ஐவேளைத் தொழுகையின் நேரங்கள்
இஸ்லாத்தின் முக்கியக் கடமைகளில் ஒன்றான ஐவேளைத் தொழுகைகளை அதற்கென குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்றுவது கடமையாகும்.
நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.
திருக்குர்ஆன் 4:103
சுப்ஹுத் தொழுகையின் நேரம்
சுப்ஹுத் தொழுகையின் நேரம் வைகறையிலிருந்து சூரியன் உதிக்கும் வரை உண்டு.
صحيح مسلم
عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «وَقْتُ الظُّهْرِ مَا لَمْ يَحْضُرِ الْعَصْرُ، وَوَقْتُ الْعَصْرِ مَا لَمْ تَصْفَرَّ الشَّمْسُ، وَوَقْتُ الْمَغْرِبِ مَا لَمْ يَسْقُطْ ثَوْرُ الشَّفَقِ، وَوَقْتُ الْعِشَاءِ إِلَى نِصْفِ اللَّيْلِ، وَوَقْتُ الْفَجْرِ مَا لَمْ تَطْلُعِ الشَّمْسُ»
‘சுப்ஹுத் தொழுகையின் நேரம் வைகறை நேரம் முதல் சூரியன் உதிக்கும் வரை உண்டு’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1075
லுஹர் தொழுகையின் நேரம்
லுஹர் தொழுகையின் நேரம் சூரியன் உச்சியை விட்டு மேற்கு நோக்கிச் சாய்ந்ததிலிருந்து ஒவ்வொரு பொருட்களின் நிழலும் அது போன்ற அளவு வரும் வரை உண்டு.
‘லுஹர் தொழுகையின் நேரம் சூரியன் உச்சி சாய்ந்ததிலிருந்து ஒரு மனிதனின் நிழல் அவனது உயரம் அளவுக்கு ஆகும் வரை, அதாவது அஸ்ர் நேரத்திற்கு முன்பு வரை உண்டு’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1075
அஸ்ர் தொழுகையின் நேரம்
அஸ்ர் தொழுகையின் நேரம் ஒவ்வொரு பொருட்களின் நிழலும் அது போல ஒரு அளவு வந்ததிலிருந்து சூரியன் மறையத் துவங்கும் வரை உண்டு.
سنن الترمذي
، ثُمَّ صَلَّى العَصْرَ حِينَ كَانَ كُلُّ شَيْءٍ مِثْلَ ظِلِّهِ …ثُمَّ صَلَّى العَصْرَ حِينَ كَانَ ظِلُّ كُلِّ شَيْءٍ مِثْلَيْهِ… ثُمَّ التَفَتَ إِلَيَّ جِبْرِيلُ، فَقَالَ: يَا مُحَمَّدُ، هَذَا وَقْتُ الأَنْبِيَاءِ مِنْ قَبْلِكَ، وَالوَقْتُ فِيمَا بَيْنَ هَذَيْنِ الوَقْتَيْنِ
(ஒவ்வொரு தொழுகையின் ஆரம்ப நேரம் அதன் கடைசி நேரம் ஆகிய இரு நேரங்களில்) இரண்டு தடவை எனக்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் கஅபாவில் இமாமத் செய்தார்கள். (முதல் தடவை) இமாமத் செய்யும் போது… ஒவ்வொரு பொருளின் நிழலும் அப்பொருளின் அளவுக்கு வந்த போது அஸ்ரை தொழுவித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: திர்மிதீ
وَوَقْتُ صَلَاةِ الْعَصْرِ مَا لَمْ تَصْفَرَّ الشَّمْسُ، وَيَسْقُطْ قَرْنُهَا الْأَوَّلُ
‘அஸ்ர் தொழுகையின் நேரம் சூரியன் பொன்னிறமாகி அதன் நுனி மறைவதற்கு முன்பு வரை உண்டு’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1076
மக்ரிப் தொழுகையின் நேரம்
மக்ரிப் தொழுகையின் நேரம் சூரியன் முழுமையாக மறைந்ததிலிருந்து மேற்கே செம்மை மறையும் வரை உண்டு.
وَوَقْتُ صَلَاةِ الْمَغْرِبِ إِذَا غَابَتِ الشَّمْسُ، مَا لَمْ يَسْقُطِ الشَّفَقُ
‘மக்ரிப் தொழுகையின் நேரம் சூரியன் மறைந்தது முதல் செம்மை மறையும் வரை உண்டு’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1076
இஷாத் தொழுகையின் நேரம்
صحيح مسلم
عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ رَجُلًا سَأَلَهُ عَنْ وَقْتِ الصَّلَاةِ، فَقَالَ لَهُ: «صَلِّ مَعَنَا هَذَيْنِ – يَعْنِي الْيَوْمَيْنِ – ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ الْعِشَاءَ حِينَ غَابَ الشَّفَقُ،… وَصَلَّى الْعِشَاءَ بَعْدَمَا ذَهَبَ ثُلُثُ اللَّيْلِ.. ثُمَّ قَالَ: «أَيْنَ السَّائِلُ عَنْ وَقْتِ الصَّلَاةِ؟» فَقَالَ الرَّجُلُ: أَنَا، يَا رَسُولَ اللهِ، قَالَ: «وَقْتُ صَلَاتِكُمْ بَيْنَ مَا رَأَيْتُمْ»
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து தொழுகை நேரங்கள் பற்றி வினவினார். (அவரிடம்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘நம்முடன் தொழுகையில் கலந்து கொள்வீராக!’ என்று கூறினார்கள். இதையடுத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம்… செம்மை மறைந்ததும் இஷாத் தொழுகைக்காகக் கட்டளையிட்டார்கள். மறு நாள் பிலால் (ரலி) அவர்களிடம் … இரவின் மூன்றில் ஒரு பகுதி கடந்த பின் இஷாத் தொழுகைக்குக் கட்டளையிட்டார்கள். பின்னர், ‘கேள்வி கேட்டவர் எங்கே? இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட நேரமே தொழுகையின் நேரமாகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி)
நூல்: முஸ்லிம் 1079
وَوَقْتُ الْعِشَاءِ إِلَى نِصْفِ اللَّيْلِ
‘இஷாத் தொழுகையின் நேரம் இரவின் பாதி வரை உண்டு’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1074
இஷாத் தொழுகையின் ஆரம்ப நேரத்தில் கருத்து வேறுபாடு ஏதுமில்லை. ஃபஜ்ரு வரை இஷாவின் நேரம் நீடிக்கிறதா? இரவின் பாதி வரை நீடிக்கிறதா? அல்லது இரவின் மூன்றில் ஒரு பங்கு வரை நீடிக்கிறதா? என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.
‘இரவில் பாதி வரை இஷா நீடிக்கிறது’ என்பதற்கும், ‘இரவின் மூன்றில் ஒரு பகுதி வரை இஷா நீடிக்கிறது’ என்பதற்கும் நேரடியான ஆதாரங்களை மேலே குறிப்பிட்டுள்ளோம்.
ஆனால் சுப்ஹ் வரை நீடிக்கிறது என்ற கருத்தில் நேரடியாக எந்த ஹதீஸும் இல்லை.
சூரியன் 6 மணிக்கு மறைகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது முதல் இரவு ஆரம்பமாகி விடுகிறது. சுப்ஹ் 5 மணிக்கு வருகிறது என்றால் காலை நேரம் வந்து விட்டது என்று பொருள். இதில் இரவின் பாதி என்பது இரவு 11.30 மணியாகும். இது போல் சூரிய அஸ்தமனம் மற்றும் சுப்ஹ் நேரம் ஆகியவற்றைக் கொண்டு இரவின் பாதியைக் கணக்கிட்டு அதற்குள் இஷாவைத் தொழுது விட வேண்டும் என்பதே சரியானதாக கருத்தாகத் தோன்றுகிறது.