உள்ளாட்சியில் ம.ம.க மகத்தான வெற்றியா?
த.மு.மு.கவின் அரசியல் பிரிவான ம.ம.க 60 இடங்களில் வெற்றி பெற்றதாகவும் 90 இடங்களில் வெற்றி பெற்றதாகவும் பெருமையடித்துக் கொள்கிறார்களே இது உண்மையா?
– அமீர் சுல்தான், ஏழுகிணறு சென்னை.
நீங்கள் சொல்வது போல் பெருமை அடித்தார்கள் என்றால் கட்டாயம் அவர்களை மனநல மருத்துவர்களிடம் தான் காட்ட வேண்டும். கனவுலகில் வாழ்வதும் ஒரு.வகை மனநோய் தான்.
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது இவர்கள் கொடுத்த பில்டப்பை நம்பி ஏமாந்த ஊடகங்கள் வெற்றி வாய்ப்பு பற்றி எழுதும் போதும், பேசும் போதும் ம.ம.கவையும் அதிமுக வெற்றிக்கு காரணமாகக் குறிப்பிட்டனர். ஊடகங்களின் அறியாமையை நினைத்து சமுதாயம் கேலிச் சிரிப்பு சிரித்தது.
ஆனால் உள்ளாட்சித் தேர்தல் முடிவு குறித்து ஒவ்வொரு கட்சியும் வாங்கிய வாக்கு சதிவிகிதத்தைக் குறிப்பிடும் பத்திரிகைகள் அந்தப் பட்டியலில் ம.ம.க என்ற பெயரையே குறிப்பிடக் காணோம்.
அதிமுக, திமுக, காங்கிரஸ், தேமுதிக, மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தை, பாஜக, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு எவ்வளவு சதவிகிதம் வாக்குகள் கிடைத்தன என்று பட்டியல் போட்டு ஊடகங்கள் விளக்கியுள்ளன. தேர்தல் ஆணையம் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த புள்ளிவிபரத்தை ஊடகங்கள் வெளியிட்டன. இந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளது. இக்கட்சி 0.70 சதம் ஓட்டுக்கள் வாங்கியதாக பட்டியல் வெளியிட்டுள்ளனர். அதாவது ஒவ்வொரு 400 வாக்குகளில் 3 வாக்குகளை இக்கட்சி வாங்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 400க்கு மூன்று என்ற அற்பமான வாக்குகளைக் கூட ம.ம.க வாங்காததால் தான் பட்டியலில் கூட மமகவைச் சொல்ல முடியவில்லை. இது தான் ம.ம.க வெற்றியின் லட்சணம்.
இவர்கள் கூறுவது போல் 60 அல்லது 90 இடங்களில் வெற்றி பெற்றது உண்மை என்றே வைத்துக் கொள்வோம். நூறு இடங்களில் 60 இடங்களை வென்றார்களா? அல்லது ஆயிரம் இடங்களில் 60 இடங்களை வென்றார்களா? அல்லது பத்தாயிரம் இடங்களில் 60 இடங்களைப் பிடித்தார்களா? நிச்சயமாக இல்லை.
தேர்தல் நடந்த மொத்த இடங்கள் ஒரு லட்சத்தி முப்பத்தி இரண்டாயிரத்தி நானூற்றி அறுபத்தி ஏழு இடங்களாகும். 1,32,467 இடங்களில் 60 இடம் என்பது என்ன கணக்கு?
நூறு இடங்களில் ஒன்று என்ற கணக்கில் இவர்கள் வெல்லவில்லை.
200 இடங்களில் ஒன்று என்ற கணக்கிலும் வெல்லவில்லை.
முன்னூறு இடங்களில் ஒன்று என்ற கணக்கிலும் இவர்கள் வெற்றி பெறவில்லை.
நானூறு இடங்களுக்கு ஒரு இடம் என்ற கணக்கிலும் இவர்கள் வெல்லவில்லை.
ஐநூறு இடங்களுக்கு ஒன்று என்ற கணக்கிலும் வெல்லவில்லை.
அறுநூறு இடங்களுக்கு ஒன்று என்ற கணக்கிலும் இவர்கள் வெல்லவில்லை.
மாறாக ஆயிரத்துக்கு ஒரு இடம் என்ற கணக்கிலும் மமக வெல்லவில்லை.
மாறாக இரண்டாயிரம் இடங்களுக்கு ஒரு இடம் என்பது தான் இவர்கள் வெற்றி பெற்ற சதவிகிதக் கணக்கு.
234 சட்டமன்றத் தொகுதிகளில் இரண்டு இடங்களில் இவர்கள் வெற்றி பெற்றனர். சுமார் நூற்றுக்கு ஒன்று என்ற கணக்கு வருகின்றது. இந்தக் கணக்குப்படி 1,32,467 இடங்களில் 1,324 இடங்களை வென்றால் தான் சட்ட சபையில் பெற்ற அற்ப வெற்றிக்கு ஈடாகும். 1,324 இடங்களுக்கு பதிலாக 60 இடம் என்பது எவ்வளவு கேவலமான தோல்வி! இதைக் கூட வெற்றி என்று தம்பட்டம் அடிக்க ரொம்ப துணிச்சல் வேண்டும்.
சரி அப்படியே வெற்றி பெற்ற இடங்கள் மாநகராட்சி அல்லது நகராட்சி உறுப்பினர் என்றால் அதில் அதிக ஓட்டுக்களையாவது பெற்றிருப்பார்கள் என்று கருதலாம். ஆனால் இவர்கள் அதிகம் வென்ற இடங்கள் கிராமப் பஞ்சாயத்துகளில் உள்ள சின்னச் சின்ன வார்டுகள் தான். அதாவது ஒரு வார்டில் சுமார் 100 முதல் 300 ஓட்டுகள் வரை இருக்கும். இதில் வெற்றி பெறுபவர் 60 அல்லது எழுபது ஓட்டுக்கள் வாங்கினாலே போதும். ஜெயித்து விடலாம். இவர்களே தம்பட்டம் அடித்த ஒரு வார்டு நீடூர் வார்டு; அதன் கணக்கைப் பாருங்கள்.
சபீர் (மமக) – 57
ரோஜா (எ) அப்துல் கபூர் (சுயே) – 47
இதில் முஸ்லிம்கள் நிறைந்து வாழும் நீடூரில் ஒரு தெருவில் 57 வாக்குகள் வாங்கி அதில் ஜெயித்து விட்டதாகக் கூறியுள்ளனர். முஸ்லிம்கள் நிறைந்த ஊர்களில் பஞ்சாயத்து தலைவர் பதவியில் ஜெயிக்கவில்லை. அவ்வூரில் அதிகமான வார்டுகளில் ஜெயிக்கவில்லை. ஒரு வார்டில் 57 வாக்குகள் வாங்கி ஜெயித்துள்ளனர்.
இவர்கள் தம்பட்டம் அடிக்கும் அளவுக்கு வெற்றி பெற்றார்கள் என்றால் மொத்த வாக்காளர்களில் இவர்களுக்கு வாக்களித்தவர்கள் மொத்தம் எவ்வளவு என்பதை பட்டியல் போட்டு விளக்கத் தயாரா?
மொத்தம் உள்ள நான்கு கோடி வாக்காளர்களில் இவர்களுக்கு வாக்களித்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று பட்டியல் போட்டு சட்டமன்றத் தேர்தலை விட தாங்கள் எவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளோம் என்று கூறத் தயாரா என்று கேளுங்கள்.
முஸ்லிம் லீக் வென்ற இடங்களில் கால்வாசி இடங்களில் கூட வெற்றி பெறாத இவர்கள் தம்பட்டம் அடிப்பதை அவர்களின் தொண்டர்களே சகித்துக் கொள்ள மாட்டார்கள்.
எஸ் டி பி ஐ இயக்கத்தினர், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து ஐம்பது இடங்களில் வெற்றி பெற்றதாகப் பெருமையடித்துக் கொள்கின்றனர். அவர்கள் அடித்துக் கொள்ளும் தம்பட்டத்திற்கும் இந்தப் பதில் பொருந்தும்.
உணர்வு 16:10