போராட்டங்களை முறைப்படுத்துவோம்

அரசின் கவனத்தை ஈர்த்து தங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்கவும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும் போராட்டங்கள் நடத்த ஜனநாயக நாடுகளில் அனுமதி அளிக்கப்படுகிறது. அதிகமான போராட்டங்கள் அமைதியாக நடந்து முடிந்தபோதும், சில போராட்டங்கள் வன்முறையிலும் தடியடியிலும் முடிந்து வருவதை நாம் காண்கிறோம்.

சமீப காலமாக முஸ்லிம்கள் நடத்தும் போராட்டங்களிலும் இது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நிகழ்ந்து போராட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம்களுக்கே பாதகமாக அமைந்து விடுகின்றது. மேலும் முஸ்லிம் சமுதாயத்தைப் பற்றியும் இஸ்லாம் பற்றியும் மற்றவர்கள் தவறாக எண்ணும் நிலை ஏற்பட்டு வருகிறது. எந்தக் கோரிக்கைக்காக போராட்டங்கள் நடத்தப்பட்டனவோ அந்தக் கோரிக்கையும் பின்னுக்கு தள்ளப்பட்டு விடுகிறது.

போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கும் தலைவர்களும், இயக்கங்களும் தூரநோக்கு இல்லாமல் செயல்படுவதால் தான் இதுபோன்ற நிலைமைகள் ஏற்படுகின்றன என்று நாம் கருதுகிறோம்.

1.ஒருலட்சம் பேர் திரண்டு நடத்தும் போராட்டம் என்றாலும், எவ்வளவு முக்கியமான கோரிக்கைக்காக நடத்தப்படும் போராட்டம் என்றாலும், அனைத்து ஊடகங்களும் முஸ்லிம் சமுதாயத்தின் போராட்டங்களை இருட்டடிப்பு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளன. அதே நேரம் கல்வீச்சு, பேருந்துகள் மீது தாக்குதல், தீ வைத்தல், சாலை மறியல் மற்றும் போலீசுடன் மோதல் போன்ற காரியங்களில் இறங்கினால் அது பத்துப் பேர் கலந்து கொண்ட போராட்டமாக இருந்தாலும் மீடியாக்களில் தொடர்ந்து விளம்பரம் கிடைக்கிறது.

நம்முடைய செய்தி மீடியாக்களில் எப்படியாவது வரவேண்டும் என்றால் இது போல் செய்தால் தான் அது சாத்தியமாகும் என்ற எண்ணம் இயக்கங்களின் தலைவர்களுக்கு ஏற்படுவதே இது போன்ற சம்பவங்கள் நடக்கக் காரணமாகி விடுகின்றன. மீடியாக்கள் விரும்புவது போல் போராட்டம் நடத்துவதைத் தவிர்த்து போராட்டத்துக்கு வந்த மக்களின் நலனை நாட கற்றுக்கொள்ள வேண்டும்.

2.பொதுச் சொத்துக்களுக்கும் தனிநபர் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்துவது இஸ்லாத்தில் கடுமையாகத் தடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பாவத்திற்காக இறைவன் மறுமையில் விசாரணை செய்வான். உலக அரங்கிலும் இஸ்லாத்திற்குக் கெட்ட பெயர் ஏற்பட்டு இஸ்லாத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து தலைவர்கள் நடக்க வேண்டும். தங்களின் அழைப்பை ஏற்று வந்த மக்கள் இது போன்ற பாவச் செயலில் ஈடுபட்டுவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாகச் செயல்படவேண்டும்.

3.அனுமதி பெற்று நடத்தப்படும் போராட்டங்களில் பெரும்பாலும் பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி நடக்கும் போராட்டங்களில் தான் அசம்பாவிதங்கள் நடந்து வருகின்றன. தடையை மீறி நடக்கும் போராட்டம் என்பதன் பொருளை தலைவர்கள் அறியாமல் இருந்தாலோ, அல்லது போராட்டத்தில் பங்கு பெறுவோர் அறியாமல் இருந்தாலோ அதுவும் அசம்பாவிதத்திற்கு முக்கியமான காரணமாகிவிடுகிறது.

உதாரணமாக நாடாளுமன்றம், அல்லது சட்டமன்றம் முற்றுகை என்று ஒரு இயக்கம் அறிவித்தால் நாடாளுமன்றத்தை, அல்லது சட்டமன்றத்தை முற்றுகையிடுவது என அர்த்தம் இல்லை. வலிமைமிக்க அரசை மீறி சாதாரண மக்கள் நிச்சயம் முற்றுகையிட முடியாது. நாங்கள் முற்றுகையிடுவதற்காக இந்த இடத்தில் கூடுகிறோம். நீங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள் என்பதே இதன் கருத்தாகும்.

சட்டமன்றம் அல்லது பாராளுமன்றம் உள்ள இடத்திற்கு வெகு தொலைவில் கூடுவதற்கு காவல்துறை வாய்வழியாக ஒப்புதல் தருவார்கள். அந்த இடத்தில் கூடி நம் உணர்வுகளை வெளிப்படுத்த சிறிது அவகாசம் தருவார்கள். அதன் பின்னர் சட்டத்துக்கு விரோதமாக கூடியதற்காக உங்களைக் கைது செய்கிறோம் என்று கூறி கைது செய்வார்கள்.

இதற்குக் கட்டுப்படுவதாக வாய் மொழியாக ஒப்புக் கொண்டு தான் தலைவர்கள் மக்களை அழைக்கிறார்கள். எந்த இடத்தில் காவல்துறை தடுக்கிறதோ அந்த இடத்தில் கைதாவதற்குத் தயாராகி ஒத்துழைக்க வேண்டும். அதை மீறிச் செல்லக்கூடாது. இப்படிக் கைதாவதன் மூலம் நமது கோபம் உரிய முறையில் அரசின் கவனத்திற்குச் சென்றடையும்.

தடுக்கப்படும்போது மீறிச் செல்ல முயன்றால் சட்டமன்றத்தை அல்லது பாராளுமன்றத்தைப் பாதுகாப்பதற்காக காவல்துறையினர் தேவைப்படும் பட்சத்தில் பலப்பிரயோகம் செய்வார்கள். இதன் பின்னரும் கட்டுக்கடங்காமல் சென்றால் அதற்கும் மேலான நடவடிக்கை எடுப்பார்கள்.

இது காவல்துறையினர் நம்மீது கொண்ட வெறுப்பினால் செய்வது அல்ல. அவர்களின் கடமை அது தான். அதற்குத் தான் அவர்களுக்கு அதிகாரமும், சம்பளமும் கொடுக்கப்படுகிறது.

சட்டப்படி கடமையாற்றும் காவலர்களுடன் சட்டத்தை மீறும் வழிகளில் மோதுவதால் எந்த நன்மையும் ஏற்படாது.

முறையாகக் கைதாவதால் என்ன கேடு வந்துவிடும்? தடுக்கப்பட்ட இடத்திலிருந்து பத்தடி தூரம் அதிகம் செல்வதால் என்ன பயன் ஏற்பட்டுவிடும்? என்னதான் முயன்றாலும் நாம் முற்றுகையிடுவதாகச் சொன்ன இடத்தை நெருங்க முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

இதை மறந்து காவல்துறையினருடன் சட்டவிரோதமாக மோதுவதால், நம் சகோதரர்கள் மருத்துவ மனைகளில் சேர்க்கப்படும் நிலையும், அதைத் தொடர்ந்து பல ஆண்டுகள் வழக்குக்காக அலையும் நிலையும் ஏற்படும். நம்மை நம்பி வந்த மக்களுக்கு இத்தகைய நிலையை ஏற்படுத்துவது நியாயம்தானா?

கைதிகளை விடுவிப்பதற்காக ஒரு போராட்டம் நடத்தினால் விடுவிக்காவிட்டால் நாங்களே சிறையை உடைத்து வெளியே கொண்டு வருவோம் என்று சில தலைவர்கள் அப்பாவி மக்களை உசுப்பேற்றுகின்றனர். உடனே பலத்த தக்பீர் முழக்கம் வருகிறது. இட ஒதுக்கீடு தராவிட்டால் நாங்களே எடுத்துக் கொள்வோம் என்று கூறி மக்களை உசுப்பி விடுகின்றனர். இதற்கும் தக்பீர் முழக்கம்தான். இது நடக்குமா? இப்படி பேசும் தலைவரால் இப்படி செய்து காட்ட இயலுமா?

இவர்கள் கைதட்டல் பெறுவதற்காக இப்படிப் பேசினாலும் மக்களை ஏமாற்றவே நாம் இப்படி பேசுகிறோம் என்று அந்தத் தலைவர்களுக்குத் தெரிந்தாலும் உணர்ச்சிக்கு இடம் கொடுக்கும் மக்கள் இதை உண்மை என்று நம்புகின்றனர். நிஜமாகவே சட்டமன்றத்துக்குள் நாம் நுழைந்து விட முடியும் என்று அப்பாவித்தனமாக நம்புகிறார்கள்.

4.வரக்கூடிய மக்கள் அனைவரையும் கட்டுப்பாட்டில் வைக்க யாருக்கு இயலுமோ, இதற்காக பயிற்சியளிக்கப்பட்ட தொண்டர்கள் எந்த இயக்கத்திற்கு இருக்கிறார்களோ அவர்கள் தான் உணர்ச்சிகரமான போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் போராட்டம் நடத்தினால், அது நன்மைக்குப் பதிலாக கேடாய்த்தான் முடியும்.

மக்களின் உணர்வுகள் எப்படி இருக்கும் என்பதைக் கவனத்தில் கொண்டு அவர்களின் உணர்வுகளை மழுங்கடிக்காமலும், அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமலும் பேலன்ஸ் செய்யும் திறமையை பயன்படுத்த வேண்டும். அதே நேரத்தில் நமது வீரியத்தையும் இழந்துவிடக்கூடாது.

ஆனால் பெரும்பாலான தலைவர்கள் இப்படி நடப்பதில்லை. போராட்டத்தில் மக்கள் எவ்வளவு பேர் வந்துள்ளார்கள் என்று விசாரித்து, கூட்டம் சேர்ந்தபின் கடைசியாக தலைவர்கள் வந்தால், அந்தப் போராட்டம் அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்காது. இதையும் சமுதாயத் தலைவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

களத்தில் ஒரேயடியாகப் பணிந்தும் போகக்கூடாது, எகிறியும் போகக்கூடாது என்பதை உணர்ந்து அதிகாரிகளை அணுகி காரியத்தை சாதித்துக் கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும்.

சாதாரணமான பிரச்சினையில் விரும்பினால் பல இயக்கங்கள் கூட்டுப் போராட்டம் நடத்தலாம். உணர்ச்சிகரமான விஷயங்களிலும், தடையை மீறி நடக்கும் போராட்டங்களிலும் பல இயக்கங்கள் கூட்டாகப் போராட்டம் நடத்துவதை அறவே தவிர்க்க வேண்டும்.

கொந்தளிப்பாக மக்கள் வரும்போது பல இயக்கத்தவரும், இயக்கம் சாராதவர்களும் வருவதால், யாருக்கும் அவர்கள் கட்டுப்பட மாட்டார்கள். மேலும் எந்த ஒருங்கிணைப்பும் இருக்காது. அவர்கள் என்ன செய்தாலும் அவர்களைக் கட்டுப்படுத்துவதில் அனைவரும் தோல்வியைத்தான் தழுவுவார்கள். இதணை உணராமல் தலைவர்களும் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவுகளால் விபரீதங்கள்தான் ஏற்படும்.

போராட்டக்களத்திற்கு தலைவர்கள் முதல் ஆளாக வந்து விட வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அது போல் எவ்வளவு நேரமானாலும் எல்லா மக்களும் கலைந்து சென்ற பின்னர் தான் தலைவர்கள் அந்த இடத்தைவிட்டு நகர வேண்டும்.

கண்டன உரை முந்தவுடன் தலைவர்களின் வேலை முடிந்து விடுவதில்லை. அதன் பின்னர் தான் வேலை அதிகமாக உள்ளது. வந்த மக்கள் அனைவரும் பத்திரமாக இடத்தை விட்டு அகன்று விட்டார்கள் என்பதை உறுதி செய்த பின்னர் தான் தலைவர்கள் அங்கிருந்து நகர வேண்டும். இதைக் கவனிக்கத் தவறுவதால் பல விதமான இன்னல்கள் ஏற்படக் காரணமாகி விடுகிறது.

அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் இதில் கவனம் செலுத்தினால், எதிர் காலத்தில் இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் தவிர்க்கலாம்.

நாடு சுதந்திரம் பெற்ற போது ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக ஐம்பது ஆண்டுகளாக முஸ்லிம்கள் போராட்டம் என்பதை மறந்து இருந்தனர். ஏன் அடிக்கிறாய்? ஏன் எங்கள் உரிமையைப் பறிக்கிறாய்? ஏன் எங்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்துகிறாய் என்று கேள்வி கேட்கவே அஞ்சும் நிலையில் இந்தச் சமுதாயம் இருந்தது. இப்போது தான் போராட்டக் களத்துக்கு ஆண்களும் பெண்களும் வந்து இழந்த உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் போராட்டங்களில் தடியடிகளும், வழக்குகளும் கெட்ட பெயர்களும் வர ஆரம்பித்தால் எதற்காகப் போராட்டம் நடத்தினாலும் மக்கள் வர மாட்டார்கள் என்ற நிலை ஏற்பட்டுவிடும் என்பதைத் தலைவர்கள் உணர வேண்டும்.

அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்தபோது கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

புகாரி 2448

தமக்குத் தாமே துரோகம் செய்வோருக்காக நீர் வாதிடாதீர்! துரோகம் செய்யும் பாவியை அல்லாஹ் விரும்ப மாட்டான்.

அல்குர்-ஆன் 4:107