தாடியைக் குறைக்கலாமா? ஓர் ஆய்வு

ஆண்கள் தாடி வைக்க வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளதால் தாடி வைப்பது நபிவழி என்பதை அறிந்து வைத்துள்ளோம்.

صحيح البخاري

5892 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ زَيْدٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” خَالِفُوا المُشْرِكِينَ: وَفِّرُوا اللِّحَى، وَأَحْفُوا الشَّوَارِبَ ” وَكَانَ ابْنُ عُمَرَ: «إِذَا حَجَّ أَوِ اعْتَمَرَ قَبَضَ عَلَى لِحْيَتِهِ، فَمَا فَضَلَ أَخَذَهُ»

இணை வைப்பவர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : புகாரி 5892

صحيح مسلم

55 – (260) حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ، أَخْبَرَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، أَخْبَرَنِي الْعَلَاءُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْقُوبَ، مَوْلَى الْحُرَقَةِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «جُزُّوا الشَّوَارِبَ، وَأَرْخُوا اللِّحَى خَالِفُوا الْمَجُوسَ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மீசையை ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள். மஜூசி (நெருப்பு வணங்கி)களுக்கு மாறு செய்யுங்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம்

தாடி வைப்பதை வலியுறுத்தி இன்னும் ஏராளமான நபிமொழிகள் உள்ளன. ஹதீஸ் மறுப்பாளர்களைத் தவிர மற்ற அனைவரும் தாடி வைப்பது நபிவழி என்பதில் ஒருமித்த கருத்தில் உள்ளனர். இது குறித்து ஆய்வு தேவையில்லை.

ஆனால் தாடியைக் குறைக்கலாமா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.

தாடி எந்த அளவுக்கு வளர்கிறதோ அந்த அளவுக்கு அப்படியே விட்டு விட வேண்டும்; அதில் சிறிதளவும் குறைக்கக் கூடாது என்று ஒரு சாரார் கூறுகின்றனர்.

தாடியை குறைக்கலாம் என்று ஆனால் மழித்துவிடக் கூடாது என்று மற்றொரு சாரார் கூறுகின்றனர்

இதில் தான் நாம் ஆய்வு செய்ய வேண்டும்.

தாடியை சிறிதளவு கூட வெட்டக் கூடாது என்ற கருத்துடையவர்கள் கீழ்க்காணும் ஹதீஸ்களை ஆதாரமாக முன் வைக்கிறார்கள்.

இந்த ஹதீஸ்களில் தாடியை வளர விடுவதைக் குறிக்கும் வெவ்வேறு சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

5893حَدَّثَنِي مُحَمَّدٌ أَخْبَرَنَا عَبْدَةُ أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ انْهَكُوا الشَّوَارِبَ وَأَعْفُوا اللِّحَى رواه البخاري

382حَدَّثَنَا سَهْلُ بْنُ عُثْمَانَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ عَنْ عُمَرَ بْنِ مُحَمَّدٍ حَدَّثَنَا نَافِعٌ عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَالِفُوا الْمُشْرِكِينَ أَحْفُوا الشَّوَارِبَ وَأَوْفُوا اللِّحَى رواه مسلم

5892حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِنْهَالٍ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ حَدَّثَنَا عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ زَيْدٍ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَالِفُوا الْمُشْرِكِينَ وَفِّرُوا اللِّحَى وَأَحْفُوا الشَّوَارِبَ وَكَانَ ابْنُ عُمَرَ إِذَا حَجَّ أَوْ اعْتَمَرَ قَبَضَ عَلَى لِحْيَتِهِ فَمَا فَضَلَ أَخَذَهُ رواه البخاري

383حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ إِسْحَقَ أَخْبَرَنَا ابْنُ أَبِي مَرْيَمَ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ أَخْبَرَنِي الْعَلَاءُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْقُوبَ مَوْلَى الْحُرَقَةِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جُزُّوا الشَّوَارِبَ وَأَرْخُوا اللِّحَى خَالِفُوا الْمَجُوسَ رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மீசையை நன்கு ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளரவிடுங்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : புகாரி 5893

மேற்கண்ட ஹதீஸ்களில் வளர விடுங்கள் என்று மொழிபெயர்த்துள்ள இடத்தில் முதல் ஹதீஸில் அஃஉபூ  أَعْفُوا என்ற அரபுச் சொல் இடம் பெற்றுள்ளது.

இரண்டாம் ஹதீஸில் أَوْفُوا அவ்ஃபூ என்ற  அரபுச் சொல் இடம் பெற்றுள்ளது.

மூன்றாம் ஹதீஸில் وَفِّرُوا வஃப்பிரூ என்ற  அரபுச் சொல் இடம் பெற்றுள்ளது.

நான்காவது ஹதீஸில் أَرْخُوا அர்கூ என்ற  அரபுச் சொல் இடம் பெற்றுள்ளது.

ஏறத்தாழ ஒரே அர்த்தம் கொண்ட இச்சொல்லில் தாடியைக் குறைக்கக் கூடாது என்ற கருத்து அடங்கியுள்ளதால் தாடியைக் குறைக்கக் கூடாது என்று வாதம் செய்கின்றனர்.

வளர விடுங்கள் என்ற இச்சொலுக்கு அறவே கத்தரிக்காமல் விட்டுவிட வேண்டும் என்பது தான் பொருளா? என்பதை நாம் ஆய்வு செய்வோம்.

வளர விடுங்கள் என்றால் எந்த அளவுக்கு நீளமாக வளர்கிறதோ அப்படியே விட்டு விடுங்கள் என்று பொருள் கொள்வதா? மீசையைக் ஒட்டக் கத்தரிப்பது போல் கத்தரிக்காமல் ஓரளவு விடுங்கள் என்று பொருள் கொள்வதா என்பதில் தான் நாம் தெளிவடைய வேண்டும்.

வளர விடுங்கள் என்ற சொல்லுக்கு பயன்படுத்தப்படும் முறையை வைத்து பொருள் செய்ய வேண்டும்.

விஷச் செடியை ஒட்ட நறுக்குங்கள்! மரங்களை வளர விடுங்கள் என்று கூறினால் அதன் பொருள் என்ன? மரங்களை சீர் செய்யக் கூடாது என்று அர்த்தம் இல்லை. அறவே அதில் கை வைக்கக் கூடாது என்றும் அர்த்தம் இல்லை. விஷச் செடிகளை எப்படி அடியோடு வெட்டினீர்களோ அந்த அளவுக்கு வெட்டிவிடாமல் வளருங்கள் என்றுதான் பொருள் கொள்வோம்.

குறிப்பிட்ட செடியின் கிளைகளை வெட்டுங்கள்! ஆனால் மரத்தை வளர விடுங்கள் என்று சொன்னால் கிளைகளை வெட்டாமல் வளர விடுங்கள் என்று பொருள் கொள்வோம். அதாவது கிளைகளைக் கூட வெட்டக் கூடாது என்று இதன் அர்த்தம் அமையும்.

இரண்டு இடங்களிலும் மரத்தை வளர விடுங்கள் என்ற சொல் இடம் பெற்றாலும் முதல் வாக்கியத்தின் படி மரத்தின் கிளைகளை வெட்டலாம். சீர் செய்யலாம் என்ற கருத்து வருகின்றது.

ஆனால் இரண்டாவது வாக்கியத்தின் படி கிளகளைக் கூட வெட்டக் கூடாது என்று பொருள் வரும்.

தாடியைப் பற்றிப் பேசும் இந்த ஹதீஸ்களில் மீசையைப் பற்றியும் கூறப்படுகிறது. மீசையைப் பெரிய அளவில் வளர்க்கும் கூட்டத்தினர் போல் நீங்கள் செய்யாமல் மீசையை ஒட்ட கத்தரியுங்கள் என்று கூறி விட்டுத் தான் தாடியை வளர விடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அதாவது மீசையை ஒட்டக் கத்தரிப்பது போல் கத்தரிக்காமல் தாடியை வளர விடுங்கள் என்று பொருள் கொள்வது சரியானது.

மேலும் பின்வரும் ஹதீஸில் தலைமுடியைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டதை நாம் எப்படி புரிந்து கொள்கிறோம் என்று சிந்தித்தால் தாடி விஷயத்தில் நாம் எப்படி புரிய வேண்டும் என்ற தெளிவு கிடைக்கும்.

مسند أحمد

5615 – حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى صَبِيًّا قَدْ حُلِقَ بَعْضُ شَعَرِهِ وَتُرِكَ بَعْضُهُ فَنَهَى عَنْ ذَلِكَ وَقَالَ: ” احْلِقُوا كُلَّهُ، أَوِ اتْرُكُوا كُلَّهُ

தலையின் ஒரு பகுதி மழிக்கப்பட்டு மறு பகுதி மழிக்கப்படாமலிருந்த ஒரு சிறுவனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்த போது அதை தடை செய்தார்கள். (மழித்தால்) முழுமையாக மழியுங்கள்! (முடியை வைக்க நினைத்தால்) முழுமையாக விட்டு விடுங்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர்  (ரலி)

நூல் : நஸாயீ

இந்த ஹதீஸில் தலை முடியை முழுமையாக விடுங்கள்! அல்லது முழுமையாக மழியுங்கள் என்று கூறப்படுகிறது.

முழுமையாக விடுங்கள் என்றால் தலை முடியை அறவே வெட்டக் கூடாது என்று நாம் புரிந்து கொள்வதில்லை. சில இடங்களில் சிறைத்து சில இடங்களில் சிறைக்காமல் விடக் கூடாது என்று புரிந்து கொள்கிறோம்.

தலை முடி தொடர்பான ஹதீஸை எப்படி நாம் புரிந்து கொள்கிறோமோ அப்படித்தான் தாடியை வளர விடுங்கள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது மழிக்காமல் விட வேண்டும்.

அதாவது தாடியை ஒட்ட நறுக்காமல் கூடுதலாக வைக்க வேண்டும் என்பதே தாடியை வளர விடுங்கள் என்ற கட்டளையின் பொருள்.

மேலும் வளர விடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்திய சொல் வேறு ஹதீஸ்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதைக் கவனித்தால் வளர விடுங்கள் என்பதன் சரியான பொருளை நாம் அறிந்து கொள்ள முடியும்.

அதாவது தலைமுடி அதிகமாக இருப்பதைக் குறிப்பிடும் போது இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. தலைமுடியை அறவே வெட்டாமல் யாரும் விட்டு வைக்க மாட்டோம். நாம் விரும்பும் அளவுக்கு மேல் வளர்ந்தால் அதை வெட்டுவோம். அப்படி வெட்டினாலும் தலைமுடியை வளர விட்டார்கள் என்று சொல்லலாம். இதைக் கீழ்க்காணும் ஹதீஸ்கள் மூலம் அறியலாம்.

4191حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ هِشَامٍ أَبُو عَبْدِ اللَّهِ حَدَّثَنَا هُشَيْمٌ عَنْ أَبِي بِشْرٍ عَنْ مُجَاهِدٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْحُدَيْبِيَةِ وَنَحْنُ مُحْرِمُونَ وَقَدْ حَصَرَنَا الْمُشْرِكُونَ قَالَ وَكَانَتْ لِي وَفْرَة رواه البخاري

கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நாங்கள் இஹ்ராம் அணிந்தவர்களாக ஹுதைபிய்யாவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். எங்களை (கஅபாவிற்குச் செல்ல விடாமல்) இணை வைப்பவர்கள் தடுத்து விட்டிருந்தனர். எனக்கு  நிறைய தலைமுடி இருந்தது.

நூல் : புகாரி 4191

மேற்கண்ட ஹதீஸில் நிறைய தலைமுடி என்று பொருள் செய்துள்ள இடத்தில் வஃப்ரத் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. தாடி விஷயத்தில் கூறப்பட்ட வஃப்பிரூ என்ற சொல்லும் வஃப்ரத் என்ற இச்சொல்லும் ஒரே வேர்ச் சொல்லிலிருந்து உருவானவை.

கஅப் (ரலி) அவர்களுக்கு நிறைய தலைமுடி இருந்தது எனக் கூறப்பட்டிருப்பதால் கஅப் (ரலி) அவர்கள் தலைமுடியை வெட்டவே இல்லை என்று விளங்க மாட்டோம்.

தாடி விஷயத்தில் இதே சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே தாடியை வெட்டவே கூடாது என்று விளங்குவது இச்சொல்லின் அகராதிப் பொருளுக்கு எதிரானதாகும்.

481 و حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ أَبِي بَكْرِ بْنِ حَفْصٍ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ وَكَانَ أَزْوَاجُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْخُذْنَ مِنْ رُءُوسِهِنَّ حَتَّى تَكُونَ كَالْوَفْرَةِ رواه مسلم

அபூ சலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய துணைவியர், காதின் சோனைவரை இருக்கும் அளவிற்குத் தம் தலை முடியிலிலிருந்து சிறிதளவை(க் கத்தரித்து) எடுத்து விடுவார்கள்.

நூல் : முஸ்லிம்

மேற்கண்ட ஹதீஸிலும் வஃப்ரத் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. காதின் சோனை வரை இருக்கும் அளவுக்கு கத்தரிக்கப்பட்ட முடிக்கு இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இதிலிருந்து இந்த வார்த்தைக்கு முடியை வெட்டவே கூடாது என்ற பொருள் இருப்பதாக வாதிடுவது தவறு என்பது தெளிவாகிறது.

தாடி தொடர்பான ஹதீஸில் வளர விடுங்கள் என்று பொருள் செய்துள்ள இடத்தில் அவ்ஃபூ என்ற வார்த்தையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்ஃபா என்ற வார்த்தை ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தலைமுடியைக் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.

அவ்ஃபூ என்ற சொல்லும் அவ்ஃபா என்ற சொல்லும் ஒரே வேர்ச்சொல்லிலிருந்து உருவானவை. இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து புரியலாம்.

252 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ قَالَ حَدَّثَنَا زُهَيْرٌ عَنْ أَبِي إِسْحَاقَ قَالَ حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ أَنَّهُ كَانَ عِنْدَ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ هُوَ وَأَبُوهُ وَعِنْدَهُ قَوْمٌ فَسَأَلُوهُ عَنْ الْغُسْلِ فَقَالَ يَكْفِيكَ صَاعٌ فَقَالَ رَجُلٌ مَا يَكْفِينِي فَقَالَ جَابِرٌ كَانَ يَكْفِي مَنْ هُوَ أَوْفَى مِنْكَ شَعَرًا وَخَيْرٌ مِنْكَ ثُمَّ أَمَّنَا فِي ثَوْبٍ رواه البخاري

அபூஜஅஃபர் (அல்பாக்கிர் முஹம்மத் பின் அலீ-ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அருகில் நானும் என் தந்தை (அலீ பின் ஹுசைன்) அவர்களும் வேறு சிலரும் இருந்தோம். அப்போது ஜாபிர் (ரலி) அவர்களிடம் குளியல் பற்றிக் கேட்டோம். ஒரு ஸாஉ (இருகை கொள்ளளவின் நான்கு மடங்கு) தண்ணீர் போதும் என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், அந்தத் தண்ணீர் எனக்குப் போதாது என்றார். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், உன்னை விட அதிக முடியுள்ளவரும் உன்னை விடச் சிறந்தவரு(மான அல்லாஹ்வின் தூதர் அவர்களு)க்கு அந்த அளவு தண்ணீர் போதுமானதாக இருந்தது எனக் கூறினார்கள். பிறகு ஒரே ஆடை அணிந்தவர்களாக எங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவித்தார்கள்.

நூல் : புகாரி 252

அதிக முடியுள்ளவர் என்று பொருள் செய்துள்ள இடத்தில் அவ்ஃபா என்ற அரபுச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்த்தைக்கு தலை முடியை வெட்டாமல் இருத்தல் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தலைமுடியை வெட்டியதற்கு ஆதாரங்கள் உள்ளன. எனவே இவ்வார்த்தைக்கு முடியை வெட்டாமல் இருத்தல் என்று பொருள் இருப்பதாக வாதிடுவது தவறு என்பதைச் சந்தேகமற உணரலாம்.

இப்னு உமர் (ரலி) அவர்களின் செயல் நபிமொழிக்கு எதிரானதா?

அஉஃபூ, அவ்ஃபூ, வஃப்பிரூ ஆகிய வார்த்தைகளைக் கொண்டு தாடியை வளர விடுங்கள் என்ற கருத்தில் வரக்கூடிய ஹதீஸ்களை இப்னு உமர் (ரலி) அவர்களே அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸை அறிவித்த இப்னு உமர் (ரலி) அவர்களே தாடியை வெட்டியுள்ளார்கள்.

5893حَدَّثَنِي مُحَمَّدٌ أَخْبَرَنَا عَبْدَةُ أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ انْهَكُوا الشَّوَارِبَ وَأَعْفُوا اللِّحَى رواه البخاري

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளர விடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி 893

صحيح البخاري 5892 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ زَيْدٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” خَالِفُوا المُشْرِكِينَ: وَفِّرُوا اللِّحَى، وَأَحْفُوا الشَّوَارِبَ ” وَكَانَ ابْنُ عُمَرَ: «إِذَا حَجَّ أَوِ اعْتَمَرَ قَبَضَ عَلَى لِحْيَتِهِ، فَمَا فَضَلَ أَخَذَهُ»

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹஜ் அல்லது உம்ராச் செய்தால் தமது தாடியைப் பிடித்துப் பார்ப்பார்கள். (ஒரு பிடிக்கு) மேலதிகமாக உள்ளதை (கத்தரித்து) எடுத்து விடுவார்கள்.

நூல் : புகாரி 5892

தாடியை வளர விடுங்கள் என்பதன் அர்த்தம் அறவே கை வைக்கக் கூடாது என்று இருக்குமானால்  அந்த ஹதீஸை அறிவிக்கும் இப்னு உமர் அவர்களே ஒரு பிடிக்கு மேல் அதிகமாக உள்ள தாடியைக் கத்தரிக்க மாட்டார்கள்.

இப்னு உமர் (ரலி) அவர்களைப் போல் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் முஹம்மது பின் கஅப் (ரலி) அவர்களும் தாடியை வெட்டலாம் என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்.

தாடியை வளர விடுங்கள் என்ற சொல்லுக்கு ஒட்ட நறுக்காமல் ஓரளவுக்கு விடுங்கள் என்ற அர்த்தம் இருப்பதால் இவர்கள் நபிவழியை மீறியவர்களாக மாட்டார்கள்.

ஒரு ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளரே அந்த ஹதீஸைப் பற்றி நன்கறிந்தவராக இருப்பார் என்று ஹதீஸ் கலையில் ஒரு விதி கூறப்படும். இந்த அடிப்படையில் பார்த்தாலும் இப்னு உமர் (ரலி) அவர்களின் செயல் தாடியை வெட்டுவது தவறில்லை என்ற நமது கருத்தை உறுதிபடுத்துகிறது.

குறிப்பாக இப்னு உமர் (ரலி) அவர்களைப் பொறுத்த வரை நபிமொழியை ஜானுக்கு ஜான் கடைப்பிடிப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர். இப்படிப்பட்ட ஒரு நபித்தோழரின் அறிவிப்புக்கும் செயலுக்கும் இடையே முரண்பாடைக் கொண்டு வருவது ஏற்புடையதல்ல.

அல்லாஹ் அழகானவன். அழகையே அவன் விரும்புகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

இதற்கேற்ப தாடியை சீர்படுத்திக் கொள்வது தான் சரியான நபிவழியாகும்.

ஹாரூன் நபியின் தாடி கையால் பிடிக்கும் அளவுக்கு இருந்ததை என்பதையும் ஆதாரமாக காட்டுகிறார்கள்.

“என் தாயின் மகனே! எனது தாடியையும், எனது தலையையும் பிடிக்காதீர்! எனது வார்த்தைக்காக காத்திராமல் இஸ்ராயீலின் மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தி விட்டீர் என்று கூறுவீரோ என அஞ்சினேன்” என்று (ஹாரூன்) கூறினார்.

திருக்குர்ஆன் 20:94

இது தாடியை கத்தரிக்க கூடாது என்பதற்கு ஆதாரமாக ஆகாது. கையால் பிடிக்கும் அளவுக்கு தாடியை வைக்கலாம் என்பதற்குத் தான் இது ஆதாரமாகும். ஒருவர் அப்படி வைக்க விரும்பினால் அதைக் கூடாது என்று நாம் சொல்ல மாட்டோம். மேலும் கையால் பிடிக்கும் அளவுக்கு இருந்தது என்பது அறவே வெட்டவில்லை என்ற கருத்தை தராது.

கையால் பிடிக்கும் அளவுக்கு விட்டு விட்டு மற்றவைகளை வெட்டியிருக்கலாம் என்ற கருத்தும் அதனுள் இருக்கிறது.

ஒருவர்  தாடியை வெட்டாமல் இருப்பதும், அதைப் பிடிக்கும் அளவுக்குப் பெரிதாக வளர்ப்பதும் அவரவரது விருப்பம். இவ்வாறு செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு என்றே நாம் கூறுகிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாடியைப் பிடிக்கும் அளவிற்கு பெரிதாக வைத்திருக்கிறார்கள் என்றால் இது அவர்களின் விருப்பம். இது போன்று நாமும் வைத்துக் கொள்ளலாம். இப்படித் தான் வைக்க வேண்டும் என்று அவர்கள் நமக்கு உத்தரவிடவில்லை என்பதால் இவ்வாறு வைக்க வேண்டும் என்று நாமும் கூற மாட்டோம்.

மேலும் அரபு அகராதி நூல்களில் தாடியை வளரவிடுங்கள் என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

لسان العرب –

وفي الحديث أَنه صلى الله عليه وسلم أَمَرَ بإعْفاء اللِّحَى هو أَن يُوفَّر شَعَرُها ويُكَثَّر ولا يُقَصَر كالشَّوارِبِ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாடியை வளரவிடுமாறு உத்தரவிட்டதாக ஹதீஸில் உள்ளது. இதன் பொருள் தாடியை அதிகமாக வைப்பதும் மீசையை குறைப்பதைப் போன்று குறைக்காமல் இருப்பதாகும்.

நூல் : லிசானுல் அரப்

அவுஃபூ என்ற சொல்லுக்கு தாடியை அறவே வெட்டக் கூடாது என்பது பொருள் இல்லை. மாறாக மீசையை ஒட்டக் கத்தரிப்பது போல் கத்தரிக்கக் கூடாது என்பதே பொருள் என்று லிஸானுல் அரப் ஆசிரியர் பொருள் கொள்கிறார்.

எனவே தாடியை வளர விடுங்கள் என்ற சொல் தாடியை அறவே குறைக்கக் கூடாது என்ற பொருளைத் தரும் சொல் அல்ல.

மழித்து விடாமலும் மீசையைப் போல் ஒட்ட நறுக்காமலும் வளர விடுங்கள் என்பதே அதன் பொருளாகும்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.