உலகமெல்லாம் ஒரே கிழமை
உலகம் முழுவதும் ஒரே கிழமை தான் வருகின்றது. சவூதியில் வெள்ளிக்கிழமை என்றால் உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமையாகத் தான் உள்ளது. அங்கே வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழும் போது இங்கேயும் ஜும்ஆ தொழுகின்றோம். பெருநாளை மட்டும் அங்கே வெள்ளிக்கிழமை என்றால் இங்கே சனிக்கிழமை எப்படி கொண்டாட முடியும்?
உலகம் முழுவதும் ஒரே பிறை என்று வாதிடக் கூடியவர்கள் இதையே பெரிய ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.
உலகம் சுருங்கி விட்டது விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. தகவல் தொடர்பு சாதனங்கள் பெருகி விட்டன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் போல் நாம் உம்மியல்ல. நாங்கள் அறிவியல் மேதைகள் என்று கூறுபவர்களின் விஞ்ஞான அறிவு எந்த அளவுக்கு உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள அவர்களின் இந்தக் கேள்வி போதுமானது.
உலகம் முழுவதும் ஒரே கிழமையாகத் தான் உள்ளது என்ற அவர்களது வாதம் எவ்வளவு அபத்தமானது என்பதை முடிவு செய்யப் பெரிய அறிவியல் ஞானம் ஒன்றும் தேவையில்லை. சாதாரணமாகச் சிந்தித்தாலே போதும்.
இஸ்லாமிய அடிப்படையில் ஒரு நாள் என்பது மக்ரிபிலிருந்து துவங்குகிறது. உதாரணமாக வெள்ளிக்கிழமை மாலையில் சூரியன் மறைந்ததும் சனிக்கிழமை உதயமாகி விடுகின்றது. இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான்.
இப்போது சென்னையில் வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு சூரியன் மறைந்து விட்டால் சனிக்கிழமை உதயமாகி விடுகின்றது. அந்த நேரத்தில் சவூதியில் வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணியாக இருக்கும்.
சென்னையில் சனிக்கிழமையாக இருக்கும் அதே நேரத்தில் சவூதியில் வெள்ளிக்கிழமையாக இருக்கிறது. (சூரியக் கணக்கு அடிப்படையில் பார்த்தால் நள்ளிரவு பன்னிரண்டு மணியை உதாரணமாகக் கொள்ள வேண்டும்.)
இதைப் புரிந்து கொள்வதற்கு சில விஞ்ஞான விளக்கங்களைப் பார்ப்போம்.
உருண்டை வடிவிலுள்ள பூமி தன்னைத் தானே சுற்றுவதால் இரவு பகல் ஏற்படுகின்றது. பூமி சுற்றிக் கொண்டேயிருப்பதால் இந்தியாவில் சூரியன் உதயமாகும். அதே நேரத்தில் இந்தியாவிற்கு எதிர் கோடியிலுள்ள மற்றொரு நாட்டில் சூரியன் அஸ்தமனமாகிக் கொண்டிருக்கும்.
இப்படி ஒவ்வொரு நாட்டிலும் இரவு பகல் மாறி மாறி வந்து கொண்டிருக்கும் போது ஒரு நாள் என்பதை எதிலிருந்து துவக்குவது என்பதில் தடுமாற்றம் ஏற்பட்டது.
இதனால் ஒரு சீரான நிலையை ஏற்படுத்துவதற்காக பூமியின் ஓர் இடத்தை மையமாக வைத்து அதிலிருந்து தேதியைக் கணக்கிட வேண்டும் என்ற முடிவுக்கு புவியியல் விஞ்ஞானிகள் வந்தனர். அந்த அடிப்படையில் ஒரு கடல் பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்கே சர்வதேச தேதிக்கோடு (உஹற்ங் கண்ய்ங்) என்ற மையத்தை உருவாக்கி அந்த இடத்தை தேதி கிழமை மாறும் இடமாக உலகம் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தார்கள்.
1884ஆம் ஆண்டு இந்த முடிவு எட்டப்பட்டது. இதன்படி சர்வதேச தேதிக் கோட்டில் நள்ளிரவு 12 மணியைக் கடக்கும் நேரத்தில் ஒரு நாள் பிறப்பதாகக் கணக்கிடப்படுகிறது.
சர்வதேச தேதிக் கோட்டினை பூமி கடக்கின்ற அந்த ஒரு மைக்ரோ வினாடி மட்டுமே உலகம் முழுவதும் ஒரே கிழமையாக இருக்கும். அதாவது அந்த வினாடியில் தேதிக் கோட்டின் கிழக்குப் புறத்தில் உள்ள நாடு வெள்ளிக்கிழமையின் ஆரம்பத்திலும், மேற்குப்புறம் உள்ள நாடு வெள்ளிக்கிழமையின் இறுதியைக் கடந்து சனிக்கிழமையைச் சந்தித்துக் கொண்டிருக்கும்.
சவூதிக்கும் இந்தியாவிற்கும் இரண்டரை மணி நேரம் வித்தியாசப்படுவது போல் தேதிக் கோட்டின் கிழக்கு மற்றும் மேற்குப் புறத்தில் உள்ள இரண்டு நாடுகளுக்கும் இடையில் 24 மணி நேரம் வித்தியாசப்படுகிறது. இதனால் பக்கத்து பக்கத்து இரு நாடுகளுக்கிடையில் ஒரு நாள் வித்தியாசம் ஏற்படுகின்றது.
இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் இங்கிருந்து சவூதி சென்றவுடன் 2.30 மணி நேரத்தை உங்கள் கடிகாரத்தில் குறைத்துக் கொள்ளுங்கள் என்று விமானத்தில் அறிவிப்புச் செய்வார்கள். அதே போல் விமானத்தில் சர்வதேச தேதிக் கோட்டைக் கடந்து செல்லும் போது நேரத்தை மாற்றச் சொல்வதில்லை. மாறாக ஒரு தேதியை ஒரு கிழமையை மாற்றிக் கொள்ளச் சொல்வார்கள்.
உதாரணமாக சர்வதேச தேதிக் கோட்டிற்கு அருகிலிருக்கும் நியூசிலாந்து ஹானலுலு ஆகிய இரு தீவுகளை எடுத்துக் கொள்வோம். நியூசிலாந்தில் காலை எட்டு மணியாக இருக்கும் போது ஹானலுலுவில் காலை நேரம் 10 மணியாக இருக்கும். ஆனால் நியூசிலாந்தில் வெள்ளிக்கிழமையாகவும் ஹானலுலுவில் வியாழக்கிழமையாகவும் இருக்கும். இரண்டு நாடுகளிலும் ஒரே இரவில் முதல் பிறை தென்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு தென்பட்டால் நியூசிலாந்து ஹானலுலு ஆகிய இரு நாடுகளிலும் ஒரே நாளில் தான் நோன்பு வைக்க வேண்டும். ஆனால் நியூசிலாந்தில் வெள்ளிக்கிழமையாகவும் ஹானலுலுவில் வியாழக்கிழமையாகவும் இருக்கும். நியூசிலாந்தில் பிறை பார்த்து, ஹானலுலுவில் பிறை பார்க்காவிட்டால் அப்போது இரண்டு நாட்கள் வித்தியாசம் ஏற்படும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
உலகம் முழுவதும் ஒரே நாள் தான் என்று வாதம் செய்பவர்களிடம் நாம் கீழ்க்கண்ட கேள்விகளை எழுப்புகிறோம்.
ஹானலுலு நாட்டில் வியாழக்கிழமை அன்று சுப்ஹு தொழுதுவிட்டு அன்றைய லுஹருக்கு நியூசிலாந்த் நாட்டிற்குச் சென்று விடுகின்றோம். ஆனால் அங்கே வெள்ளிக்கிழமை. இப்போது நாம் ஜும்ஆ தொழ வேண்டுமா? வியாழக்கிழமையின் லுஹர் அஸர் மக்ரிப் இஷா மறுநாள் சுப்ஹு ஆகிய தொழுகைகளைக் களாச் செய்ய வேண்டுமா?
நியூசிலாந்து நாட்டில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுது விட்டு அன்றே ஹானலுலு செல்கிறோம். அங்கே மறு நாள் ஜும்ஆ அதனால் அது வரையிலான தொழுகைகளை நிறைவேற்றாமல் விட்டுவிட்டு மறுநாள் அஸர் தொழுகையிலிருந்து தொழுதால் போதுமா? அல்லது அடுத்தடுத்த நாளில் இரண்டு ஜும்ஆக்கள் தொழ வேண்டுமா?
நியூசிலாந்து நாட்டில் வியாழக்கிழமை காலை பத்து மணிக்கு ஒளிபரப்பும் கிரிக்கெட்டை ஹானலுலுவில் புதன்கிழமையே பார்க்கிறோம். வியாழனில் நடப்பதை புதனில் (அதாவது விளையாட்டு நடப்பதற்கு முன்பே) எப்படிப் பார்க்க முடிகிறது.
ஹானலுலு நாட்டில் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 22ந் தேதி காலை பத்து மணிக்குத் துவங்குகிறது. அதே நாளில் காலை எட்டு மணிக்கு நியூசிலாந்து தொலைக்காட்சியில் அதன் நேரடி ஒளிபரப்பைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது 23ம் தேதியின் காலை எட்டு மணி. இது எப்படி சாத்தியம்?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் உலகம் முழுவதும் ஒரே நாள் என்று வாதிடுபவர்கள் பதில் சொல்ல வேண்டும். சம்பந்தமில்லாத நான்கு குர்ஆன் வசனங்களைப் போட்டுவிட்டு ஒரே சூரியன் ஒரே சந்திரன் என்று வியாக்கியானம் செய்பவர்களும் அது தங்களுடைய கருத்துக்கு ஆதரவாக இருக்கிறது என்ற ஒரே காரணத்தால் அதற்கு அணிந்துரை மதிப்புரை எழுதுபவர்களும் மேலே நாம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
இதில் வேடிக்கை என்னவென்றால் சர்வதேச தேதிக்கோடு மனிதர்களால் வரையப்பட்ட கற்பனையான கோடு தான். இந்தக் கோடு ஏதேனும் ஒரு நாடு வழியாகச் சென்றால் ஒரே நாட்டில் ஒரே நாளில் வெவ்வேறு தேதி வெவ்வேறு கிழமை ஏற்பட்டு அதனால் குழப்பங்கள் தோன்றும் இதைத் தவிர்ப்பதற்காக சர்வதேச தேதிக் கோடு எந்த நாடு வழியாகவும் செல்லாத வண்ணம் ஒரு கடல் பகுதியைத் தேர்ந்தெடுத்து வரையப்பட்டது. இந்த தேதிக் கோடு இந்தியாவிற்கும் சவூதிக்கும் மத்தியில் வரையப்பட்டிருந்தால் இரண்டரை மணி நேர வித்தியாசத்திலேயே வெவ்வேறு கிழமைகளை வெவ்வேறு தேதிகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதையும் மறந்து விடக் கூடாது.