சர்ச் வரைந்த டி ஷர்ட் வியாபாரம் செய்யலாமா?

? எனது சகோதரர் பிரான்ஸில் ஒரு பொது வணிக வளாகத்தில் பணி புரிகின்றார். அந்த வணிக வளாகத்தில், ஈபிள் டவர் போன்ற நினைவுச் சின்னங்கள், சர்ச் வடிவில் படங்கள், சர்ச் வரைந்த டி-ஷர்ட்டுகள் போன்றவற்றை விற்பனை செய்ய வேண்டியுள்ளது. அவர் அந்த வேலையில் இருக்கலாமா? தான் செய்யும் தொழில் ஹலாலா? ஹராமா? என்று அவர் கேட்கிறார். விளக்கவும்.

எஸ். சாதிக், கருக்கங்குடி

صحيح البخاري

2225 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الوَهَّابِ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، أَخْبَرَنَا عَوْفٌ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي الحَسَنِ، قَالَ: كُنْتُ عِنْدَ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، إِذْ أَتَاهُ رَجُلٌ فَقَالَ: يَا أَبَا عَبَّاسٍ، إِنِّي إِنْسَانٌ إِنَّمَا مَعِيشَتِي مِنْ صَنْعَةِ يَدِي، وَإِنِّي أَصْنَعُ هَذِهِ التَّصَاوِيرَ، فَقَالَ ابْنُ عَبَّاسٍ: لاَ أُحَدِّثُكَ إِلَّا مَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: سَمِعْتُهُ يَقُولُ: «مَنْ صَوَّرَ صُورَةً، فَإِنَّ اللَّهَ مُعَذِّبُهُ حَتَّى يَنْفُخَ فِيهَا الرُّوحَ، وَلَيْسَ بِنَافِخٍ فِيهَا أَبَدًا» فَرَبَا الرَّجُلُ رَبْوَةً شَدِيدَةً، وَاصْفَرَّ وَجْهُهُ، فَقَالَ: وَيْحَكَ، إِنْ أَبَيْتَ إِلَّا أَنْ تَصْنَعَ، فَعَلَيْكَ بِهَذَا الشَّجَرِ، كُلِّ شَيْءٍ لَيْسَ فِيهِ رُوحٌ

நான் இப்னு அப்பாஸ் (ரலி) உடன் இருந்த போது ஒரு மனிதர் வந்து,  அப்பாஸின் தந்தையே! நான் கைத் தொழில் செய்து வாழ்க்கை நடத்தும் ஒரு மனிதன். நான் உருவங்களை வரைகிறேன்   என்று கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி),  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் செவியுற்றதையே உமக்கு அறிவிக்கின்றேன்.  யாரேனும் ஒரு உருவத்தை வரைந்தால் வரைந்தவர் அதற்கு உயிர் கொடுக்கும் வரை அல்லாஹ் அவரை வேதனை செய்வான். அவர் அதற்கு ஒருக்காலும் உயிர் கொடுக்க முடியாது  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன்   என்றார். கேட்டவர் அதிர்ச்சியுடன் பெருமூச்சு விட்டார். அவரது முகம் (பயத்தால்) மஞ்சள் நிறமாக மாறியது. அப்போது இப்னு அப்பாஸ் (ரலி),  உமக்குக் கேடு உண்டாகட்டும். நீர் உருவம் வரைந்து தான் ஆக வேண்டும் என்றால் மரம் மற்றும் உயிரற்றவைகளை வரைவீராக!  என்று கூறினார்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் அபில் ஹஸன்

நூல்: புகாரி 2225

இந்த ஹதீஸிலிருந்து உயிருள்ள உருவங்களைத் தவிர வேறு உயிரற்ற பொருட்களை வரைவதில் தவறில்லை என்பதை அறியலாம். எனவே ஈபிள் டவர் போன்ற கட்டங்கள் வரையப்பட்ட பொருட்களை விற்பதற்குத் தடையில்லை. நினைவுச் சின்னங்கள் உள்ளிட்ட எந்தக் கட்டடமாக இருந்தாலும் அவற்றை வரைவதற்குத் தடையில்லை.

எனினும் ஒரு பொருளுக்குப் புனிதம் உள்ளது என்று நினைத்து மக்கள் அவற்றை வழிபடுகின்றார்கள் என்றால் அத்தகைய பொருட்களை வரைவதோ, அல்லது விற்பதோ கூடாது.

உதாரணமாக சர்ச்சுகள், தர்காக்கள், கோயில்கள் போன்றவற்றின் படங்களில் புனிதம் இருப்பதாக நினைத்து மக்கள் வழிபடுவதை நாம் பார்க்கிறோம். நாகூர் தர்கா, பொட்டல் புதூர் தர்கா போன்றவற்றின் போட்டோக்களை புனிதமாகக் கருதி அவற்றை வீடுகளிலும், கடைகளிலும் மாட்டி வைத்திருப்பார்கள். அவற்றுக்கு ஊதுபத்தி கொளுத்தி வழிபடவும் செய்வார்கள். இது போன்ற கட்டடங்கள் உயிரற்றவையாக இருந்தாலும் அவற்றை அச்சிட்டு விற்கக் கூடாது. இதற்கு கீழ்க்கண்ட ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது.

سنن أبي داود

3313 – حَدَّثَنَا دَاوُدُ بْنُ رُشَيْدٍ، حَدَّثَنَا شُعَيْبُ بْنُ إِسْحَاقَ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ قَالَ: حَدَّثَنِي أَبُو قِلَابَةَ، قَالَ: حَدَّثَنِي ثَابِتُ بْنُ الضَّحَّاكِ، قَالَ: نَذَرَ رَجُلٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَنْحَرَ إِبِلًا بِبُوَانَةَ فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنِّي نَذَرْتُ أَنْ أَنْحَرَ إِبِلًا بِبُوَانَةَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ كَانَ فِيهَا وَثَنٌ مِنْ أَوْثَانِ الْجَاهِلِيَّةِ يُعْبَدُ؟» قَالُوا: لَا، قَالَ: «هَلْ كَانَ فِيهَا عِيدٌ مِنْ أَعْيَادِهِمْ؟»، قَالُوا: لَا، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوْفِ بِنَذْرِكَ، فَإِنَّهُ لَا وَفَاءَ لِنَذْرٍ فِي مَعْصِيَةِ اللَّهِ، وَلَا فِيمَا لَا يَمْلِكُ ابْنُ آدَمَ»

புவானா என்ற இடத்தில் ஒட்டகத்தை அறுத்துப் பலியிட வேண்டும் என்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நேர்ச்சை செய்திருந்தார். அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து,  நான் புவானா என்ற இடத்தில் ஒட்டகத்தை அறுத்துப் பலியிட வேண்டும் என்று நேர்ச்சை செய்திருக்கின்றேன்   என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,  அதில் வணங்கப்படக் கூடிய அறியாமைக் கால சிலைகளில் ஏதேனும் ஒரு சிலை இருக்கின்றதா?   என்று கேட்டார்கள். அதற்கு (மக்கள்) இல்லை என்று பதிலளித்தார்கள்.  அவர்களது திருவிழாக்களில் ஏதேனும் ஒரு திருவிழா அங்கு நடப்பதுண்டா?   என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர்கள் இல்லை என்று பதிலளித்தார்கள். அப்படியானால் நீ உன்னுடைய நேர்ச்சையை நிறைவேற்றிக் கொள். ஏனெனில் அல்லாஹ்வுக்கு மாறு செய்வதிலோ அல்லது ஆதமுடைய மகனுக்கு இயலாத காரியத்திலோ நேர்ச்சையை நிறைவேற்றுதல் இல்லை   என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸாபித் இப்னு ளஹ்ஹாக் (ரலி)

நூல்: அபூதாவூத்

அல்லாஹ்வுக்கு நேர்ச்சை செய்தால் அதை நிறைவேற்றுவது கட்டாயக் கடமை! அது போன்ற ஒரு செயலைச் செய்யும் போது கூட அங்கு சிலைகள் உள்ளதா? இஸ்லாத்திற்கு மாற்றமான திருவிழாக்கள் நடக்கின்றதா? என்பன போன்ற விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவதை நாம் இந்த ஹதீஸில் பார்க்கிறோம்.

தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதும் தடுக்கப்பட்டது என்பதைக் கீழ்க்கண்ட ஹதீஸ் கூறுகின்றது.

صحيح البخاري

2223 – حَدَّثَنَا الحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، قَالَ: أَخْبَرَنِي طَاوُسٌ، أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، يَقُولُ: بَلَغَ عُمَرَ بْنَ الخَطَّابِ أَنَّ فُلاَنًا بَاعَ خَمْرًا، فَقَالَ: قَاتَلَ اللَّهُ فُلاَنًا، أَلَمْ يَعْلَمْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «قَاتَلَ اللَّهُ اليَهُودَ حُرِّمَتْ عَلَيْهِمُ الشُّحُومُ، فَجَمَلُوهَا فَبَاعُوهَا»

ஒரு மனிதர் மதுவை விற்பதாக அறிந்த உமர் (ரலி)  அவரை அல்லாஹ் சபிப்பானாக!  யூதர்களுக்குக் கொழுப்பு ஹராமாக்கப்பட்ட போது, அதை உருக்கி அவர்கள் விற்றதால் அல்லாஹ் அவர்களை அழிப்பானாக   என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை அவர் அறியவில்லையா?  என்று கேட்டார்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 2223

10.01.2015. 20:39 PM