கேள்வி

வருடத்தில் ஒரு இரவில் கொள்ளை நோய் இறங்கும். அந்த இரவில் எந்தப் பாத்திரம் மூடப்படவில்லையோ அந்தப் பாத்திரத்தில் அந்த நோய் இறங்கியே தீரும் என்று முஸ்லிமில் ஹதீஸ் உள்ளதா? அந்த ஹதீஸ் சரியானதா?

பதில்

நீங்கள் குறிப்பிடும் ஹதீஸ் முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ஹதீஸ் இதுதான்

صحيح مسلم

99 – (2014) وحَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، حَدَّثَنِي يَزِيدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ أُسَامَةَ بْنِ الْهَادِ اللَّيْثِيُّ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ جَعْفَرِ بْنِ عَبْدِ اللهِ بْنِ الْحَكَمِ، عَنِ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «غَطُّوا الْإِنَاءَ، وَأَوْكُوا السِّقَاءَ، فَإِنَّ فِي السَّنَةِ لَيْلَةً يَنْزِلُ فِيهَا وَبَاءٌ، لَا يَمُرُّ بِإِنَاءٍ لَيْسَ عَلَيْهِ غِطَاءٌ، أَوْ سِقَاءٍ لَيْسَ عَلَيْهِ وِكَاءٌ، إِلَّا نَزَلَ فِيهِ مِنْ ذَلِكَ الْوَبَاءِ»،

பாத்திரத்தை மூடி வையுங்கள்! தண்ணீர்ப் பையின் வாயைக் கட்டுங்கள்! ஏனெனில் வருடத்தில் ஓர் இரவில் கொள்ளை நோய் இறங்கும். எந்தப் பாத்திரத்தின் மீது மூடி இல்லையோ மேலும் எந்த தண்ணீர்ப் பையின் வாய் கட்டப்படவில்லையோ அதில் அந்தக் கொள்ளை நோய் இறங்காமல் போகாது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் ஜாபிர் (ரலி)

இந்த ஹதீஸின் எல்லா அறிவிப்பாளர்களும் நம்பகமானவர்கள் ஆவர். அறிவிப்பாளர் தொடரைப் பொருத்து இது சரியான ஹதீஸ் என்றாலும் இதில் நுணுக்கமான குறைபாடு உள்ளது. அந்த விபரம் இதுதான்:

இந்தச் செய்தி பல நூல்களில் பல வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தனை அறிவிப்புக்களும் ஜாபிர் (ரலி) என்ற நபித்தோழர் மூலமே அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட ஹதீஸை ஜாபிர் (ரலி) அவர்களிடம் கேட்டு அறிவிப்பவர் கஃகாவு பின் ஹகீம் ஆவார்.

இவர் அல்லாத இன்னும் நால்வரும் ஜாபிர் (ரலி) வழியாக இது குறித்த செய்தியை அறிவித்துள்ளனர்.

ஜாபிர் (ரலி) கூறியதாக இதே செய்தியை அதாவு என்பாரும் அறிவித்துள்ளார்.  – புகாரி

صحيح البخاري

5624 – حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا هَمَّامٌ عَنْ عَطَاءٍ عَنْ جَابِرٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَطْفِئُوا الْمَصَابِيحَ إِذَا رَقَدْتُمْ وَغَلِّقُوا الْأَبْوَابَ وَأَوْكُوا الْأَسْقِيَةَ وَخَمِّرُوا الطَّعَامَ وَالشَّرَابَ وَأَحْسِبُهُ قَالَ وَلَوْ بِعُودٍ تَعْرُضُهُ عَلَيْهِ

صحيح البخاري

6296 – حَدَّثَنَا حَسَّانُ بْنُ أَبِي عَبَّادٍ حَدَّثَنَا هَمَّامٌ حَدَّثَنَا عَطَاءٌ عَنْ جَابِرٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَطْفِئُوا الْمَصَابِيحَ بِاللَّيْلِ إِذَا رَقَدْتُمْ وَغَلِّقُوا الْأَبْوَابَ وَأَوْكُوا الْأَسْقِيَةَ وَخَمِّرُوا الطَّعَامَ وَالشَّرَابَ قَالَ هَمَّامٌ وَأَحْسِبُهُ قَالَ وَلَوْ بِعُودٍ يَعْرُضُهُ

ஜாபிர் (ரலி) கூறியதாக இதே செய்தியை அபூ சுஃப்யான் என்பாரும் அறிவித்துள்ளார். முஸ்னத் அஹ்மத்

مسند أحمد

14974 – حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، قَالَ: جَاءَ أَبُو حُمَيْدٍ الْأَنْصَارِيُّ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَدَحٍ فِيهِ لَبَنٌ يَحْمِلُهُ مَكْشُوفًا، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” أَلَا كُنْتَ خَمَّرْتَهُ، وَلَوْ بِعُودٍ تَعْرِضُهُ عَلَيْهِ “

ஜாபிர் (ரலி) கூறியதாக இதே செய்தியை அபுஸ்ஸுபைர் என்பாரும் அறிவித்துள்ளார். ,முஸ்னத் அஹ்மத்

مسند أحمد

23608 – حَدَّثَنَا رَوْحٌ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، وزَكَرِيَّا بْنُ إِسْحَاقَ، قَالَا: حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ، يَقُولُ: أَخْبَرَنِي أَبُو حُمَيْدٍ: أَنَّهُ أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَدَحِ لَبَنٍ مِنَ النَّقِيعِ، لَيْسَ بِمُخَمَّرٍ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” لَوْلَا خَمَّرْتَهُ وَلَوْ بِعُودٍ تَعْرُضُهُ “

ஜாபிர் (ரலி) கூறியதாக இதே செய்தியை அபூ ஸாலிஹ் என்பாரும் அறிவித்துள்ளார். முஸ்னத் அபீ யஃலா

مسند أبي يعلى الموصلي

2010- 2005- حَدَّثنا إِسْحَاقُ، حَدَّثنا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، وَأَبِي سُفيَانَ، عَنْ جَابِرٍ، قَالَ: جَاءَ رَجُلٌ يُقَالُ لَهُ أَبُو حُمَيْدٍ بِقَدَحٍ مِنْ لَبَنٍ مِنَ النَّقِيعِ، فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلى الله عَليه وسَلم: أَلَا خَمَّرْتَهُ وَلَوْ بِعُودٍ تَعْرُضُهُ عَلَيْهِ.

இந்த நால்வரும் அறிவிக்கும் ஹதீஸ்களில் பாத்திரத்தை மூடி வைக்கும் செய்தியும் மற்ற செய்திகளும் உள்ளன. ஆனால் வருடத்தில் ஒரு நாள் கொள்ளை நோய் இறங்கும் என்ற சொற்கள் இல்லை. ஒரே நபித்தோழரிடமிருந்து ஒரு விஷயம் தொடர்பான செய்தியை அறிவிக்கும் ஐவரில் நால்வர் கூறாத வாசகத்தை கஃகாவு பின் ஹகீம் அவர்கள் மட்டுமே கூடுதலாகக் குறிப்பிட்டுள்ளார்.

பலர் அறிவிப்பதை விட கூடுதலான விஷயத்தை ஒரு நம்பகமானவர் கூறினால் அதையும் ஏற்க வேண்டும் என்றாலும் மற்றொரு காரணத்தால் இந்தக் கூடுதல் வாசகம் கொண்ட செய்தி மறுக்கப்படும் செய்தியாக ஆகி விடுகின்றது.

அதாவது முஸ்லிமில் பதிவு செய்யப்பட்ட இந்த ஹதீஸின் அடுத்த ஹதீஸாக பின் வரும் ஹதீஸை முஸ்லிம் இமாம் பதிவு செய்துள்ளார்.

அந்த ஹதீஸ் இதுதான்:

صحيح مسلم

(2014) – وحَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، بِهَذَا الْإِسْنَادِ بِمِثْلِهِ غَيْرَ أَنَّهُ قَالَ: «فَإِنَّ فِي السَّنَةِ يَوْمًا يَنْزِلُ فِيهِ وَبَاءٌ»، وَزَادَ فِي آخِرِ الْحَدِيثِ: قَالَ اللَّيْثُ: فَالْأَعَاجِمُ عِنْدَنَا يَتَّقُونَ ذَلِكَ فِي كَانُونَ الْأَوَّلِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பாத்திரங்களை மூடிவையுங்கள்; தண்ணீர் தோல் பையின் வாய்ப்பகுதியைச் சுருக்கிட்டு மூடிவையுங்கள். ஏனெனில்,ஆண்டின் ஓர் இரவில் கொள்ளை நோய் இறங்குகிறது. மூடியில்லாத பாத்திரத்தையும் சுருக்கிட்டு மூடிவைக்காத தண்ணீர் பையையும் கடந்து செல்லும் அந்த நோயில் சிறிதளவாவது அதில் இறங்காமல் இருப்பதில்லை.

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், “ஆண்டில் ஒரு நாள் உண்டு. அந்நாளில் கொள்ளை நோய் இறங்குகிறது” என்று இடம் பெற்றுள்ளது. ஹதீஸின் இறுதியில் “நமக்கு அருகிலுள்ள அரபியர் அல்லாதோர் (கானூன் அவ்வல் மாதத்தில் அதாவது) டிசம்பர் மாதத்தில் அந்த நாள் வருவதாகக் கருதி அஞ்சுகின்றனர்” என்று லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

ஸஹீஹ் முஸ்லிம் : 4102.

அத்தியாயம் : 36. குடிபானங்கள்

நபிகள் நாயகம் (ஸல்) கூறிய அந்த நாள் டிசம்பர் மாதத்தில் தான் உள்ளது என்று காஃபிர்கள் எப்படி முடிவு செய்வார்கள் என்பதைச் சிந்தித்தால் இதில் உள்ள குறைபாடு தெரிய வரும்.

வருடத்தில் ஒரு நாளில் டிசம்பர் மாதத்தில் ஒரு இரவு உள்ளது, அந்த இரவில் கொள்ளை நோய் இறங்கும் என்று காஃபிர்கள் நம்பி இருந்தார்கள் என்று இதன் அறிவிப்பாளர் லைஸ் என்பார் கூறுவதால் காஃபிர்களிடம் காணப்பட்ட ஒரு நம்பிக்கையை நபிகளின் சொல்லுடன் சேர்த்துக் கூறி விட்டார்.

அதாவது முதல் ஹதீஸில் உள்ள எல்லா சொற்களும் நபிகள் சொன்னது தான். மூடி வைப்பதற்கான காரணமாக காஃபிர்கள் கூறுவதை நம்பிய லைஸ் என்பார் தனது சொந்தக் கூற்றை நபியின் கூற்றுடன் கலந்து விட்டார்.

இதன் காரணமாகவே மற்ற நான்கு அறிவிப்பாளர்களின் அறிவிப்பில் இந்த வாசகம் காணப்படவில்லை. லைஸ் என்பார் இட்ம் பெறும் அறிவிப்பில் மட்டுமே இது இடம் பெற்றுள்ளது.

அறிவிப்பாளர் ஒருவர் நபியின் கூற்றுடன் சொந்தக் கூற்றை நுழைத்து அறிவிப்பதை முத்ரஜ் – இடைச் சொருகல் – எனக் கூறுவார்கள்.

நபியின் கூற்றை லைஸ் அறிவிக்கும் போது காஃபிர்களும் இந்த நம்பிக்கையில் இருந்தார்கள் என்றும் அவர்கள் அந்த இரவு டிசம்பர் மாதத்தில் உள்ளது என்று கருதினார்கள் என்றும் லைஸ் எனும் அறிவிப்பாளர் கூறுவதை கவனமாகப் பார்ப்பவர்கள் அறிந்து கொள்வார்கள்.

முஸ்லிம் இமாம் அவர்கள் சூசகமாக இதை உணர்த்துவதற்காக காஃபிர்களின் நம்பிக்கையைக் குறிக்கும் தகவலையும் அடுத்த ஹதீஸாகக் கொண்டு வந்துள்ளார்கள் எனக் கருத முடிகிறது

எனவே பாத்திரங்களை மூடி வைக்கச் சொல்லும் ஹதீஸ்கள் மட்டும் சரியானவை. ஒரு இரவில் கொள்ளை இறங்கும் எனக் கூறும் நபிகள் சொன்னதல்ல. லைஸ் என்பாரின் சொந்தக் கூற்று, காஃபிர்களின் நம்பிகைப்படி அவர் கூறிய சொந்தக் கருத்தாகும் இதற்கும் மார்க்கத்துக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.