ஜகாத் கொடுத்த பணத்தில் வாங்கும் நகைக்கு  ஜகாத் உண்டா?

நகைக்கு ஜகாத் கொடுத்த பின் அந்த நகையை நான் விற்று விட்ட பின் அந்தப் பணத்திற்கு வேறு பொருள் வாங்குகின்றேன். இப்பொழுது இந்த பொருளுக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமா?

பதில் :

நமது செல்வங்களுக்கு ஸகாத் கொடுக்க வேண்டும் என மார்க்கம் கூறுகின்றது.

(முஹம்மதே!) அவர்களின் செல்வங்களில் தர்மத்தை எடுப்பீராக! அதன் மூலம் அவர்களைத் தூய்மைப்படுத்தி, பரிசுத்தமாக்கு வீராக! அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக! உமது பிரார்த்தனை அவர் களுக்கு மன அமைதி அளிக்கும். அல்லாஹ் செவியுறுபவன்;488 அறிந்தவன்.

திருக்குர்ஆன் 9:103

யாசிப்பவருக்கும், இல்லாதவருக்கும் அவர்களது செல்வங்களில் பங்கு இருந்தது.

திருக்குர்ஆன் 51:19

செல்வங்களுக்கு ஜகாத் கடமை என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.

இருக்கும் செல்வத்துக்கு ஜகாத் கொடுத்த பின்னர் மேலும் வருவாய் கிடைத்தால் அப்போது அதற்கு ஜகாத் கடமையாகும்.

ஆனால் நம்மிடம் இருந்த ஒரு லட்சம் ரூபாய்க்கு ஜகாத் கொடுத்து விட்டோம், அந்தப் பணத்தில் நகை வாங்குகிறோம் என்றால் இதை வருவாய் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். நம்மிடம் இருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம் நம்மை விட்டுப் போய் விட்டு நகையாக மாற்றம் அடைந்துள்ளது. புதிதாக நமது செல்வம் அதிகரிக்கவில்லை.

செல்வம் என்ற அடிப்படையில் ஜகாத் கடமை ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு விட்டது. இப்போது அதே செல்வம் தான் வேறு வடிவமாக மாற்றப்பட்டுள்ளது.

எனவே ஜகாத் கொடுக்கப்பட்ட பணத்திலிருந்து வாங்கப்பட்ட புதிய பொருளுக்கு ஸகாத் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

உங்களிடம் உள்ள பணத்துக்கு ஜகாத் கொடுத்து விட்டு அந்தப் பணத்தில் இருந்து வீடோ, வேறு சொத்தோ வாங்கினால் அப்போதும் இது தான் நிலை.

உங்களிடம் உள்ள நகைக்கு ஜகாத் கொடுத்து விட்டு அந்த நகையை விற்று பணமாக ஆக்கினால் அந்தப் பணத்துக்கு ஜகாத் கடமை இல்லை. ஏற்கனவே ஜகாத் கொடுக்கப்பட்ட பொருள் தான் வேறு வடிவமாக மாறியுள்ளது. வருவாய் அதிகரிக்கவில்லை.