கட்டாய சேமிப்பை தவறாக முதலீடு செய்தால்?

என் சகோதர்ர் ஆஸ்திரேலியாவில் பணிபுரிகிறார். அந்த நாட்டுச் சட்டப்படி சம்பளத்தில் ஒன்பது சதவிகிதத்தைப் பிடித்துக் கொண்டு தான் தருவார்கள். அந்தப் பணம் 62 வயதில் தான் கிடைக்கும். அதற்கு முன் இறந்து விட்டால் குடும்பத்தினருக்குக் கிடைக்கும். இந்தப் பணத்தை வியாபாரத்தில் முதலீடு செய்வதாகக் கூறுகிறார்கள். அந்த வியாபரம் என்ன? அது மார்க்கத்தின் அனுமதிக்கப்பட்டதா இல்லையா என்பது நமக்குத் தெரியாது. இந்தப் பணத்தைப் பெற்றுக் கொள்வது கூடுமா? 62 வயதில் திரும்பத்தரும் போது நம்மிடம் பிடித்த பணம் கிடைத்து விடும். கூடுதலாகவும் கிடைக்கும். இது கூடுமா?

அப்துல் கஃபூர்

பதில்

நம்முடைய பணத்தை நாம் ஒருவரிடம் ஒப்படைத்திருக்கும் போது நம்மிடம் கேட்காமல் அவர் தொழிலில் பயன்படுத்தினால் அதில் நமக்கு எந்தச் சம்மந்தமும் இல்லை. ஒருவரிடம் அமானிதமாக நாம் கொடுத்து வைத்திருக்கும் பணத்தை நமக்குச் சொல்லாமலே எடுத்து ஹராமான தொழிலில் அவர் பயன்படுத்தினால் அதனால் நமக்கு குற்றம் வராது. அதில் நாம் பங்காளியாக மாட்டோம்.

நீங்கள் சொல்லும் இந்த நிலை அதை விட இலேசானதாகும். ஏனெனில் உங்களால் அந்தப் பணத்தைக் கொடுக்காமல் இருக்க முடியாது என்று சட்டம் உள்ளதால் நிர்பந்தமான நிலையாக உள்ளது.

உங்கள் பணத்தை அவர்கள் தொழிலில் முதலீடு செய்துள்ளதாக சொன்னாலும் அதில் அவர்கள் உங்களைப் பங்காளியாக ஆக்கவில்லை. பங்காளியாக ஆக்கியிருந்தால் அதில் நட்டம் ஏற்படும் போது அதை உங்கள் மீது சுமத்த வேண்டும். அவ்வாறு செய்யாமல் நீங்கள் கொடுத்த பணம் உங்களுக்குத் திரும்பக் கிடைத்து விடுவதால் அந்தத் தொழில் நீங்கள் பங்காளி அல்ல என்பது உறுதியாகிறது.

எனவே நீங்கள் தாராளமாக அந்தச் சேமிப்புப் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். அவர்கள் கூடுதலாக தருவது வட்டி என்ற அடிப்படையில் இருந்தால் கூடுதலாகத் தருவதை மட்டும் மறுத்து விட வேண்டும். பண மதிப்பைக் கருத்தில் கொண்டு அல்லது பல காலம் உழைத்துக் கொடுத்ததைக் கவனத்தில் கொண்டு ஊக்கப்படுத்தும் வகையில் கொடுத்தால் கூடுதலாகத் தருவதையும் பெற்றுக் கொள்ளலாம்.

06.01.2012. 23:38 PM