இரவுத் தொழுகை
கடமையான தொழுகைக்குப் பிறகு மிகவும் சிறப்பு வாய்ந்த, அதிக நன்மையை பெற்றுத் தரக் கூடிய தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்.
‘ரமலான் மாதத்திற்குப் பிறகு சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1982
இரவில் தொழப்படும் தொழுகைக்குப் பல பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
- ஸலாத்துல் லைல் (இரவுத் தொழுகை)
2.கியாமுல் லைல் (இரவில் நிற்குதல்)
- வித்ர் (ஒற்றைப்படைத் தொழுகை)
- தஹஜ்ஜுத் (விழித்துத் தொழும் தொழுகை) ஆகிய பெயர்கள் ஹதீஸ்களில் காணப்படுகின்றன.
ரமலான் மாதத்தில் தொழப்படும் இரவுத் தொழுகைக்குப் பழக்கத்தில் தராவீஹ் என்று குறிப்பிடுகின்றனர். இந்தப் பெயர் நபிமொழிகளில் குறிப்பிடப்படவில்லை.
இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். ஒருவர் இரவுத் தொழுகையை முடித்துக் கொள்ள நாடினால் ஒற்றைப் படை எண்ணிக்கை தொழுது அத்தொழுகையை முடிக்க வேண்டும்.
ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகையைப் பற்றிக் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். உங்களில் எவரும் ஸுப்ஹுத் தொழுகையைப் பற்றி அஞ்சினால் அவர் ஒரு ரக்அத் தொழட்டும். அவர் (முன்னர்) தொழுதவற்றை அது ஒற்றையாக ஆக்கி விடும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரீ 990
இரவுத் தொழுகையின் நேரம்
இஷாத் தொழுகை முடிந்ததிலிருந்து பஜ்ர் நேரம் வரும் வரை இத்தொழுகையைத் தொழலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனைத்து நேரங்களிலும் தொழுதுள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை முடித்ததிலிருந்து பஜ்ர் தொழுகை வரை (மொத்தம்) 11 ரக்அத்கள் தொழுதுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 1216
இரவின் கடைசியின் மூன்றிலொரு பகுதி நேரமான போது 11 ரக்அத்கள் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலி)
நூல்: புகாரீ 7452
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாள் இரவின் கடைசி நேரத்தில் எழுந்து தொழுதார்கள். (ஹதீஸின் கருத்து)
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 376
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாதி இரவான போது எழுந்து தொழுதார்கள். (ஹதீஸின் கருத்து)
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரீ 183
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவின் அனைத்து நேரத்திலும் வித்ர் தொழுதுள்ளார்கள். அவர்களின் வித்ர் (சில நேரங்களில்) ஸஹர் வரை நீடித்துள்ளது.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரீ 996
ரக்அத்களின் எண்ணிக்கை
8+3 ரக்அத்கள்
‘ரமலானில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?’ என்று ஆயிஷா (ரலி) இடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமலானிலும், ரமலான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழுததில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும், நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும், நீளத்தையும் கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்’ என்று விடையளித்தார்கள்.
‘அல்லாஹ்வின் தூதரே! வித்ருத் தொழுவதற்கு முன் நீங்கள் உறங்குவீர்களா?’ என்று நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘ஆயிஷா! என் கண்கள் தாம் உறங்குகின்றன; என் உள்ளம் உறங்குவதில்லை’ என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஸலமா
நூல்: புகாரீ 1147
12+1 ரக்அத்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியும் எனது சிறிய தாயாருமான மைமூனா (ரலி) அவர்களின் வீட்டில் நான் ஒரு நாள் இரவு தங்கினேன். நான் தலையணையின் பக்க வாட்டில் சாய்ந்து தூங்கினேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களது மனைவியும் அதன் மற்ற பகுதியில் தூங்கினார்கள். இரவின் பாதி வரை – கொஞ்சம் முன் பின்னாக இருக்கலாம் – நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தூங்கினார்கள். பின்னர் விழித்து அமர்ந்து தங்களுடைய கையால் முகத்தைக் தடவித் தூக்கக் கலக்கத்தைப் போக்கினார்கள். பின்னர் ஆலுஇம்ரான் என்ற அத்தியாயத்தின் இறுதியிலுள்ள பத்து வசனங்களை ஓதினார்கள். பின்னர் எழுந்து சென்று, தொங்க விடப்பட்டிருந்த பழைய தோல் பையிலிருந்து (தண்ணீர் எடுத்து) உளூவை நல்ல முறையில் செய்தார்கள். நானும் எழுந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தது போன்று (உளூ) செய்து விட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அருகில் போய் நின்றேன். அவர்கள் தங்கள் வலக்கரத்தை என் தலை மீது வைத்தார்கள். எனது வலது காதைப் பிடித்து (அவர்களின் வலப்பக்கம்) நிறுத்தினார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்பு வித்ரு தொழுதார்கள். பின்னர் பாங்கு சொல்பவர் வரும் வரை சாய்ந்து படுத்தார்கள். பிறகு எழுந்து சுருக்கமாக இரு ரக்அத்கள் தொழுது விட்டு சுப்ஹுத் தொழுகைக்காக (வீட்டை விட்டு) வெளியே சென்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரீ 183
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரீ 1138
10+1 ரக்அத்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஒரு ரக்அத்தை வித்ராகத் தொழுதார்கள். தொழுது முடித்த பின் (தம்மை அழைப்பதற்காக) தொழுகை அறிவிப்பாளர் தம்மிடம் வரும் வரை வலப்பக்கம் சாய்ந்து படுத்திருப்பார்கள். (அவர்) வந்ததும் (எழுந்து) சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (ஸுப்ஹுடைய சுன்னத்) தொழுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 1339
8+5 ரக்அத்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ராகத் தொழுவார்கள். அ(ந்த ஐந்து ரக்அத்)தில் கடைசி ரக்அத் தவிர வேறெந்த ரக்அத்திலும் உட்கார மாட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 1341
9 ரக்அத்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், ‘ஃபஜ்ருடைய ஸுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள், (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் (நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுவார்கள்)’ என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: மஸ்ரூக்
நூல்: புகாரீ 1139
7 ரக்அத்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், ‘ஃபஜ்ருடைய ஸுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள், (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் (நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுவார்கள்)’ என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: மஸ்ரூக்
நூல்: புகாரீ 1139
5 ரக்அத்கள்
‘வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி)
நூல்: நஸாயீ
3 ரக்அத்கள்
‘வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி)
நூல்: நஸாயீ
1 ரக்அத்
‘வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி)
நூல்: நஸாயீ
தொழும் முறை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஐந்து அல்லது ஏழு ரக்அத்கள் வித்ர் தொழுவார்கள். அவற்றுக்கிடையே ஸலாமைக் கொண்டோ, அல்லது பேச்சைக் கொண்டோ பிரிக்க மாட்டார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)
நூல்: நஸாயீ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஐந்து ரக்அத்கள் வித்ர் தொழுவார்கள். அதன் கடைசியில் தவிர மற்ற ரக்அத்களில் அமர மாட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: நஸாயீ 1698
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உடல் கனத்த போது ஏழு ரக்அத்கள் தொழுதார்கள். அதில் அதன் கடைசி ரக்அத்தில் தவிர மற்ற ரக்அத்துகளில் உட்காரவில்லை.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: நஸாயீ 1699
… நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள வயதாகி பலவீனம் அடைந்த போது ஏழு ரக்அத்கள் வித்ரு தொழுதார்கள். அதில் ஆறாவது ரக்அத்தில் தவிர மற்ற ரக்அத்களில் உட்காரவில்லை. பின்னர் எழுவார்கள். ஸலாம் கொடுக்க மாட்டார்கள். பின்னர் ஏழாவது ரக்அத்தைத் தொழுவார்கள். பின்னர் ஸலாம் கூறுவார்கள். பின்னர் இரண்டு ரக்அத்கள் அமர்ந்து தொழுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: நஸாயீ 1700
ஸஜ்தா திலாவத்
தொழுகையிலும், தொழுகைக்கு வெளியிலும் குர்ஆனின் ஒரு சில குறிப்பிட்ட வசனங்களை ஓதும் போது ஸஜ்தாச் செய்கின்றோம். இதை ஸஜ்தா திலாவத் என்றழைக்கின்றோம்.
இந்த ஸஜ்தா திலாவத்திற்கான வசனங்கள் எவை? அதாவது எந்தெந்த வசனங்களை ஓதும் போது நாம் ஸஜ்தாச் செய்ய வேண்டும்? என்று நாம் பார்த்தால் தற்போது 14 வசனங்கள் ஸஜ்தா வசனங்களாக நடைமுறையில் உள்ளதைக் கண்டு வருகின்றோம். ஆனால் குர்ஆனின் ஓரத்தில் மொத்தம் 15 வசனங்களில் ஸஜ்தாச் செய்ய வேண்டுமென எழுதி வைத்துள்ளனர். 15 வசனங்களில் ஹஜ் எனும் அத்தியாயத்தில் இரண்டு வசனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இமாம் அபூஹனீபா அவர்கள் ஹஜ் அத்தியாயத்தில் ஒரேயொரு ஸஜ்தா வசனம் மட்டுமே உள்ளது என்று கூறுகின்றார். ஆனால் அதே சமயம் ஸாத் எனும் அத்தியாயத்தில் வரும் வசனத்தை ஸஜ்தா வசனமாக எடுத்துக் கொள்கின்றார்.
இமாம் ஷாஃபி அவர்கள் ஹஜ் அத்தியாயத்திலுள்ள இரண்டு வசனங்களையும் ஸஜ்தா வசனங்களாகக் கணக்கிடுகின்றார். ஆனால் ஸாத் (38வது) அத்தியாயத்திலுள்ள வசனத்தை விட்டு விடுகின்றார். ஆக இரண்டு பேருமே 14 வசனங்களை ஸஜ்தா வசனங்கள் என்று கூறுகின்றார்கள். ஆனால் இதற்குச் சான்றாக வைக்கப்படும் ஹதீஸ்கள் பலவீனமானவையாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், குர்ஆனில் 15 ஸஜ்தாக்களை என்னிடம் ஓதிக் காண்பித்தார்கள் என்றும், அவற்றில் (காஃப் அத்தியாயத்திலிருந்து குர்ஆனின் கடைசி அத்தியாயம் வரையிலான) முஃபஸ்ஸலான அத்தியாயங்களில் இடம் பெறும் மூன்று ஸஜ்தாக்களும், சூரத்துல் ஹஜ்ஜில் இடம் பெறும் இரண்டு ஸஜ்தாக்களும் அடங்கும்’ என்று அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அறிவிக்கும் செய்தி அபூதாவூதில் 1193 வது ஹதீஸாகவும் இப்னுமாஜாவில் 1047வது ஹதீஸாகவும் இடம் பெற்றுள்ளது.
இந்த ஹதீஸின் அடிப்படையில் தான் மேற்கண்ட 15 இடங்களிலும் ஸஜ்தா செய்யப்படுகின்றது. ஆனால் இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அல்ல! இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் ஹாரிஸ் பின் ஸயீத் என்பார் யாரென அறியப்படாதவர் ஆவார். அதனால் குர்ஆனில் 15 ஸஜ்தா வசனங்கள் என்ற கருத்து ஆதாரமற்றதாக ஆகி விடுகின்றது.
‘நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் 11 ஸஜ்தாக்கள் செய்திருக்கின்றேன். ஆனால் முஃபஸ்ஸலான அத்தியாயங்களிலிருந்து எதுவும் அவற்றில் இடம் பெறவில்லை. அல்அஃராஃப், ரஃது, நஹ்ல், பனீ இஸ்ராயீல், மர்யம், ஹஜ், ஃபுர்கான், நம்ல், ஸஜ்தா, ஸாத், ஹாமீம் ஆகியவையே ஸஜ்தாவுக்குரிய அந்த அத்தியாயங்களாகும்’ என்று அபூ தர்தா (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் இப்னுமாஜாவில் 1046 வது ஹதீஸாக இடம் பெற்றுள்ளது.
இந்த ஹதீஸின் அடிப்படையில் குர்ஆனில் 11 ஸஜ்தா வசனங்கள் என்று கூறுவோரும் உள்ளனர். ஆனால் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் மஹ்தீ பின் அப்துர்ரஹ்மான் பின் உபைதா பின் காதிர் என்பவர் யாரென அறியப்படாதவர். எனவே 11 ஸஜ்தாக்கள் என்ற கருத்தும் ஆதாரமற்றதாகி விடுகின்றது.
‘நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் 11 ஸஜ்தாக்கள் செய்திருக்கின்றேன். நஜ்ம் அத்தியாயத்தில் இடம் பெற்றிருக்கும் அந்த ஸஜ்தாவும் அடங்கும்’ என்று அபூதர்தா (ரலி) அறிவிக்கும் இன்னோர் அறிவிப்பு திர்மிதியில் 519 வது ஹதீஸாகவும் இப்னுமாஜாவின் 1045 வது ஹதீஸாகவும் பதிவு செய்யப்பட்டுள்து.
இவ்விரண்டிலும் உமர் திமிஷ்கி என்பவர் இடம் பெறுகின்றார். இவரும் யாரென அறியப்படாதவர். எனவே இந்த ஹதீசும் 11 ஸஜ்தாக்கள் என்ற கருத்தை வலுப்படுத்துவதாக அமையவில்லை.
‘ஹஜ் அத்தியாயத்தில் இரண்டு ஸஜ்தாக்கள் உள்ளதால் அது சிறப்பிக்கப்பட்டுள்ளதா?’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், ‘ஆம்! யார் அவ்விரு வசனங்களின் போதும் ஸஜ்தாச் செய்ய மாட்டாரோ அவர் அவ்விரு வசனங்களையும் ஓத வேண்டாம்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)
நூல்: திர்மிதீ 527
இந்த ஹதீஸைப் பதிவு செய்த இமாம் திர்மிதீ அவர்களே இதை வலுவற்றது என்று கூறுகின்றார்கள். மேலும் இந்த ஹதீஸின் தொடரில் இடம் பெற்றிருக்கும் அப்துல்லாஹ் பின் லஹீஆ பலவீனமானவர். இதில் இடம் பெறும் இன்னோர் அறிவிப்பாளரான மிஷ்ரஹ் பின் ஹாஆன் என்பவர் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களிடமிருந்து மறுக்கப்படத்தக்க செய்திகளை அறிவிப்பவர் என்று இப்னு ஹிப்பான் கூறுகின்றார். எனவே இந்த ஹதீஸும் பலவீனமானதாக உள்ளது.
மொத்தத்தில் 15 ஸஜ்தாக்கள் என்ற கருத்தும் 11 ஸஜ்தாக்கள் என்ற கருத்தும் ஆதாரமற்ற கருத்துக்களாகி விடுகின்றன. அப்படியானால் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் அமைந்த ஸஜ்தாக்கள் எத்தனை? என்று பார்க்கும் போது, நான்கு வசனங்களை ஓதும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்ததாக அறிய முடிகின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் நஜ்மு (53வது) அத்தியாயத்தை ஓதும் போது ஸஜ்தாச் செய்தார்கள். ஒரு முதியவரைத் தவிர அவர்களுடன் இருந்த அனைவரும் ஸஜ்தாச் செய்தனர். அம்முதியவர் ஒரு கையில் சிறிய கற்களையோ, மண்ணையோ எடுத்து தமது நெற்றிக்குக் கொண்டு சென்று, ‘இவ்வாறு செய்வது எனக்குப் போதும்’ என்று கூறினார். பின்னர் அவர் காஃபிராகக் கொல்லப்பட்டதை நான் பார்த்தேன்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)
நூல்: புகாரீ 1067, 1070
இதே கருத்து புகாரீயில் 1071, 4862, 4863 ஆகிய ஹதீஸ்களிலும் இடம் பெற்றுள்ளன.
ஸாத் (38வது) அத்தியாயம் ஓதப்படும் போது ஸஜ்தா கட்டாயமில்லை. (ஆனால்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த அத்தியாயத்தை ஓதும் போது ஸஜ்தாச் செய்ததை நான் பார்த்திருக்கின்றேன்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரீ 1069, 3422
அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் நான் இஷாத் தொழுத போது, இதஸ்ஸமாவுன் ஷக்கத்’ என்ற அத்தியாயத்தை ஓதி (அதில் ஸஜ்தாவுடைய வசனம் வந்ததும்) ஸஜ்தாச் செய்தார்கள். இது பற்றி நான் அவர்களிடம் கேட்ட போது, ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (இதற்காக) நான் ஸஜ்தாச் செய்திருக்கின்றேன். (மறுமையில்) அவர்களைச் சந்திக்கின்ற வரை (மரணிக்கின்ற வரை) நான் அதை ஓதி ஸஜ்தாச் செய்து கொண்டு தான் இருப்பேன்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ராஃபிவு
நூல்: புகாரீ 766, 768, 1078
இதஸ்ஸமாவுன் ஷக்கத், இக்ரஃ பிஸ்மி ரப்பிக்க ஆகிய அத்தியாயங்களில் நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஸஜ்தாச் செய்தோம்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 905, 906
மேற்கண்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில்
நஜ்மு (53வது அத்தியாயம்),
ஸாத் (38வது அத்தியாயம்),
இன்ஷிகாக் (84வது அத்தியாயம்),
அலக் (96வது அத்தியாயம்)
ஆகிய நான்கு அத்தியாயங்களை ஓதும் போது அதிலுள்ள ஸஜ்தா வசனங்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்துள்ளார்கள் என்பதை அறிய முடிகின்றது.
இந்த ஸஜ்தா வசனங்களை ஓதும் போதும் ஸஜ்தாச் செய்வது கட்டாயமில்லை. விரும்பினால் ஸஜ்தாச் செய்யலாம் என்பதற்குக் கீழ்க்கண்ட ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது.
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நஜ்மு அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன். அப்போது அவர்கள் ஸஜ்தாச் செய்யவில்லை.
அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ரலி)
நூல்: புகாரீ 1072, 1073