திருமணத்தை வீடியோ எடுக்கலாமா?
ஆயிஷா
பதில் :
எளிமையான முறையில் நடத்தப்படும் திருமணமே சிறந்த திருமணம் என்று மார்க்கம் கூறுகின்றது.
مسند أحمد
24529 – حَدَّثَنَا عَفَّانُ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ الطُّفَيْلِ بْنِ سَخْبَرَةَ، عَنْ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: ” إِنَّ أَعْظَمَ النِّكَاحِ بَرَكَةً أَيْسَرُهُ مَؤُونَةً “
குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் நிறைந்ததாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அஹ்மத்
திருமணத்தில் தேவையற்ற செலவுகளும், வீண் விரையங்களும், ஆடம்பரங்களும் தவிர்க்கப்பட வேண்டும் என்ற கருத்தும் இந்த நபிமொழிக்குள் அடங்கியுள்ளது.
வீடியோ எடுப்பதில் பயன் இருக்கின்றதா? இல்லையா? என்பதைப் பொறுத்துத் தான் அதற்காகச் செலவிடலாமா? செலவிடக் கூடாதா? என்று முடிவு செய்ய வேண்டும்
திருமணக் காட்சிகளை வீடியோ எடுப்பதில் ஏதாவது நன்மை இருந்தால் அதற்காகச் செலவிடுவது தவறல்ல. உதாரணமாக நபிவழி அடிப்படையில் நடக்கும் திருமணத்தில் மார்க்கச் சொற்பொழிவு ஆற்றப்படுகின்றது. இந்தச் சொற்பொழிவை வீடியோ எடுத்து அதை இன்னும் பலர் கேட்பதால் அவர்களுக்கு நல்ல அறிவுரை கிடைக்கும் என்றால் அது பயனுள்ள செலவாகும்.
திருமணத்தில் கலந்து கொள்ளாதவர்களுக்கும் இந்த உரை பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இதை வீடியோ எடுத்து மற்றவர்களை பார்க்கச் செய்வது வீண் விரையமாகாது. இதற்காகச் செலவிடுவது தவறல்ல.
ஆனால் இன்றைக்குப் பல திருமணங்களில் எந்தப் பயனும் இல்லாமல் வீடியோ எடுக்கப்படுகின்றது. திருமணத்துக்கு வருபவர்களையும், செல்பவர்களையும் வீடியோ எடுக்கின்றனர். மணமகனையும், மணமகளையும் வீடியோ எடுக்கின்றனர்.
பெண்கள் தங்களுடைய அலங்காரங்களை அந்நிய ஆண்களிடம் வெளிப்படுத்துவதும், அந்நிய ஆண்கள் அந்த அலங்காரங்களைப் பார்த்து ரசிப்பதும் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.
திருமணத்துக்கு வரும் அனைத்து பெண்களும் அலங்காரம் செய்துகொண்டே வருகின்றனர். வீடியோ எடுப்பவன் இந்தப் பெண்களை அவர்களின் அலங்காரத்துடன் படம் எடுக்கிறான். இதனால் இந்தத் திருமணத்தில் இஸ்லாமிய ஒழுக்கம் மீறப்படுகின்றது.
நமது வீட்டுப் பெண்களை அந்நியன் எவனோ படம் எடுத்தால் கோபம் வருகிறது. இந்தக் கோபம் நியாயமானது. நன்மையானது. இதே காரியத்தைத் தான் கல்யாண நிகழ்ச்சியிலும் செய்கிறார்கள். இதை மட்டும் நாம் எப்படி அனுமதிக்கலாம்?
எந்த நன்மையும் தராத காட்சிகளை வீடியோ எடுத்தால் அதில் பொருளாதாரம் விரையமாகுவதைத் தவிர எந்த நன்மையுமில்லை. எனவே இந்த வீண் விரையத்தைத் தவிர்க்க வேண்டும்.
அது மட்டுமின்றி வீடியோ எடுத்து தருபவர்கள் அதில் ஒரு பிரதியை வைத்துக் கொண்டு தங்கள் நண்பர்களுடன் அதைப் பார்த்து அசிங்கமான விமர்சனம் செய்வதும் நம் காதுகளுக்கு வருகிறது. இன்னும் சிலர் வீடியோவில் எடுக்கப்பட்ட காட்சியில் முகத்தை மாற்றி அல்லது முகத்தை வைத்துக் கொண்டு உடலை மாற்றி ஆபாச வீடியோக்களாக இணைய தளங்களில் வெளியிடுவதும் நடக்கிறது. இதனால் நல்ல பெண்கள் பலரின் குடும்ப வாழ்க்கை நாசமாகப் போகிறது. இதையெல்லாம் கவனத்தில் கொண்டு நடந்து கொள்பவன் தான் மானமுள்ள சரியான முஸ்லிமாவான்.