புள்ளிகள்
அரபு மொழியில் ஒரு புள்ளி உள்ள எழுத்துக்கள், இரண்டு புள்ளிகள் உள்ள எழுத்துக்கள், மூன்று புள்ளிகள் உள்ள எழுத்துக்கள், மேலே புள்ளி உள்ள எழுத்துக்கள், கீழே புள்ளி உள்ள எழுத்துக்கள் என உள்ளன.
ஐந்தாறு எழுத்துக்களுக்கு ஒரே வடிவம் உள்ளதால் இந்தப் புள்ளிகளை வைத்துத் தான் இன்ன இன்ன எழுத்து என அறிந்து கொள்ள முடியும்.
ஆனால் திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் எழுத்துக்களுக்குப் புள்ளிகள் இருக்கவில்லை. இதனால் ஒரே வடிவத்தில் பல எழுத்துக்கள் இருந்தன. ஆயினும் அரபுமொழியில் பாண்டித்தியம் பெற்றவர்கள், இந்த இடத்தில் இன்ன எழுத்துத் தான் இருக்க முடியும் என்று வாக்கிய அமைப்பைக் கவனித்துச் சரியாக வாசித்து விடுவார்கள்.
இஸ்லாம் உலகம் முழுவதும் பரவி, அரபுமொழியின் பொருள் தெரியாமலே இறைவேதம் என்பதற்காக அதை வாசிக்கின்ற மக்கள் பெருகியபோது, புள்ளிகள் இட்டு எழுத்துக்களை மேலும் இனம் காட்டினார்கள்.
புள்ளிகள் அமைக்கப்பட்ட எழுத்துக்கள் மூலப் பிரதியில் கிடையாது. புள்ளி வைப்பது மக்களுக்கு உதவிகரமாக இருப்பதால் முஸ்லிம் உலகம் இதை ஒட்டு மொத்தமாக அங்கீகரித்துக் கொண்டது.
திருக்குர்ஆனுக்காகச் செய்யப்பட்ட இந்த மாறுதலை அரபுமொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும் பழகிக் கொண்டார்கள். அவர்களும் பழங்கால எழுத்து முறையை மறந்து விட்டார்கள். இது அரபுமொழியில் செய்யப்பட்ட ஒரு முக்கியமான மாறுதல்.