ரேஷன் கார்டு தேவை தானா?
கேள்வி :
‘ரேசன் கார்டு’ எனும் குடும்ப அட்டை முறை, நம் நாட்டில் இருந்தால் நல்லதா…? ஒழிந்தால் நல்லதா…?
– சாமு. அப்துல் காதர், நாகூர்
பதில் :
இது போன்ற நிர்வாக நடைமுறைகள் காலத்துக்கு ஏற்ப மாறக்கூடியது என்பதால் பொதுவாக ஒரு நிலைபாட்டை நாம் எடுக்க முடியாது.
ஒரு காலத்தில் ரேஷன் கார்டு அவசியமாக இருக்கும். இன்னொரு காலத்தில் அது தேவையற்றதாக ஆகி விடும்.
1965 முதல் 1967 வரை தமிழகத்தில் கடுமையான அரிசிப் பஞ்சம் இருந்தது. காசு கொடுத்தால் கூட சந்தையில் அரிசி கிடைக்கவில்லை. எலிக்கறி சாப்பிடுங்கள் என்று காங்கிரஸ் அமைச்சர்கள் மக்களுக்கு ஆலோசனை வழங்கினார்கள். எலிக்கறி தின்னச் சொன்ன காங்கிரசுக்கா ஓட்டு என்று திமுகவினர் பிரச்சாரம் செய்து ஆட்சியைப் பிடித்தனர்.
இந்தக் காலகட்டத்தில் ரேஷன் கடையில் வாரத்துக்கு ஒரு நாள் புளுத்துப்போன அரிசியைப் போடுவார்கள். இதை வாங்குவதற்காக காலை நான்கு மணிக்கே ரேஷன் கடை வாசலில் ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாமல் கியூ நிற்க ஆரம்பித்து விடும். அரிசிக்கு பழகிப்போன மக்கள் நரிப்பயறு, பணிப்பயறு, மரவள்ளிக்கிழங்கு ஆகியவற்றைச் சாப்பிட்டு வாழும் நிலையில் ரேஷன் அரிசி தான் கை கொடுத்தது. இந்தக் கால கட்டத்தில் ரேஷன் முறை அவசியமாக இருந்தது. இல்லாவிட்டால் ஆயுதப் புரட்சி ஏற்பட்டு இருந்தாலும் ஆச்சர்யம் இல்லை.
ஆனால் இன்று ரேஷனில் போடப்படும் புளுத்துப் போன அரிசியை அதிகமான மக்கள் வாங்குவதில்லை. வாங்கும் சிலரும் கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுத்துகின்றனர். அல்லது கால்நடை உணவு தயாரிக்கும் நிறுவனத்துக்கு கிலோ ஆறு ரூபாய் என்ற கணக்கில் விற்று விடுகின்றனர். மக்களால் வாங்கப்படாத அரிசியை வழங்கியதாகக் கணக்குக் காட்டி ரேஷன் கடை உரிமம் பெற்றவர்கள் விற்று சம்பாதிக்கின்றனர்.
மேலும், அரிசியைப் பொருத்தவரை உற்பத்தியானதில் இருந்து ஒரு வருடம் வரைதான் பயன்படுத்தலாம். நல்ல முறையில் பராமரித்தால் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் பயன்படுத்தலாம். ஆனால், விவசாயிகளிடம், லெவி என்ற பெயரில் அடிமாட்டு விலைக்கு வாங்கப்படும் அரிசியைச் சேமித்து வைக்கப் போதுமான கிடங்குகள் இல்லை. திறந்த வெளியில் போட்டு மூடி வைக்கின்றனர். பத்து ஆண்டுகள் பதினைந்து ஆண்டுகள் ஆகியும் அதை விநியோகமும் செய்யாமல் நீதிமன்றங்கள் கண்டிக்கும் அளவுக்கு நிலைமை உள்ளது. உண்ணத் தகுதியற்ற, மக்களுக்குக் கேடு விளைவிக்கின்ற அந்த அரிசியைத் தான் இவர்கள் விலையில்லா அரிசி என்று வழங்குகின்றனர்.
ஏழை விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு கட்டாயக் கொள்முதல் செய்வதும், சேமித்து வைக்க வசதிகள் இல்லாமல் இருந்தும் மீண்டும் கொள்முதல் செய்வதும் அந்த உணவுப் பொருட்கள் வீணாகிப்போன பின் மக்களுக்கு விநியோகிக்கப்படுவதும் இப்போது ரேஷன் அவசியமில்லை என்ற முடிவுக்கு நம்மைத் தள்ளுகின்றன.
அரிசி மட்டும் இல்லாமல் ரேஷனில் போடப்படும் எல்லாப் பொருட்களும் இந்தத் தரத்தில் தான் இருக்கும். நல்ல தரத்தில் இருந்தால் சரியான எடையுடன் தரப்படாது. இதை முற்றிலுமாக ஒழித்துக் கட்டி மாதம் தோறும் இதற்கு ஆகும் செலவைக் கணக்கிட்டு குடும்பத்துக்கு ஆயிரமோ, ஐநூறோ மாதம் தோறும் கொடுத்தால் அது பயனுள்ளதாக இருக்கும்.
தேவையான அரிசியை மக்கள் வாங்கிக் கொள்வார்கள். ஊழலுக்கு இதில் வாய்ப்பு குறைவு. உணவுப் பொருட்களைக் கொள்முதல் செய்து பாழாக்குவதால் ஏற்படும் இழப்புகளும் இருக்காது. ரேஷன் கடை வாடகை ஊழியர் சம்பளம் அதிகாரிகளுக்கான சம்பளம் போன்றவை மிச்சமாகும்.
இன்று உலக நிலவரத்தைப் பார்க்கும் போது உணவுப் பொருட்கள் கிடைக்காமல் போக வாய்ப்பே இல்லை. அப்படி ஏற்பட்டாலும் உடனடியாக இறக்குமதி செய்து சமாளித்து விடலாம். எனவே லெவி முறையில் ஏழை விவசாயிகளிடம் அரிசியை வாங்கிக் சேமிக்கிறோம் என்ற பெயரில் வீணாக்கும் அவசியம் இந்த நவீன யுகத்தில் இல்லை.
இப்போது தேவை பணம் தான். அரசாங்கம் மக்களுக்குப் பணமாகக் கொடுத்தால் அரசுக்கும் நல்லது. லாபமானது. மக்களுக்கும் நல்லது. பயனாளிகளுக்கு இதன் பயன் உறுதி செய்யப்படும். ஓட்டுக்களை அறுவடை செய்வதற்குக் கூட இது தான் நன்கு பயன்படும்.
ரேஷன் கார்டு என்பது ரேஷன் முறையில் உணவுப் பொருட்களை மக்களுக்கு விநியோகம் செய்வதற்காகத் தான் கொண்டு வரப்பட்டது. ஆனால், தற்போது இந்தக் குடும்ப அட்டை முகவரிச் சான்றாகவும், அடையாள அட்டையாகவும், பயன்பட்டுக் கொண்டிருப்பதால் இதற்கு மாற்றுவழி காணும் வரை இதன் அவசியம் கருதி இதை ஒழிப்பது சரியானதல்ல. அதற்கான மாற்று வழியைக் கண்டால் இது தேவையில்லாமல் ஆகிவிடும்.
07.06.2012. 7:00 AM