இரத்தத்தை விற்கலாமா?

மக்சூமிய்யா

பதில் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவரின் உறுப்புகளை மற்றவர்களுக்குப் பொருத்தும் தொழில் நுட்பமும், ஒருவரது இரத்தத்தை மற்றவருக்கு செலுத்தும் வசதியும் இருக்கவில்லை.

இன்றைக்கு அந்தத் தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்ட பின் இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது என்ற கருத்துக்கு அனைத்து முஸ்லிம் அறிஞர்களும் வந்துள்ளனர்.

கிட்னி இரத்தம் போன்றவற்றை விற்கலாமா என்றால் இதற்கான விடை காண்பது எளிதானது தான்.

மார்க்கத்தில் எந்த ஒன்றை தர்மமாகக் கொடுக்க அனுமதி உள்ளதோ அதை விற்பதற்கும் அனுமதி உண்டா? நமக்குச் சொந்தமான ஒன்றை நாம் விரும்பினால் இலவசமாகக் கொடுக்கலாம். விரும்பினால் அதற்காக ஒரு தொகையைப் பெற்றுக் கொண்டும் கொடுக்கலாம். விரும்பினால் கொடுக்காமலும் இருக்கலாம் என்ற அடிப்படையில் இரத்த்த்தை விற்கலாமா?

பொதுவாக அனுமதிக்கப்பட்டவைகளுக்குத் தான் இது பொருந்தும். இரத்தம் உணவாக உட்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது; உயிர் காக்கும் நிர்பந்தம் காரணமாகவே ஒருவரின் இரத்தத்தை மற்றவருக்குச் செலுத்துவது குற்றமில்லை என்ற நிலையை அடைகிறது. எனவே பொதுவான இந்தச் சட்டம் நிர்பந்த நிலையில் அனுமதிக்கப்பட்டவைகளுக்குப் பொருந்தாது.

உயிர் காக்கும் நிர்பந்தம் காரணமாக ஒருவர் செத்த பிராணிகளை உண்பது குற்றமாகாது என்பதை ஆதாரமாகக் கொண்டு செத்த பிராணிகளை விற்கலாம் என்ற முடிவுக்கு வர முடியாது.

நிர்பந்தம் காரணமாக ஒரு பொருள் உண்ண அனுமதிக்கப்பட்டால் விற்கும் போதும் நிர்பந்த நிலை இருந்தால் தான் விற்க அனுமதிக்கப்படும்.

அதாவது இரத்தத்தை விலைக்கு விற்றால் தான் உயிர்வாழ முடியும் என்ற அளவுக்கு ஒருவருக்கு கஷ்ட நிலை இருந்தால் அவர் விற்கலாம். அப்படி இல்லாதவர்கள் அதை விற்பனைப் பொருளாகக் கருதி விற்கக் கூடாது.

இரத்த சேகரிப்பு வங்கிகளில் நாம் இலவசமாகக் கொடுத்த இரத்தத்தை விற்கிறார்களே இது கூடுமா என்றால் இதைப் பற்றி விபரமாக அறிந்து கொள்ள வேண்டும்.

இரத்த வங்கிகளில் இரத்த சேமிப்பு என்பது அதிகமான பொருள் செலவுடைய வேலையாகும். முதலில் இரத்தத்தில் டைபாய்ட், மலேரியா போன்ற கிருமிகள் உள்ளதா? மற்றவருக்குச் செலுத்தும் அளவுக்குப் போதிய அனுக்கள் உள்ளதா என்பதையும் சோதிக்க வேண்டும்.  நூறு பேரிடம் எடுத்த இரத்த்த்தில் பத்து பேரின் இரத்தம் தேராது என்றால் அந்தச் செலவும் தொன்னூறூ பேரில் இரத்த்த்தில் சேர்க்கப்படும்.

கெட்டுப் போகாமல் இருக்கத் தக்க டெம்பரேச்சரில் வைத்து பாதுகாக்கும் போது அதற்கான மின் கட்டணம், பராமரிப்பு செலவு உள்ளது. மேலும் சேமித்த இரத்தம் குறிப்பிட்ட நாட்களுக்குள் யாருக்கும் செலுத்தாவிட்டால் அவை பயன்படாது. இப்படி பயன்படாமல் போகும் இரத்தத்தைப் பாதுக்காத்த வகையில் ஏற்பட்ட செலவையும் எஞ்சிய இரத்த்தில் தான் சேர்க்க வேண்டும்.

இவற்றைக் கவனத்தில் கொண்டு தங்களுக்கு நட்டம் ஏற்படாத வகையில் ஐநூறு அல்லது அறுநூறு ரூபாய்கள் கட்டணம் வாங்கினால் அது இரத்தத்திற்காகன விலை அல்ல. மேலே நாம் குறிப்பிட்ட வகையில் செய்த செலவை ஈடுகட்டுவதற்கானது.

இது இரத்தத்தை விற்றதாக ஆகாது.

இவ்வளவு செலவு செய்து பாதுகாத்தவர்களிடம் இலவசமாகக் கொடுங்கள் என்று கேட்டால் இரத்தம் சேமிக்கும் வங்கியை மூடி விடுவார்கள். புதிதாக யாரும் அமைக்க மாட்டார்கள். இதனால் நோயாளிகளுக்குப் போதிய இரத்தம் கிடைக்காத நிலை ஏற்படும்.

04.08.2011. 15:42 PM