ஸலாமுக்கு முழுமையாக பதில் சொல்ல வேண்டுமா?

ஒருவர் சலாம் முழுமையாகச் சொன்னால் பதிலும் முழுமையாகச் சொல்ல வேண்டுமா?

பதில் :

ஒருவர் நமக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு என்று பூரணமாக ஸலாம் கூறும் போது நாமும் அவருக்கு வஅலைக்குமுஸ் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு என்று பூரணமாக பதில் தர வேண்டும்.

ஏனென்றால் நமக்கு கூறப்பட்ட முகமனையோ அல்லது அதை விட சிறந்த முகமனையோ கூறும் படி அல்லாஹ் கட்டளையிடுகிறான். பதிலளிப்பவரின் ஸலாம் முதலில் ஸலாம் கூறியவரின் ஸலாத்தைப் போன்று இருக்க வேண்டும். அல்லது அதை விடச் சிறப்பானதாக இருக்க வேண்டும்.

உங்களுக்கு வாழ்த்துக் கூறப்பட்டால் அதை விட அழகிய முறையிலோ, அல்லது அதையோ திருப்பிக் கூறுங்கள்! அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:86

ஆதம் (அலை) அவர்கள் வானவர்களுக்கு ஸலாம் சொன்னார்கள். வானவர்கள் ஆதம் (அலை) அவர்கள் கூறிய ஸலாத்தை விட சிறந்த ஸலாத்தைக் கூறினார்கள். அந்த வானவர்கள் கூறிய ஸலாமே முஹம்மது நபியின் சமுதாயமாகிய நாம் கூற வேண்டிய ஸலாமாகும்.

صحيح البخاري

6227 – حَدَّثَنَا يَحْيَى بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” خَلَقَ اللَّهُ آدَمَ عَلَى صُورَتِهِ، طُولُهُ سِتُّونَ ذِرَاعًا، فَلَمَّا خَلَقَهُ قَالَ: اذْهَبْ فَسَلِّمْ عَلَى أُولَئِكَ، النَّفَرِ مِنَ المَلاَئِكَةِ، جُلُوسٌ، فَاسْتَمِعْ مَا يُحَيُّونَكَ، فَإِنَّهَا تَحِيَّتُكَ وَتَحِيَّةُ ذُرِّيَّتِكَ، فَقَالَ: السَّلاَمُ عَلَيْكُمْ، فَقَالُوا: السَّلاَمُ عَلَيْكَ وَرَحْمَةُ اللَّهِ، فَزَادُوهُ: وَرَحْمَةُ اللَّهِ، فَكُلُّ مَنْ يَدْخُلُ الجَنَّةَ عَلَى صُورَةِ آدَمَ، فَلَمْ يَزَلِ الخَلْقُ يَنْقُصُ بَعْدُ حَتَّى الآنَ “

அல்லாஹ் ஆதமைத் தன்னுடைய உருவில் படைத்தான். அப்போது அவரது உயரம் அறுபது முழங்களாக இருந்தது. அவர்களைப் படைத்த போது நீங்கள் சென்று அங்கு அமர்ந்து கொண்டிருக்கும் வானவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள்; ஏனெனில் அது தான் உங்களது முகமனும் உங்களது சந்ததிகளின் முகமனும் ஆகும் என்று இறைவன் சொன்னான். அவ்வாறே ஆதம் (அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று) அஸ்ஸலாமு அலைக்கும் என்று முகமன் சொன்னார்கள். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் (சாந்தியும் இறைவனின் கருணையும் உங்கள் மீது நிலவட்டும்) என்று வானவர்கள் பதில் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 6227

மேலும் பதில் ஸலாம் கூறுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடமை என்று கூறியுள்ளார்கள். ஸலாம் கூறியவர் பூரணமாக ஸலாம் கூறி நாம் குறைவாக பதில் ஸலாம் கூறினால் நாம் அவருக்கு செய்ய வேண்டிய கடமையில் குறைவு ஏற்பட்டதாக ஆகி விடுகின்றது.

صحيح البخاري

1240 – حَدَّثَنَا مُحَمَّدٌ، حَدَّثَنَا عَمْرُو بْنُ أَبِي سَلَمَةَ، عَنِ الأَوْزَاعِيِّ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي سَعِيدُ بْنُ المُسَيِّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” حَقُّ المُسْلِمِ عَلَى المُسْلِمِ خَمْسٌ: رَدُّ السَّلاَمِ، وَعِيَادَةُ المَرِيضِ، وَاتِّبَاعُ الجَنَائِزِ، وَإِجَابَةُ الدَّعْوَةِ، وَتَشْمِيتُ العَاطِسِ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஓரு முஸ்லிம் (இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து.

  1. ஸலாமிற்குப் பதில் சொல்லுதல்.
  2. நோயாளியை நலம் விசாரித்தல்.
  3. ஜனாசாவைப் பின்தொடர்ந்து செல்லுதல்.
  4. அழைப்பை ஏற்றுக் கொள்ளுதல்.
  5. தும்மியவருக்கு எர்ஹமுக்கல்லாஹ் என்று கூறுதல்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 1240

سنن أبي داود

928 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي مَالِكٍ الْأَشْجَعِيِّ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا غِرَارَ فِي صَلَاةٍ، وَلَا تَسْلِيمٍ»، قَالَ أَحْمَدُ: «يَعْنِي فِيمَا أَرَى أَنْ لَا تُسَلِّمَ، وَلَا يُسَلَّمَ عَلَيْكَ، وَيُغَرِّرُ الرَّجُلُ بِصَلَاتِهِ فَيَنْصَرِفُ وَهُوَ فِيهَا شَاكٌّ»

ஸலாம் கூறுவதிலும், தொழுவதிலும் குறைவு வைக்கக் கூடாது.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : அபூதாவூத்

سنن أبي داود

5195 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عَوْفٍ، عَنْ أَبِي رَجَاءٍ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: السَّلَامُ عَلَيْكُمْ، فَرَدَّ عَلَيْهِ السَّلَامَ، ثُمَّ جَلَسَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَشْرٌ» ثُمَّ جَاءَ آخَرُ فَقَالَ: السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ، فَرَدَّ عَلَيْهِ، فَجَلَسَ، فَقَالَ: «عِشْرُونَ» ثُمَّ جَاءَ آخَرُ فَقَالَ: السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، فَرَدَّ عَلَيْهِ، فَجَلَسَ، فَقَالَ: «ثَلَاثُونَ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறினார். நபியவர்கள் அவருக்குப் பதில் ஸலாம் கூறினார்கள். பின்னர் அவர் உட்கார்ந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (இவருக்கு) பத்து (நன்மைகள்) என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் வந்தார். அவர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் என்று கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருக்குப் பதில் கூறியவுடன் அவர் அமர்ந்தார். நபியவர்கள் (இவருக்கு) இருபது (நன்மைகள்) என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் வந்தார். அவர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு என்று கூறினார். அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். பிறகு அவர் உட்கார்ந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (இவருக்கு) முப்பது (நன்மைகள்) என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹுசைன் (ரலி)

நூல் : அபூ தாவூத்