கோணத்தை அடைந்தால் ஏழு அல்லது எட்டாம் பிறை அளவைக் காணலாம்.
அதை வைத்து ஏழாம் நாள் என்று அமாவாசை தினத்தில் முடிவு செய்ய மாட்டோம். பூமிக்கு சந்திரனிலிருந்து ஒளி வருகிறதா என்பதும் அது நம் கண்களுக்குத் தெரிகிறதா என்பதும் நமக்கு தேவை.
ஆகாயத்தில் ஏறிச் சென்றால் சந்திர கிரகணம் ஏற்பட்டிருக்கும் நாளைத் தவிர வேறு எந்த நாளிலும் நாம் விரும்புகிற எந்த அளவிலும் பிறையைக் காண முடியும். எனவே இதை அளவுகோலாக வைத்தால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளாகக் கூறுவார்கள். மக்களுக்குப் பைத்தியம் பிடித்துவிடும்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.