நாங்கள் புனிதமாகக் கருதுவதை நீங்கள் ஏற்பதில்லை. நீங்கள் புனிதமாகக் கருதுவதை நாங்கள் ஏன் புனிதமாகக் கருத வேண்டும்?
நாங்கள் தருகிற பூஜிக்கப்பட்ட பொருளுக்கு என்று தனி மகத்துவம், இல்லை என்று முஸ்லிம்கள் பெற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள். ஆனால் நீங்க தருகின்ற ரம்சான், பக்ரீத் பிரியாணியை நாங்க பெறுகிறோம். நீங்களும் மக்காவில் இருந்து, புனித நீருக்கு மகத்துவம் உண்டு என்று தருகிறீர்கள். பூஜிக்கப்பட்ட பொருளுக்கு தனி மகத்துவம் என்ற எங்கள் நம்பிக்கையும், புனித நீருக்கு தனி சிறப்பு என்ற உங்கள் நம்பிக்கையும் ஒன்று தானே..”
என்று முஸ்லிமல்லாத நண்பர் கேட்கிறார். இதற்கு என்ன பதில்?
ஜம்ஜம் நீரை மனிதர்கள் மந்திரம் ஓதி புனிதப்படுத்துவதாக முஸ்லிம்கள் நம்பவில்லை. அது ஆரம்பம் முதல் அல்லாஹ்வால் புனிதமாக்கப்பட்டது என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை.
ஆனால் பூஜைப் பொருட்கள் என்று சொல்லப்படுபவை ஆரம்பம் முதல் புனிதமானதாக இருக்கவில்லை. மளிகைப் பொருட்களாக இருந்தவைகளை சில மந்திரங்களால் மனிதர்கள் புனிதப்படுத்துவதாக கூறப்படுகிறது. எனவே இரண்டும் ஒன்றாகாது,
மேலும் புனிதப் பொருட்கள் என்பது ஆரம்பம் முதலே புனிதமாக இருக்க வேண்டும். ஜம் ஜம் தண்ணீர் ஆரம்பம் முதலே எல்லா காலத்திலும் புனிதமாக உள்ளது. பூஜைப் பொருட்கள் மந்திரம் ஓதுவதற்கு முன் புனிதப் பொருளாக இருக்கவில்லை.
நம்மைப் போன்ற மனிதர்களால் ஒன்றைப் புனிதமாக்க முடியும் என்பதை இஸ்லாம் ஏற்காது. அது மனிதனுக்கு கடவுள் தன்மை உள்ளதாக ஆகும்.
மேலும் ஜம்ஜம் என்பது புனிதப் பொருள் தான் என்பதற்கு அந்த தண்ணீரே சான்றாக உள்ளது.
தினமும் 20 லட்சம் மக்கள் குடிக்கவும் இதர தேவைகளுக்கும் அதைப் பயன்படுத்தினாலும் அது குறைவதில்லை.
அந்த தண்ணீர் மற்ற தண்ணீரைப் போல் எளிதில் கெட்டுவிடுவதில்லை. இது போல் அந்த தண்ணீரின் புனிதம் நம்பத் தகுந்ததாக உள்ளது.
பூஜைப் பொருட்களில் புனிதம் இல்லை என்று முஸ்லிம்கள் நம்புவதால் முஸ்லிம்கள் அதைப் பெற்றுக் கொள்ள மறுப்பது போல் முஸ்லிம்கள் ஒன்றை புனிதமாக நம்பி மற்றவர்கள் அதை புனிதமாகக் கருதாவிட்டால் அதை அவர்கள் பெற்றுக் கொள்ள மறுக்கலாம். அதில் நியாயம் உண்டு. அவரவர் தனது நம்பிக்கையில் உறுதியாக உள்ளனர் என்று ஆகும்.
புனிதம் என்று நான் நம்பாத ஒன்றை உன்னிடமிருந்து நான் பெற்றுக் கொண்டது போல் நீயும் புனிதமல்ல என்று நம்பும் பொருளை என்னிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற வாதம் அறிவார்ந்ததல்ல. புனிதம் என்று நம்பாத ஒன்றை புனிதம் எனச் சொல்வது நடிப்பாக ஆகும். இருவரும் தனது நம்பிக்கைக்கு மாற்றமாக நடிக்கிறார்கள்.
மேலும் பிரியாணி போன்ற உணவுகளை புனிதப் பொருளாக முஸ்லிம்கள் கருதுவதில்லை. புனிதப் பொருள் என்று சொல்லி வழங்குவதும் அல்ல. அது வெறும் உணவு மட்டுமே. இதை புனிதப் பொருளுடன் தொடர்பு படுத்த முடியாது.