தீமைக்குப் பயன்படும் பொருளை விற்கலாமா?

தீமையான காரியத்திற்கு உதவி செய்யக் கூடாது என்று அல்லாஹ் கூறுகிறான். எனவே பூஜைக்காக பூ விற்பது, தாயத்து விற்பது மற்றும் பேங்கிற்காகக் கட்டடம் கட்டித் தருவது போன்ற விஷயங்கள் மாக்கத்தில் கூடுமா? கூடாதா?

பதில்:

எந்தத் தீய காரியத்திற்கும் ஒரு முஸ்லிம் துணை போகக் கூடாது என்று இஸ்லாம் கூறுகின்றது.

‘நீங்கள் நல்ல காரியங்களுக்கும், இறையச்சத்திலும், ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! தீய காரியத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளக் கூடாது.

திருக்குர்ஆன் 5:2

தீமையான காரியங்களுக்கு உதவக் கூடாது என்பதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் தீமையான காரியங்களுக்கு உதவுவது என்பதைப் புரிந்து கொள்வதில் தான் பலருக்குக் குழப்பம் உள்ளது.

தீமைக்குத் துணை போகக் கூடாது என்று கூறும் மேற்கண்ட வசனத்தில் நன்மைக்கு உதவுமாறும் கூறப்படுகிறது. நன்மைக்கு உதவுதல் என்பதை எவ்வாறு புரிந்து கொள்கிறோமோ அவ்வாறு தான் தீமைக்குத் துணை செய்தல் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவர் பள்ளிவாசல் கட்ட எண்ணுகிறார். அதற்கான வேலையிலும் ஈடுபடுகிறார். பள்ளிவாசல் கட்டுவது நல்ல காரியம் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தக் கட்டடத்திற்குத் தேவையான பொருட்களை ஒரு வணிகரிடம் அவர் வாங்குகிறார். பள்ளிவாசல் கட்டும் நல்ல பணிக்காக அந்த வணிகர் தமது சரக்குகளை விற்றதால் அவர் நன்மைக்குத் துணை செய்தவராக முடியாது. ‘இவர் தான் பள்ளிவாசல் கட்ட உதவியவர் என்று அவரைப் பற்றி நாம் குறிப்பிடுவதில்லை.

அந்த வணிகர் இலவசமாக அவற்றை வழங்கினால் அல்லது பள்ளிவாசல் கட்டும் பணி என்பதற்காக மற்ற எவருக்கும் விற்பதை விட சலுகை விலைகளில் வழங்கினால் மட்டுமே அவர் பள்ளிவாசல் கட்டுமானப் பணிக்கு உதவினார் என்போம்.

மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட பொருளை நாம் விற்பனை செய்கிறோம். நம்மிடம் அப்பொருளை வாங்கியவர் தீய காரியத்துக்குப் பயன்படுத்துகிறார் என்று வைத்துக் கொள்வோம். இது தீமைக்குத் துணை புரிவதாக ஆகாது.

ஒரு சிலை நிறுவுவதற்காக அதே வணிகரிடம் கட்டுமானப் பொருட்களை சிலை அமைப்பவர்கள் வாங்குகின்றனர். அந்த வணிகர் இலவசமாக அப்பொருளைக் கொடுத்தாலோ, அது சிறந்த பணி என்று கருதி விலையில் சலுகை அளித்தாலோ அப்போது அவர் தீமைக்குத் துணை செய்தவராவார். அவ்வாறு இல்லாமல் மற்ற பணிகளுக்கு விற்பது போல் அவர் விற்பனை செய்தால் அவர் தீமைக்குத் துணை போனவராக மாட்டார்.

‘நன்மையான காரியத்துக்கு உதவுதல் என்பதில் உதவுதல் என்பதை எந்தப் பொருளில் நாம் விளங்குகிறோமோ அதே பொருளில் தான் தீமையான காரியங்களுக்கு உதவுதல் என்பதிலும் உதவுதல்’ என்பதற்குப் பொருள் கொள்ள வேண்டும்.

ஏனெனில் தீமைக்கு உதவக் கூடாது என்று சொல்வதற்கு ஆதாரமாகச் சமர்ப்பிக்கப்படும் 5:2 வசனம் தான் நன்மைக்கு உதவ வேண்டும் எனவும் கூறுகின்றது. இரண்டிலும் ஒரே வார்த்தை தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் முக்கியமான நிபந்தனையை நாம் கவனத்தில் கொள்ள வைக்க வேண்டும். விற்பனை செய்யப்படும் பொருள் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். பூவைப் பயன்படுத்துவதற்கு இஸ்லாம் தடை விதிக்கவில்லை. எனவே பூவை நாம் எவருக்கும் விற்கலாம். வாங்குபவர் அதைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு நாம் பொறுப்பாளியாக மாட்டோம்.

இலவசமாகவோ, மற்ற காரியங்களை விட சலுகை விலையிலோ வழங்கும் போது தான் எந்தக் காரியங்களுக்குப் பயன்படுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.

ஒரு ஜவுளிக் கடையில் துணி விற்பனை செய்யும் போது வாங்கும் மனிதன் அதனைக் கற்சிலைக்கு அணிவிப்பதற்காக பயன்படுத்துவானோ, வேறு எதற்கும் பயன்படுத்துவானோ என்று நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. தேங்காய் வியாபாரி, தன்னிடம் வாங்கப்படும் தேங்காய்கள் சிலைகள் முன்னே உடைக்கப்படுமோ என்று புலன் விசாரணை செய்ய வேண்டியதில்லை.

صحيح البخاري

2068 – حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ: ذَكَرْنَا عِنْدَ إِبْرَاهِيمَ، الرَّهْنَ فِي السَّلَمِ، فَقَالَ: حَدَّثَنِي الأَسْوَدُ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اشْتَرَى طَعَامًا مِنْ يَهُودِيٍّ إِلَى أَجَلٍ، وَرَهَنَهُ دِرْعًا مِنْ حَدِيدٍ»

(போர்க்களத்தில் அணிந்து கொள்ளும்) தமது கவசத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் அடகு வைத்து உணவுகளை வாங்கினார்கள்.

நூல் :புகாரி 2068, 2096, 2200, 2251, 2252, 2386, 2509, 2513, 2916, 4467

அந்தக் கவசம் அந்த யூதரால் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கவலைப்படவில்லை.

உண்ணவும், பருகவும், பயன்படுத்தவும், வைத்திருக்கவும் எப்பொருட்களுக்கு இஸ்லாம் தடை விதித்து விட்டதோ அவற்றை மட்டுமே விற்கலாகாது. நன்மை தீமை இரண்டு வழிகளிலும் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ள பொருட்களை நாம் விற்க எந்தத் தடையும் இல்லை. வாங்குபவன் தீமைக்குப் பயன்படுத்துவதற்கு நாம் பொறுப்பாளியாக முடியாது.

எந்த நிலையிலும் தாயத்து விற்கலாகாது. அதில் நன்மைக்குப் பயன்படுதல் என்ற அம்சம் கிடையாது. அது முழுக்க முழுக்க பித்தலாட்டமாகும்.

எந்தப் பொருளை உண்ணவோ, பருகவோ, பயன்படுத்தவோ இறைவன் தடை விதித்து விட்டானோ அவற்றை விற்பதும் கூடாத ஒன்றாகும்.

صحيح البخاري

2223 – حَدَّثَنَا الحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، قَالَ: أَخْبَرَنِي طَاوُسٌ، أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، يَقُولُ: بَلَغَ عُمَرَ بْنَ الخَطَّابِ أَنَّ فُلاَنًا بَاعَ خَمْرًا، فَقَالَ: قَاتَلَ اللَّهُ فُلاَنًا، أَلَمْ يَعْلَمْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «قَاتَلَ اللَّهُ اليَهُودَ حُرِّمَتْ عَلَيْهِمُ الشُّحُومُ، فَجَمَلُوهَا فَبَاعُوهَا»

யூதர்கள் மீது கொழுப்பை இறைவன் ஹராமாக்கியிருந்தான். அவர்கள் அதை விற்று அதன் கிரயத்தை உண்ணலானார்கள். அவர்களை அல்லாஹ் அழிப்பானாக! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : உமர் (ரலி)

நூல்: புகாரி 2223, 2234, 2236, 3460, 4633

سنن أبي داود

3488 – حدَّثنا مُسَدَّدٌ، أن بِشر بن المُفَضلِ وخالدَ بنَ عبد الله الطّحان حدثاهم -المعنى- عن خالد الحذاء، عن بركة -قال مسدَّدٌ في حديثه: عن خالد بن عبد الله: عن بركة أبي الوليد، ثم اتفقا- عن ابنِ عباس، قال: رأيت رسولَ الله -صلَّى الله عليه وسلم- جالساً عند الركن، قال: فرفع بصره إلى السماء فَضَحِكَ، فقال: “لَعَنَ الله اليهودَ! -ثلاثاً- إن الله حرم عليهم الشحومَ فباعُوها وأكلوا أثمانها، وإن الله إذا حرَّم على قومٍ أكلَ شيءٍ حَرّم عليهم ثمنَه” ولم يقل في حديث خالد بن عبد الله الطّحّان: رأيت، وقال: “قاتلَ الله”

ஒரு சமுதாயத்திற்கு ஒரு பொருளை உண்பதற்கு இறைவன் தடுத்து விட்டால் அதை வியாபாரம் செய்வதையும் தடுத்து விடுகின்றான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),

நூல்கள்: அபூதாவூத், அஹ்மத்

صحيح البخاري

2237 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ ثَمَنِ الكَلْبِ، وَمَهْرِ البَغِيِّ، وَحُلْوَانِ الكَاهِنِ»

நாய் விற்ற கிரயத்தையும், விபச்சாரத்தின் கூலியையும், சோதிடன் பெருகின்ற பொருளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.

அறிவிப்பவர் : உக்பா இப்னு அம்ரு (ரலி)

நூல்: புகாரி 2237, 2282, 5346, 5761

வட்டி தடுக்கப்பட்டதை நாம் அறிவோம். முற்றிலும் தடுக்கப்பட்ட வட்டி போன்ற காரியங்களுக்காக நமது கட்டடத்தை வாடகைக்கு விடக் கூடாது. நமக்குச் சொந்தமான இடத்தை விபச்சார விடுதி நடத்த நாம் வாடகைக்கு விட மாட்டோம். விபச்சாரம் தீமை என்று தெரிந்த அளவுக்கு வட்டி தீமை என்பதை மக்கள் உணரவில்லை. இதன் காரணமாகவே பள்ளிவாசல் கட்டடங்களைக் கூட வங்கி நடத்த வாடகைக்கு விடும் அவலத்தைப் பார்க்கிறோம்.

ஆனால் விபச்சாரத்தை விட வட்டி இஸ்லாத்தில் கொடிய குற்றமாகும்.