தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன
கேள்வி
பாஜக அதிகமான இடங்களை வென்றாலும் அவர்களுக்குக் கிடைத்தது 30 சதவிகித வாக்குகள் தான். எழுபது சதவிகித மக்கள் பாஜகவுக்கு எதிராகவே வாக்களித்துள்ளனர். எனவே இது பெரிய வெற்றியல்ல என்று கூறுவது சரியா?
சனாவுல்லா, அய்யம்பேட்டை
பதில்
இதற்கு முன் நடந்த தேர்தல்களில் ஆட்சிக்கு வந்தவர்கள் ஐம்பது சதவிகிதத்துக்கு மேல் பெற்று ஆட்சிக்கு வந்து இருந்து பாஜக மட்டும் 30 சதவிகித வாக்குகளில் அதிக இடங்கள் பெற்று இருந்தால் தான் இந்த வாதம் சரியாக இருக்கும்.
நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்கள் அனைத்திலும் இது போன்ற நிலைதான் இருந்து வந்துள்ளது. நாளை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களும் ஐம்பது சதவிகிதத்துக்குக் குறைவாகப் பெற்றுத்தான் ஆட்சிக்கு வருவார்கள். எனவே இந்த வாதத்தை வைத்து நம்மை நாமே போலியாக ஆறுதல் படுத்திக் கொள்ளக்கூடாது. பாஜக இதற்கு முன்னர் 30 சதவிகித வாக்குகளைப் பெறவில்லை. இப்போது பெற்றுள்ளது என்ற உண்மையை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில் நமது நாட்டில் பிரிட்டன் ஜனநாயகத்தின் அடிப்படையிலான தேர்தல் முறை உள்ளது இது மாறினால் பாஜக இவ்வளவு அதிக இடங்களில் வெற்றி பெற்று இருக்க முடியாது. இதற்கு முன் காங்கிரஸ் கட்சியும் பெரிய வெற்றியைக் கண்டிருக்க முடியாது.
இது குறித்து 2011 ஆம் ஆண்டு உணர்வு இதழில் நாம் எழுதியதன் ஒரு பகுதியை இங்கே எடுத்துக் காட்டுகிறோம்.
நமது இந்தியாவில் உள்ள தேர்தல் அமைப்பு பிரிட்டன் நாட்டில் உள்ள தேர்தல் முறையாகும். பிரிட்டன் ஜனநாயக முறை என்ற இந்தத் தேர்தல் முறை ஒரு சூதாட்டம் போன்றதாகும். பெரும்பான்மை மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஆட்சி அமைவதற்காகத் தான் ஜனநாயகம் தேவைப்படுகிறது. ஆனால் பிரிட்டன் ஜனநாயகத்தில் சிறுபான்மை மக்களின் விருப்பத்திற்கேற்ப பல நேரங்களில் ஆட்சி அமைந்து விடுவதுண்டு.
உதாரணமாக ஒரு தொகுதியில் ஆயிரம் வாக்காளர்கள் இருப்பதாகவும் அந்தத் தொகுதியில் ஐந்து பேர் போட்டி இடுகிறார்கள் என்றும் வைத்துக் கொள்வோம்.
ஏ என்பவர் 210 வாக்குகள் வாங்குகிறார்.
பி என்பவர் 200 வாக்குகள் வாங்குகிறார்.
சி என்பவர் 200 வாக்குகள் வாங்குகிறார்.
டி என்பவர் 200 வாக்குகள் வாங்குகிறார்.
இ என்பவர் 190 வாக்குகள் வாங்குகிறார்.
ஆயிரம் ஒட்டுக்கள் மேற்கண்டவாறு பிரிந்தால் ஏ என்பவர் வெற்றி பெற்றவர் என்று நம்முடைய நாட்டில் உள்ள பிரிட்டன் ஜனநாயகத் தேர்தல் கூறுகிறது. ஆனால் இவர் 790 பேரின் அதிருப்தியைப் பெற்றுள்ளார். 210 பேரின் ஆதரவை மட்டுமே பெற்றுள்ளார். இவர் பெரும்பான்மை மக்களின் விருப்பத்தின்படி தேர்வு செய்யப்படவில்லை என்பது தான் உண்மை.
இந்த அடிப்படையில் இது போலி ஜனநாயகமாகவும், மறைமுக சூதாட்டமாகவும் உள்ளது. இரண்டு பேர் மட்டும் போட்டியிடும் போது தவிர மற்ற சந்தர்ப்பங்களில் இது போல் நடப்பதை நாம் காணலாம்.
மேலும் இந்தத் தேர்தல் முறை அனைத்து மக்களின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் இல்லாமல் போய் விடுகிறது.
ஒரு மாநிலத்தில் 100 தொகுதிகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரம் வாக்காளர் என்றும் வைத்துக் கொள்வோம்.
ஒவ்வொரு தொகுதியிலும்
ஏ கட்சி 501 ஓட்டுக்களும்
பி கட்சி 499 ஓட்டுக்களும்
பெறுவதாக வைத்துக் கொள்வோம்.
இப்போது நூறு தொகுதிகளிலும் ஏ கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. பி கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்றும் அறிவிக்கப்படுகிறது. இது நம்முடைய பிரிட்டன் ஜனநாயக முறை. அதாவது ஏ கட்சிக்கு 100 எம் எல் ஏக்கள் கிடைக்க, பி கட்சிக்கு ஒரு எம் எல் ஏ கூட இல்லை.
ஆனால் இரண்டு கட்சிகளும் வாங்கிய ஓட்டுக்களில் தொகுதிக்கு இரு ஓட்டு வீதம் இருநூறு வாக்குகள் தான் வித்தியாசம்.
ஏ கட்சி நூறு தொகுதிகளில் வாங்கிய மொத்த ஓட்டுக்கள் 50100
பி கட்சி நூறு தொகுதிகளில் வாங்கிய மொத்த ஓட்டுக்கள் 49900.
ஏ கட்சி எல்லா இடங்களிலும் வெற்றி பெற, பி கட்சிக்கு அளிக்கப்பட்ட வாக்குகளுக்கு எந்த மதிப்பும் இல்லை. பி. கட்சிக்கு வாக்களித்த மக்களின் கருத்தைப் பிரதிபலிக்க சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லை. எனவே தான் இது போலி ஜனநாயகம் என்று கருதப்படுகிறது.
ஒவ்வொரு தொகுதியிலும் சிறுபான்மையாக உள்ள மக்களுக்கு ஒரே ஒரு பிரதிநிதித்துவம் கூட கிடைப்பதில்லை. கிடைக்க வேண்டுமானால் பெரிய கட்சிக்கு அடிமைச் சீட்டு எழுதிக் கொடுத்து ஜால்ரா போட்டால் தான் ஒன்றிரண்டு இடங்களில் வெற்றி பெற முடியும். அதுவும் மார்க்கத்தையும், மானத்தையும் விட்டு விட்டு சமுதாயத்தை மறந்து விட்டு ஜால்ரா போட்டால் தான் இது சாத்தியமாகும்.
இதை விட ஜெர்மன் நாட்டில் உள்ள ஜனநாயகம் பல வகைகளில் சிறந்து விளங்கும் ஜனநாயகமாகும். எல்லா மக்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் தானாகவே கிடைத்து விடும். இந்த முறைதான் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் எனப்படுகிறது.
அதாவது உதாரணத்துக்கு அதே நூறு தொகுதியை எடுத்துக் கொள்வோம். விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல்முறையில் எப்படி பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.
இந்தத் தேர்தலில் ஆட்கள் போட்டியிட மாட்டார்கள். சங்கம், கட்சி ஆகியவை தான் போட்டியிடும்.
ஒவ்வொரு ஆயிரம் ஓட்டுக்கும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்று நிர்ணயிக்கப்படும்.
நூறு தொகுதியிலும் ஏ கட்சி மேலே நாம் சொன்ன அதே எண்ணிக்கையில் 50100 வாக்குகள் வாங்கினால் ஆயிரத்துக்கு ஒரு உறுப்பினர் என்ற அடிப்படையில் அவர்கள் ஐம்பது உறுப்பினர்களை நியமித்துக் கொள்ளலாம்.
அது போல் 49900 வாக்குகள் பெற்ற பி அணி 49 சட்டமன்ற உறுப்பினரை நியமித்துக் கொள்ளலாம்.
இருவருக்கும் இடையில் ஓட்டு எண்ணிக்கையில் சிறிய வித்தியாசம் தான் உள்ளது. எனவே அதற்கேற்ப ஒரே ஒரு உறுப்பினர் தான் இரண்டு கட்சிக்கும் வித்தியாசம் இருக்கும். அனைத்து மக்களின் ஓட்டும் மதிப்பு மிக்கதாக ஆகின்றது. அனைவருக்கும் அவரவர் பலத்துக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் கிடைத்து விடுகிறது.
யாருடனும் கூட்டணி சேராமல் சிறுபான்மை சமுதாயத்துக்கும் சிறிய கட்சிகளுக்கும் அவர்களுக்கு உரிய பங்கு கிடைத்து விடுகிறது.
மேலே சொன்ன அதே நூறு தொகுதிகளை எடுத்துக் கொள்வோம். அந்த நூறு தொகுதிகளிலும் முஸ்லிம்கள் தலா 100 பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
நமது நாட்டில் உள்ள பிரிட்டன் ஜனநாயகத் தேர்தல் பிரகாரம் முஸ்லிம் கட்சி நூறு தொகுதியிலும் போட்டியிட்டால் தொகுதிக்கு நூறு ஓட்டு கிடைக்கும். ஆனால் எல்லா தொகுதிகளிலும் முஸ்லிம் கட்சி தோற்றதாக ஆகும். ஒரு தொகுதியில் கூட முஸ்லிம் கட்சி ஜெயிக்க முடியாது. முஸ்லிம்களின் அத்தனை ஓட்டுக்களும் வீணாகி விடுகின்றன. எனவே தான் கொள்கையற்ற கூட்டணி வைத்து கேவலப்படும் நிலை ஏற்படுகிறது.
ஆனால் ஜெர்மன் ஜனநாயகம் எனப்படும் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின் படி தொகுதிக்கு 100 என்ற கணக்குப்படி முஸ்லிம் கட்சி பத்தாயிரம் ஓட்டுகளை வாங்கும். ஆயிரம் ஓட்டுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற கணக்குப்படி முஸ்லிம்களுக்கு பத்து உறுப்பினர் கிடைப்பார்கள். யாருடனும் சந்தர்ப்பவாத கூட்டணி இல்லாமலே நமக்கு உரிய பங்கு இதன் மூலம் கிடைத்து விடும்.
அது போல் திமுக, அதிமுக அல்லாத சிறிய கட்சிகள் இந்த ஜெர்மன் ஜனநாயக முறையில் யாருடனும் கூட்டணி இல்லாமல் தேர்தலைச் சந்தித்தால் அந்தக் கட்சிகளுக்கு கிடைத்த வாக்குகள் எதுவும் வீண் போகாமல் வாங்கிய வாக்குகளுக்கு ஏற்ப சட்டமன்றத்துக்குள் நுழைவார்கள்.
இந்த முறையில் தேர்தல் சீர்திருத்தம் செய்தால் தான் அனைவரும் அரசியல் அதிகாரம் பெற முடியும். எவருடனும் கூட்டணி வேண்டாம். கூழைக் கும்பிடு வேண்டாம். இஸ்லாமிய வரம்பை மீற வேண்டாம். ஆனாலும் நமக்கு உரிய பங்கு கிடைத்து விடும்.
முஸ்லிம் சமுதாயத்தில் அதிகக் கட்சிகள் இருந்தால் கூட பங்கம் வராது. மேற்கண்ட பத்தாயிரம் வாக்குகளை இரண்டு முஸ்லிம் கட்சிகள் தலா ஐந்தாயிரம் என பிரித்துக் கொண்டால் ஒவ்வொரு கட்சிக்கும் ஐந்து உறுப்பினர்கள் கிடைப்பார்கள். அவ்வளவு தான் வித்தியாசம். நாடு முழுவதும் ஆயிரம் ஓட்டு கூட வாங்காத கட்சிக்குத் தான் பங்கு இருக்காது. அத்தகைய லட்டர் பேடு கட்சிகள் ஒழிவது நல்லது தான். ஓரளவாவது மக்கள் ஆதரவு உள்ளவர்கள் மட்டுமே களத்தில் இருப்பார்கள்.
ஆனால் அந்த நிலையை அடைவதற்கு தேர்தல் முறையில் மாற்றம் செய்ய வேண்டும். இதை எல்லா கட்சிகளுக்கும் புரிய வைக்க வேண்டும்.
இவ்வாறு நாம் எழுதினோம்.
இது முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி அனைத்துக் கட்சிகளுக்கும் நன்மை பயக்கக் கூடியதாகும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 542 ஆகும். இப்போது பாஜவுக்கு 30 சதவிகிதம் வாக்குகள் கிடைத்துள்ளன. 542ல் 30 சதவிகிதம் என்பது 162 தொகுதிகள் தான். இதுதான் பாஜகவின் ஒட்டு எண்ணிக்கைக்கு ஏற்ப கிடைக்க வேண்டிய எண்ணிக்கையாகும்.,
காங்கிரஸ் 19 சதவிகிதம் ஓட்டுக்கள் பெற்றுள்ளது. இதற்கு விகிதாசாரக் கணக்குப்படி 118 இடங்கள் கிடைத்து இருக்கும். பலமான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் ஆகியிருக்கும். ஆனால் கிடைத்தது 44 இடங்கள்.
மாயாவதி கட்சி நான்கு சதவிகிதத்துக்கு மேல் ஓட்டுக்களைப் பெற்றும் அதற்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை. ஆனால் இந்த வாக்குகளுக்கு 22 இடங்கள் அக்கட்சிக்கு கிடைத்து இருக்கும்.
அதிமுக 45 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. இதற்குக் கிடைக்க வேண்டிய இடங்கள் 19 தான். ஆனால் 37 இடங்கள் கிடைத்துள்ளன.
திமுக 23 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது. இதற்குக் கிடைக்க வேண்டிய இடங்கள் 9 ஆகும். ஆனால் கிடைத்தது பூஜ்யம். இது போல் மதிமுக, தேமுதிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளில் ஆறு லட்சம் வாக்குகளுக்கு ஒரு இடம் என்ற அடிப்படையில் ஓரிரு இடங்கள் கிடைத்து இருக்கும்..
நாட்டு மக்கள் தொகையில் 20 சதவிகிதமாக உள்ள முஸ்லிம்களுக்கு 120 இடங்கள் கிடைக்க வேண்டும். ஆனால் கேடு கெட்ட இந்தத் தேர்தல் முறையால் பத்து இடங்கள் தான் கிடைக்கின்றது. ஆனால் ஜெர்மன் ஜனநாயக முறையில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு சமுதாயத்துக்கும் அவரவர் சதவிதத்துக்கு ஏற்ப பங்குகள் கிடைத்து விடும்.
ஆனால் ஆட்சியில் இருப்பவர்கள் எப்போதும் இதை எதிர்ப்பார்கள். 37 இடங்களை இப்போது வென்ற அதிமுக 19 இடங்களில் தான் வெற்றி பெற முடியும். இதை அதிமுக விரும்பாது. சென்ற முறை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இதை ஆதரிக்கவில்லை. தோற்றுப்போன பிறகு இதைப் பற்றிப் பேசுகிறது. இந்தத் தேர்தல் முறையினால் அடுத்த தேர்தலில் பாஜக காங்கிரசின் நிலையை அடையலாம். ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டாலும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க ஜெர்மன் ஜனநாயகம் தான் ஒரே வழியாகும். இதனால் எந்தக் கட்சிக்குப் போடும் ஓட்டும் வீணாகாது. அனைவரின் ஓட்டுக்களும் மதிப்புடையதாக ஆகும்.
இதற்கான கருத்துவாக்கத்தை ஏற்படுத்தி போலி ஜனநாயகமாக உள்ள இந்தத் தேர்தல் முறையை ஒழித்துக்கட்ட அனைவரும் தீவிரமாக உழைக்க வேண்டும். இந்தக் கருத்தை அனைத்து கட்சிகளிடமும் கொண்டு செல்வது இட ஒதுக்கீட்டை விட மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அசுர பலத்துடன் ஆட்சியாளர்கள் ஆட்டம் போடுவதற்கு கடிவாளமாகவும், எப்போதும் பலமான எதிர்க்கட்சி அமைவதை உறுதி செய்வதாகவும் இது அமையும்.
கேடுகெட்ட கூட்டணிக் கலாச்சாரத்துக்கு ஜெர்மன் ஜனநாயகத்தில் வேலை இருக்காது. கட்சி மாறுவதற்கு இடம் இருக்காது. இன்னும் எண்ணற்ற நன்மைகள் இதனால் ஏற்படும்.