வைர வைடூரியக் கற்களுக்கு ஜகாத் கொடுப்பது அவசியமா?

நம்முடைய பொருளாதாரத்தில் எஞ்சிய செல்வத்தை அனுமதிக்கப்பட்டதாக இறைவன் ஆக்க வேண்டும் எனில் அதற்கு ஜகாத் வழங்க வேண்டும். ஒவ்வொன்றிற்கும் ஜகாத் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை அல்லாஹ்வும், அவனது தூதரும் தெளிவுபடுத்தி விட்டார்கள். கால்நடைகளுக்கும், விளைபொருட்களுக்கும் உரிய ஜகாத் மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளது. மேலும் தங்கம், வெள்ளிக்கும் உரிய ஜகாத்தும் மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளது.

வைரம், வைடூரியம், மரகதம், மாணிக்கம், பிளாட்டினம் போன்றவைகளுக்கு ஜகாத் உண்டு என்று மார்க்கத்தில் நேரடியாகச் சொல்லப்படவில்லை. ஆனாலும் செல்வங்களுக்கு ஜகாத் உண்டு என்று பொதுவாகச் சொல்லப்பட்டதில் மேற்கண்டவையும் அடங்கும்.

(முஹம்மதே!) அவர்களின் செல்வங்களில் தர்மத்தை எடுப்பீராக! அதன் மூலம் அவர்களைத் தூய்மைப்படுத்தி, பரிசுத்தமாக்குவீராக! அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக! உமது பிரார்த்தனை அவர்களுக்கு மன அமைதி அளிக்கும். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.

திருக்குர்ஆன்:9:103

இந்த வசனத்தில்  ‘அவர்களின் செலவங்களில் இருந்து தர்மத்தை எடுப்பீராக’ என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். மதிப்புமிக்க அனைத்துமே செல்வங்களில் அடங்கிவிடும். தங்கம், வெள்ளி ஆகியவை மதிப்புமிக்க செல்வமாக இருந்தது மட்டுமின்றி அவை அன்றைக்கு நாணயமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தன. அதன் காரணமாகவே தங்கம், வெள்ளி என்று குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளது.

ரூபாய் நோட்டுக்களுக்கு ஜகாத் உண்டு என்று என்பதை உலக முஸ்லிம்கள் அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். தங்கம், வெள்ளி பற்றித் தான் ஹதீஸ்களில் சொல்லப்பட்டுள்ளது; அதனால் ரூபாய்களுக்கு ஜகாத் இல்லை என்று யாரும் சொல்வதில்லை.

ரூபாயை வைத்து தங்கம், வெள்ளியை வாங்க முடியும் என்பதால் ரூபாய்களுக்கும் ஜகாத் உண்டு என்று புரிந்து கொள்கிறோம்.

அது போல் தான் வைரம், வைடூரியம் போன்ற கற்களைக் கொண்டு தங்கம், வெள்ளியை வாங்க முடியும். எனவே ரூபாய்களை எப்படி நாம் தங்கமாக, வெள்ளியாகக் கணக்கிட்டு ஜகாத் கொடுக்கிறோமோ அது போல் மதிப்பு மிக்க கற்களுக்கும் ஜகாத் கொடுக்க வேண்டும். நேரடியாகச் சொல்லப்பட்டவைகளுக்கு மட்டுமே ஜகாத் என்று சொன்னால் ஜகாத் என்ற அம்சமே சமுதாயத்தில் இல்லாமல் போய்விடும்.

தனக்கு வரும் கோடானுகோடி ரூபாய்களை வைரமாக ஒருவன் பெற்றுக் கொண்டு ஜகாத் கொடுக்காமல் தப்பித்துக் கொள்வான். ஒருவருக்கு நாம் பத்து லட்சம் ரூபாய்களை அல்லது அதன் மதிப்பிலான தங்கத்தை அன்பளிப்பாகக் கொடுக்கிறோம். அன்பளிப்பாகப் பெற்றவருக்கு இது வருமானமாக சொத்தாக அமைந்துள்ளதால் அதற்கு அவர் ஜகாத் கொடுக்க வேண்டும்.

ஆனால் ரூபாய்களாகவோ, தங்கமாகவோ கொடுக்காமல் பத்து லட்சம் மதிப்புள்ள வைரத்தை வாங்கி அன்பளிப்பாகக் கொடுத்தால் அவருக்கு ஜகாத் இல்லை என்ற நிலை ஏற்படும். அதுபோல் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கார்களை ஒருவன் பெற்றால் அதற்கு ஜகாத் இல்லை என்ற நிலை ஏற்படும். பல கோடி மதிப்புள்ள வீடு ஒருவனுக்குக் கிடைத்தால் அதற்கு அவன் ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை என்ற நிலை இதனால் ஏற்படும்.

நேரடியாகச் சொல்லப்பட்டுள்ளதா என்ற கேள்வி, செல்வந்தர்கள் ஜகாத் கொடுக்காமல் தப்பிக்க வழி வகுக்கும். எனவே வைரம், வைடூரியம் போன்றவைகளுக்கும் ஜகாத் உண்டு என்பதே சரியானதாகும். கற்களுக்கு ஜகாத் இல்லை என்று சில நபிமொழிகள் உள்ளன. அவை அனைத்தும் பலவீனமானவையாகும்.

வைரம் போன்ற விலை உயர்ந்த ஆபரணக் கற்களுக்கு ஜகாத் இல்லை என்பதற்கு இவற்றை ஆதாரமாகக் கொள்ளலாகாது.