வந்தேமாதரம் பாடத்தேவை இல்லை – உயர்நீதிமன்றம்

வந்தே மாதரம் பாடச்சொல்லி  எவரையும் வற்புறுத்த முடியாது:

– லக்னோ நீதிமன்றம்  அதிரடித் தீர்ப்பு..!

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் வந்தே மாதரம் பாடல் ஒலிக்கப்பட்ட போது, கூட்ட அரங்கை விட்டு வெளிநடப்பு செய்த, பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி ஷஃபீகுர் ரஹ்மானுக்கு எதிராக, சவுரப் ஷர்மா என்பவர் லக்னோ உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.சிங் மற்றும் வீ.கே.அரோடா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது இவ்வழக்கில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்;  ஜன கன மன தான் இந்தியாவின் தேசிய கீதம் எனவும், வந்தே மாதரம் என்பது தேசிய கீதமாகாது என்றும் வாதிட்டார். ஆகவே இதை பாடச் சொல்லி எவரையும் வற்புறுத்தவும் முடியாது என்றும் தனது வாதத்தை பதிவு செய்தார்.

இதனைத் தொடர்ந்து, சவுரப் ஷர்மா தாக்கல் செய்த பொது நல வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர் ஷஃபீகுர் ரஹ்மான் வந்தே மாதரம் நிகழ்ச்சியைப் புறக்கணித்தது, அவரது தனிப்பட்ட நிலைப்பாடு, அதை எதிர்த்து பொது நல வழக்கு தாக்கல் செய்ய முடியாது எனக்கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்..!

ஜனகன மன பாடலைப் புறக்கணித்துவிட்டு வந்தே மாதரம் பாடுவது என்பது தேசவிரோத செயலாகும். அந்த தேசத் துரோகத்தை சங் பரிவாரக் கும்பல் செய்து வருகின்றது.

வந்தே மாதரம் பாடலை இந்தியக் குடிமகன்கள் பாட வேண்டும் என்பதோ, வந்தே மாதரம் பாடும் போது அதற்கு எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும் என்பதோ இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லாத ஒன்றாகும்.

வந்தே மாதரம் பாடல் ஒலிக்கப்பட்டபோது அவையை விட்டு வெளிநடப்புச் செய்த ஷஃபீக்குர் ரஹ்மான் எம்.பி அவர்களை தேசத்துரோகி போல சித்தரித்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ஆனால் அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டு, அந்த வழக்கை லக்னோ உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த செய்தியை சொல்லி வைத்தாற்போல அனைத்து ஊடகங்களும் இருட்டடிப்புச் செய்துள்ளன.

இதுவே இவர்களது நடுநிலை(?) தன்மையைப் பறைசாற்றுகின்றது. வந்தே மாதரம் பாடலை பாடக்கூடாது என்ற முஸ்லிம்களின் தீர்மானத்திற்கு எதிராக வழக்குத் தொடராலாமா என மத்திய அரசு ஆலோசனை செய்து மண்ணைக் கவ்விய செய்தியை சென்ற இதழில், வந்தே மாதரம் பாடலை பாட மறுப்பது தேசத்துரோகமா? என்ற கேள்விக்கு அளிக்கப்பட்ட பதில்கள் பகுதியில் தெளிவுபடுத்தியிருந்தோம். நமது அந்த நிலைப்பாட்டை தற்போது லக்னோ உயர்நீதி மன்றத் தீர்ப்பும் உறுதி செய்துள்ளது.