ஸஜ்தாவின் சட்டங்கள்
ருகூவிலிருந்து எழுந்து, ரப்பனா லக்கல் ஹம்து என்று கூறிய பின்னர், அல்லாஹு அக்பர் என்று கூறி ஸஜ்தாச் செய்ய வேண்டும். ஸஜ்தாவில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளைப் பார்ப்போம்.
கைகளை முதலில் வைக்க வேண்டும்
ஸஜ்தாவிற்குச் செல்லும் போது முதலில் இரு உள்ளங்கைகளையும் தரையில் வைத்து, பின்னர் மூட்டுக்கால்களை வைக்க வேண்டும்.
1091 أَخْبَرَنَا هَارُونُ بْنُ مُحَمَّدِ بْنِ بَكَّارِ بْنِ بِلَالٍ ، مِنْ كِتَابِهِ، قَالَ : حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ ، قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْحَسَنِ ، عَنْ أَبِي الزِّنَادِ ، عَنِ الْأَعْرَجِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” إِذَا سَجَدَ أَحَدُكُمْ فَلْيَضَعْ يَدَيْهِ قَبْلَ رُكْبَتَيْهِ، وَلَا يَبْرُكْ بُرُوكَ الْبَعِيرِ “.
حكم الحديث: صحيح
உங்களில் ஒருவர் ஸஜ்தாச் செய்யும் போது தனது மூட்டுக்கால்களை வைப்பதற்கு முன் தனது கைகளை வைக்கட்டும். ஒட்டகம் அமர்வது போல் அமர வேண்டாம் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: நஸாயீ 1079
தரையில் பட வேண்டிய உறுப்புகள்
ஸஜ்தாச் செய்யும் போது நெற்றி, மூக்கு, இரு உள்ளங்கைகள், இரு மூட்டுக்கள், இரு பாதங்களின் நுனி விரல்கள் ஆகியவை தரையில் படுமாறு வைக்க வேண்டும்.
கால் விரல்களை வளைத்து கிப்லாத் திசையை முன்னோக்கும் விதமாக வைக்க வேண்டும்.
இரண்டு கால்களையும் சேர்த்து வைக்க வேண்டும்.
ஆடையோ, முடியோ தரையில் படுவதைத் தடுக்கக் கூடாது.
ஸஜ்தாவில் இரு கைகளையும் காதுகளுக்கு நேராகவோ, அல்லது தோள் புஜங்களுக்கு நேராகவோ வைக்க வேண்டும்.
இரு கைகளைத் தொடையில் படாமலும் முழங்கை தரையில் படாமலும் உயர்த்தி வைக்க வேண்டும்.
தொடையும் வயிறும் சேராமல் இருக்குமாறு வைக்க வேண்டும்.
இதற்கான ஆதாரங்கள் வருமாறு:
812 حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ ، قَالَ : حَدَّثَنَا وُهَيْبٌ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ طَاوُسٍ ، عَنْ أَبِيهِ ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ : قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ : عَلَى الْجَبْهَةِ – وَأَشَارَ بِيَدِهِ عَلَى أَنْفِهِ – وَالْيَدَيْنِ، وَالرُّكْبَتَيْنِ، وَأَطْرَافِ الْقَدَمَيْنِ، وَلَا نَكْفِتَ الثِّيَابَ وَالشَّعَرَ “.
நெற்றி, இரு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நெற்றியைக் குறிப்பிடும் போது தமது கையால் மூக்கையும் சேர்த்து அடையாளம் காட்டினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரீ 812
18858 حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ ، أَخْبَرَنَا سُفْيَانُ ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ ، قَالَ : رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَبَّرَ، فَرَفَعَ يَدَيْهِ حِينَ كَبَّرَ – يَعْنِي اسْتَفْتَحَ الصَّلَاةَ – وَرَفَعَ يَدَيْهِ حِينَ كَبَّرَ، وَرَفَعَ يَدَيْهِ حِينَ رَكَعَ، وَرَفَعَ يَدَيْهِ حِينَ، قَالَ : ” سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ “. وَسَجَدَ فَوَضَعَ يَدَيْهِ حَذْوَ أُذُنَيْهِ، ثُمَّ جَلَسَ فَافْتَرَشَ رِجْلَهُ الْيُسْرَى، ثُمَّ وَضَعَ يَدَهُ الْيُسْرَى عَلَى رُكْبَتِهِ الْيُسْرَى، وَوَضَعَ ذِرَاعَهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى، ثُمَّ أَشَارَ بِسَبَّابَتِهِ وَوَضَعَ الْإِبْهَامَ عَلَى الْوُسْطَى، وَقَبَضَ سَائِرَ أَصَابِعِهِ، ثُمَّ سَجَدَ فَكَانَتْ يَدَاهُ حِذَاءَ أُذُنَيْهِ.حكم الحديث: إسناده صحيح، رجاله ثقات.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்யும் போது தமது முன் கைகளைத் தமது காதுகளுக்கு நேராக வைத்தார்கள். (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)
நூல்கள்: நஸாயீ 18115,அஹ்மத் 18115, தாரமீ 1323
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழும் போது (ஸஜ்தாவில்) தமது தொடைகளின் மீது வயிற்றைத் தாங்கிக் கொள்ளாமலும் தமது இரு தொடைகளையும் விரித்தவர்களாகவும் ஸஜ்தாச் செய்வார்கள்.
அறிவிப்பவர்: பரா பின் ஆஸிப் (ரலி)
நூல்: நஸாயீ 1093
நீ ஸஜ்தாச் செய்யும் போது உனது உள்ளங்கைகளை (தரையில்) வைத்து முழங்கைகளை உயர்த்திக் கொள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: பரா பின் ஆஸிப் (ரலி)
நூல்: முஸ்லிம் 763
…நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்யும் போது தமது கைளை விரிக்காமலும், மூடிக் கொள்ளாமலும் வைப்பார்கள். தமது கால் விரல்களின் முனைகளைக் கிப்லாவை நோக்கச் செய்வார்கள்…
அறிவிப்பவர்: அபூஹுமைத் (ரலி)
நூல்: புகாரீ 828
ஸஜ்தாவில் இரு குதிகால்களையும் இணைத்து வைக்கவேண்டும் என்பதற்கு நேரடியான ஆதாரம் இல்லாவிட்டாலும் பின்வரும் முஸ்லிம் உள்ள செய்தியின் மூலம் நபிகளார் இரு கால்களையும் இணைத்து வைத்துள்ளார்கள் என்பதை விளங்க முடிகிறது.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் இரவில் படுக்கை விரிப்பில் (என்னுடனிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் காணவில்லை. ஆகவே, அவர்களை நான் தேடினேன். அப்போது அவர்கள் பள்ளிவாசலில் (சஜ்தாவில்) இருந்தார்கள். எனது ஒரு கை, நட்டுவைக்கப்பட்டிருந்த அவர்களது உள்ளங்காலில் பட்டது.
நூல் : முஸ்லிம் (839)
ஆயிஷா (ரலி) அவர்களின் ஒரு கை, நபிகளாரின் இரண்டு பாதங்களில் உள்ளங்காலில் படவேண்டுமானால் நபிகளாரின் இரு பாதங்களும் இணைந்திருந்தாலே அதிகம் சாத்தியம் உண்டு என்பதை விளங்கலாம்.
நாய் விரிப்பதைப் போல் கைகளை வைக்கக் கூடாது
தொடைகளும், வயிறும் ஒட்டாமல் அகற்றி வைக்க வேண்டும். நாய் அமருவது போல் முன்கைகளைத் தரையில் பரப்பி வைப்பதைப் போன்று வைக்கக் கூடாது.
ஸஜ்தாவில் நடுநிலையைக் கடைப்பிடியுங்கள்; உங்களில் எவரும் நாய் விரிப்பதைப் போல் கைகளை விரிக்கக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்கள்: புகாரீ 822, முஸ்லிம் 850
ஸஜ்தாவில் ஓத வேண்டியவை
ஸஜ்தாவில் பின் வரும் துஆக்கள் அனைத்தையுமோ, அல்லது அவற்றில் ஒன்றையோ ஓதிக் கொள்ளலாம். குர்ஆன் வசனங்களை ஓதக் கூடாது.
சுப்ஹான ரப்பியல் அஃலா
(உயர்வான என் இறைவன் பரிசுத்தமானவன்)
என்று மூன்று தடவை கூற வேண்டும்.
நூல் : புகாரீ817
ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்தி(க்)க அல்லாஹும்மக்ஃபிர்லி
(இறைவா! நீ தூயவன்; எங்கள் இறைவா! உன்னைப் புகழ்கிறேன்; என்னை மன்னித்து விடு)
நூல்கள்: புகாரீ 794, முஸ்லிம் 746
ஸுப்பூஹுன் குத்தூஸுன் வரப்புல் மலாயிக(த்)தி வர்ரூஹ்
(ஜிப்ரீல் மற்றும் வானவர்களின் இறைவன் பரிசுத்தமானவன்; தூய்மையானவன்)
நூல்: முஸ்லிம் 752
ருகூவு செய்யும் போதும், ஸஜ்தாச் செய்யும் போதும் குர்ஆன் வசனங்களை ஓதுவதை விட்டும் என்னை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: முஸ்லிம் 740
ஸஜ்தாவில் ஓதும் துஆக்களை மூன்று முறை தான் ஓத வேண்டும் என்பதில்லை. நாம் விரும்பிய அளவு கூடுதலாகவும் ஓதிக் கொள்ளலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ருகூவிலும், ஸஜ்தாவிலும் ஸுப்ஹான(க்) கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்தி(க்)க அல்லாஹும்மக்ஃபிர்லி என்று அதிகமதிகம் கூறுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 817, முஸ்லிம் 746
ஸஜ்தாவில் விரும்பிய துஆக்களைக் கேட்கலாம்
ஒருவர் ஸஜ்தாவில் இருக்கும் போது, தான் விரும்பிய துஆவை தாய்மொழியிலேயே கேட்கலாம்.
…ஸஜ்தாவில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள்! உங்கள் பிரார்த்தனை ஏற்கப்பட அது மிகவும் தகுதியானதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 824
இரண்டு ஸஜ்தாக்களுக்கு இடையில்
முதல் ஸஜ்தாச் செய்த பின்னர் அல்லாஹு அக்பர் என்று கூறி எழுந்து அமர வேண்டும். அதில் ரப்பிக்ஃபிர்லீ ரப்பிக்ஃபிர்லீ என்று கூற வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையே, ரப்பிக்ஃபிர்லீ ரப்பிக்ஃபிர்லீ (இறைவா! என்னை மன்னித்து விடு; இறைவா! என்னை மன்னித்து விடு) என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி)
நூல்: நஸாயீ 1059
இந்த துஆவை ஓதி முடித்த பின்னர் அல்லாஹு அக்பர் என்று கூறி மீண்டும் ஸஜ்தாச் செய்ய வேண்டும். முதல் ஸஜ்தாவில் செய்த அனைத்தையும் இரண்டாம் ஸஜ்தாவிலும் கடைப்பிடிக்க வேண்டும்.