பூஜிக்கப்பட்ட நிலத்தில் பயிரிடப்பட்டதை உண்ணலாமா?

பூஜிக்கப்பட்ட பொருள் நமக்கு ஹராம், நாம் வாழும் நாட்டில் விதை விதைக்கும் போதும், அறுக்கும் போதும் பூஜை செய்கிறார்கள். பூஜை செய்த விவசாயத்தின் மூலம் தான் நமக்கு அரிசி கிடைக்கிறது. இதைத் தான் நாம் உண்கிறோம், இது சரியா? இதற்கு வேறு வழி இருக்கிறதா?

தாவூத்

பதில்

முஸ்லிமல்லாதவர்கள் குறிப்பாக இந்து மதத்தவர்கள் விவசாயம் செய்தாலும், கட்டடம் கட்டினாலும், கடை திறந்தாலும் பூஜை செய்யாமல் துவக்க மாட்டார்கள்.

அல்லாஹ் அல்லாதவர்களுக்கு படையல் செய்யப்பட்டதை நாம் சாப்பிடக் கூடாது என்பதால் உங்களுக்கு இந்தச் சந்தேகம் எழுந்துள்ளது.

பூஜை செய்து விட்டு அவர்கள் விவசாயம் செய்வதால் அவர்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் அரிசி, கோதுமை, இன்னபிற விளை பொருட்களை நாம் உண்ணலாமா?

அவர்கள் பூஜை செய்துவிட்டு கட்டிய கட்டடங்களை விலைக்கு வாங்கலாமா?

அல்லது வாடகை கொடுத்து அதில் குடியிருக்கலாமா?

கடையைத் துவக்கும் நாளிலும், அன்றாடம் கடைகளைத் திறக்கும் போதும் பூஜை செய்துவிட்டுத் தான் ஆரம்பிப்பார்கள். எனவே அவர்களின் கடைகளில் பொருட்களை வாங்கலாமா?

என்றெல்லாம் கூட சந்தேகம் வரும்.

மேலோட்டமாகப் பார்க்கும் போது இந்தச் சந்தேகம் சரியானது போல் தோன்றினாலும் சிந்தித்துப் பார்க்கும் போது இந்தச் சந்தேகத்துக்கு அவசியம் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

ஒரு பொருளை சிலைகளுக்குப் படைப்பதும் அந்தப் பொருளின் நன்மைக்காக சிலைகளிடம் வேண்டுவதும் வெவ்வேறானவை.

குறிப்பிட்ட ஒரு உணவை கடவுளுக்குப் படைத்து பூஜை போடுபவர்கள் அந்தப் பொருளில் தங்களுக்கு உள்ள உரிமையை விட்டு விடுவார்கள். அதைப் பிரசாதமாக வழங்கி விடுவார்கள்.

ஆனால் ஒரு வயலில் பூஜை போடுபவர்கள் அந்த வயலைக் கடவுளுக்குப் படைப்பதில்லை. பூஜை செய்த பின்னர் அந்த வயலில் தங்கள் உரிமையை விட்டு விடுவதில்லை. பூஜைக்குப் பின் அந்த வயலை பலருக்கும் பங்கு போட்டுக் கொடுப்பதில்லை. எனவே அவர்கள் வயலை கடவுளுக்குப் படைக்கவில்லை என்று இதன் மூலம் தெரிகிறது. வயலில் விளைச்சல் கிடைப்பதற்காக அவர்கள் வேண்டுதல் தான் செய்கிறார்கள்.

ஒரு ஆட்டைக் கடவுளுக்குப் படைப்பதாகச் சொல்பவர்கள் அதன் பின்னர் அந்த ஆட்டில் தங்களுக்கான உரிமையைக் கோர மாட்டார்கள். அதை வெட்டி பங்கிட்டு விடுவார்கள்.

இது போன்றவை தான் நமக்கு ஹராமாகும்.

வயலை அல்லது கட்டடத்தை அவர்கள் கடவுளுக்காக ஆக்குவதில்லை. தமக்குரியதாகவே வைத்துக் கொள்வதால் அது படையலில் சேராது.

பூஜை செய்து விட்டு உற்பத்தி செய்த விளைபொருட்களை இலவசமாகவோ, விலைகொடுத்தோ வாங்கி பயனபடுத்தலாம்.

பூஜைகள் செய்து கட்டப்பட்ட கட்டடத்தில் குடியிருக்கலாம். விலைக்கு வாங்கலாம்.

ஆனால் கடவுளுக்குப் படைக்கப்பட்ட பொருளாக இருந்தால் அதை இலவசமாகவோ, விலை கொடுத்தோ வாங்கியோ பயன்படுத்துவது கூடாது.

இந்த நுணுக்கமான வேறுபாட்டைப் புரிந்து கொண்டால் குழப்பம் வராது.

இது தொடர்பான மற்றொரு செய்தியை அறிந்திட

கந்தூரிக்காக அறுக்கப்பட்டவைகளை விலைக்கு வாங்கி உண்ணலமா?

13.02.2012. 0:28 AM