தொழுகைக்கு ஒலிபெருக்கியைப் பயன்படுத்தலாமா?
செய்யத்
பதில் :
கூட்டுத் தொழுகையில் இமாமின் நடவடிக்கைகளை மக்கள் அறிந்து கொண்டால் தான் அவரைப் பின்பற்ற முடியும்.
சில நேரங்களில் இமாமுடைய குரல் உரத்த சப்தமாக இருக்காது. இதனால் கடைசியில் இருப்பவர்களுக்குக் கேட்காது. இதனால் குழப்பம் ஏற்படும்.
ஒரு தளத்தில் இமாம் இருக்கும் போது மற்றொரு தளத்தில் நிற்கும் மக்களுக்கு இமாமுடைய சப்தம் கேட்க முடியாமல் போய் விடும்.
இமாமுடைய ஓதுதல் சிலருக்குக் கேட்காவிட்டாலும், டுகூவு ஸஜ்தா போன்றவற்றுக்காக அவர் கூறும் தஸ்பீஹ்கள் மக்களுக்குக் கேட்டால் தான் அவரைப் பின்பற்ற முடியும். எனவே இதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொள்ளலாம். இதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்ட போது அவர்களால் சப்தமாக ஓத முடியவில்லை. அவர்கள் ஓதுவதும் தக்பீர் கூறுவதும் அருகில் இருந்த அபூபக்ர் (ரலி) அவர்களுக்குத் தான் கேட்டது. பின்னால் இருந்த மக்களுக்குக் கேட்கவில்லை. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தக்பீர் கூறிய உடன் அதை அபூபக்ர் (ரலி) அவர்கள் உரத்த குரலில் சொன்னார்கள்.
صحيح البخاري
712 – حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، قَالَ: حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: لَمَّا مَرِضَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَضَهُ الَّذِي مَاتَ فِيهِ أَتَاهُ بِلاَلٌ يُوذِنُهُ بِالصَّلاَةِ، فَقَالَ: «مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ»، قُلْتُ: إِنَّ أَبَا بَكْرٍ رَجُلٌ أَسِيفٌ إِنْ يَقُمْ مَقَامَكَ يَبْكِي، فَلاَ يَقْدِرُ عَلَى القِرَاءَةِ، فَقَالَ: «مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ»، فَقُلْتُ: مِثْلَهُ، فَقَالَ فِي الثَّالِثَةِ أَوِ الرَّابِعَةِ: «إِنَّكُنَّ صَوَاحِبُ يُوسُفَ، مُرُوا أَبَا بَكْرٍ [ص:144] فَلْيُصَلِّ»، فَصَلَّى وَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُهَادَى بَيْنَ رَجُلَيْنِ كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ يَخُطُّ بِرِجْلَيْهِ الأَرْضَ، فَلَمَّا رَآهُ أَبُو بَكْرٍ ذَهَبَ يَتَأَخَّرُ، فَأَشَارَ إِلَيْهِ أَنْ صَلِّ، فَتَأَخَّرَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، وَقَعَدَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى جَنْبِهِ، وَأَبُو بَكْرٍ يُسْمِعُ النَّاسَ التَّكْبِيرَ
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின் போது அவர்களிடம் பிலால் (ரலி) அவர்கள் தொழுகை பற்றி அறிவிப்பதற்காக வந்தார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அபூபக்ர் அவர்களிடம் (மக்களுக்குத்) தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று சொன்னார்கள். அதற்கு நான், (என் தந்தை) அபூபக்ர் அவர்கள் இளகிய மனம் உடையவர்கள்; நீங்கள் நிற்குமிடத்தில் அவர்கள் நின்றால் அழுது விடுவார்கள். அவர்களால் (தொழுகையில்) ஓத முடியாது என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபூபக்ர் அவர்களிடம் (மக்களுக்குத்) தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று (மீண்டும்) சொன்னார்கள். நான் முன்பு சொன்ன பதிலையே மீண்டும் (மீண்டும்) சொன்னேன். மூன்றாவது அல்லது நான்காவது தடவையில் அவர்கள் (பெண்களாகிய) நீங்கள் யூசுஃபுடைய தோழிகள் போன்(று உள்நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள் தாம். அபூபக்ர் அவர்களிடம் (மக்களுக்குத்) தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று கூறினார்கள். அவ்வாறே அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுவித்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (தம் உடல் நலம் சற்றுத் தேறியிருப்பதைக் கண்ட போது) இரண்டு மனிதர்களுக்கிடையே தொங்கியபடி (பள்ளிவாசலை நோக்கி) புறப்பட்டு வந்தார்கள். (நோயினால் கால்களை ஊன்ற முடியாமல் தம்மிரு கால்களையும் தரையில் பதித்து கோடிட்டு வந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள் (தொழுவிக்கும் இடத்திலிருந்து) பின்வாங்க முயன்றார்கள். அப்போது அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீங்கள் தொழுகை நடத்துங்கள் என்று (கையால்) சைகை செய்தார்கள். ஆயினும் அபூபக்ர் (ரலி) அவர்கள் சற்று பின்வாங்கிக் கொண்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு (இடப்) பக்கத்தில் அமர்ந்(து தொழுவித்)தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் (நபியவர்கள் கூறும்) தக்பீரை மக்களுக்குக் கேட்கும் விதமாக (உரத்த குரலில்) கூறிக் கொண்டிருந்தார்கள்.
நூல்: புகாரி 712, 664, 683, 687, 713
தொழுகையில் இமாம் கூறும் தக்பீர்களையும், அவரது கிராஅத்தையும் தொலைவில் உள்ளவர்களுக்கு ஒலிபெருக்கி கேட்கச் செய்கின்றது. பின்னால் தொழுபவர்கள் இமாமுடைய சப்தத்தைச் செவியுற்றால் தான் அவரைச் சரியாகப் பின்பற்ற முடியும்.
இமாம் வளல்லால்லீன் என்று கூறினால் பின்னால் தொழுபவர்கள் ஆமீன் என்று கூற வேண்டும். இதைச் செயல்படுத்த இமாம் ஓதுவதைச் செவிகொடுத்து கேட்க வேண்டும்.
இமாம் ருகூவிற்குச் சென்றால் நாமும் அவரைப் பின்தொடர்ந்து ருகூவிற்குச் செல்ல வேண்டும். இது போன்ற தொழுகைச் சட்டங்களை செயல்படுத்துவதற்கு ஒலிபெருக்கி உதவியாக இருப்பதால் இதைப் பயன்படுத்துவது தவறல்ல.
அறிவியல் சாதனங்களைப் பயன்படுத்துவதால் மார்க்க வரம்புகளை மீற வேண்டிய சூழல் ஏற்பட்டால் மட்டுமே அப்போது அவற்றை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். தொழுகையில் ஒலிபெருக்கியைப் பயன்படுத்துவது எந்த மார்க்கச் சட்டத்திற்கும் முரணாக இல்லை என்பதால் இதைப் பயன்படுத்துவது தவறல்ல.
அதிமான மக்களுக்கு இமாம் கூறுவது கேட்க வேண்டும் என்பதற்காக ஒலிபெருக்கி பயன்படுத்தும் போது திடீரென மின்சாரம் நின்று விடக் கூடும். அதற்கேற்ப பேட்டரிகள் மூலம் ஒலிபெருக்கியை இயக்குவது தான் நல்லது.
அதுவும் திடீரென பழுதாகி விட்டால் இமாமைப் பின்பற்றி தொழும் மக்களில் சிலர் கடைசி வரிசையில் உள்ளவர்களும் கேட்கும் வகையில் இமாமின் தக்பீர்களை எதிரொலிக்க வேண்டும். இல்லாவிட்டால் பின்னால் நிற்பவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுவார்கள்.
தொழுகையில் பங்கு கொள்பவர்கள் இமாமின் குரலைக் கேட்பது அவசியம் என்பதால் இது அனுமதிக்கப்பட்டது என்றாலும் ஒலி பெருக்கியை அலற விட்டு அக்கம்பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களுக்கு தொந்தரவு அளித்தல் கூடாது. அவர்கள் இமாமின் குரலைக் கேட்கும் அவசியம் ஏதும் இல்லை. பரீட்சைக்குப் படிக்கும் மாணவர்கள், குழந்தைகள், நோயாளிகள் உள்ளிட்ட பலருக்கு நிச்சயம் இடௌஉறாக இருக்கும். இதனால் தொழுகை மீதே வெறுப்பு ஏற்படக் கூடிய வாய்ப்பும் உள்ளது.
எனவே பள்ளிவாசலுக்குள் தொழுவோர் கேட்கும் அளவைத் தாண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
31.03.2013. 5:07 AM