போதையில் தலாக் சொன்னால் செல்லும் என்ற ஃபத்வா சரியா?
ஒருவர் தன் தங்கை குறித்து மார்க்கத் தீர்ப்பு வழங்குமாறு தேவ்பந்தில் உள்ள தாருல் உலூம் மதரஸாவிடம் பிப்ரவரி 21- ல் ஃபத்வா கேட்டுள்ளார்.
தனது தங்கையின் கணவர் மது அருந்தி போதையில் தனது தங்கையை பார்த்து தலாக் தலாக் தலாக் (ஒரே தடவையில்) என மூன்று முறை கூறியுள்ளார். அதுவும் செல்போனில் தலாக் கூறியுள்ளார். போதை தெளிந்த பின்பு தான் செய்ததை உணர்ந்துள்ளார். போதையில் தெரியாமல் செய்துவிட்டதை எண்ணி மனம் வருத்தப்பட்டுள்ளார். மனைவியிடமும், மனைவியின் சகோதரரிடமும் தனது வருத்தத்தைத்தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு எனது மச்சான் போதையில் தெரியாமல் தலாக் சொல்லியுள்ளார்; எனவே எனது தங்கையின் நிலை என்ன? என்று தேவ்பந்த் தாருல் உலூம் மதரஸாவில்வ் பத்வா கேட்டுள்ளார்.
இதற்கு தேவ்பந்த் தாருல் உலூம் மதரஸா ஒரு காட்டுமிராண்டித் தீர்ப்பை மார்ச் 12 -ல் வழங்கியுள்ளது.
உங்கள் தங்கையிடம் 3 தலாக் சொல்லப்பட்டு விட்டது. எனவே உங்கள் தங்கை அவரின் கணவருக்கு ஹராம் (அதாவது விலக்கப்பட்டவள்). தலாக் மொபைல் போனில் சொல்லப்பட்டதாலோ, மது அருந்திய நிலையில் சொல்லப்பட்டதாலோ அது தலாக் இல்லை என ஆகிவிடாது. எனவே அவள் மறுபடியும் அவரது கணவரை மறு திருமணம் செய்ய முடியாது.
இதுதான் அந்த அறிஞர்கள்(?) சொன்ன பத்வா.
இந்த முட்டாள்தனமான பத்வா பற்றி பரேலவி மதரஸாவில் படித்த இத்திஹாதே மில்லத் கவுன்சிலின் தலைவர் மவ்லானா(?) தாகிர் ரஸ்ஸா கான் என்பவரிடம் கேட்கும் போது….
தாருல் உலூம் தேவ்பந்தின் ஃபத்வா சரி தான். தலாக் எந்த நிலையில் சொல்லப்பட்டாலும் அது தலாக் தான். போதையோடு இருந்தாலும், நல்ல நிலையில் இருந்தாலும் தலாக் சொன்னால் அது தாலாக் தான். எனவே அவர்கள் பிரிந்து விட வேண்டும் என்றார். அவர் இதை மேலும் விளக்கும் போது தலாக் என்பது கல் மாதிரி, திருமணம் என்பது கண்ணாடி கிளாஸ் மாதிரி. கல்லை எடுத்து கண்ணாடி கிளாஸ்ல அடிச்சா கிளாஸ் உடைஞ்சுடும். சும்மா அடிச்சா என்ன? போதையோடு அடிச்சா என்ன? கிளாஸ் உடையத்தான் செய்யும் (என்ன ஒரு விளக்கம்???) என அற்புதமான ஒருவிளக்கத்தைக் கூறியுள்ளார் இந்த பரேலவி இமாம்.
இந்த விஷயத்தில் தேவ்பந்திகளும், பரேலவிகளும் ஒரே கருத்தைக் கொண்டுள்ளனர். மத்ஹபு நூல்களில் இது போல் எழுதப்பட்டுள்ளதால் பரேலவிகள் எனும் சமாதி வழிபாட்டுக்காரர்களும், தேவபந்திகள் எனும் சமாதி வழிபாட்டை எதிர்ப்பவர்களும் இதில் ஒன்றுபட்டு ஒரே கருத்தைக் கொண்டிருக்கிறார்கள். தலாக் குறித்து திருக்குர்ஆனும், நபிமொழிகளும் கூறும் வழிகாட்டல்கள் பலவற்றை அப்பட்டமாக மீறும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.
தலாக்குக்கு சாட்சிகள் அவசியம்
மனைவியை கணவன் தலாக் சொல்லும் போது இரண்டு சாட்சிகளை வைத்துக் கொள்ள வேண்டும் என்று திருக்குர்ஆன் தெளிவாகக் கட்டளையிடுகிறது.
நபியே! பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் இத்தாவைக் கடைப்பிடிப்பதற்கேற்ப விவாகரத்துச் செய்யுங்கள்! இத்தாவைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்! உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுங்கள்! பகிரங்கமான வெட்கக்கேடான காரியத்தை அப்பெண்கள் செய்தாலே தவிர அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள்! அவர்களும் வெளியேற வேண்டாம். இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுபவர் தமக்கே தீங்கு இழைத்துக் கொண்டார். இதன் பிறகு அல்லாஹ் ஒரு கட்டளை பிறப்பிக்கக் கூடும் என்பதை நீர் அறிய மாட்டீர். அவர்கள் தமக்குரிய தவணையை அடையும் போது அவர்களை நல்ல முறையில் தடுத்து வைத்துக்கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் அவர்களைப் பிரிந்து விடுங்கள்! உங்களில் நேர்மையான இருவரை சாட்சிகளாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்காக சாட்சியத்தை நிலைநாட்டுங்கள்! அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்புவோருக்கு இவ்வாறே அறிவுரை கூறப்படுகிறது. அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒருபோக்கிடத்தை ஏற்படுத்துவான்.
திருக்குர் ஆன் 65:1,2
விவாகரத்து செய்யும் விதிமுறைகளைக் கூறும் தலாக் என்ற அத்தியாயத்தில் தலாக் சொல்லும் போதும் திரும்பச் சேர்த்துக் கொள்ளும் போதும் இரண்டு சாட்சிகளை வைத்துக் கொள்ள வேண்டும் என்று திருக்குர்ஆன் தெளிவாகக் கட்டளையிடுகிறது.
தொலைபேசியில் விவாகரத்து, தபாலில் விவாகரத்து, மின்னஞ்சல் மூலம் விவாகரத்து என்றெல்லாம் முஸ்லிம் சமுதாயத்தில் சிலர் விவாகரத்துச் செய்வதையும், அதை மார்க்க அறிஞர்கள் சரி காண்பதையும் நாம் காண்கிறோம்.
தபாலில் எழுதும் போதும் தொலைபேசியில் பேசும் போதும் மின்னஞ்சல் அனுப்பும் போதும் இரண்டு சாட்சிகள் இருந்தால் போதும் என்று வேறு சிலர் இதைச் சிலர் விளங்கிக் கொள்கின்றனர்.
விவாகரத்துச் செய்பவனையும், செய்யப்பட்டவளையும், இருவருக்கிடையே விவாகரத்து நடப்பதையும் கண்ணால் காண்பவர் தான் அதற்குச் சாட்சியாக இருக்க முடியும்.
எனவே எதிர்த் தரப்பில் உள்ள பெண் யார் என்பது தெரியாமல், அவள் இவனுக்கு மனைவி தானா என்பதையும் அறியாமல், தன் மனைவியுடன் தான் தொலைபேசியில் பேசுகிறானா என்பதையும் அறியாமல் எவரும் சாட்சியாக முடியாது.
வீடியோ கான்பரன்சிங் மூலம் இரண்டு சாட்சிகளை வைத்து விவாகரத்துச் செய்தால் செல்லுமா என்ற சந்தேகமும் சிலருக்கு உள்ளது. வீடியோ மூலம் ஒருவன் விவாகரத்துச் செய்வதையும் அதற்கு இரண்டு பேர் சாட்சிகளாக இருப்பதையும் இங்கிருந்து கொண்டே பார்க்க முடிகிறது; எனவே இது செல்லும் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். இதுவும் தவறாகும். ஏனெனில், இதை முழுமையாக அவர்கள் ஆய்வு செய்யவில்லை.
ஒரு திரையில், தலாக் சொல்பவனையும், அதற்குச் சாட்சியான இருவரையும் தான் நாம் பார்க்கிறோம். அவர்கள் எந்தப் பின்னணியில் இருக்கிறார்கள்? திரையில் தென்படாத வகையில் யாரேனும் மிரட்டுவதால் அவ்வாறு சொல்கிறார்களா? சுயநினைவுடன் அதைச் சொல்கிறார்களா? அல்லது கிராபிக்ஸ் மூலம் அதில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா? அது நேரடி ஒளிபரப்பா? அல்லது பதிவு செய்யப்பட்டதை ஒளிபரப்புகிறார்களா? என்பது போன்ற பல சந்தேகங்கள் இதில் இருப்பதால் இதுவும் செல்லத்தக்கதல்ல.
எவ்வித நிர்ப்பந்தமுமின்றி நேர்மையான இரு சாட்சிகளுக்கு முன் சொல்வது தான் தலாக்கின் சரியான வழிமுறையாகும்.
திருக்குர்ஆன் கற்றுத்தரும் இந்த வழிமுறைக்கு முரணாக தொலைபேசியில் சொல்லப்பட்ட தலாக் அமைந்திருப்பதால் இந்த தலாக் செல்லாது என்று தீர்ப்பளிக்க வேண்டியவர்கள் அல்லாஹ்வின் வேதத்துக்கு மாற்றமாக இத்தீர்ப்பை அளித்துள்ளனர்.
முத்தலாக் கூடுமா
ஒரு நேரத்தில் மூன்று தலாக் என்றோ, முன்னூறு தலாக் என்றோ ஒருவன் கூறினாலும் ஒரு விவாகரத்து தான் நிகழ்ந்துள்ளது. ஒரு விவாகரத்துச் செய்த பின் எவ்வாறு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மனைவியுடன் சேர்ந்து கொள்ளலாமோ, அல்லது குறிப்பிட்ட காலக்கெடு முடிந்த பின் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமோ அது போல் இப்போதும் செய்து கொள்ளலாம்.
صحيح مسلم
16 – (1472) حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، ح وحَدَّثَنَا ابْنُ رَافِعٍ، وَاللَّفْظُ لَهُ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي ابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، أَنَّ أَبَا الصَّهْبَاءِ، قَالَ لِابْنِ عَبَّاسٍ: أَتَعْلَمُ أَنَّمَا «كَانَتِ الثَّلَاثُ تُجْعَلُ وَاحِدَةً عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَبِي بَكْرٍ، وَثَلَاثًا مِنْ إِمَارَةِ عُمَرَ»؟ فَقَالَ ابْنُ عَبَّاسٍ: «نَعَمْ»
صحيح مسلم
17 – (1472) وحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ، عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ، عَنْ طَاوُسٍ، أَنَّ أَبَا الصَّهْبَاءِ، قَالَ لِابْنِ عَبَّاسٍ: هَاتِ مِنْ هَنَاتِكَ، «أَلَمْ يَكُنِ الطَّلَاقُ الثَّلَاثُ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَبِي بَكْرٍ وَاحِدَةً»؟ فَقَالَ: «قَدْ كَانَ ذَلِكَ، فَلَمَّا كَانَ فِي عَهْدِ عُمَرَ تَتَايَعَ النَّاسُ فِي الطَّلَاقِ، فَأَجَازَهُ عَلَيْهِمْ»
صحيح مسلم
15 – (1472) حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ، وَاللَّفْظُ لِابْنِ رَافِعٍ، قَالَ إِسْحَاقُ: أَخْبَرَنَا، وَقَالَ ابْنُ رَافِعٍ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: ” كَانَ الطَّلَاقُ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَبِي بَكْرٍ، وَسَنَتَيْنِ مِنْ خِلَافَةِ عُمَرَ، طَلَاقُ الثَّلَاثِ وَاحِدَةً، فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ: إِنَّ النَّاسَ قَدِ اسْتَعْجَلُوا فِي أَمْرٍ قَدْ كَانَتْ لَهُمْ فِيهِ أَنَاةٌ، فَلَوْ أَمْضَيْنَاهُ عَلَيْهِمْ، فَأَمْضَاهُ عَلَيْهِمْ “
ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் கூறுவது ஒரு தலாக்காகவே கருதப்பட்டது என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல்: முஸ்லிம் 2691
ஒரு நேரத்தில் மூன்று தலாக் என்று கூறி அது மூன்று தலாக்காகவே கருதப்படுதல் நபிகள் நாயகத்துக்குப் பின்னர் ஏற்பட்ட தவறான நடைமுறையாகும்.
தேவ்பந்த் ஃபத்வா மேற்கண்ட நபிவழியை அப்பட்டமாக மீறியுள்ளது. இவர்களுக்கு மார்க்க அறிவு சிறிதும் இல்லை என்பதற்கு இதுவும் ஆதாரமாக அமைந்துள்ளது.
அல்லாஹ்வுக்கு எதிராகவும், நபிகள் நாயகத்துக்கு எதிராகவும் அளிக்கப்பட்ட தீர்ப்பு எப்படி இஸ்லாமியத் தீர்ப்பாக இருக்க முடியும்?
போதையில் தலாக் சொன்னால் செல்லுமா
அடுத்து போதையில் சொல்லப்பட்ட தலாக் செல்லும் என்று கூறி மூன்றாவது தவறைச் செய்துள்ளனர்.
போதையில் ஒருவன் விஷம் குடித்தாலும் போதை இல்லாமல் விஷம் குடித்தாலும் அவன் சாகத் தான் செய்வான். போதையில் கண்ணாடிக் குவளையை எறிந்தாலும், போதையில்லாமல் எறிந்தாலும் அது உடையத்தான் செய்யும். இதுபோல் போதையில் ஒருவன் தலாக் சொன்னாலும் போதையில்லாமல் தலாக் சொன்னாலும் அது நிகழத்தான் செய்யும் என்று இதற்குக் காரணம் வேறு கூறுகிறார்கள். இவர்களுக்கு மார்க்க அறிவு இல்லை என்பதுடன் சிந்திக்கும் திறனும் இல்லை என்பதற்கு இது ஆதாரமாக அமைந்துள்ளது.
மெட்டீரியலைப் பயன்படுத்துவதற்கும், சிந்தனையைப் பயனபடுத்துவதற்கும் உள்ள வித்தியாசத்தை இவர்கள் உணரவில்லை.
போதையுடன் இருந்தாலும் போதையுடன் இல்லாவிட்டாலும் மெடீரியலை சடப்பொருட்களைப் பயன்படுத்தினால் அதற்கான விளைவு ஏற்பட்டே தீரும் என்பது உண்மை தான். ஆனால் சிந்தனையைப் பயன்படுத்தும் போது போதையில் இருந்தாலும் போதையில் இல்லாவிட்டாலும் இரண்டு நிலையிலும் சிந்தனைத் திறன் சமமாக இருக்கும் என்று மூளையுள்ள யாரும் கூற மாட்டார்கள்.
போதையில் ஒருவன் நீதிமன்றத்தில் சாட்சி சொன்னால் அதன் காரணமாகவே அந்த சாட்சியம் நிராகரிக்கப்பட்டு விடும். போதையில் ஒரு நீதிபதி தீர்ப்பளித்தால் அல்லது இது போன்ற போலி அறிஞர்கள் போதையில் ஃபத்வா கொடுத்தால் அது செல்லும் என்று யாரும் கூற மாட்டார்கள்.
நம்பிக்கை கொண்டவர்களே நீங்கள் போதையில் இருக்கும் போது தொழுகைக்கு நெருங்காதீர்கள். நீங்கள் சொல்வது உங்களுக்கே விளங்கும் வரை.
திருக்குர்ஆன் 4:43
போதை நேரத்தில் ஒருவன் சொல்வது அவனுக்கே தெரியாது என்று இவ்வசனம் கூறுகிறது. எனவே போதையில் ஒருவன் எடுக்கும் முடிவுகளும் ஒப்பந்தங்களும் செல்லாது என்பது தான் இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.
இவர்களோ பொருத்தமற்ற உதாரணங்களைக் கூறி தங்களின் மதியீனத்தைக் காட்டிக் கொள்கின்றனர்.
போதையில் சொல்லப்பட்டதாலும், இரண்டு சாட்சிகள் முன்னிலையில் சொல்லப்படாததாலும் இது தலாக் ஆகாது. இருவரும் தாராளமாக சேர்ந்து வாழலாம் என்பதே இஸ்லாத்தின் தீர்ப்பாகும்