தப்லீக்கில் செல்லலாமா?

தப்லீக் செல்லலாமா? சில பேர் மாதக்கணக்கில் தப்லீக் செல்வது சரியா? – விளக்கம் தேவை.

முஹம்மது ஆரிப்

மார்க்கத்தைப் பிற மக்களுக்கு எடுத்துரைப்பது அதிக நன்மைகளைப் பெற்றுத்தரும். நாமும் பல்வேறு வழிமுறைகளில் மக்களுக்கு தூய இஸ்லாத்தைப் பிரச்சாரம் (தப்லீக்) செய்து கொண்டு தான் இருக்கிறோம். பிரச்சாரம் செய்வது ஓர் இறை வணக்கம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் இதைக் காரணம் காட்டி பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும், மனைவிக்கும் செய்ய வேண்டிய கடமைகளைப் புறக்கணித்துவிட முடியாது. அவ்வாறு ஒருவர் செய்வாரானால் குற்றவாளியாகவே கருதப்படுவார். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு சமயங்களில்உணர்த்தியிருக்கின்றார்கள்.

صحيح البخاري

1975 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا الأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ العَاصِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا عَبْدَ اللَّهِ، أَلَمْ أُخْبَرْ أَنَّكَ تَصُومُ النَّهَارَ، وَتَقُومُ اللَّيْلَ؟»، فَقُلْتُ: بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ: «فَلاَ تَفْعَلْ صُمْ وَأَفْطِرْ، وَقُمْ وَنَمْ، فَإِنَّ لِجَسَدِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّ لِعَيْنِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّ لِزَوْجِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّ لِزَوْرِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّ بِحَسْبِكَ أَنْ تَصُومَ كُلَّ شَهْرٍ ثَلاَثَةَ أَيَّامٍ، فَإِنَّ لَكَ بِكُلِّ حَسَنَةٍ عَشْرَ أَمْثَالِهَا، فَإِنَّ ذَلِكَ صِيَامُ الدَّهْرِ كُلِّهِ»، فَشَدَّدْتُ، فَشُدِّدَ عَلَيَّ قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَجِدُ قُوَّةً قَالَ: «فَصُمْ صِيَامَ نَبِيِّ اللَّهِ دَاوُدَ عَلَيْهِ السَّلاَمُ [ص:40]، وَلاَ تَزِدْ عَلَيْهِ»، قُلْتُ: وَمَا كَانَ صِيَامُ نَبِيِّ اللَّهِ دَاوُدَ عَلَيْهِ السَّلاَمُ؟ قَالَ: «نِصْفَ الدَّهْرِ»، فَكَانَ عَبْدُ اللَّهِ يَقُولُ بَعْدَ مَا كَبِرَ: يَا لَيْتَنِي قَبِلْتُ رُخْصَةَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம்  (ஸல்) அவர்கள் என்னிடம், “அப்துல்லாஹ்வே! நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப்படுகிறதே!” என்று கேட்டார்கள். நான் “ஆம்! அல்லாஹ்வின் தூதரே!” என்றேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “இனி அவ்வாறு செய்யாதீர்! (சில நாட்கள்) நோன்பு வைப்பீராக; (சிலநாட்கள்) விட்டுவிடுவீராக! (சிறிது நேரம்) தொழுவீராக! (சிறிது நேரம்) உறங்குவீராக! ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன; உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன; உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன; உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன. ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்! ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்குகள் உண்டு! (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்!” என்று கூறினார்கள். நான் சிரமத்தை வலிந்து ஏற்றுக் கொண்டேன்; அதனால், என்மீது சிரமம் சுமத்தப்பட்டு விட்டது!” அல்லாஹ்வின் தூதரே! நான் வலுவுள்ளவனாக இருக்கிறேன்!” என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “தாவூத் நபி அவர்கள் நோன்பு நோற்றவாறு நீர் நோன்பு நோற்பீராக! அதைவிட அதிகமாக்க வேண்டாம்!” என்றார்கள். “தாவூத் நபியின் நோன்பு எது?’ என்று நான் கேட்டேன். “வருடத்தில் பாதி நாட்கள்!” என்றார்கள். “அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் வயோதிகம் அடைந்த பின் “நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சலுகையை நான் ஏற்காமல் போய் விட்டேனே!’ என்று (வருத்தத்துடன்) கூறுவார்கள்!” என அபூசலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

நூல்: புகாரி 1975

صحيح البخاري

1968 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، حَدَّثَنَا أَبُو العُمَيْسِ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: آخَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ سَلْمَانَ، وَأَبِي الدَّرْدَاءِ، فَزَارَ سَلْمَانُ أَبَا الدَّرْدَاءِ، فَرَأَى أُمَّ الدَّرْدَاءِ مُتَبَذِّلَةً، فَقَالَ لَهَا: مَا شَأْنُكِ؟ قَالَتْ: أَخُوكَ أَبُو الدَّرْدَاءِ لَيْسَ لَهُ حَاجَةٌ فِي الدُّنْيَا، فَجَاءَ أَبُو الدَّرْدَاءِ فَصَنَعَ لَهُ طَعَامًا، فَقَالَ: كُلْ؟ قَالَ: فَإِنِّي صَائِمٌ، قَالَ: مَا أَنَا بِآكِلٍ حَتَّى تَأْكُلَ، قَالَ: فَأَكَلَ، فَلَمَّا كَانَ اللَّيْلُ ذَهَبَ أَبُو الدَّرْدَاءِ يَقُومُ، قَالَ: نَمْ، فَنَامَ، ثُمَّ ذَهَبَ يَقُومُ فَقَالَ: نَمْ، فَلَمَّا كَانَ مِنْ آخِرِ اللَّيْلِ قَالَ: سَلْمَانُ قُمِ الآنَ، فَصَلَّيَا فَقَالَ لَهُ سَلْمَانُ: إِنَّ لِرَبِّكَ عَلَيْكَ حَقًّا، وَلِنَفْسِكَ عَلَيْكَ حَقًّا، وَلِأَهْلِكَ عَلَيْكَ حَقًّا، فَأَعْطِ كُلَّ ذِي حَقٍّ حَقَّهُ، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَ ذَلِكَ لَهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَدَقَ سَلْمَانُ»

அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சல்மான் (ரலி), அபுத்தர்தா (ரலி) ஆகிய இருவரையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். சல்மான் அபுத்தர்தாவைச் சந்திக்கச் சென்றபோது (அபுத்தர்தாவின் மனைவி) உம்முத் தர்தாவை அழுக்கடைந்த  ஆடை அணிந்திருக்கக் கண்டார். “உமக்கு என்ன நேர்ந்தது?’ என்று அவரிடம் சல்மான் கேட்டார். அதற்கு உம்முத் தர்தா (ரலி) அவர்கள், “உம் சகோதரர் அபுத்தர்தாவுக்கு இவ்வுலகில் எந்தத் தேவையுமில்லை’ என்று விடையளித்தார். (சற்று நேரத்தில்) அபுத் தர்தா வந்து சல்மானுக்காக உணவு தயாரித்தார். சல்மான் (ரலி) அவர்கள் அபுத் தர்தாவிடம், உண்பீராக! என்று கூறினார். அதற்கு அபுத் தர்தா, நான் நோன்பு நோற்றிருக்கிறேன் என்றார். சல்மான், நீர் உண்ணாமல் நான் உண்ண மாட்டேன் என்று கூறியதும் அபுத் தர்தாவும் உண்டார். இரவானதும் அபுத் தர்தா (ரலி) அவர்கள் நின்று வணங்கத் தயாரானார்கள். அப்போது சல்மான் (ரலி) அவர்கள், உறங்குவீராக! என்று கூறியதும் உறங்கினார். பின்னர் நின்று வணங்கத் தயாரானார். மீண்டும் சல்மான், உறங்குவீராக! என்றார். இரவின் கடைசி நேரம் வந்ததும் சல்மான் (ரலி) அவர்கள், இப்போது எழுவீராக! என்று கூறினார்கள். இருவரும் தொழுதனர். பிறகு அபுத் தர்தாவிடம் சல்மான் (ரலி) அவர்கள், நிச்சயமாக உம் இறைவனுக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; உமக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; உம் குடும்பத்தாருக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; அவரவருக்குரிய கடமைகளை நிறைவேற்றுவீராக!” என்று கூறினார்கள். பிறகு அபுத்தர்தா (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இந்த விஷயத்தைக் கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “சல்மான் உண்மையையே கூறினார்!” என்றார்கள்.

நூல்: புகாரி 1968

இந்தச் செய்திகளும், இது போன்ற பல செய்திகளும் இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைக் காரணம் காட்டி, மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமையில் தவறுவதும், பெற்றோர் மற்றும் உறவினருக்கு செய்யும் கடமைகளில் குறைவைப்பதும் குற்றம் என்று கூறுகின்றன.

தப்லீக் செல்வதாகக் கூறிக் கொண்டு  மாதக்கணக்கில் ஊர் ஊராகச் சுற்றும் பலர் தங்கள் குடும்பத்தார்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றத் தவறிவிடுகிறார்கள்.

 இது குறித்து கொள்கை விளக்கம் என்ற நூலில் அளிக்கப்பட்ட மற்றொரு பதில்

தப்லீக் ஜமாஅத்

முஸ்லிம்களிடம் செல்வாக்குப் பெற்ற இயக்கங்களில் தப்லீக் ஜமாஅத் முதலிடம் வகிக்கின்றது. அந்த ஜமாஅத்தில் நம்மை இணைத்துக் கொள்ளலாமா? அந்த ஜமாஅத்தின் கொள்கை, கோட்பாடுகள் இஸ்லாமிய அடிப்படையில் அமைந்துள்ளனவா?

நாற்பது நாட்கள், ஒரு வருடம் என்று ஊர் ஊராக அழைத்துச் சென்று மக்களைத் தொழுகைக்கு அழைக்கின்றனர். இது சரியா? என்றெல்லாம் பல கேள்விகள் முஸ்லிம்களிடையே நிலவுகின்றன.

எனவே இது பற்றி நாம் விரிவாக ஆராய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

நாற்பது நாட்களுக்கோ, ஒரு வருடத்திற்கோ மார்க்க வேலைகளுக்காகவோ சொந்த வேலைக்காகவோ வெளியூர் செல்வது மார்க்கத்தில் குற்றமாகாது.

மார்க்கத்தை அறிந்து கொள்வதற்காகவும், பிறருக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும், அறப்போர் செய்வதற்காகவும், ஹலாலான முறையில் பொருளீட்டுவதற்காகவும், இன்ன பிற தேவைகளுக்காகவும் பிரயாணம் மேற்கொள்வதை மார்க்கம் தடுக்கவில்லை;அனுமதிக்கின்றது.

மூஸா (அலை) அவர்கள் சில விஷயங்களை அறிந்து கொள்வதற்காக இறைவனது கட்டளைப்படி ஹில்று (அலை) அவர்களைச் சந்திக்க மேற்கொண்ட பயணம் பற்றி இறைவன் குறிப்பிடுகிறான்.

(திருக்குர்ஆன் 18:6018:82)

ஒரே ஒரு மார்க்கச் சட்டத்தை அறிந்து கொள்வதற்காக மக்காவிலிருந்து மதீனாவுக்குப் பயணம் செய்து வந்த நபித் தோழர்களும் இருந்துள்ளனர்.

புகாரி : 88, 2640

நல்ல காரியங்களுக்காகப் பிரயாணம் மேற்கொள்ளலாம் என்பதற்கு இவை சான்றுகளாக உள்ளன. இது பற்றி இன்னும் ஏராளமான சான்றுகளும் உள்ளன.

எனவே பயணம் செய்வது சரியா? தவறா? என்ற அடிப்படையில் இதனை அணுகுவது சரியில்லை. இந்தப் பயணம் எதற்காக மேற்கொள்ளப்படுகின்றது என்ற அடிப்படையிலேயே இந்த ஜமாஅத் சரியான ஜமாஅத்தா? இல்லையா? என்ற முடிவுக்கு வர முடியும்.

எதற்காக மக்களை அழைக்கிறீர்கள்?  என்று கேட்டால்,  தொழுகையின் பால் மக்களை அழைப்பதற்காகத் தான் ஆள் சேர்க்கிறோம்  என்று கூறுகின்றனர்.

தொழுகை எனும் மிக முக்கியமான கடமையின் பால் மக்களை அவர்கள் அழைக்கின்றனர்; இதற்காக தங்கள் சொந்தப் பணத்தைச் செலவு செய்து பிரயாணம் மேற்கொள்கின்றனர்  என்பது உண்மை தான். * பெருமையும், கர்வமும் கொண்ட பலர்,தப்லீக் ஜமாஅத் மூலம் சாதுவானவர்களாக மாறியுள்ளதை மறுக்க முடியாது.

* பெரும் செல்வந்தர்கள் கூட இந்த ஜமாஅத்தில் செல்லும் போது சமையல் செய்வதற்கும் முன் வருகிறார்கள்.

* தஹஜ்ஜுத், லுஹா போன்ற வணக்கங்களைப் பேணுதலுடன் செய்து வருகின்றனர்.

* சினிமாக்களை விட்டு விடுகின்றனர்.

இவைகளெல்லாம் வரவேற்கத் தக்க மாற்றங்கள் என்பதில் ஐயம் இருக்க முடியாது. அந்த ஜமாஅத்தில் உள்ள இது போன்ற நல்ல அம்சங்களை மறுப்பவர்கள் உண்மையை விரும்பக் கூடியவர்களாக இருக்க முடியாது.

அதற்காக ஒட்டு மொத்தமாக தப்லீக் ஜமாஅத்தை ஆதரித்து விட முடியாது.

மார்க்கத்திற்கு விரோதமான போக்குகள் உள்ளனவா என்பதையும் நாம் ஆராயக் கடமைப்பட்டுள்ளோம்.

ஊர் ஊராக அழைத்துச் செல்லப்படும் மக்களுக்குப் போதிக்கப்படும் விஷயத்தை எடுத்துக் கொள்வோம். அவர்களின் தஃலீம் வகுப்புக்களில் திருக்குர்ஆன் விரிவுரையோ, அதன் தமிழாக்கமோ, நபிமொழிகளின் ஆதாரப்பூர்வமான தமிழாக்கமோ படிக்கப்படுவதில்லை.

படிக்கப்படுவது இல்லை என்பது மட்டுமில்லை. படிக்கப்படுவதற்கு பகிரங்கத் தடை விதிக்கப்படுகின்றது. திருக்குர்ஆனையும். நபிகள் நாயகம் (ஸல்) வழியையும் படிக்கத் தடை விதிக்கும் கூட்டத்தில் பயணம் செய்யலாமா?

அல்லாஹ்வுடைய வேதத்துக்கும், அவனது தூதருடைய போதனைக்கும் தடை விதித்து விட்டு, இந்த நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மனிதரின் நூல் மட்டுமே படிக்கப்பட வேண்டும் என்ற நடைமுறை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த நூலாசிரியருக்கும், ஹஜ்ரத்ஜீக்கும் உள்ள மாமனார் மருமகன்  உறவு தான் இந்தத் தீர்மானத்திற்குக் காரணம் என்று விபரமறிந்தவர்கள் விமர்சிப்பதில் நியாயம் இருப்பதாகவே நமக்குப் படுகின்றது.

அந்த நூல் தொகுப்பாவது இஸ்லாமிய அடிப்படையில் அமைந்துள்ளதா என்றால் அதுவும் இல்லை. திருக்குர்ஆனுக்கே வேட்டு வைக்கும் சங்கதிகள் அந்த நூல் ஏராளம்! இறைத் தூதரின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளுக்கும் பஞ்சமில்லை! பெரியார்கள் பெயரால் கட்டுக் கதைகள் ஏராளம்! இது போன்ற கதைகளை அறிந்து கொள்வதற்காக பிரயாணம் மேற்கொள்ளலாமா?

தனது வயிற்றுக்காகவும், தன் குடும்பத்தினருக்காகவும் உழைக்குமாறும், குடும்பத்திற்குரிய கடமைகள் ஆற்றுமாறும் இஸ்லாம் போதிக்கின்றது.

கட்டிய மனைவியைக் கவனிக்காமல் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவு முழுவதும் வணக்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்துல்லாஹ் பின் அம்ர் என்ற தோழரைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேள்விப்பட்டு அவரிடம் சென்றார்கள்.  இவ்வாறு செய்யாதே! நோன்பு வை! வைக்காமலும் இரு! தொழவும் செய்! தூங்கவும் செய்! ஏனெனில் உனது உடம்புக்கு நீ செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன. உனது கண்களுக்கு நீ செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன. உன் விருந்தினருக்கு நீ செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவுரை கூறினார்கள்.

நூல்: புகாரி 1975, 6134

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸல்மான் (ரலி), அபுத்தர்தா (ரலி) இருவரையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸல்மான் (ரலி), அபுத்தர்தாவைச் சந்திக்கச் சென்ற போது (அபுத்தர்தாவின் மனைவி) உம்முதர்தாவை அழுக்கடைந்த ஆடை அணிந்திருக்கக் கண்டார். உமக்கு என்ன நேர்ந்தது?  என்று அவரிடம் ஸல்மான் (ரலி) கேட்டார். அதற்கு உம்முதர்தா (ரலி),  உம் சகோதரர் அபுத்தர்தாவுக்கு இவ்வுலகில் எந்தத் தேவையும் இல்லை  என்று விடையளித்தார். (சற்று நேரத்தில்) அபுத்தர்தா வந்து ஸல்மானுக்காக உணவு தயாரித்தார். ஸல்மான் அபுத்தர்தாவிடம், உண்பீராக! என்று கூறினார். அதற்கு அபுத்தர்தா,  நான் நோன்பு வைத்திருக்கிறேன்  என்றார்.  நீர் உண்ணாமல் நான் உண்ண மாட்டேன்  என்று ஸல்மான் கூறியதும் அபுத்தர்தாவும் உண்டார். இரவானதும் அபுத்தர்தா (ரலி) நின்று வணங்கத் தயாரானார். அப்போது ஸல்மான் (ரலி)  உறங்குவீராக!  என்று கூறியதும் உறங்கினார். பின்னர் நின்று வணங்கத் தயாரானார். மீண்டும் ஸல்மான், உறங்குவீராக!  என்றார். இரவின் கடைசி நேரம் வந்ததும் ஸல்மான் (ரலி)  இப்போது எழுவீராக!  என்று கூறினார். இருவரும் தொழுதனர். பிறகு அபுத்தர்தாவிடம்  உம் இறைவனுக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; உமக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; உம் குடும்பத்தினருக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; அவரவருக்குரிய கடமைகளை நிறைவேற்றுவீராக! என்று ஸல்மான் (ரலி) கூறினார். பின்பு அபுத்தர்தா (ரலி), நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இந்த விஷயத்தைக் கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,  ஸல்மான் உண்மையையே கூறினார்! என்றார்கள்.

அறிவிப்பவர் : அபூஜுஹைபா (ரலி)

நூல் : புகாரி: 1968, 6139

சில்லாவுக்கு அழைக்கும் போது இந்தக் கடமைகள் பின் தள்ளப்படுகின்றன. அல்லாஹ் பார்த்துக் கொள்வான்  என்று கூறி எல்லாக் கடமைகளையும் புறக்கணிக்கச் செய்யும் அளவுக்கு இந்த சில்லா வின் மீது வெறியூட்டப்படுகின்றது. அல்லாஹ் பார்த்துக் கொள்வான்  என்பதற்கு இவர்கள் கொண்டது தான் பொருள் என்றால் குடும்பத்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளை அவன் நம் மீது சுமத்தியிருப்பானா என்று இவர்கள் சிந்திப்பதில்லை. பல கடமைகளைப் புறக்கணிக்கத் தூண்டும் இந்தப் பிரயாணம் சரி தானா என்பதைச் சிந்தியுங்கள்!

அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையிலாவது இவர்கள் உண்மையாளர்களாக இருக்கிறார்களா? இவர்கள் தான் இந்த விஷயத்தில் மிகவும் குறைந்த நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கின்றனர். எந்த இயக்கமும் எந்த நபரும் பயணத்தின் போது பண்ட பாத்திரங்களையும், சட்டி பெட்டிகளையும் தூக்கிக் கொண்டு செல்வதில்லை. ஆனால் இவர்கள் அனைத்து சமையல் சாதனங்களையும் கூடவே எடுத்துச் செல்பவர்களாக உள்ளனர். அதாவது சோத்துக்கு மட்டும் அல்லாஹ் பார்த்துக் கொள்ள மாட்டான் என்பது போல் இவர்களின் நம்பிக்கை அமைந்துள்ளது.

மேலும் இந்த ஜமாஅத்தில் முஸ்லிம்களின் உணர்வுகளும், வீரமும் மழுங்க வைக்கப்படும் அளவுக்கு, மூளைச் சலவை செய்யப்படுகின்றது.

தங்கள் உயிரைத் தியாகம் செய்வதற்காக அறப்போருக்குச் சென்ற நபித் தோழர்களின் வீரமிக்க பயணமும், இது பற்றி ஆர்வமூட்டிய நபிமொழிகளும் சோற்றுப் பொட்டலத்தைத் தூக்கிக் கொண்டு இவர்கள் செல்கின்ற பயணத்தைப் பற்றியது என்று போதிக்கத் துணிந்து விட்டனர்.

தஸ்பீஹ் மணியை உருட்டிக் கொண்டு, முழங்காலுக்குக் கீழ் ஜுப்பாவை அணிந்து கொண்டு பள்ளியின் ஒரு மூலையில் அல்லது ஒரு தூணில் சாய்ந்து விடுவது தான் இஸ்லாம் என்று கற்பிக்கத் தலைப்பட்டு விட்டனர். இஸ்லாத்திற்கு தவறான வடிவத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களைக் கோழைகளாக ஆக்கும் இந்த ஜமாஅத் எப்படி சரியான ஜமாஅத்தாக இருக்க முடியும்?

ஒரு மனிதனுக்கு அதிகபட்சம் எந்த அளவுக்கு மரியாதை செய்யலாம் என்பதற்கு இஸ்லாம் வரம்பு கட்டியுள்ளது. இந்த வரம்பு மார்க்கத்தின் பெயரால் மீறப்படுகின்றது.

ஷியாக்களில் உள்ள மதத் தலைமை போல் தப்லீக் ஜமாஅத்திலும் ஹஜ்ரத்ஜீ  என்ற பெயரால் மதத் தலைமை உருவாக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் தூதருக்கு, அவர்களின் தோழர்கள் செய்யாத அளவுக்கு ஹஜ்ரத்ஜீ க்கு மரியாதை செய்யப்படுகின்றது.!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்ட போது குடி தண்ணீர் விநியோகிக்கப்படும் தண்ணீர்ப் பந்தலுக்கு வந்தார்கள். குடிக்க தண்ணீர் கேட்டார்கள். நபிகள் நாயகத்தின் பெரிய தந்தை அப்பாஸ், தண்ணீர்ப் பந்தன் பொறுப்பாளராக இருந்தார். அவர் தமது இளைய மகன் ஃபழ்லு என்பாரை அழைத்து, வீட்டிற்குச் சென்று உன் தாயாரிடம் நபிகள் நாயகத்துக்காக குடிதண்ணீர் வாங்கி வா என்று கூறினார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  இந்தத் தண்ணீரையே தாருங்கள்  எனக் கேட்டார்கள்.  அல்லாஹ்வின் தூதரே! இதில் மக்கள் தங்கள் கைகளைப் போட்டுள்ளனரே  என்று அப்பாஸ் கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பரவாயில்லை! இதனையே எனக்குக் குடிக்கத் தாருங்கள்  எனக் கேட்டு அந்தத் தண்ணீரைக் குடித்தார்கள். பின்னர் புனிதமான ஸம்ஸம் கிணற்றுக்கு வந்தார்கள். அங்கே சிலர் அந்தக் கிணற்று நீரை மக்களுக்கு வழங்கிக் கொண்டும், அது தொடர்பான பணிகளிலும் ஈடுபட்டிருந்தனர். அவர்களை நோக்கி  இந்தப் பணியைத் தொடர்ந்து செய்யுங்கள்! நீங்கள் சிறப்பான பணியையே செய்கிறீர்கள். நானும் இப்பணியைச் செய்வதால் நீங்கள் எனக்காக ஒதுங்கிக் கொள்வீர்கள் என்ற அச்சம் இல்லாவிட்டால் நானும் கிணற்றில் இறங்கி இந்தத் தோளில் தண்ணீர் சுமந்து மக்களுக்கு விநியோகம் செய்திருப்பேன்  என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 1636

மற்றவர்கள் அருந்துகிற அதே தண்ணீரைத் தமக்கும் தருமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்கின்றார்கள். தமது பெரிய தந்தையின் வீட்டிருந்து நல்ல தண்ணீர் பெற்றுக் குடிப்பது யாராலும் பாரபட்சமாக எடுத்துக் கொள்ளப்படாது என்ற நிலையிலும் மக்கள் எந்தத் தண்ணீரைப் பருகுகிறார்களோ அதையே பருகுவதில் பிடிவாதமாக இருக்கின்றார்கள். பலதரப்பட்டவர்களின் கைகள் இத்தண்ணீரில் பட்டுள்ளது என்று தக்க காரணத்தைக் கூறிய பிறகும் அந்தத் தண்ணீரையே கேட்டுப் பருகுகின்றார்கள்.

தப்லீக் ஜமாஅத்தின் இஜ்திமாக்களில் ஹஜ்ரத்ஜீக்கும் முக்கிய தலைவர்களுக்கும் சிறப்பு உணவு வழங்கப்டுகின்றது.

ஹஜ்ரத்ஜீ என்பவர் மற்றவர்களைப் போன்ற மனிதர் அல்ல என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தப்லீக் ஜமாஅத்தின் ஸ்தாபகரின் வாரிசுகள் தான் அந்தப் பதவிக்கு வர முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டு விட்டது.

ஒரு முழம் உயரத்திற்கு ஒரு குஷன் மெத்தை

உயரமாக திண்டுகள்

உடலைப் பிடித்து விடுவதற்காக விடலைப் பையன்கள்

இப்படி ராஜ தர்பார் கொடிகட்டிப் பறக்கின்றது. பிற மதங்களின் அவதாரப் புருஷர்கள் போலவும், ஆச்சார்யர்கள் போலவும் இப்பதவியைப் பெற்றவர்கள் மதிக்கப்படும் நிலை உள்ளது.

அவர் வருவதற்கு முன் பராக் சொல்ல எத்தனை பேர்? அவரைத் தொட்டு விட்டாலே பாவங்கள் பறந்து போகும் என்போர் எத்தனை பேர்?

திண்டுக்கல்லில் (1990) நடந்த தப்லீக் ஜமாஅத் மாநாட்டுக்காக போஸ்ட் கார்டுகள்,பள்ளிவாசல் போர்டுகள், ஜும்ஆ பிரசங்கங்கள் மூலம் மக்கள் அழைக்கப்பட்ட போது ஹஜ்ரத்ஜீ யின் துஆவுக்கு வாருங்கள்  என்பதே பிரதானப்படுத்தப்பட்டது. அங்கு பேசப்படும் கருத்துக்களை விட இவரது நல்லாசியே முக்கிய குறிக்கோளாகிப் போனது. இந்த துஆ நடக்கும் நேரத்திற்கு மட்டுமே புறப்படுபவர்களும் உள்ளனர்.

உலகத்தில் வாழுகின்ற – அல்லது இந்தியாவில் வாழுகின்ற முஸ்லிம்களில் இவர் தான் இறைவனுக்கு மிகவும் உவப்பானவர் என்று இவர்களுக்குச் சொல்லித் தந்தவர் யார்?

இவர் துஆ செய்தால் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற உத்திரவாதத்தை இறைவனிடமிருந்து பெற்றுத் தந்தவர் யார்?

இவரது துஆவுக்கு இருக்கும் அற்புத சக்தியை இவர்கள் எவ்வாறு கண்டுபிடித்தனர்?

இன்னும் அனேகக் குறைபாடுகள்!

* சட்டங்களை ஆலிம்கள் தான் சொல்ல வேண்டும் என்று புரோகிதத்துக்கு வக்காலத்து!

* நன்மையை ஏவி தீமையைத் தடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே தீமையைக் கண்டு கொள்ளாத நிலை!

நன்மைகளிலும் ஒன்றிரண்டு நன்மைகளை மட்டுமே சொல்லிவிட்டு மற்ற நன்மைகளை பேசாமல் மவுனம் சாதித்தல்.

இப்படி தப்லீக் ஜமாஅத்தின் தீய செயல்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

குறிப்பு : இல்யாஸ் மவ்லானா அவர்களின் தப்லீக்குக்கும் இன்று மாறியுள்ள தப்லீக்குக்கும் எந்த சம்பந்தமுமில்லை.