சறுகலை ஒப்புக் கொள்ளும் ஜாக்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக குமரி மாவட்டக் கொள்கைச் சகோதரர்கள் கடந்த ஹஜ் பெருநாளன்று கோட்டாற்றில் முதல் முறையாக நபிவழிப் படி பெருநாள் தொழுகையை திடலில் தொழுதனர்.
கோட்டாற்றில் ஏகத்துவக் கொள்கை தோன்றிய நாள் முதற்கொண்டு இது வரை ஏகத்துவக் கொள்கையாளர்கள் பெருநாள் தொழுகையை திடலில் தொழுததில்லை. பள்ளிகளிலேயே தொழுது கொண்டிருக்கின்றனர்.
எனவே பெருநாள் தொழுகையைத் திடலில் தொழும் இந்த நபிவழியை அமல்படுத்தும் விதமாக துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள் வாயிலாக தவ்ஹீத் ஜமாஅத்தினர் விளம்பரம் செய்தனர்.
அவ்வளவு தான்! கொள்கைச் சகோதரர்களின் இந்தச் செயல் ஜாக் வர்க்கத்தினரிடம் கோபத்தை ஏற்படுத்தியது! கொந்தளிப்பை உருவாக்கியது. அந்த ஆத்திரத்தில் ஜாக் அமீர்சில கேள்விக் கணைகளைத் தொடுத்தார்.
1. நாகர்கோவிலில் குராபிகள் திடலில் தொழுகை நடத்துகிறார்களே! அங்கு போய்இவர்கள் (தவ்ஹீதுவாதிகள்) தொழ வேண்டியது தானே?
2. பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையைத் தொழுவதற்குத் தடை இருக்கிறதா?
3. நபி (ஸல்) அவர்கள் காலத்தில்பள்ளிகள் சிறியதாக இருந்தன. அதனால் திடலில்தொழுதார்கள்.
4. திடலில் கண்டிப்பாகத் தொழுது தான் ஆக வேண்டுமா? குர்ஆன் ஹதீஸ் பெயரில் இயக்கம் நடத்தும் இவர் குராபிகளின் பாணியில் குர்ஆன் ஹதீசுக்கு எதிராகக் கிளம்பியிருக்கிறார் என்பதை மேலே கண்ட கேள்விகளைப் படித்தவுடன் விளங்கிக் கொள்ளலாம்.
மார்க்கமா? மனோ இச்சையா?
இவர் முன்னுரிமையும் முதலிடமும் கொடுப்பது மார்க்கத்திற்கா? மனோ இச்சைக்கா? என்றால் மனோ இச்சைக்குத் தான் என்பதை மேற்கண்ட வினாக்களிலிருந்து, விஷம் தோய்ந்த அம்புகளிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
இவர் எந்தெந்த வகையில் என்னென்ன ஹதீஸ்களை மறுக்கின்றார்; இவரும் இவரைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் ஆதரவாளர்களும் எந்த அளவுக்கு குர்ஆன், ஹதீஸ் என்ற வளையத்தை விட்டு வெளியே போய் விட்டார்கள் என்று விவரித்தும், விமர்சித்தும் ஏகத்துவம் பிப்ரவரி 2006 இதழில் எழுதியிருந்தோம்.
ஜாக் செல்லும் சறுகல் பாதை என்ற அந்த விமர்சனத்தில் மூன்று முக்கியக் குற்றச்சாட்டுகளைக் குறிப்பிட்டு இருந்தோம்.
1. பெருநாள் தொழுகையை நபிவழிப்படி திடலில் தொழாமல் பள்ளிவாசலில் தொழுதல்
2. தொழ வருபவர்களை, பள்ளியில் தொழ விடாமல் தடுத்தல்
3. திருமணத்தின் போது பெண் வீட்டு சார்பில் நடைபெறும் விருந்தில் கலந்து கொள்ளுதல்
ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளைக் குறிப்பிட்டிருந்தோம். இதற்குத் தாங்கள் பதில் எழுதினால் சரிப்பட்டு வராது; சமாளித்து எழுத வேண்டி வரும் என்று கருதி, பதில் எழுதும் பொறுப்பை அஷ்ரப்பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். ஜாக் எனும் சங்கத்தின் அங்கத்தினராகிய அவர்கள் ஜாக்கின் சறுகலைக் கடுகளவும் குற்ற உணர்வின்றி, குறுகுறுக்கும் உறுத்தல் இன்றி தெளிவாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
அவற்றை இப்போது ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
நமது விமர்சனத்திற்கு மார்ச் 2006 அல்ஜன்னத்தில் பதில் தந்துள்ளார்கள். இந்தப் பதிலை அவர்கள் நமக்காகத் தந்தாலும் அது அவர்கள் தங்களுக்கே அளித்த பதிலாகி விட்டது. மார்க்கத்தின் பெயரால் மற்றவர்களைத் தாக்த தற்போது இவர்கள் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் திடல் தொழுகை. பெருநாள் தொழுகைக்கு இவர்களால் சூட்டப்பட்ட புதிய பெயர். பெருநாள் தொழுகையை மைதானத்தில் தொழுவது மார்க்த்திற்கு விரோதமல்ல. அது சுன்னத் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே…
அல்ஜன்னத், பக்கம் 17, 18
இப்போது சுன்னத் என்கிறார்களா? இதைத் தான் நாம் முதலில் சொன்னோம். நாம் சுன்னத் என்று சொன்ன போது, அவர்கள் “தடையிருக்கின்றதா?” என்று கேட்டார்கள். அவர்களின் இந்தக் கேள்விக்கு அவர்களே அல்ஜன்னத் நவம்பர் 2002 இதழில் எழுதியதை மேற்கோள் காட்டியதும் இப்போது சுன்னத் என்று சொல்ல முன் வந்திருக்கின்றார்கள்.
அத்துடன், “திடல் கைவசமில்லை” என்றொரு சப்பைக் கட்டையும் கட்டுகின்றார்கள்.
நாம் திடலில் தொழ ஆரம்பித்த போது, இந்தப் பதிலை அவர்கள் சொல்லியிருந்தால் கூட சரி எனலாம். ஆனால் நாம் திடலில் தொழுவதைக் கேள்விப்பட்டவுடன் தாறுமாறாகக் கேள்விகளை அல்லவா நம் மீது வீசியெறிந்தார்கள்? சறுகியதற்கு ஜாக் சொல்கின்ற சாக்கு நாம் பெருநாள் தொழுகையை திடலில் தொழாததற்குக் காரணம் கைவசம் மைதானம் இல்லாததேயாகும்.
திடலில் தொழுவதை ஃபர்ளு போல சித்தரிப்பவர்கள் கூட தங்களுக்கென நிரந்தரமாக இது வரை ஒரு மைதானத்தைப் பெற்றிருக்கவில்லை. அதற்காக முயற்சிக்கவுமில்லை. ஆண்டு தோறும் அங்குமிங்குமாக திடலை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.
அல்ஜன்னத், பக்கம் 18
திடல் கைவசம் இல்லாததால் தொழவில்லையாம்! கோட்டாற்றில் செல்வச் சீமான்களைக் கொண்ட ஜமாஅத் அஷ்ரப் பள்ளி ஜமாஅத்! ஒரு சுன்னத்தை நிறைவேற்றுவதற்கு இத்தகைய செலவைச் செய்தால் என்ன? எத்தனையோ பெண் வீட்டு விருந்துகளை ரத்துச் செய்து விட்டு அந்தப் பணத்தை இதற்காக மடை திருப்பிவிடலாம் அல்லவா?
குர்ஆன், ஹதீஸ் இயக்கம் என்ற பெயர் வைத்தால் மட்டும் போதுமா? அந்த ஹதீஸைச் செயல்படுத்த வேண்டுமே! அதை யார் செய்வது? குராபிகள் கூட இந்த சுன்னத்தைப் பேணுகின்ற போது, குர்ஆன், ஹதீஸைப் போதிப்பவர்கள் சோடையாகி விடலாமா? மனமிருந்தால் இடமுண்டு! இந்த சுன்னத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணமிருந்தால் இடம் ஒரு பிரச்சனையே இல்லை.
ஆனால் அது போன்ற எண்ணம் இவர்களிடம் கடுகளவு கூட கிடையாது. நபிவழியை அமல்படுத்தத் தான் இல்லை! அதைச் செயல்படுத்துவோரை விமர்சிக்காமலாவது விடலாம்! விமர்சனம் செய்தது மட்டுமல்ல! இந்த நபிவழியைச் செயல்படுத்துவோரைக் கேலியும் கிண்டலும் செய்கின்றனர்.
வாடகைக்குத் திடல் பிடிப்பது என்ன தவறா? மார்க்க அடிப்படையில் குற்றமா? குறையா? இவர்களைப் போன்ற பணக்கார வர்க்கமாக இருந்தால் இந்தப் பொடியன்மார்கள் ஒரு திடலைச் சொந்தமாக வாங்கி இருப்பார்கள். வசதியில்லை! அதனால் இப்போதைக்கு வாடகைக்குப் பிடித்திருக்கிறார்கள்.
ஒரு சுன்னத்தை நிறைவேற்றுவதற்காக திடலை வாங்கியதும் அதை பெருநாள் தொழுகைக்கும், சமுதாய நலக் காரியங்களுக்கும், விளையாட்டுப் பயிற்சிகளுக்கும் பயன்படுத்துவார்கள், இன்ஷா அல்லாஹ்!
நிரந்தரமாக இல்லாததால் அங்கும் இங்கும் அலைகின்றார்கள். அவ்வாறு அலைவதற்கும் இவர்களிடத்திலிருந்து கேலி, கிண்டல் வந்தாலும் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக இதற்குக் கூலி உண்டு! இவர்கள் செய்யும் கேலிக்கு அல்லாஹ் தண்டனை அளிக்காமல் இருக்கப் போவதில்லை.
நபிவழியைக் கேலியும் கிண்டலும் செய்வது யூத, கிறித்தவர்களின் வேலை! அதை இவர்கள்இப்போது கையில் எடுத்திருக்கிறார்கள். இப்படி நபிவழியைக் கிண்டல் செய்பவர்கள் தான் குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றுகிறார்களாம்! இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று உண்மையான ஏகத்துவவாதிகள் விளங்கிக் கொண்டுவிட்டார்கள்.
திடல் தொழுகை
அடுத்து, வடிகட்டிய முட்டாள் தனமான வாதம் ஒன்றை எடுத்து வைக்கின்றார்கள்.
“பெருநாள் தொழுகைக்கு இவர்களால்சூட்டப்பட்ட பெயர் திடல் தொழுகை” என்ற சொத்தை வாதத்தை வைக்கின்றார்கள்.
அதாவது பெருநாள் தொழுகைக்கு மாற்றம் செய்து திடல் தொழுகை என்ற ஒன்றை நாம் கண்டுபிடித்திருப்பது போல் இந்த வாதத்தை எழுப்புகின்றார்கள்.
நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் என்று இவர்களும் நாமும் சொல்கின்றோமே இவையெல்லாம் ஹதீஸில் உள்ளவையா? நோன்புக்குப் பிறகு வருவதால் நோன்புப் பெருநாள் என்றும், ஹஜ்ஜை மையமாக வைத்து வருவதால் ஹஜ்ஜுப் பெருநாள் என்றும் கூறுகின்றோம்.
இது போன்று தான் பெருநாள் தொழுகை என்றால் அதற்கு உயிர் நாடியாக அமைவது திடல் தொழுகை தான். அந்தத் தொழுகையைத் திடலில் தான் தொழ வேண்டும். அப்படித்தான் நபி (ஸல்) அவர்கள் தொழுது இருக்கின்றார்கள் என்பதை உணர்த்தும் வண்ணம் திடல் தொழுகை என்ற வார்த்தையைக் குறிப்பிட்டு உள்ளனர்.
இதில் என்ன குறைபாடு வந்து விட்டது? பொடியன்மார் இந்தத் தொழுகையை அறிமுகப்படுத்துவதா? அதை நாம் ஏற்பதா? என்ற அகந்தையும் ஆணவமும் தவிர வேறு ஏதாவது இதில் பொருள் இருக்கிறதா? இந்தத் தொழுகையைத் திடலில் தொழுவது சுன்னத் என்றாலும் அதை தவ்ஹீத் ஜமாஅத்தினர் செய்து காட்டியதால் எங்களால் ஒத்துக் கொள்ள முடியவில்லை என்று தாங்கள் சறுகியதை ஒப்புக் கொள்கின்றனர்.
பெண் வீட்டு விருந்து இவர்களுக்கு எதிராக நாம் எடுத்து வைத்த அடுத்தக் குற்றச்சாட்டு
பெண் வீட்டு விருந்து! தங்களைக் குர்ஆன், ஹதீஸ் படி நடப்பவர்கள் என்று பீற்றியும், பிதற்றியும் கொள்கின்ற இவர்கள் பெண் வீட்டு விருந்து எனில் கொள்கையைக் காற்றில் பறக்க விட்டு விடுகின்றனர். அதனால் தான் இதை விமர்சித்து, “சத்தியப் பேச்சு சாப்பாடு என்றால் போச்சு” என்ற பிரசுரத்தை குமரி மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் வெளியிட்டனர். பெண் வீட்டு விருந்தைச் சாப்பிடுவதில் பேயாக நிற்கும் இவர்கள் அந்த விருந்து கூடும் என்று கூவிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த நிலைபாட்டிலிருந்து இன்னும் மாறவில்லை. எனவே அதையும் பிப்ரவரி2006 இதழில் விமர்சித்து எழுதியிருந்தோம்.
அதற்கு இவர்கள் தரும் பதிலைப் பாருங்கள்.
திருமணத்தில் பெண் வீட்டார் மீது மாப்பிள்ளை வீட்டார் நிர்ப்பந்தமாக எந்தச் செலவினங்களையும் சுமத்தக் கூடாது என்பது தான் நமது தவ்ஹீது பிரச்சாரத்தில் மையக்கரு. எனினும் பெண் வீட்டார் வசதி வாய்ப்புள்ளவர்களாக இருந்து எந்த நிர்பந்தமுமில்லை அவர்களாகவே முன் வந்து எனது பிள்ளை திருமணத்தன்று நடைபெறும் விருந்துபசாரப் பொறுப்பை நானே ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறி அவர்களாக முன் வந்து விருந்தளித்தால் அந்த விருந்து உபசாரத்தைத் தடுப்பதற்கு என்ன ஆதாரமிருக்கின்றது? த.த.ஜ.வினரின் பாணியில் கேட்பதானால் “இதற்குத் தடைஇருக்கின்றதா?” (ஏனெனில் விருந்தளிப்பு என்பது உலக விஷயம் தானே?)
அல்ஜன்னத், பக்கம் 19
இதில் இரண்டு விஷயங்களை எடுத்து வைக்கின்றார்கள். பெண் வீட்டாரிடம் நிர்ப்பந்திக்கக் கூடாதாம். அது தான் தவ்ஹீது பிரச்சாரத்தின் மையக் கருவாம். எனினும் பெண் வீட்டார் தாமாகக் கொடுத்தால் தப்பில்லையாம். வரதட்சணை கூடாது என்று சொன்னதும் குராபிகள் வரதட்சணையை நியாயப்படுத்த எடுத்து வைத்த அதே வாதத்தை இவர்கள் கொஞ்சம் கூட உறுத்தலின்றி அப்படியே எடுத்து வைக்கின்றார்கள்.
எப்படி ஒரு கேடு கெட்ட கீழ்வழிக்குப் போயிருக்கின்றார்கள் என்று பாருங்கள். தவறான வழிக்குச் சென்றது மட்டுமின்றி அதை நியாயப்படுத்தவும் கிளம்பியிருக்கின்றார்கள்.
அஸ்த் எனும் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை (ஜகாத்) வசூலிப்பவராக நபி (ஸல்) அவர்கள் நியமித்தார்கள். அவர் இப்னுல் லுத்பிய்யா என்று அழைக்கப்பட்டு வந்தார். அவர் ஜகாத் வசூலித்துக் கொண்டு வந்த போது, “இது உங்களுக்குரியது. இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “இவர் தன் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, தமக்கு அன்பளிப்பு கிடைக்கிறதா? இல்லையா? என்று பார்க்கட்டும். என் உயிரைத் தன் கைவசம் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! உங்களில் யாரேனும் அந்தஜகாத் பொருளிலிருந்து முறைகேடாக எதனைப் பெற்றாலும் அதை அவர் மறுமைநாளில் தனது பிடரியில் சுமந்து கொண்டு வருவார். அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக் கொண்டிருக்கும். பசுவாகவோ, ஆடாகவோ இருந்தால் கத்திக்கொண்டிருக்கும்” என்று கூறினார்கள். பிறகு அவர்களுடைய அக்குள் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்குத் தமது கைகளை உயர்த்தி, “இறைவா! நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா?” என்று மூன்று முறை கேட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுமைத் அஸ்ஸாயிதி (ரலி)
நூல்: புகாரி 2597, 6636
வசூல் செய்த இந்தத் தோழர், “மக்கள் தாமாகத் தந்தார்கள்” என்ற சூப்பர் பாயிண்டைத் தான் முன் வைக்கின்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதற்கு மேலான சூப்பர்பாயிண்டைத் தூக்கிப் போடுகின்றார்கள்.
இவர் வீட்டில் இருந்தால் இது கிடைக்குமா? என்று கேட்கின்றார்கள். இது போல் தான் இவர்களிடம் நாம் கேட்பது, “இவர்கள் திருமணம் முடித்ததால் தான் அந்த விருந்தைப் பெண் வீட்டார் வைக்கின்றார்களா? அல்லது வேறு காரணத்திற்காகவா? தன் மகளைக் கட்டிக் கொடுத்திருப்பதால் மாப்பிள்ளை மற்றும் மாப்பிள்ளை வீட்டார் தன் மகளை ஒழுங்காக வைத்துக் காப்பாற்ற வேண்டும் என்ற காரணத்திற்காகத் தான் பெண் வீட்டுக்காரர்கள் இந்த விருந்து, சீதனம், நகை, தொகை எல்லாவற்றையும் கொடுக்கின்றார்கள்.
எனவே தானாக முன்வந்து கொடுக்கின்றார்கள் என்று இவர்கள் கூறும் காரணம் போலியானது என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். உண்மையில் பெண் வீட்டுக்காரர்கள் கொடுப்பது ஒரு மறைமுக நிர்ப்பந்தமே! அதை இவர்களும் ஒப்புக் கொள்கின்றார்கள்.
ஒன்றிரண்டு இடங்களில் திருமணச் செலவுகள் நிர்பந்தமாக பெண் வீட்டார் மீது சுமத்தப்படுகிறது என்பது உண்மையே. எனினும் வரதட்சணை பெறாமல் மஹர் கொடுத்து மணம் செய்யும் அளவிற்குப் பக்குவம் பெற்றவர்கள் விரைவிலேயே இதரவிஷயங்களிலும் முழுமையான மாற்றத்தைப் பெறுவார்கள் என்ற நம்பிக்கை நமக்குண்டு.
அல்ஜன்னத், பக்கம் 19
நிர்ப்பந்தப்படுத்தி திருமணச் செலவுகளைப் பெண் வீட்டார் மீது திணிப்பது உண்மை தானாம். ஆனால் மஹர் கொடுத்து திருமணம் செய்வதால் அவர்கள் திருந்தி விடுவார்கள் என்று இவர்களுக்கு நம்பிக்கை உள்ளதாம். உண்மையில் மஹர் என்ற பெயரில் இது போன்ற மறைமுக வரதட்சணைகள் தான் பல இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
தொகையாகக் கொடுத்தால் தான் தப்பு, இது போன்று வேறு பெயரில் வாங்கினால் தப்பில்லை என்று சொல்ல வருகின்றார்கள். மஹர் என்று சொல்லி, பெயருக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு, சீதனம், நகை, வீடு,விருந்து என்ற பெயர்களில் பெண் வீட்டிலிருந்து இலட்சக்கணக்கில் வசூல் செய்பவர்கள் இனி ஜாக் தலைமையை அணுகலாம்.
அடுத்து, பெண் வீட்டார் விருந்தளிக்கத் தடையுள்ளதா? என்று கேட்பதுடன், த.த.ஜ.பாணியில் விருந்து என்பது உலக விஷயம் தானே? என்றும் கிண்டலுடன் கேட்கின்றார்கள்.
யூத, கிறித்தவர்களின் பாதையிலும் பாணியிலும் சென்று விட்டவர்களுக்கு குர்ஆன், ஹதீஸைச் சொல்லும் போது கிண்டல் அடிப்பது என்பது சகஜமான, சர்வ சாதாரணமான ஒன்றாகி விடும். ஏற்கனவே, பெருநாள் தொழுகையைப் பள்ளிவாசலில் தொழுவதற்குத் தடை இருக்கின்றதா? என்று இவர்கள் கேட்ட கேள்விக்குத் தான் பிப்ரவரி இதழில் இதை விளக்கி இருந்தோம்.
இபாதத் விஷயத்தில் தடையிருக்கின்றதா? என்று கேட்கக் கூடாது. உலக விஷயத்தில் தான் தடையிருக்கின்றதா? என்று கேட்க வேண்டும் என்று ஆதாரத்துடன் விளக்கியிருந்தோம்.
அதற்குப் பதில் சொல்லாத இவர்கள், விருந்து வைப்பது உலக விஷயம் தானே என்று போகின்ற போக்கில் உளறிக் கொட்டி இருக்கின்றார்கள். இங்கேயும் தங்களது கூமுட்டைத் தனத்தையும், குருட்டுச் சிந்தனையையும் வெளிப்படுத்துகின்றனர். இந்த இலட்சணத்தில் நம்மைப் பார்த்து கிண்டல் வேறு செய்துகொள்கிறார்கள்.
வழக்கமும் வணக்கமும்
வழக்கத்திற்கும் வணக்கத்திற்கும் வித்தியாசம் தெரியாததால் அல்லது தெரிந்துகொண்டே மறைப்பதால் இவர்களிடம் இந்தக் கருத்துக் குழப்பம்!
சாதாரண அடிப்படையைக் கூட விளங்காமல் இருட்டில் தடுமாறிக் கொண்டிருக்கின்றார்கள் அல்லது திட்டமிட்டு மறைக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் பேரீச்சம்பழம், கோதுமை ரொட்டி போன்றவற்றைச் சாப்பிட்டார்கள். இது அரபு நாட்டு வழக்கம். அதாவது உலக விஷயம். இதை அடிப்படையாகக் கொண்டு தமிழக முஸ்லிம்கள் சோறு சாப்பிடக் கூடாது; அது பித்அத்; காரணம் நபி (ஸல்) அவர்கள் சோறு சாப்பிடவில்லை; பேரீச்சம்பழம் சாப்பிடுவது தான் சுன்னத் என்று கூறக் கூடாது. காரணம் இவை வழக்கங்கள் ஆகும்.
எனவே வழக்கங்கள் வணக்கங்கள் ஆகாது. ஆனால் அதில் நபி (ஸல்) அவர்களின் உத்தரவு வந்து விட்டால் அது வணக்கமாகி விடும். பேரீச்சம்பழத்தைச் சாப்பிட்டு நோன்பு துறக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்களின் கட்டளை வந்து விட்டதால், அதைக் கொண்டு நோன்பு துறப்பது நபிவழியாகிவிடுகின்றது. இதே அளவுகோல் கொண்டு திருமண விருந்தை நாம் பார்க்க வேண்டும். பொதுவாக விருந்துகள் கொடுப்பது உலக வழக்கங்களில் உள்ளது தான். அதிலே நபி (ஸல்) அவர்களின் உத்தரவு வந்து விடும் போது அந்த வழக்கம் வணக்கமாகி விடும்.
திருமணம் முடித்த அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களை நோக்கி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், விருந்து கொடுக்குமாறு கட்டளை இட்டதால் அந்த விருந்து சுன்னத் ஆகி விடுகின்றது. அதாவது வணக்கமாகி விடுகின்றது. நபி (ஸல்) அவர்கள் மணமகனைப் பார்த்து விருந்து வை என்று சொல்லும் போது, அந்த விருந்தை மாப்பிள்ளை தான் வைக்க வேண்டும். அதாவது ஒருவர் திருமணம் முடித்தார் எனில் அவர் விருந்து வைப்பது நபிவழி. அது ஒரு வணக்கம். எனவே இது உலக விஷயங்களில் ஒன்றாக ஆகாது.
திருமண விருந்து தொடர்பாக இப்படி ஒரு வழி காட்டுதல் வந்த பிறகு, பெண் வீட்டார் விருந்து வைப்பதற்குத் தடை இருக்கின்றதா? என்று கேட்பதற்குக் காரணம், திருமண விருந்து என்பது இபாதத் இல்லை, உலக விஷயம் என்று இந்த மாமேதைகள் புரிந்ததால் தான்.
தங்களுக்குப் பிடிக்காதவர்களைச் சாடுவதற்கு இவர்கள் ஆயுதமாக எடுத்துக் கொண்டிருப்பது பெண் வீட்டு விருந்து என்றும் எழுதியுள்ளனர்.
அதாவது இவர்களிடம் இல்லாத ஒன்றை, இவர்களைச் சாடுவதற்காக நாம் பயன்படுத்துகின்றோம் என்ற கருத்தில் எழுதியுள்ளனர். இந்தச் சறுகல் அவர்களிடம் இருப்பதால் தான் நாம் சாடுகின்றோம். பெண் வீட்டு விருந்தை ஆதரித்து இவர்கள் சப்பைக்கட்டு கட்டுவதன் மூலம் நமது குற்றச்சாட்டை அவர்கள் ஒப்புக்கொண்டு, நாம் சொன்னது சரி தான் என்று நிரூபித்துள்ளனர்.
இப்போது அவர்கள் மறுக்கின்ற மூன்றாவது விஷயத்திற்கு வருவோம். இவர்களின் மூன்றாவது குற்றச்சாட்டு த.த.ஜ.வைச் சேர்ந்த ஒருவரை அஷ்ரஃப் பள்ளிச் செயலாளர் இங்கு நீ தொழ வரக் கூடாது என்று தடுத்தனர் என்பதாகும். இந்தக் கூற்றில் சிறிதளவும் உண்மையில்லை.
அல்ஜன்னத், பக்கம் 20,
முதல் பாரா இந்தப் பாராவில் மறுத்ததை அடுத்த பாராவில் உடனே ஒத்துக் கொள்கின்றார்கள் பாருங்கள். இனி மேற்கொண்டு இரண்டாவது ஜமாஅத் நடத்தக் கூடாது என்று கண்டித்தாரே தவிர இவர்கள் திரித்துக் கூறுவது போல தொழக் கூடாது என்று தடுக்கவில்லை.
அல்ஜன்னத், பக்கம் 20, 2வது பாரா
தொழுவதைத் தடை செய்யும் அநியாயம்
இன்று சுன்னத் வல் ஜமாஅத் எனப்படுவோர் பள்ளிவாசல்களில் தவ்ஹீதுவாதிகள் தொழுவதற்கு விதிக்கும் தடைகள் இரண்டு விதமாக அமைந்துள்ளன.
1. தனியாகவோ, அல்லது அவர்களது ஜமாஅத்தில் சேர்ந்தோ தொழக் கூடாது.
2. இரண்டாவது ஜமாஅத் நடத்தக் கூடாது.
இதில் அதிகமான பள்ளிகளில் முதல் வகையான தடை இப்போது மிக அரிதாகி விட்டது. ஏகத்துவப் பிரச்சாரம் வளர்ச்சி கண்டுள்ள மேலப்பாளையம் போன்ற ஊர்களில் கூட இப்போது இரண்டாவது ஜமாஅத் நடத்துவதற்குத் தான் தடை விதிக்கப்படுகின்றது. (அதற்கும் நமது ஜமாஅத்தினர் கட்டுப்படுவது கிடையாது என்பது வேறு விஷயம்)
குராபிகள் செய்யும் அதே வேலையைத் தான் தாங்கள் செய்ததாக அஷ்ரஃப் பள்ளி நிர்வாகம் பக்காவாக, ஆவணப்பூர்வமாக, ஆணித்தரமாக, அழுத்தம் திருத்தமாக ஒப்புக் கொள்கின்றது.
இது அக்கிரமம், அநியாயம் இல்லாமல் வேறு என்ன வகை?
சு.ஜ.காரர்கள் தங்கள் நிலைபாட்டில் தெளிவாக இருந்து கொண்டு தடுக்கின்றார்கள். இந்த வகையில் அவர்களை நாம் பாராட்டலாம். ஜாக் இயக்க வர்க்கமோ, குர்ஆன், ஹதீஸ் வழி நடக்கிறோம் என்ற போர்வையில் இந்த அக்கிரமத்தைப் பள்ளியில் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர். அது நடப்பு; இது நடிப்பு; அதாவது நயவஞ்சகத்தனம்.
அது மட்டுமின்றி இவர்கள் என்ன பேசினார்கள் என்பதற்கு நம்மிடம் ஒலிநாடாவும் இருக்கின்றது. இதற்குமேலும் இவர்கள் பொய் பேசினால் நாம் அந்த ஒலிநாடாவைவெளியிட வேண்டிய அவசியம் வரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு நாம் குறிப்பிட்டதும், இவர்கள் டேப்ரிக்கார்டர் கொண்டு வந்த மர்மம் என்ன? சண்டைக்கு இழுக்க வேண்டும் என்று திட்டமிட்டே வந்திருக்கின்றார்கள் என்று கூறி திசை திருப்பும் வேலையிலும் ஈடுபடுவார்கள் என்பதால் இது குறித்த விளக்கத்தையும் நாம் அளிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
அன்று அரவிந்த கண் மருத்துவ முகாம் நடைபெற்றதால் அந்த நிகழ்ச்சிக்காக நமது சகோதரர்களால் டேப்ரிக்கார்டர் கொண்டு செல்லப்பட்டது. தொழுது முடித்தவுடன் இந்த வாய்த் தகராறு ஏற்பட்டதால் அப்போது இவர்கள் பேசிய பேச்சு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை ஆதாரமாகக் கொண்டு தான், அவர்கள் இந்த அக்கிரமப் போக்கை, பள்ளியில் தொழுவதைத் தடுக்கும் விதமாக உதிர்த்த ஆணவ வார்த்தைகளைப் பயன்படுத்தினார்கள் என்று அடித்துச் சொல்கிறோம்.
எனவே இவர்கள் தங்கள் பதிலில் பச்சைப் பொய் சொல்கின்றார்கள் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறோம். மேற்குறிப்பிட்ட பொய்கள் அல்லாமல் வேறு சில பொய்களையும் அல்ஜன்னத்தில் அவிழ்த்து விட்டிருக்கின்றார்கள். அள்ளித் தெளித்திருக்கின்றார்கள்.
ஷிர்க்கும், பித்அத்தும், கொடி ஊர்வலமும், யானை ஊர்வலமும், சமாதி வழிபாடும் இன்னமும் நடந்து வருகின்றது. இவை எதுவும் த.த.ஜ.வினரின் கண்களுக்குத் தென்படவில்லை. இவற்றைக் கண்டித்து எந்த வகையான தடுப்புப் பிரச்சாரத்தையும் சமீப காலமாக தவ்ஹீது ஜமாஅத்தினர் மேற் கொள்ளவில்லை.
அல்ஜன்னத், பக்கம் 21
நாம் என்னவோ இவர்களின் குறைகளை ஆராயும் ஒரேயொரு தொழிலை மட்டும் செய்வதாகவும், ஷிர்க், பித்அத், கொடி ஊர்வலம், சமாதி வழிபாடு போன்றவற்றை நாம் கண்டு கொள்ளாது சும்மா இருப்பதும் போல் சித்தரித்திருக்கின்றார்கள்.
நீங்கள் உங்கள் பாட்டுக்கு, குராபிகளின் குறைகளை மட்டும் பார்த்து விட்டுச் சொல்லுங்கள், எங்கள் பக்கம் ஏன் உங்கள் பார்வையைத் திருப்புகின்றீர்கள்? எங்கள் தப்புகளை, தகிடு தத்தங்களைக் கண்டு கொள்ளாதீர்கள் என்பதைத் தான் இந்தச்செய்தியின் மூலம் இவர்கள் நம்மிடமிருந்து எதிர்பார்க்கின்றார்கள்.
குராபிகளிடம் உள்ள ஷிர்க், பித்அத்களைக் கடுமையாக விமர்சிப்போம். அவற்றை விளாசித் தள்ளுவோம். ஆனால் இவர்கள் செய்கின்ற தப்பை இரு மடங்கு விமர்சிப்போம் .காரணம், இவர்கள் குர்ஆன், ஹதீஸ் என்ற போர்வையில் அசத்தியத்தை அரங்கேற்றுகின்றனர். குராபிகள் தங்களுக்குரிய தெளிவான நிலைபாட்டில் இருந்துகொண்டு தங்களது பாதையில் செல்கின்றனர்.
குர்ஆன், ஹதீஸ் படித் தான் நடக்கின்றோம் என்று சொல்லிக் கொண்டு இந்தத் தவறுகளைச் செய்யவில்லை. இது தான் குராபிகளுக்கும் இவர்களுக்கும் உள்ள பெரிய வேறுபாடாகும். அடுத்து இவர்களின் குற்றச்சாட்டுக்கு வருவோம்.
சமீப காலமாக தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஷிர்க், பித்அத்தைக் கண்டித்து எந்தப் பிரச்சாரமும் செய்யவில்லை என்று இவர்கள் கூறுவதும் பச்சைப் பொய்யாகும். இவர்கள் தான் பெரும் பெரும் மர்கஸ் கோட்டைகளைக் கட்டிக் கொண்டு, சவூதிச் சம்பளத்திற்குக் கணக்குக் காட்டுவதற்காக சம்பிரதாயத்திற்கு ஏதோ ஒரு சில கூட்டங்கள்போட்டு விட்டு, குறட்டை விட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அல்லாஹ்வின் மகத்தான அருளைக் கொண்டு, ஜாக் செல்லாத, இது வரையிலும் போய்ச் சொல்லாத பல இடங்களில் போய் ஏகத்துவப் பிரச்சாரம் செய்து வருகின்றோம். தக்கலை, குளச்சல், புத்தன்துறை, களியக்காவிளை போன்ற ஊர்களில் உள்ளே நுழைந்திருக்கின்றோம். அங்கு சென்று உண்மையை உரைத்திருக் கின்றோம், அல்ஹம்துலில்லாஹ்.
எனவே இந்த விஷயத்திலும் இவர்கள் பொய்யைத் தான் கூறியிருக்கின்றார்கள்.
மணப்பெண் புர்கா இல்லாமல் மண மேடைக்கு அழைத்து வரப்பட்டு வீடியோ சகிதங்களுக்கிடையில் வீற்றிருக்க நமது பள்ளி இமாம் செய்யித் அலி பைஸி குத்பா கொடுத்ததைப் போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்யப்பட்டுள்ளது. இதுவும் ஒரு பித்தலாட்ட வேலையாகும். அப்படி எந்த தவறும் குத்பா நிகழ்த்தப்படும் போது நடைபெறவே இல்லை. மணப் பொருத்தம் மார்க்கப் பிடிப்பை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும். அந்த வகையில் இந்த மணமகனும் ஒரு தொழுகையாளி என்று கூறியதைத் திரித்துக் கூறியுள்ளனர்.
அல்ஜன்னத், பக்கம் 19
நாம் கூறிய எந்தத் தவறும் குத்பா நிகழ்த்தப்படும் போது நடைபெறவே இல்லை என்று கூறுகின்றனர். நடக்கவேயில்லை என்று மறுக்காமல் குத்பா நடக்கும் போது என்பதையும் சேர்த்துச் சொல்வதிலிருந்து இதையும் அவர்கள் ஒப்புக் கொள்கின்றார்கள் என்பதை அறியலாம்.
மணமகன் தொழுகையாளியாக இருப்பது மட்டும் மார்க்கப் பிடிப்பாகி விடுமா? தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். (அல்குர்ஆன் 29:45) என்று அல்லாஹ் கூறுகின்றான். வரதட்சணையை விட அருவருக்கத் தக்க,வெட்கக்கேடான காரியம் வேறு என்ன இருக்க முடியும்? இந்த மணமகனைப் போய் நமது தவ்ஹீத் ஜமாஅத்தினர் சந்தித்து, பெண் வீட்டு விருந்து வேண்டாம் என்று விளக்கமாகவும் விரிவாகவும் எடுத்துக் கூறிய பின்னரும் பெண் வீட்டு விருந்தைப் போட்டு விளாசுகின்றார் என்றால் இதற்குப் பெயர் மார்க்கப் பற்றா?
இவர்கள் சொல்கின்ற தொழுகையாளி என்ற அளவுகோலை வைத்துப் பார்த்தால் தஹஜ்ஜத் உட்பட அனைத்தும் தொழக் கூடிய தொழுகையாளிகள் தான் ஷிர்க் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்களையும் மார்க்கப் பற்றுள்ளவர்கள் என்று சொல்வார்களா?
இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக, நாளுக்கு நாள் அசத்திய சகதியில் சறுகி இறங்கிக் கொண்டிருப்பதால் இவர்களுடைய வார்த்தைகளும் சறுகிக் கொண்டே இருக்கின்றன என்பதற்கு இவை தெளிவான சான்றுகளாகும். அடுத்து இவர்கள் எழுப்பும் கேள்வி, சின்னச் சின்ன விஷயங்களுக்காக எல்லாம், நீங்கள் தவ்ஹீதுவாதிகள் இல்லை என்று கூறி வெளியே தள்ளவா முடியும்? என்பதாகும்.
வரதட்சணை போன்ற கொடுமைகளெல்லாம் சமரசம் செய்து கொள்ளக் கூடிய தப்புகள் கிடையாது. பெண் வீட்டு விருந்து போன்றவை ஜீரணிக்கக் கூடிய விஷயமல்ல! இது போன்ற திருமணங்களில் ஒரு ஜமாஅத் கலந்து கொண்டால் இந்தத் தீமையை ஒழிக்கும் பணியிலிருந்து அந்த ஜமாஅத் வெளியே போய் விடும். ஜமாஅத் என்பது ஜமாஅத்தாக இருக்க வேண்டும். தீமைகளில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. அதனால் தான் இன்று ஜாக் என்ற அமைப்பு பிறர் மனைவியை அபகரித்துச்செல்லும் காமுகர்களின் கூடாரமாகி விட்டது. அதுவும் இத்தகையவர்கள் சாதாரண உறுப்பினர் மட்டத்தில் இல்லாமல் மேல்மட்டப் பிரச்சாரகர்களாக இருக்கின்றனர். இது போன்ற கூவத்தில் குளித்துக் கொண்டு எங்களைப் பார்த்து பித்தலாட்டம் என்றால் இன்னும் உங்கள் முகத்திரையைக் கிழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்று எச்சரிக்கை செய்து வைக்கிறோம்.