சுய இன்பம் கூடுமா?
ஃபாஸில் ரஹ்மான்
காம உணர்வு மேலோங்கும் போது சுயமாக விந்தை வெளியேற்றுவது சுய இன்பம் எனப்படுகிறது. பரவலாக இளைஞர்களிடம் இந்த வழக்கம் காணப்படுகிறது.
இவ்வாறு செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா என்ற சர்ச்சை நடந்து வருகிறது.
இமாம் அஹ்மத் பின் ஹம்பல், இப்னு ஹஸ்ம் போன்ற மிகச் சிறந்த அறிஞர்கள் இவ்வாறு செய்வது குற்றம் அல்ல என்று கூறியதை அடிப்படையாகக் கொண்டு யூசுப் கர்ளாவி போன்றவர்கள் இது ஹலால் என்று பத்வா கொடுப்பதால் எவ்வித உறுத்தலும் இல்லாமல் இதைச் சில இளைஞர்கள் செய்து வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் விபச்சாரத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நிர்பந்தத்தைத் தான் காரணம் காட்டுகின்றனர்.
ஆனால் திருக்குர்ஆனும், நபிவழியும் இவர்களின் கருத்துக்கு எதிராகவே அமைந்துள்ளன.
தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர்.. இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள்.
திருக்குர்ஆன் 23:5,6,7
ஆண்கள் தமது மனைவியர் மூலம், அல்லது அடிமைப் பெண்கள் மூலம் தவிர மற்ற வழிகளில் கற்பைக் காத்துக் கொள்ள வேண்டும் என்றும், இவ்விரு வழிகளில் தவிர மற்ற வழிகளில் இச்சையைத் தீர்த்துக் கொள்வோர் பழிக்கப்பட்டவர்கள் என்றும், வரம்பு மீறியவர்கள் என்றும் இவ்வசனங்கள் தெளிவாக அறிவிக்கின்றன. இப்போது அடிமைப் பெண்கள் இல்லாததால் மனைவியர் மூலம் தவிர வேறு வழிகளில் இச்சையைத் தீர்த்துக் கொள்வது வரம்பு மீறிய குற்றம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
விபச்சாரத்தில் விழுந்து விடுவோம் என்று அஞ்சும் நிலை இப்போது ஏற்படுவது போலவே நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலும் இருந்தது. இதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாற்று வழியையும் நமக்குச் சொல்லித் தந்துள்ளனர்.
صحيح البخاري
1905 – حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، قَالَ: بَيْنَا أَنَا أَمْشِي، مَعَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقَالَ: كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مَنِ اسْتَطَاعَ البَاءَةَ فَلْيَتَزَوَّجْ، فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ، وَأَحْصَنُ لِلْفَرْجِ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ، فَإِنَّهُ لَهُ وِجَاءٌ»
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யார் தாம்பத்தியத்திற்குச் சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல் : புகாரி 1905
صحيح البخاري
5066 – حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ: حَدَّثَنِي عُمَارَةُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، قَالَ: دَخَلْتُ مَعَ عَلْقَمَةَ، وَالأَسْوَدِ عَلَى عَبْدِ اللَّهِ، فَقَالَ عَبْدُ اللَّهِ: كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَبَابًا لاَ نَجِدُ شَيْئًا، فَقَالَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا مَعْشَرَ الشَّبَابِ، مَنِ اسْتَطَاعَ البَاءَةَ فَلْيَتَزَوَّجْ، فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ وَأَحْصَنُ لِلْفَرْجِ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ»
அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் அல்கமா மற்றும் அஸ்வத் (ரஹ்) ஆகியோரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் (பின் வருமாறு) சொன்னார்கள்:
நாங்கள் (வசதி வாய்ப்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களிடம் இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்துகொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும் என்று சொன்னார்கள்.
நூல் : புகாரி 5066
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது ஆட்சியின் துவக்க காலத்தில் காணப்பட்ட வறுமை போல் இனி ஒரு காலத்தில் வறுமை ஏற்பட முடியாது என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். ஒரு நாளைக்கு ஒரு பேரீச்சம் பழம் கூட கிடைக்காமலும், ஒரு ஆடைக்கு மறு ஆடை இல்லாமலும் வறுமையில் இருந்தனர். இந்த அளவுக்கு வறுமை இருந்தது. பலருக்கு பள்ளிவாசலே வீடாக இருந்தது.
திருமணம் செய்வதற்கான மஹர் இன்ன பிற அடிப்படைத் தேவைகளுக்குக் கூட நபித்தோழர்களிடம் ஒன்றுமில்லாததால் திருமணம் செய்ய முடியாத நிலையில் பலர் இருந்தனர். அவ்வாறு திருமணம் செய்ய முடியாதவர்கள் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள நோன்பு எனும் ஆயுதத்தைக் கையில் எடுக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.
சுய இன்பம் செய்ய அனுமதி இருந்தால் அதைச் சொல்ல வேண்டிய பொருத்தமான இடம் இது தான். ஆனால் அவ்வாறு கூறாமல் நோன்பு நோற்று உணர்வுகளைக் கட்டுப்படுத்துமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டி விட்டனர்.
நபிகள் நாயகம் (ஸல்) காட்டிய இந்த வழியை விட சுய இன்பம் விபச்சாரத்தைத் தடுக்கக் கூடியதாக இருக்காது. உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் பயிற்சி இல்லாமல் இப்படி நடந்து கொள்பவர்கள் வாய்ப்புக் கிடைத்தால் விபச்சாரத்தில் எளிதில் விழுவதற்குத் தான் இது வழி வகுக்கும்.
நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் போர் செய்வதற்காக வெளியே செல்லும் போது மனைவியர் இல்லாததால் விபச்சாரத்தில் விழுந்து விடுவோம் என்று நபித்தோழர்கள் அஞ்சினார்கள். எனவே அவர்கள் ஆண்மை நீக்கம் செய்ய அனுமதி கேட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி மறுத்து விட்டனர்.
صحيح البخاري
5071 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي قَيْسٌ، عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كُنَّا نَغْزُو مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْسَ لَنَا نِسَاءٌ، فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، أَلاَ نَسْتَخْصِي؟ «فَنَهَانَا عَنْ ذَلِكَ»
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் நாங்கள் கலந்து கொண்டிருந்தோம். அப்போது எங்களுடன் துணைவியர் எவரும் இருக்கவில்லை. ஆகவே அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் காயடித்து (ஆண்மை நீக்கம் செய்து) கொள்ளலாமா? என்று கேட்டோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவ்வாறு செய்ய வேண்டாமென எங்களைத் தடுத்தார்கள்.
நூல் : புகாரி 5071
صحيح البخاري
5075 – حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ: كُنَّا نَغْزُو مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَيْسَ لَنَا شَيْءٌ، فَقُلْنَا: أَلاَ نَسْتَخْصِي؟ ” فَنَهَانَا عَنْ ذَلِكَ، ثُمَّ رَخَّصَ لَنَا أَنْ نَنْكِحَ المَرْأَةَ بِالثَّوْبِ، ثُمَّ قَرَأَ عَلَيْنَا: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تُحَرِّمُوا طَيِّبَاتِ مَا أَحَلَّ اللَّهُ لَكُمْ، وَلاَ تَعْتَدُوا إِنَّ اللَّهَ لاَ يُحِبُّ المُعْتَدِينَ} [المائدة: 87] “،
கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஓர் அறப்போரில் நாங்கள் கலந்து கொண்டிருந்தோம். அப்போது எங்களுடன் ஏதும் இருக்கவில்லை. ஆகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், நாங்கள் காயடித்துக் கொள்ளலாமா? என்று கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்தார்கள். அதன் பின்னர் ஆடைக்கு பதிலாகப் பெண்களை மணமுடித்துக் கொள்ள எங்களுக்கு அனுமதியளித்தார்கள் என்று கூறிவிட்டு, பின்வரும் வசனத்தை அன்னார் எங்களுக்கு ஓதிக்காட்டினார்கள்:
இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்துள்ள தூய்மையான பொருட்களை நீங்கள் விலக்கிக் கொள்ளாதீர்கள். மேலும், நீங்கள் வரம்புமீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுவோரை நேசிப்பதில்லை. (5:87)
நூல் : புகாரி 5075
குறைந்த மஹரைக் கொடுத்தாவது திருமணம் செய்ய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.
சுய இன்பம் என்பது விபச்சாரமாகவே நபித்தோழர்களால் கருதப்பட்டதால் தான் எந்த நபித்தோழரும் சுய இன்பம் செய்து கொள்ளலாமா என்று கேட்டதாகக் காண முடியவில்லை.
மார்க்கத்தில் இது தடை செய்யப்பட்டது என்றாலும் விபச்சாரத்தில் விழுந்து விடாமல் தற்காத்துக் கொள்ளும் நிர்பந்தம் ஏற்பட்டால் இவ்வாறு செய்யலாமா? என்று சிலர் வாதிடுகின்றனர். இவ்வாறு வாதிடுவது தவறாகும்.
மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட வழிகள் இல்லாவிட்டால் தான் நிர்பந்தம் என்பது ஏற்படும்.
நபித்தோழர்களுக்காவது திருமணம் முடிக்கும் வசதிகள் இல்லாமல் இருந்தது. இன்று அத்தகைய நிலை இல்லை. மேலும் குறைந்த மஹருக்கு வாழ்க்கைப்பட பெண்கள் காத்திருக்கிறார்கள். இளைஞர்கள் தக்க வயது வந்த பின்பும் பொருந்தாத காரணம் கூறி திருமணத்தைத் தள்ளிப் போட்டு விட்டு அதை நிர்பந்தம் என்று சொல்ல முடியாது.
மேலும் வெளிநாட்டுக்குச் சென்று பல வருடங்கள் தங்கினால் இல்லற இன்பம் கிடைக்காது என்பது சாதாரணமாக அனைவருக்கும் தெரியும். தெரிந்து கொண்டே இந்த நிலையை நாமாக தேடிக்கொண்டால் அது நிர்பந்தம் ஆகாது.
ஒரு ஊரில் பன்றி தவிர வேறு ஒன்றும் கிடைக்காது என்று திட்டவட்டமாகத் தெரிகிறது. கண்டிப்பாக பன்றியைத் தான் சாப்பிடும் நிலை ஏற்படும் என்று தெரிந்தால் அந்த ஊருக்குச் சென்று பன்றியைச் சாப்பிடுவது நிர்பந்த நிலையில் சேராது.
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
திருக்குர் ஆன் 2:173
மேலும் பார்க்க திருக்குர்ஆன் 5:3, 6:145, 16:115
வலியச் செல்லாத நிலையில் இருந்தால் தான் அது நிர்பந்தம்; நாமாக வலியச் சென்று அந்த நிலையை நாமே ஏற்படுத்திக் கொண்டால் அது நிபந்தம் இல்லை என்று மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன.
மேலும் இது விபச்சாரத்தைத் தடுக்காது. தூண்டவே செய்யும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
குடும்ப நிலை காரணமாக வெளிநாடு வந்து விட்டு மனைவியின் துணை இல்லாமல் இருக்கிறோம். அந்த நிலையில் இது போன்ற கெட்ட எண்ணம் தோன்றாமல் பார்த்துக் கொள்ள முடியாதா? நிச்சயம் முடியும்.
இந்த நிலை ஏன் ஏற்படுகிறது? விபச்சாரத்தைத் தூண்டும் சினிமாக்கள், பாலியல் காட்சிகளின் வீடியோக்கள் மற்றும் ஆபாசக் காட்சிகளை எவ்வித உறுத்தலும் இன்றிப் பார்ப்பது தான் இதற்கு முதல் காரணமாக உள்ளது. பொதுவாகவே இது தவிர்க்கப்பட வேண்டியவை என்றாலும் மனைவியின் துணை இன்றி இருக்கும் போது அதிகம் தவிர்க்கப்பட வேண்டும். இது போன்ற காட்சிகளைப் பார்ப்பது நம்மைத் தீய செயலில் தள்ளும் என்று உணர வேண்டும்.
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த வழிமுறையில் நோன்பு நோற்று கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.
தனிமையாக இருப்பதால் இது போன்ற எண்ணம் ஏற்பட்டால் நல்ல நண்பர்களுடன் சேர்ந்து தங்குவதன் மூலம் தீய எண்ணத்தை மாற்றலாம். வணக்க வழிபாடுகள் மற்றும் பொதுச் சேவைகளில் ஈடுபடுவதன் மூலமும் இது போன்ற செயலை விட்டு ஒழிக்கலாம்.
இப்படி சுய இன்பம் செய்த பின் ஒரு அழகான பெண்ணுடன் தனித்திருக்கும் நிலை ஒருவருக்கு ஏற்பட்டால் அப்போது கட்டுப்பாடாக இருக்க சுய இன்பப் பழக்கம் நிச்சயம் உதவவே செய்யாது. நோன்பு நோற்று நல்லொழுக்கத்தை உயிர் மூச்சாகக் கொண்டால் அது நிச்சயம் விபச்சாரத்தில் இருந்து காப்பற்றும்.
இதையும் மீறி உடலில் ரொம்ப முறுக்கு ஏறி விட்டால் தூக்கத்தில் ஸ்கலிதமாவதன் மூலம் அதற்கு அல்லாஹ் இயற்கையாக வடிகாலை அமைத்துள்ளான் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இது போன்ற செயலில் கடந்த காலத்தில் ஈடுபட்டவர்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடிக் கொள்ள வேண்டும்.
09.01.2010. 16:30 PM