தாமதமாக வருபவர் ரக்அத்தை எப்போது அடைய முடியும்?

ஜமாஅத் தொழுகைக்கு தாமதமாக வருபவர் இமாம் எந்த நிலையில் இருக்கும் போது சேர்ந்தால் அவருக்கு ரக்அத் கிடைக்கும்?

தொழுகையில் ருகூஃவிலிருந்து இமாம் நிமிர்வதற்கு முன்பு இணைந்துவிட்டால் அந்த ரக்அத்தை அடைந்து விடலாம்.

இக்கருத்தில் பலவீனமான நபிமொழிகள் இருந்தாலும் பின்வரும் நபிமொழி ஆதாரப்பூர்வமானதாகும்.

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ قَالَ حَدَّثَنَا هَمَّامٌ عَنْ الْأَعْلَمِ وَهُوَ زِيَادٌ عَنْ الْحَسَنِ عَنْ أَبِي بَكْرَةَ أَنَّهُ انْتَهَى إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ رَاكِعٌ فَرَكَعَ قَبْلَ أَنْ يَصِلَ إِلَى الصَّفِّ فَذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ زَادَكَ اللَّهُ حِرْصًا وَلَا تَعُدْ رواه البخاري

அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ருகூஉ செய்து கொண்டிருந்த போது நான் சென்று வரிசையில் சேர்வதற்கு முன்பே ருகூஉ செய்து விட்டேன். இது குறித்து நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் உனது ஆர்வத்தை அதிகப்படுத்துவானாக! இனிமேல் அப்படிச் செய்யாதீர் என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 783

இந்தச் செய்தியில் ருகூவை அடைந்தால் அந்த ரக்அத்தை அடைந்து விடலாம் என்பதற்கான ஆதாரம் அடங்கியுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் போது ருகூஃவில் இருக்கிறார்கள். அப்போது, அபூ பக்ரா (ரலி) அவர்கள் வேகமாக வந்து ஸஃப்பில் இணைவதற்கு முன்பாகவே ருகூஃவு செய்துவிட்டு பின்பு ஸஃப்பில் வந்து இணைந்திருக்கிறார்.

ருகூஃவில் இணைந்து விட்டால் ரக்அத் கிடைத்துவிடும் என்பதால் தான் அவர் இவ்வாறு செய்துள்ளார் என்பது தெரிகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர் வேகமாக ஓடி வந்ததைத் தான் இவ்வாறு இனிமேல் செய்யாதே என்று சொல்கின்றார்கள்.

மேலும், ருகூஃவில் இணைந்த அவருக்கு ரக்அத் தவறியிருக்குமேயானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த ரக்அத்தை எழுந்து தொழக் கட்டளையிட்டிருப்பார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்அவ்வாறு செய்யவில்லை என்பதிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதற்கு ஒப்புதல் வழங்கிவிட்டார்கள் என்பதும் தெரிகிறது.

அல்லாஹ் உனது ஆர்வத்தை அதிகப்படுத்துவானாக! என்று அவருக்கு அல்லாஹ்வின் தூதர் கூறியதிலிருந்து அவர் ரக்அத்தை அடைவதற்காக வேகமாக வருகிற ஆர்வத்தைப் பற்றித்தான் இந்தச் செய்தி பேசுகிறது என்று புரிந்து கொள்ளலாம்.

ருகூவை அடைந்தால் அந்த ரக்அத் நமக்குக் கிடைத்துவிடும் என்பது இந்தச் செய்தியிலிருந்து தெளிவாகிறது.