தாலிபான்களை கண்டித்து போஸ்டர் அடித்தது சரியா?
கேள்வி – 1
பாகிஸ்தானில் பள்ளிக் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தியது தாலிபான்கள்தான் என்று மீடியாகள் சொன்னதை அப்படியே நம்பி தவ்ஹீத் ஜமாத்தும் தாலிபான்களைக் கண்டித்து அறிக்கையும், போஸ்டரும் அடித்து இருப்பது எந்த அடிப்படையில் என்று கேட்கிறார்கள்? அதைப் பற்றி உங்கள் பதில் என்ன?
செல்லதுரை, செங்கோட்டை
கேள்வி – 2
தாலிபானுக்குக் கண்டன அறிக்கை போஸ்டர் அடிக்கும் நேரத்தில், இது தாலிபான்கள்தான் செய்தார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் நம்மிடையே உள்ளது? கீஜிசி விமானத் தாக்குதலைக் கூட தாலிபான்கள் செய்திருக்க மாட்டார்கள் எனப் பிரச்சாரம் செய்த நமது ஜமாஅத் இந்த விசயத்தில் வெறும் தொலைக்காட்சி செய்திகளை மட்டும் வைத்து எப்படி நம்புகிறது?ஒருவேளை ஊடகங்கள் சொல்வது போல பாகிஸ்தான்தான் தாலிபான்களுக்கு ஆதரவு அளிக்கும் நாடு என வைத்துக் கொண்டால் தனக்கு ஆதரவு தரும் நாட்டிற்கெதிரான நாச வேலைகளில் ஈடுபடும் அவசியம் என்ன?
மன்சூர் அஹ்மத், மதுரை
பதில் :
பொதுவாக நம் சமுதாயத்தில் ஒரு நோய் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இஸ்லாத்தின் பெயரைக் கெடுக்கும் காரியங்கள் எது நடந்தாலும் எங்கே நடந்தாலும் இது யூதர்களின் சதி என்றும், அமெரிக்காவின் சதி என்றும் சொல்வது தான் அந்த நோய்.
இந்தச் சம்பவம் கூட யூதர்கள் செய்தது தான் என்று முகநூல்களில் மூடத்தனமாகப் பரப்பப்பட்டதை நாம் பார்த்தோம்.
எவ்வித ஆதாரமும் இல்லாமல் முஸ்லிம்கள் மீது பழி சுமத்தப்பட்டால் இதுபோல் சொல்வதில் நியாயம் உள்ளது.
உலக வர்த்தக மையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தாலிபான்கள் செய்தார்கள் என்பதற்கு இன்று வரை அமெரிக்கா எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. அதனால் இதை முஸ்லிம்கள் செய்தார்கள் என்று கூறுவதில் நாம் சந்தேகம் கொள்ளலாம்.
இந்தியாவில் நடந்த எத்தனையோ குண்டு வெடிப்புகள் முஸ்லிம்கள் மீது போடப்பட்டன. அதற்கு எந்த ஆதாரமும் இருக்கவில்லை. இதை முஸ்லிம்கள் செய்யவில்லை; இந்துத்துவா கும்பல்தான் செய்திருப்பார்கள் என்று நாம் சந்தேகப்படலாம்.
(நாம் சந்தேகப்பட்டது போலவே பல குண்டு வெடிப்புகளையும் சங்பரிவாரத்தின் உத்தரவுப்படி சுவாமி அசிமானந்தாவும், பெண் சாமியார் பிரக்யா சிங் உள்ளிட்ட இந்து பயங்கரவாதிகளும் தான் செய்தனர் என்பது பின்னர் நிரூபணமானது.)
கோவை குண்டு வெடிப்பைப் பற்றியும் முஸ்லிம்கள் செய்யவில்லை என்று சொல்ல முடியுமா? இதை முஸ்லிம்களில் சிலர் தான் செய்தனர் என்பது கோவையில் உள்ள ஒவ்வொரு முஸ்லிமுக்கும் தெரியும்.
கோவை குண்டு வெடிப்பு குறித்தும் இவ்வாறு நாம் கூறினால் ஒட்டு மொத்த சமுதாயமும் கூட்டுக் கள்ளன்கள் என்ற கருத்து தான் மக்கள் மத்தியில் பதிவாகும்.
இவ்வாறு செய்த முஸ்லிம்களை நாம் கடுமையாகக் கண்டித்தால் மட்டும்தான் இஸ்லாமும் இதை ஆதரிக்கவில்லை. முஸ்லிம்களும் ஆதரிக்கவில்லை என்ற உண்மையைப் பதிவு செய்ய முடியும்.
பாகிஸ்தானில் உள்ள தாலிபான்களை பாகிஸ்தான் அரசு ஆதரிக்கவில்லை. மாறாக பாகிஸ்தான் எல்லைப் புறத்தில் செயல்பட்டு வரும் தாலிபான்களுக்கு எதிராகப் பல மாதங்களாக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. விமான தாக்குதல் நடத்தி தாலிபான் தலைவர்களைக் கொன்று வருகிறது என்பதை நாம் அன்றாடம் கண்டு வருகிறோம். அவ்வாறு கொல்லப்படும் போது பொதுமக்களும் சிறுவர்களும் கொல்லப்படுகிறார்கள் என்பதையும் அறியலாம்.
இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தினரின் பிள்ளைகள் கல்வி கற்பதற்காக அரசால் நடத்தப்பட்டு வரும் பள்ளிக் கூடத்தில் படிக்கும் பருமவமடையாத சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
தாக்குதல் நடந்தவுடன் பாகிஸ்தான் ராணுவம் எங்கள் மீது தாக்குதல் நடத்தி, எங்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொன்றதால் அந்த வலியை உணர வைக்க நாங்கள் தான் நடத்தினோம் என்று தஹ்ரீகே தாலிபான் அறிவிக்கிறது.
அதுமட்டுமின்றி, தாக்குதல் நடத்திய ஆறுபேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் யூதர்களோ, கிறித்தவர்களோ, இந்துக்களோ அல்ல. ஆறு பேறும் முஸ்லிம்கள்.
ஆறுபேரும் முஸ்லிம்கள் என்பதும், ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள் என்பதும் தெளிவாகத் தெரியும் போது இதை தாலிபான்கள் செய்யவில்லை என்றால் பாகிஸ்தான் தப்லீக் ஜமாஅத் செய்ததா? பொது மக்கள் செய்தார்களா?
இவர்களைத் தவிர வேறு எவரும் இதைச் செய்திருக்க முடியாது என்ற நிலையிலும் தாலிபான்கள் செய்யவில்லை என்று முட்டுக் கொடுத்தால் முஸ்லிம்கள் செய்யவில்லை என்று ஆகாது.
தாலிபான்களைக் காப்பாற்றுவதாக எண்ணிக் கொண்டு தாலிபான் அல்லாத முஸ்லிம்கள் செய்தார்கள் என்ற கருத்தைச் சொல்லாமல் இவர்கள் சொல்கிறார்கள்.
தாலிபான்களாக இல்லாத சாதாரண முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் தான் என்ற கருத்து பரவுவதில் இவர்கள் சந்தோசப்படுகிறார்கள்.
இடையில் சிலர் புகுந்து கொண்டு ஆப்கான் தாலிபான்கள் வேறு! பாகிஸ்தான் தாலிபான்கள் வேறு என்று கூறி தங்கள் மேதாவிலாசத்தைக் காட்டிக் கொள்கிறார்கள். தாலிபான்கள் இரு வகையினராக உள்ளனர் என்ற தங்கள் புலமையைக் காட்டுவதுதான் இவர்களின் நோக்கமாக இருக்க முடியும்.
ஒரு கொடூரச் சம்பவம் நடக்கிறது. இதனால் இஸ்லாம் குறித்து தவறான கருத்து மிக வேகமாகப் பரவுகிறது. இந்த நேரத்தில் அதை நீக்குவது மட்டுமே ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும்.
இந்த நேரத்தில் இதை ஆப்கான் தாலிபான்கள் செய்யவில்லை; பாகிஸ்தான் தாலிபான்கள்தான் செய்தார்கள் என்று சுவரொட்டி ஒட்டினால் அதைக் கண்டனமாக மக்கள் கருத மாட்டார்கள். அயோக்கியத் தனமாகவே கருதுவார்கள். ஒரு கொடூர சம்பவம் நடக்கும் நேரத்தில்கூட கண்டிப்பது போன்ற தோற்றத்தில் தாலிபான்களை முஸ்லிம்கள் ஆதரிக்கிறார்கள் என்று தான் கருதுவார்கள்.
கொந்தளிப்பான நேரத்தில் தனது புலமையை வெளிப்படுத்துபவன் உண்மையில் முட்டாளாகத்தான் கருதப்படுவான்.
மேலும் இந்தத் தாக்குதலில் ஆப்கான் தாலிபான்களுக்குச் சம்மந்தமில்லை என்றாலும் அவர்களுக்கு முட்டுக் கொடுக்கும் அவசியம் நமக்கு இல்லை. இவர்களும் இஸ்லாத்தின் எதிரிகள் தான். ஏனெனில் ஆப்கான் தாலிபான்களும் ஆப்கானில் அப்பாவிகளையும் பொது மக்களையும் கொன்று குவித்து வருகின்றனர். இஸ்லாத்தின் வரம்புகளை மீறி இஸ்லாத்தின் பெயரைக் கெடுக்கும் இந்தக் கும்பலைக் காப்பாற்றும் அவசியம் என்ன வந்தது?
இந்த நோய் எந்த அளவுக்கு முற்றிப் போயுள்ளது என்றால் ஊரறிய உலகறிய அன்னிய நாட்டு தனி நபரைப் பிடித்து கை கால்களைக் கட்டி கத்தியால் கழுத்தை அறுக்கும் கொடூரக் காட்சிகளை வீடியோவில் பதிவு செய்து ஐஎஸ் என்ற இஸ்லாத்தின் எதிரிகள் வெளியிடுகிறார்கள்.
இதைப் பார்க்கும் முஸ்லிம்கள் இந்த அயோக்கியர்களைக் கடுமையாக கண்டிக்க வேண்டும். இதை விடுத்து பலர் மவுனம் காக்கின்றனர். சிலர் நியாயப்படுத்துகின்றனர். மற்றும் சிலர் ஐஎஸ் செய்யவில்லை என்று முட்டுக் கொடுக்கின்றனர்.
இது ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் களங்கத்தை ஏற்படுத்தும்.
சம்மந்தப்பட்டவர்கள் நாங்கள் செய்யவில்லை என்று மறுக்காத போதும் இப்படிச் சொல்பவர்கள் தாலிபான்களை விட பயங்கரவாதிகள் என்பதுதான் நமது கருத்து.
26.12.2014. 22:20 PM