ரெஸ்லின் பார்க்கலாமா?

நுஸ்கி முஸ்தஃபா

பதில் :

இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட செயலைப் பார்ப்பதும் அனுமதிக்கப்பட்டதாகும். இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டவைகளைக் காண்பதற்காக நமது நேரத்தைச் செலவிடுவதும் தடைசெய்யப்பட்டதாகும்.

இந்த அடிப்படையில் ரெஸ்லிங் என்ற போட்டி இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதா? அல்லது தடைசெய்யப்பட்டதா? என்பதைப் பொறுத்தே இதைப் பார்ப்பது கூடுமா? அல்லது கூடாதா? என்று முடிவு செய்ய வேண்டும்.

ஒருவருடைய திறமையை வெளிப்படுத்துவதற்காக போட்டி வைப்பது தவறல்ல. ஆனால் இஸ்லாம் தடை செய்த விஷயங்களில் போட்டி வைப்பது கூடாது.

போரில் எதிரிகளை வீழ்த்தும் கட்டத்தில் தவிர மற்ற நேரங்களில் ஒருவர் தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்வைதையும், பிறரைத் துன்புறுத்துவதையும் இஸ்லாம் தடைசெய்துள்ளது. ரெஸ்லிங் விளையாட்டுப் போட்டியில் இஸ்லாம் தடை செய்த இந்த இரு அம்சங்களும் அடங்கியுள்ளன.

போட்டியிடும் இருவரில் ஒருவர் மற்றவரின் முகத்தில் குத்துவது, முதுகை முறிப்பது போன்ற கடுமையான தாக்குதல்களில் ஈடுபடுவார். சில நேரங்களில் பார்வையாளர் பகுதியில் இருக்கும் நாற்காலிகளாலும், கையில் கிடைக்கின்ற பொருட்களாலும் சரமாரியாகத் தாக்குவார். இறுதியில் யார் தனது போட்டியாளரை எழ முடியாமல் செயலிழக்கச் செய்கின்றாரோ அவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

இதில் அரங்கேற்றப்படும் கொடூரத் தாக்குதல்களை ஆயிரக்கணக்கான மக்கள் ரசித்து ருசித்துப் பார்ப்பது தான் கொடுமையிலும் கொடுமை.

மனிதாபிமானமும், இரக்கமும் வெளிப்பட வேண்டிய சூழ்நிலையில் சந்தோஷமும், ஆரவாரமும் ஏற்படுகின்றது என்றால் இந்த விளையாட்டு மக்களை இரக்கமற்ற கல்நெஞ்சர்களாக மாற்றுகின்றது என்பதே உண்மை.

ரெஸ்லிங் என்பது பொய்யான நாடகம் என்று ஒரு கருத்து உள்ளது. யார் ஜெயிக்க வேண்டும்? யார் தோற்க வேண்டும்? என்பது முன்கூட்டியே முடிவு செய்யப்படும். ஒருவர் கடுமையாகத் தாக்குவது போல் பாவனை செய்ய மற்றவர் வலி ஏற்படுவது போல் நடிப்பார். மொத்தத்தில் இந்த விளையாட்டு பொய்யானது என்று கூறப்படுகின்றது.

இஸ்லாம் தடைசெய்துள்ள ஒரு விஷயத்தை அடிப்படையாகக் கொண்டு நடிப்பதும் தவறாகும்.

மேலும் இந்த விளையாட்டைக் காணும் போது மார்க்கம் தடைசெய்துள்ள காட்சிகளைக் காணும் நிலை ஏற்படுகின்றது. போட்டியிடுபவர்கள் மறைவிடங்களை வெளிப்படுத்திக் காட்டும் ஜட்டியுடன் மக்களுக்குக் காட்சி தருகின்றனர். இவ்வாறு ஆடை அணிவது இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட ஒன்றாகும்.

சில நேரங்களில் பெண்கள் ஆபாச ஆடைகளுடன் மேடைக்கு வந்து அலங்கோலமாக காட்சி தருகின்ற நிலையும் இந்த விளையாட்டில் உள்ளது.

இஸ்லாம் தடைசெய்துள்ள மேற்கண்ட அம்சங்கள் இந்த விளையாட்டில் உள்ளதால் இந்த விளையாட்டை நாம் பார்ப்பது கூடாது. இப்படிப்பட்ட போலியான விளையாட்டைக் காண நமது பொன்னான நேரங்களை வீணடித்துவிடக் கூடாது.

(முஹம்மதே) அவர்கள் வியாபாரத்தையோ, வீணானதையோ கண்டால் நின்ற நிலையில் உம்மை விட்டு விட்டு அதை நோக்கிச் சென்று விடுகின்றனர். அல்லாஹ்விடம் இருப்பது வீணானதையும், வியாபாரத்தையும் விட சிறந்தது அல்லாஹ் உணவளிப்போரில் சிறந்தவன் எனக் கூறுவீராக!

திருக்குர்ஆன் 63:11

காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர.

திருக்குர்ஆன் 104 வது அத்தியாயம்

காலத்தை வீணாகக் கழித்தால் மறுமையில் அது குறித்து இறைவன் கேள்வி கேட்பான் என்பதைக் கவனத்தில் கொண்டு, வீணான விளையாட்டுகளைக் காண்பதை நாம் தவிர்ப்பது அவசியம்.