ஸஹர் உணவைத் தாமதப்படுத்துதல்
ஸஹர் உணவை எந்த அளவுக்குத் தாமதப்படுத்தலாம் என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செயல்முறை விளக்கம் தந்துள்ளார்கள்.
صحيح البخاري
576 – حَدَّثَنَا حَسَنُ بْنُ صَبَّاحٍ [ص:120]، سَمِعَ رَوْحَ بْنَ عُبَادَةَ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَزَيْدَ بْنَ ثَابِتٍ: «تَسَحَّرَا فَلَمَّا فَرَغَا مِنْ سَحُورِهِمَا، قَامَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الصَّلاَةِ، فَصَلَّى»، قُلْنَا لِأَنَسٍ: كَمْ كَانَ بَيْنَ فَرَاغِهِمَا مِنْ سَحُورِهِمَا وَدُخُولِهِمَا فِي الصَّلاَةِ؟ قَالَ: «قَدْرُ مَا يَقْرَأُ الرَّجُلُ خَمْسِينَ آيَةً»
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஸஹர் செய்து விட்டு (சுபுஹ்) தொழுகைக்கு ஆயத்தமாவோம் என்று ஸைத் பின் ஸாபித் (ரலி) கூறினார்கள். (ஸஹருக்கும் சுபுஹுக்கும் இடையே) எவ்வளவு நேரம் இருக்கும்? என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், ஐம்பது வசனங்கள் ஓதும் நேரம் என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 576, 1134, 1921, 575
தமிழகத்தில் சுப்ஹுக்கு ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் இருக்கும் போது ஸஹர் செய்யும் வழக்கத்தை பலரும் மேற்கொண்டுள்ளனர். அது மட்டுமின்றி ஸஹர் செய்து விட்டு உறங்கி, சுபுஹ் தொழுகையைப் பாழாக்கி விடுகின்றனர்.
ஸஹர் செய்து முடித்தவுடன் சுபுஹ் தொழுகைக்கு ஆயத்தமாகும் அளவுக்குத் தாமதமாக ஸஹர் செய்வதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்த நடைமுறையாகும்.
ஐம்பது வசனங்களை நிறுத்தி நிதானமாக ஓதிட, பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் போதுமானதாகும். சுபுஹுக்குப் பத்து நிமிடம் அல்லது பதினைந்து நிமிடம் இருக்கும் போது தான் ஸஹர் செய்யும் வழக்கம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்துள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.