பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது.

நாம் இது வரை எடுத்துக் காட்டிய ஆதாரங்கள் யாவும் ஒவ்வொரு பகுதியிலும் 30 ஆம் நாள் பிறை பார்க்க வேண்டும். அவ்வாறு பிறை தென்படாத பட்சத்தில் அம்மாதத்தை 30 நாட்களாக நிறைவு செய்ய வேண்டும் என்பதை இரண்டாவது கருத்திற்கு இடமின்றி அறிவிக்கின்றன.

ஆனாலும் அந்த ஹதீஸ்களை நிராகரித்து விட்டு விஞ்ஞானக் கணிப்பின் படி தலைப்பிறையைத் தீர்மானிக்க வேண்டும் என்று சிலர் வாதிடுகின்றனர். இவர்களின் இந்த முடிவு சரியானதா என்பதை அறிவதற்கு முன்னால் இவர்கள் எடுத்து வைக்கும் வாதங்களை ஒவ்வொன்றாக அலசுவோம்.

பிறை பார்த்து நோன்பு நோற்க வேண்டும் என்ற கருத்தில் அமைந்த இத்தனை ஹதீஸ்களுமே ஆதாரப்பூர்வமானவை தான். ஆனாலும் வானியல் அறிவு வளராத காலகட்டத்தில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள். இன்றைக்கு வானியல் அறிவு பெருகியுள்ள சூழ்நிலையில் அதை ஏற்பது தான் சரி என்று அவர்கள் வாதிடுகின்றார்கள்.

வானியல் அறிவு வளர்ச்சி பெறாத காலத்துக்கு மட்டுமே பிறை பார்த்தல் பொருந்தும். இன்றைய காலத்துக்குப் பொருந்தாது என்பது உங்கள் சொந்த யூகமா? அல்லது அல்லாஹ்வோ அவனது தூதரோ இவ்வாறு கூறியுள்ளார்களா? என்று நாம் அவர்களிடம் கேட்டால் எங்கள் சொந்த யூகமல்ல. அல்லாஹ்வின் தூதர் தான் இதைக் கூறியுள்ளார்கள் என்று கூறி கீழ்க்கண்ட நபிமொழியை எடுத்துக் காட்டுகின்றனர்.

صحيح البخاري

1913 – حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا الأَسْوَدُ بْنُ قَيْسٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَمْرٍو، أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: «إِنَّا أُمَّةٌ أُمِّيَّةٌ، لاَ نَكْتُبُ وَلاَ نَحْسُبُ، الشَّهْرُ هَكَذَا وَهَكَذَا» يَعْنِي مَرَّةً تِسْعَةً وَعِشْرِينَ، وَمَرَّةً ثَلاَثِينَ

நாம் உம்மி சமுதாயமாவோம். நமக்கு எழுதவும் தெரியாது. வானியலையும் அறிய மாட்டோம். மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதாவது ஒரு தடவை 29 ஒரு தடவை 30 என்றார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1913

இது தான் இவர்கள் தமது வாதத்தை நிறுவிட எடுத்து வைக்கும் ஆதாரம்.

இந்த ஆதாரத்திலிருந்து இவர்கள் எடுத்துக் வைக்கும் வாதம் என்ன?

எழுதவும் தெரியாத வானியலையும் அறியாத சமுதாயமாக நாம் இருந்தால் பிறை பார்த்து நோன்பு வைக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அந்த நிலையை விட்டும் சமுதாயம் உயர்ந்து விட்டால் அப்போது பிறை பார்க்கத் தேவையில்லை. வானியல் அறிவின் மூலமே தீர்மானம் செய்து கொள்ளலாம். வானியல் அறிவு அன்றைக்கு இல்லாததால் தான் பிறை பார்க்கும் வழிமுறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தனர். அந்தக் காரணம் இன்று இல்லாததால் நாம் கணித்தே முடிவு செய்யலாம் என்பது தான் இவர்களின் வாதம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட காரணத்தைக் கூறி ஒரு சட்டத்தைக் கூறியிருந்தால் அந்தக் காரணம் நீங்கும் போது அந்தச் சட்டமும் நீங்கி விடும் என்ற வாதத்தை நாம் மறுக்க மாட்டோம். மறுக்கவும் கூடாது. ஆனால் இந்த ஹதீஸில் அத்தகைய காரணம் கூறப்பட்டிருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை.

இந்த ஹதீஸுக்கு தவறான பொருளைத் தருவதால் தான் இப்படி ஒரு தோற்றம் ஏற்படுகிறது.

அதை இங்கே அலசுவோம்.

இன்னா உம்மதுன் உம்மியதுன் என்பதற்கு நாம் உம்மி சமுதாயமாவோம் என்று மொழி பெயர்த்துள்ளனர். இது சரியான மொழி பெயர்ப்பு தான். (ஆனாலும் இதன் கருத்தாழத்தை இவர்கள் கவனிக்கவில்லை என்பதைப் பின்னர் விளக்கிக் காட்டுவோம்.)

அடுத்ததாக லா நக்துபு என்பதற்கு நாம் எழுதுவதை அறிய மாட்டோம்’ என்று மொழி பெயர்த்துள்ளனர். இந்த மொழி பெயர்ப்பும் சரியானது தான்.

அடுத்ததாக வலா நஹ்சுபு என்ற வாசகத்துக்கு வானியலையும் அறிய மாட்டோம் என்று மொழி பெயர்த்துள்ளனர். இவ்வாறு மொழி பெயர்த்ததன் அடிப்படையில் தான் தங்கள் வாதத்தையே இவர்கள் நிலை நிறுத்துகிறார்கள். இந்த மொழி பெயர்ப்பு தவறு என்பது நிரூபணமானால் இவர்களின் வாதமே சுக்கு நூறாக நொறுங்கிப் போய்விடும்.

நஹசுபு என்று வார்த்தை இந்த ஹதீஸில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஹஸிப என்ற மூலத்திலிருந்து பிறந்ததாகும். ஹிஸாப் என்ற சொல்லும் இதிலிருந்து பிறந்ததாகும்.

இன்றைக்குச் சிலர் ஹிஸாப் என்ற வார்த்தையை வானியல் என்ற பொருளிலும் கையாண்டு வருகின்றனர். வானியல் அறிவு பெருகிவிட்ட காலத்தில் அதற்கென ஒரு வார்த்தை அவசியம் எனக் கருதி ஹிஸாப் என்ற வார்த்தையை வானியலுக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் ஹிஸாப் என்ற வார்த்தை வானியலைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதே இல்லை. எந்த மொழியாக இருந்தாலும் ஒரு வார்த்தைக்குப் பொருள் கொள்ளும் போது அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்ட காலத்தில் அதற்கு அந்தப் பொருள் இருந்ததா? என்பதைக் கவனிப்பது அவசியம்.

இதைப் புரிந்து கொள்வதற்கு ஓர் உதாரணத்தைப் பார்ப்போம்.

துப்பாக்கி என்பது ஒரு வகையான ஆயுதம் என்பதை நாம் அறிவோம். துப்பாக்கி என்ற வார்த்தை ஒரு நூலில் பயன்படுத்தப்பட்டால் குறிப்பிட்ட அந்த ஆயுதம் என்று நாம் பொருள் செய்து கொள்வோம்.

ஆனால் திருக்குறளில் துப்பார்க்கு எனத் துவங்கும் குறளில் துப்பாக்கி என்ற வார்த்தை வருகிறது. இந்த வார்த்தைக்கு ஆயுதம் என்று பொருள் கொள்ள மாட்டோம். வள்ளுவர் காலத்தில் இந்த ஆயுதம் இருக்கவில்லை. அல்லது இந்த ஆயுதத்தைக் குறிக்க இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டதில்லை. உணவாக ஆக்கி’ என்ற பொருளில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில் திருக்குர்ஆனிலோ, நபிமொழியிலோ பயன்படுத்தப்பட்ட வார்த்தைக்குப் பொருள் கொள்ளும் போது அந்தப் பொருளில் அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்டதா என்பதைக் கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

திருக்குர்ஆனில் ஹஸிப என்ற மூலத்திலமைந்த சொற்கள் நான்கு பொருட்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

1 போதும், போதுமானது, போதுமானவன் என்பது போன்றவை முதலாவது பொருள். (உதாரணம்: அல்லாஹ் உனக்குப் போதுமானவன்.) 2.206, 2.173, 5.104, 8.62, 8.64, 9.59, 9.68,9.129, 39.38, 58.8, 65.3, ஆகிய பதினோரு இடங்களில் ஹஸிப என்ற மூலத்திலமைந்த சொற்கள் மேற்கண்ட அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

2. மனதால் நினைப்பது, கருதுவது, தீர்மானிப்பது போன்றவை இரண்டாவது பொருளாகும்.

2.214, 2.273, 3.78, 3.142, 3.169, 3.178, 3.180, 3.188, 5.71, 7.30, 8.59, 9.16, 14.42, 14.47, 18.9, 18.18, 18.102,18.104, 23.55, 23.115, 24.11, 24.15, 24.39, 24.57, 25.44, 27.44, 27.88, 29.2, 29.4, 33.20, 39.47, 43.37,43.80, 45.21, 47.29, 58.18, 59.2, 59.14, 65.3, 75.3, 75.36, 76.9, 90.5, 90.7, 104.3

இந்த வசனங்களில் எல்லாம் மனதால் நினைப்பது, கருதுவது என்ற பொருளில் ஹஸிப என்ற வேர்ச் சொல்லிலிருந்து பிறந்த வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

3.கஹ்ப் அத்தியாயத்தில் ஓர் இடத்தில் மட்டும் ஹஸிப என்ற வேர்ச் சொல்லிலிருந்து பிறந்த வார்த்தை வேதனை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

4.திருக்குர்ஆனில் இதைத் தவிர உள்ள ஏனைய இடங்களில் இந்த வார்த்தை கணக்கு, எண்ணிக்கை, கேள்வி கணக்கு என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இறைவன் விரைந்து கேள்வி கணக்கு கேட்பவன், கேள்வி கணக்கு கேட்கப்படும் நாள், உங்களிடம் கணக்கு கேட்பான், கணக்கின்றி வாரி வழங்குபவன், சூரியனும், சந்திரனும் ஒரு கணக்கின் படி இயங்குகின்றன என்பது போன்ற இடங்களில் இந்த வார்த்தை தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

2.202, 2.212, 2.284, 3.19, 3.27, 3.37, 3.199, 4.6, 4.86, 5.4, 6.52, 6.62, 6.69, 10.5, 13.18, 13.21, 13.40, 13.41,14.41, 14.51, 17.12, 17.14, 21.1, 21.47, 23.117, 24.38, 24.39, 26.39, 33.39, 38.16, 38.26, 38.39, 38.53, 39.10,40.17, 40.27, 40.40, 55.5, 65.8, 69.20, 69.26, 78.27, 78.36, 84.8, 88.26 ஆகிய 46 இடங்களில் கணக்கு, எண்ணிக்கை, கணக்குக் கேட்டல் என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. திருக்குர்ஆனின் எந்த இடத்திலும் வானியல் என்ற பொருளில் இந்த வார்த்தை பயன்படுத்தப்படவே இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை ஆராய்ந்தால் அவர்கள் எந்த இடத்திலும் ஹிஸாப் ஹஸிப போன்ற வார்த்தைகளை வானியல் என்ற கருத்தில் பயன்படுத்தியதே இல்லை.

உதாரணத்திற்கு புகாரியில் 25, 393, 1400, 2946, 6924, 7285, 103, 1500, 6979, 7197, 2412, 2641, 2718, 2933, 3221, 3415, 3700, 4115, 6392, 7489, 4666, 4712, 4939,6536, 6537, 5253, 5312, 5350, 5655, 5705, 5752, 472, 6541 ஆகிய இடங்களில் கணக்கு எண்ணிக்கை என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மற்ற இடங்களில் நன்மையை நாடி காரியமாற்றுதல், கருதுவது, போதுமானது, பாரம்பரியம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. கணக்கு, எண்ணிக்கை என்ற பொருளில் அல்லாது மேற்கண்ட பொருளில் சுமார் 125 இடங்களில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

கணக்கு, எண்ணிக்கை என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்ட இடங்களானாலும் மற்ற 125 இடங்களானாலும் எந்த இடத்திலும் வானியல் என்ற கருத்தில் பயன்படுத்தப்படவில்லை.

மேற்கூறிய இடங்களில் வீம்புக்காக யாராவது வானியல் என்று பொருள் செய்தாலும் அது பொருந்தக் கூடியதாக இருக்காது என்பதை எல்லோரும் விளங்கிக் கொள்ளலாம்.

உதாரணமாக அல்லாஹ் உங்களிடம் கணக்கு கேட்பான் என்பதற்கு வானியலைப் பற்றி கேட்பான் என்று கூற முடியாது. அது போல் அல்லாஹ் கணக்கின்றி கொடுப்பவன் என்பதற்கு வானியல் இல்லாமல் கொடுப்பான் என்று கூற முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வானியலைக் குறிப்பிட ஹிஸாப் என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை எனும் போது, ஆயிரக்கணக்கான தடவை இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டிருந்தும் ஒரு தடவை கூட வானியல் என்ற கருத்தில் பயன்படுத்தப்படவில்லை எனும் போது லா நஹ்சுபு என்ற வார்த்தை இடம் பெறும் இந்த ஹதீசுக்கு மட்டும் வானியல் அறிய மாட்டோம் என்று பொருள் கொள்வது ஏற்புடையதல்ல.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இந்த வார்த்தை வானியல் என்ற பொருளில் பயன்படுத்தப்படவில்லை என்பது மட்டுமே இவ்வாறு பொருள் கொள்வதை நிராகரிக்க ஏற்றதாகி விடும். ஆனால் இது தவிர வேறு காரணங்களாலும் வானியல் அறிய மாட்டோம்’ என்று பொருள் கொள்வது பொருத்தமற்றதாகும்.

நாம் உம்மி சமுதாயமாவோம் என்று ஹதீஸின் வாசகம் துவங்குகிறது. உம்மு என்றால் தாய் என்று பொருள். உம்மீ என்றால் தாயைச் சார்ந்திருப்பவன் என்பது நேரடிப் பொருள். தாயைச் சார்ந்திருக்கும் கைக்குழந்தைக்கு எப்படி கல்வி ஞானம் இருக்காதோ அது போன்ற நிலையில் இருக்கும் சமுதாயம் என்ற கருத்தில் உம்மி சமுதாயம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக எழுதவும் படிக்கவும் தெரியாத சமுதாயம் என்ற கருத்தில் இது பயன்படுத்தப்படும்.

நாம் உம்மி சமுதாயம் (அதாவது பாமர சமுதாயம்) என்று கூறிவிட்டு பாமரத்தனத்தை உறுதிப்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்துவது தான் பொருத்தமாக இருக்கும்.

எழுதவும், படிக்கவும் தெரியாத ஒரு சமுதாயத்திடம் போய் நீங்கள் வடிகட்டிய பாமரர்களாக இருக்கிறீர்கள். உங்களுக்கு எழுதவும் தெரியவில்லை. கம்யூட்டர் சயின்சும் தெரியவில்லை என்று யாரும் கூற மாட்டார்கள். எழுதவும் தெரியவில்லை; படிக்கவும் தெரியவில்லை என்று கூறினால் அது பொருத்தமாக இருக்கும்.

நீங்கள் பாமரர்களாக இருக்கிறீர்கள் என்று கூறிய பிறகு அதை உறுதி செய்ய சாதாரண அடிப்படை அறிவு கூட இல்லையே என்று தான் கூறுவோம்.

இது போல் தான் நாம் உம்மி சமுதாயம் என்று நபிகள் நாயகம் (ஸல்) ஆரம்பம் செய்கிறார்கள். அதாவது ஏதுமறியாத சமுதாயம் என்று ஆரம்பம் செய்கிறார்கள். எதனால் உம்மியாக இருக்கிறோம் என்பதை இரண்டு காரணங்களைக் கொண்டு நிரூபிக்கிறார்கள். ஒன்று நமக்கு எழுதத் தெரியாது. மற்றொன்று நமக்கு ஹிஸாப் தெரியாது. ஹிஸாப் என்பதற்கு வானியல் என்று பொருள் கொள்வோமானால் அது எப்படிப் பொருந்தும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்