உண்மைக்கு இலக்கணம் இத்ரீஸ் (அலை)

– பீ.ஜே

1986 ல் அந்நஜாத் இதழில் பீஜே எழுதிய கட்டுரையை இங்கே வெளியிடுகிறோம்

இத்ரீஸ் (அலை) ஹிஸ்ஸலாம் அவர்கள் மலக்குல் மவ்த் துக்கு நண்பராக இருந்தார்களாம். மரணத்தை அனுபவ ரீதியில் உணர தாம் விருப்புவதாக மலக்குல் மவ்திடம் கேட்டுக் கொண்டார்களாம் ! அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மலக்குல் மவ்த், இத்ரீஸ் நபியை மரணமடையச் செய்து பின்பு உயிர்ப்பித்தார்களாம்! தான் நரகத்தைக் கண்கூடாகக் காணவேண்டும் என்று இரண்டாவது கோரிக்கையை மலக்குல் மவ்திடம் சமர்ப்பித்தார்களாம் ! தமது இறக்கையில் இத்ரீஸ் நபியைச் சுமந்து சென்று நரகத்தை மலக்குல் மவ்த் சுற்றிக் காண்பித்தார்களாம்! தாம் சுவர்க்கத்தைக் காண விரும்புவதாக மூன்றாவது கோரிக்கையை மலக்குல் மவ்த் முன்னே வைக்க, அதையும் மலக்குல் மவ்த் நிறைவேற்றினார்களாம். சுவர்க்கத்தை சுற்றி பார்த்தபின், சுவனத்திலிருந்து வெளியே வர மறுத்துவிட்டு இன்று வரை சுவர்க்கத்திலேயே இருக்கிறார்களாம்:

இப்படி ஒரு கதை பரவலாகச் சொல்லப்படுகின்றது இந்தக் கதை உண்மையானது தானா? என்று நாம் ஆராய்வோம்.

இந்தக் கதையில் சொல்லப்படுகின்ற மலக்குல் மவ்த் சுவர்க்கம் நரகம் போன்றவை சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளன  இது போன்ற நிகழ்ச்சி நடந்திருக்குமானால், அல்லாஹ்வும், அவனது திருத் தூதரும் தான் நமக்கு சொல்லித் தரமுடியும். நம்முடைய அறிவு, அனுமானம் கொண்டோ, சரித்திர நூல்களின் ஆதாரம் கொண்டோ இவைகளை நாம் அறியமுடியாது.

அல்லாஹ் இது போல் நடந்ததாக திருக்குர்ஆனில் எந்த இடத்திலும் சொல்லவில்லை. அல்லாஹ்வின் தூதராவது இதைச் சொல்லி இருக்கிறார்களா ? என்று ஆராய்ந்தால், இப்படி அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களும் சொல்லவில்லை,

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாக இப்ராஹீம் இப்னு அப்துல்லாஹ் இப்னு காலித் என்பவர் மூலமாக இமாம் தப்ரானி அவர்கள் பதிவு செய்துள்ளனர். மேற்கூறிய இப்ராஹீமைப் பற்றி : பெரும் பொய்யன் என்று ஹாபிழ் ஹைஸமீ (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இமாம் ஹாகிம் அவர்கள் இவரது எல்லா ஹதீஸ்களும் இட்டுக்கட்டப்பட்டவையே என்று கூறுகிறார்கள். நபி (ஸல்) பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பொய்யைத் தவிர இதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது.

அல்லாஹ்வும், அவனது திருத்தூதரும் இதைச் சொல்லவில்லை என்பதே , இந்தக் கதை பொய்யானது என்பதற்கு போதிய ஆதாரம், என்றாலும், திருக்குர்ஆன் வசனங்களுக்க்கும் எவ்வாறு இந்தக் கதை முரண்படுகின்றது என்பதைப் பார்ப்போம்.

இத்ரீஸ் நபியவர்கள் திட்டமிட்டு மலக்குல் மவ்தை ஏமாற்றினார்கள் என்ற கருத்தை இந்தக் கதை வெளிப்படுத்துகின்றது. சுற்றிப் பார்த்து விட்டு வருவதாகக் கூறிவிட்டு . சுவர்க்கத்திலிருந்து வெளியேற மறுத்ததன் மூலம் . ஒரு மலக்கையே ஏமாற்றினார்கள் என்பது நபிமார்களின் பண்பாக இருக்க முடியுமா ?

அவர் மிகமிக உண்மை பேசுபவராக இருந்தர் என்று இத்ரீஸ் நபியைப் பற்றி அல்லாஹ் புகழ்ந்து கூறி இருக்கும் போது, (அல்குர் ஆன் 19:56) உண்மைக்கு மாற்றமாக அவர்கள் எப்படிப் பேசி இருக்க முடியும்? அதுவும் அல்லாஹ்விடமே பொய் சொன்னதாக ஆகாதா?

நபிமார்களின் பண்புகளையும், மலக்குகளின் பண்புகளையும் உணர்ந்தவர்கள் இதை எப்படி உண்மை என்று நம்ப முடியும் ?

நல்லடியார்கள் சுவர்க்கத்தில் கூட்டங்கூட்டமாக சுவர்க்கத்துக்கு அழைத்து வரப்படுவார்கள் என்ற கருத்தைத் திருக்குர்ஆனின் 39:73 வசனம் சொல்கின்றது.

இந்தக் குர்ஆனின் கருத்துக்கு மாற்றமாக தனி நபராக இத்ரீஸ் நபியவர்கள் எப்படி சுவர்க்கத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பார்கள்? அவர்களுக்கு மட்டும் இந்தப் பொது விதிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தால் அல்லாஹ்வோ, அவனது தூதரோ அல்லவா அதைச் சொல்ல முடியும்?

நரகத்திற்கென்று தனியாக அல்லாஹ் சில மலக்குகளை நியமனம் செய்திருக்கிறான், அவர்கள் கடின சித்தமுடையவர்கள். எவருக்காகவும் பரிதாபப்பட மாட்டார்கள் . அல்லாஹ் அவர்களுக்கு உத்தரவிட்டதில் ஒரு சிறிதும் மாறு செய்யமாட்டார்கள் ! தங்களுக்கு இடப்பட்ட கட்டளைகளையே செய்து வருவார்கள் என்ற கருத்தைக் திருக்குர் ஆனின் 66:6 வசனம் நமக்குச் சொல்கிறது.

நரகத்தின் காவலர்களின் கட்டுப்பாட்டை மீறி மலக்குல் மவ்த் அவர்கள் எப்படி நரகத்திற்கு அழைத்துச் சொன்றிருக்க இயலும் ? உயிரை வாங்குவதற்காக நியமனம் செய்யப்பட்ட மலக்குகள் தங்களுக்கு கட்டளை இடப்படாதவைகளைச் செய்யமாட்டார்கள் . இடப்பட்ட கட்டளைகளையே செய்வார்கள் என்ற கருத்தைக் குர் ஆனின் 21:27 வசனம் சொல்லும் போது மலக்குல் மவ்து இதை செய்திருக்க மாட்டார்கள் என்று தெளிவாக உணரலாம்.

நரகத்தின் காவலர்களாக உள்ள மலக்குகளின் அதிகாரத்தில் மலக்கு மவ்த் தலையிட்டிருக்க மாட்டார்கள் என்று எவரும் உணர முடியும்.

நாம் எடுத்துக் காட்டிய திருக்குர்ஆனின் வசனங்களுடன் மூரண்படுவதாலும் இந்தக் கதை பொய்யானது என்று தெளிவாகிறது.

சுவன வாழ்வை அடைய இப்படி ஒரு குறுக்கு வழியை அல்லாஹ் ஏற்படுத்தித் தரவில்லை. நல் அமல்கள் செய்து வல்ல ரஹ்மானிடம் சுவன வாழ்வைத் தரும்படி பிரார்த்தனை செய்வதுதான் ஒரு முஸ்லிம் செய்ய வேண்டும். நபிமார்கள் இப்படித்தான் செய்துள்ளனர். குர்ஆனின் 26:35 வசனம் இதை நமக்கு நன்றாக தெளிவுபடுத்துகின்றது.

குறுக்கு வழிகள் இருப்பதாக நம்பி ஏமாந்துவிடாமல் , அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் காட்டிய வழியில் நாம் நடப்போமாக. அல்லாஹ் அதற்குத் துணை செய்வானாகவும்.