ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஜகாத் கொடுக்கத் தேவை இல்லை என்று எந்த அறிஞராவது கூறி இருக்கிறாரா?

ஜாபர் அலி

பதில் :

இந்தக் கேள்விக்கு இஸ்லாத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லை.

கடந்த காலத்தில் யாராவது சொன்னார்கள் என்பதை வைத்தோ, சொல்லவில்லை என்பதை வைத்தோ இஸ்லாத்தின் சட்டங்களை முடிவு செய்ய முடியாது.

அல்லாஹ் கூறியுள்ளானா? அல்லாஹ்வின் தூதர் கூறியுள்ளார்களா என்பதை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.

ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மறுபடியும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று குர்ஆனிலோ, ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலோ கூறப்படவில்லை. இதுவே நமக்குப் போதுமாகும்.

யாராவது கூறியுள்ளார்களா என்பதைக் கவனிக்கத் தேவை இல்லை என்பதை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இருந்தாலும் ஒருவருமே இப்படிச் சொல்லவில்லை என்ற வாதம் பலவீனமான நம்பிக்கை உள்ளவர்களுக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் இதை முக்கிய ஆதாரம் போல் முன்வைக்கிறார்கள்.

எந்த ஒரு விஷயத்தைக் குறித்தும் முந்தைய காலத்தில் இக்கருத்தை யாரும் சொல்லவில்லை என்று யாராலும் கூறவே முடியாது.

அப்படி கூறுவதாக இருந்தால் முந்தைய காலத்தில் வாழ்ந்த ஒவ்வொருவரின் வரலாறையும் அவர்களின் ஒவ்வொரு கருத்துக்களையும் தேடிப்பார்த்து அவர் சொன்னாரா இல்லையா என்று கண்டுபிடிக்க வேண்டும். அவர் அப்படிச் சொல்லி இருந்தால் சொன்னார் என்று உறுதிபடக் கூறலாம்.

அவரது கருத்துக்களைத் தேடிப்பார்த்த வகையில் அவர் அப்படிச் சொன்னதாகக் காணப்படாவிட்டால் அப்போது கூட அவர் சொல்லவில்லை என்று அடித்துக் கூற முடியாது. நாம் திரட்டிய தகவலில் அப்படி இல்லை என்று தான் கூற முடியும். அவர் கூறியிருந்து அது நமக்கு கிடைக்காமல் போய் இருக்கவும் சாத்தியம் உண்டு.

ஒரே ஒரு மனிதர் விஷயமாகவே  இப்படி முடிவு செய்ய இயலாது.

அனைத்து அறிஞர்களையும் உள்ளடக்கி உலகில் ஒருவரும் சொல்லவில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்?

உலகில் வாழ்ந்த அனைத்து அறிஞர்களின் அனைத்து கருத்துக்களையும் இப்படி திரட்ட வேண்டும். எத்தனையோ அறிஞர்கள் தமது கருத்துக்களை எழுத்து வடிவமாக்காமல் சென்றுள்ளனர். எத்தனையோ அறிஞர்களின் எழுத்துக்கள் பாதுகாக்கப்படாமல அழிந்துள்ளன.

எனவே யாருமே கூறவில்லை என்ற வாதம் பொய்யை அடிப்படையாகக் கொண்டதாகும். யாராவது இப்படிக் கூறியதற்கு ஆதாரம் இல்லாவிட்டால் இந்தக் கருத்தை யாரும் கூறியுள்ளார்களா என்ற தகவல் கிடைக்கவில்லை என்று தான் கூறமுடியும். இக்கருத்தை யாரேனும் கூறியும் இருக்கலாம்; கூறாமலும் இருக்கலாம் என்று தான் சொல்ல முடியும்.

இக்கருத்தை யாரேனும் சொல்லி உள்ளார்களா என்றால் ஒரு பொருளுக்கு ஒரு முறை மட்டுமே ஜகாத் கடமை என்ற சட்டத்தை சில செல்வங்கள் விஷயத்தில் சொல்லி இருக்கிறார்கள். நாம் அனைத்து செல்வங்களுக்கும் கூறும் நிலைபாட்டை சில செல்வங்களுக்கு மட்டும் கூறியுள்ளனர் என்பதுதான் வித்தியாசம்.

حفة الأحوذي – (ج 2 / ص 170)

قَالَ فِي سُبُلِ السَّلَامِ : وَفِي الْمَسْأَلَةِ أَرْبَعَةُ أَقْوَالٍ : الْأَوَّلُ وُجُوبُ الزَّكَاةِ ، وَهُوَ مَذْهَبُ الْهَدَوِيَّةِ وَجَمَاعَةٍ مِنْ السَّلَفِ وَأَحَدُ أَقْوَالِ الشَّافِعِيِّ عَمَلًا بِهَذِهِ الْأَحَادِيثِ . وَالثَّانِي لَا تَجِبُ الزَّكَاةُ فِي الْحِلْيَةِ وَهُوَ مَذْهَبُ مَالِكٍ وَأَحْمَدَ وَالشَّافِعِيِّ فِي أَحَدِ أَقْوَالِهِ لِآثَارٍ وَرَدَتْ عَنْ السَّلَفِ قَاضِيَةً بِعَدَمِ وُجُوبِهَا فِي الْحِلْيَةِ ، وَلَكِنْ بَعْدَ صِحَّةِ الْحَدِيثِ لَا أَثَرَ لِلْآثَارِ ، وَالثَّالِثُ أَنَّ زَكَاةَ الْحِلْيَةِ عَارِيَتُهَا ، كَمَا رَوَى الدَّارَقُطْنِيُّ عَنْ أَنَسٍ وَأَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ ، الرَّابِعُ أَنَّهَا تَجِبُ فِيهَا الزَّكَاةُ مَرَّةً وَاحِدَةً رَوَاهُ الْبَيْهَقِيُّ عَنْ أَنَسٍ

அணியப்படும் ஆபரணங்களில் ஒரு முறை மட்டுமே ஜகாத் என்று நபித்தோழர் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். இந்தத் தகவல் பைஹகீயில் 7331 வது செய்தியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

உரிமையாளரால் தீனி போடப்பட்டு வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு அவற்றின் ஆயுளில் ஒரு முறை மட்டுமே ஸகாத் உண்டு என்ற கருத்தைச் சில அறிஞர்கள் கூறியுள்ளனர்.

ஆபரணங்களுக்கும், பணியில் ஈடுபடுத்தப்படும் கால்நடைகளுக்கும் ஒரு முறை ஜகாத் கொடுத்துவிட்டால் மறு தடவை கொடுக்க வேண்டியதில்லை என்று சிலர் கூறியுள்ளனர்.

المحلي بالاثار لابن حزم

6 – مَسْأَلَةٌ: وَالزَّكَاةُ تَتَكَرَّرُ فِي كُلِّ سَنَةٍ، فِي الإِبِلِ، وَالْبَقَرِ، وَالْغَنَمِ، وَالذَّهَبِ وَالْفِضَّةِ، بِخِلافِ الْبُرِّ وَالشَّعِيرِ وَالتَّمْرِ، فَإِنَّ هَذِهِ الأَصْنَافَ إذَا زُكِّيَتْ فَلا زَكَاةَ فِيهَا بَعْدَ ذَلِكَ أَبَدًا

அறுவடை செய்யப்பட்ட பயிர்களுக்கு ஒரு முறை மட்டுமே ஜகாத் என்று பெரும்பாலான அறிஞர்கள் கூறுகின்றனர்.

இந்தத் தகவல்களை இமாம் இப்னு ஹஸ்ம் அவர்கள் அல்முஹல்லா என்ற தனது சட்ட ஆய்வு நூலில் ஜகாத்துடைய பாடத்தில் பதிவு செய்துள்ளார்.

எனவே ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஸகாத் கொடுக்க வேண்டும் என்பதில் யாரும் மாற்றுக் கருத்து கொண்டதில்லை என்ற வாதம் பொய்யானது என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.