அத்தியாயங்களின் பெயர்கள்

திருக்குர்ஆனில் உள்ள 114 அத்தியாயங்களும் தனித்தனி பெயர்களுடன் அச்சிடப்பட்டு வருகின்றன. இந்தப் பெயர்களில் பெரும்பாலானவற்றை அல்லாஹ்வோ, அவனது தூதரோ, அபூபக்ர் (ரலி) அவர்களோ, உஸ்மான் (ரலி) அவர்களோ சூட்டவில்லை.

உஸ்மான் (ரலி) அவர்கள் தொகுத்த மூலப் பிரதியில் எந்தவொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் அந்த அத்தியாயத்திற்குப் பெயர் எதையும் குறிப்பிடவில்லை. ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” (அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் என்பது இதன் பொருள்) என்று மட்டுமே குறிப்பிட்டார்கள். ஒரு அத்தியாயம் முடிந்து மறு அத்தியாயம் துவங்குகிறது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

ஆயினும் சில அத்தியாயங்களுக்கு மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளனர். வேறு சில அத்தியாயங்களுக்கு நபித்தோழர்கள் பெயரிட்டனர். சில அத்தியாயங்களுக்கு பிற்காலத்தில் வந்தவர்கள் பெயர் சூட்டினார்கள்.

முதல் அத்தியாயம் “அல் ஃபாத்திஹா’ என்று பரவலாக மக்களால் அறியப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த அத்தியாயத்தின் பெயரை “ஃபாதிஹதுல் கிதாப்’ (இவ்வேதத்தின் தோற்றுவாய்) எனக் குறிப்பிட்டுள்ளனர்.

(பார்க்க : புகாரீ 756, 759, 762)

இந்த அத்தியாயத்திற்கு ‘உம்முல் குர்ஆன்’ (திருக்குர்ஆனின் தாய்) என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரிட்டுள்ளனர்.

(பார்க்க : புகாரீ 4704)

“அஸ்ஸப்வுல் மஸானீ’ (திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள்) எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதல் அத்தியாயத்துக்குப் பெயரிட்டுள்ளனர்.

(பார்க்க : புகாரீ 4474, 4647, 4703, 4704, 5006)

திருக்குர்ஆனிலும் இப்பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

பார்க்க : 15:87 வசனம்

“அல்குர்ஆனுல் அளீம்’ (மகத்தான குர்ஆன்) எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த அத்தியாயத்தைக் குறிப்பிட்டுள்ளனர்.

நூல் : புகாரீ 4474, 4703, 4704, 5006

திருக்குர்ஆனிலும் இப்பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

பார்க்க : 15:87 வசனம்

இரண்டாவது அத்தியாயம் ‘அல்பகரா’ என்று கூறப்படுகிறது. இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே இந்த அத்தியாயத்தைக் குறிப்பிட்டுள்ளனர்.

(பார்க்க : புகாரீ 4008, 5010, 5040, 5051)

மூன்றாவது அத்தியாயமான “ஆலு இம்ரான்’ அத்தியாயத்தை இவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

(பார்க்க : திர்மிதீ 2802)

நான்காவது அத்தியாயத்தின் பெயர் “அன்னிஸா’ எனப்படுகிறது. இப்பெயரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த அத்தியாயத்திற்குப் பயன்படுத்தியுள்ளனர்.

(பார்க்க : முஸ்லிம் 980, 3304)

ஐந்தாவது அத்தியாயம் “அல் மாயிதா’ எனப்படுகிறது. இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரிட்டதாக நாம் காணவில்லை. ஆயினும் நபித்தோழர்கள் காலத்தில் இந்த அத்தியாயத்திற்கு ‘அல்மாயிதா’ எனக் குறிப்பிட்டுள்ளதற்கு சான்றுகள் உள்ளன.

(பார்க்க : புகாரீ 347, முஸ்லிம் 452, 601)

ஆறாவது அத்தியாயம் “அல்அன் ஆம்’ எனப்படுகிறது. இந்த அத்தியாயத்துக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு பெயரிட்டதாக ஏற்கத்தக்க ஹதீஸ்கள் இல்லை. ஆயினும் நபித்தோழர்கள் இந்த அத்தியாயத்தை ‘அல்அன்ஆம்’ என்று குறிப்பிட்டுள்ளதற்குச் சான்றுகள் உள்ளன.

(பார்க்க : புகாரீ 3524)

இது போல் 114 அத்தியாயங்களையும் ஆய்வு செய்தால் அனைத்து அத்தியாயங்களுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயர் சூட்டவில்லை என்பதை அறியலாம்.

நபித்தோழர்கள் பெயரிட்டுள்ள சில அத்தியாயங்களுக்குக் கூட பிற்காலத்தில் வேறு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.

உதாரணமாக 65வது அத்தியாயம் “தலாக்’ என்ற பெயரில் அச்சிடப்படுகிறது. ஆனால் நபித்தோழர்கள் இதை “நிஸாவுல் குஸ்ரா’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

(பார்க்க : புகாரீ 4910)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அத்தியாயங்களுக்குச் சூட்டிய பெயர்களானாலும், நபித்தோழர்கள் சூட்டிய பெயர்களானாலும் அதை அத்தியாயங்களின் துவக்கத்தில் எழுதுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தக் கட்டளையையும் பிறப்பிக்கவில்லை.

உஸ்மான் (ரலி) அவர்கள் வரிசைப்படுத்தி, தொகுத்து இன்று வரை பாதுகாக்கப்பட்டு வரும் மூலப் பிரதியில் எந்த அத்தியாயத்தின் துவக்கத்திலும் எந்தப் பெயரும் எழுதப்படவில்லை.

மிகவும் பிற்காலத்தில் தான் அத்தியாயங்களின் பெயர்களை அவற்றின் துவக்கத்தில் எழுதும் வழக்கம் வந்தது.

எனவே அத்தியாயங்களின் துவக்கத்தில் பெயர்களை எழுத வேண்டும் என்பது அவசியமில்லை.