வங்கிகளில் வேலை செய்யலாமா?

பாவமான காரியத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் எந்த ஒரு நிறுவனத்திலும் ஊழியராகப் பணியாற்றுவது கூடாது. அந்த ஊழியர் செய்யும் பணி, பாவமில்லாத காரியமாக இருந்தாலும் அந்த நிறுவனத்தில் பணியாற்றுவது தீமையைச் செய்வதாகவே கருதப்படும்.

உதாரணமாக ஒருவர் மதுபானக் கடையில் ஊழியராகப் பணியாற்றுகிறார். ஆனால் அவர் மது குடிப்பவர்களுக்கு ஊறுகாய், மீன் வறுவல் மட்டுமே விற்பனை செய்கின்றார்.

ஊறுகாய், மீன் வறுவல் விற்பனை செய்வது ஹலாலாக இருந்தாலும் அதனை மதுபானக் கடை ஊழியராக இருந்து கொண்டு மதுபானக் கடையில் விற்பனை செய்தால் மதுபானம் விற்பது எப்படிக் குற்றமோ அதே குற்றம்தான் அந்த நிறுவனத்தில் ஊழியராக இருந்து கொண்டு ஹலாலான பொருளை விற்பனை செய்வதும் என்பதைப் பின்வரும் வசனத்திலிருந்து அறியலாம்.

وَقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِي الْكِتَابِ أَنْ إِذَا سَمِعْتُمْ آيَاتِ اللَّهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَأُ بِهَا فَلَا تَقْعُدُوا مَعَهُمْ حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ إِنَّكُمْ إِذًا مِثْلُهُمْ إِنَّ اللَّهَ جَامِعُ الْمُنَافِقِينَ وَالْكَافِرِينَ فِي جَهَنَّمَ جَمِيعًا )النساء: 140(

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான்.

திருக்குர்ஆன் 4:140

தீமையான காரியங்களை நாம் செய்யாவிட்டாலும் அக்காரியங்கள் நடைபெறும் இடங்களிலும், நிகழ்ச்சிகளிலும், வைபவங்களிலும் நாம் பங்கெடுத்தால் நாமும் அத்தீமையைச் செய்ததாகவே இறைவனால் கருதப்படுகின்றது என்பதை மேற்கண்ட வசனத்திலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.

வட்டியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஒரு நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றுவது அந்த நிறுவனத்தின் பாவமான காரியத்திற்கு துணை செய்வதாகத்தான் ஆகும்.