329. ஒரு சமுதாயத்திற்கு மூன்று தூதர்கள்
இந்த வசனத்தில் (36:14) ஒரு சமுதாயத்திற்கு ஒரு நேரத்தில் முதலில் இரு தூதர்களை அனுப்பி, பிறகு மூன்றாவதாக இன்னொரு தூதரை அனுப்பியதாக அல்லாஹ் கூறுகிறான்.
மூன்று தூதர்களை அனுப்பியது ஒரு வரலாற்றுச் செய்தியாக இருந்தாலும் அதனுள் ஒரு கொள்கை விளக்கமும் அடங்கியுள்ளது.
வேதத்தைப் பெற்று மக்களுக்கு வழங்குவது தவிர வேறு பொறுப்பு எதுவும் இறைத்தூதர்களுக்கு இல்லை என்று சிலர் வாதிட்டு இறைத்தூதர்களின் விளக்கம் தேவை இல்லை என்கிறார்கள். இவர்களுக்கான மறுப்பாக இந்த வரலாறு அமைந்துள்ளது.
வேதத்தைக் கொண்டு வந்து மக்களிடம் கொடுப்பதைத் தவிர வேறு எந்தப் பணியும், அதிகாரமும் தூதர்களுக்கு வழங்கப்படவில்லை என்றால் ஒரு சமுதாயத்திற்கு ஒரு காலகட்டத்தில் ஒரே ஒரு தூதர் தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் இந்த வசனங்களில், ஒரே நேரத்தில் மூன்று தூதர்களை இறைவன் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
வேதத்தைக் கொண்டு வந்து கொடுப்பதோடு தூதர்களின் பணி முடிந்து விட்டது என்றால் ஒரு தூதரை மட்டும் அல்லாஹ் அனுப்பி இருப்பான். இரண்டு தூதர்களை அனுப்பி இருக்க மாட்டான். எவ்வளவு தான் விளக்கிக் கூறிய பிறகும் மக்கள் ஏற்காத போது மேலும் ஒரு தூதரை அனுப்பியிருக்கத் தேவையில்லை.
இறைத்தூதர்களின் பணி வேதங்களைக் கொண்டு வந்து கொடுப்பது மட்டுமல்ல என்பதை இதிலிருந்து அறிந்து கொள்கிறோம்.
வேதத்தைக் கொண்டு வந்து மக்களிடம் கொடுப்பது மட்டுமின்றி அதற்கு விளக்கம் கூறுவதும், பிரச்சாரம் செய்வதும் இறைத்தூதர்களின் பணியாக இருந்தால் மட்டுமே ஒரு சமுதாயத்திற்கு ஒரு காலகட்டத்தில் மூன்று தூதர்களை அனுப்பியிருக்க முடியும்.
மக்களின் கடினசித்தம், விளங்கும் திறனில் குறைவு போன்ற காரணங்களால் ஒரு தூதரால் இதை முழுமையாகச் செய்ய முடியாது என்று இறைவன் கருதும் போது அதிகமான தூதர்களை அனுப்பி வைக்கிறான். ஒரு வகையில் பார்த்தால் வேதத்தை விட தூதர்களுக்கு அல்லாஹ் அதிகமான முக்கியத்துவத்தை அளித்திருக்கிறான் என்பதை விளங்க முடியும்.
இது போன்று மற்றொரு காலகட்டத்தில் மூஸா நபியுடன் ஹாரூன் நபியையும் அல்லாஹ் அனுப்பி வைத்தான் என்று 25:35, 20:29,30,31 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
ஒரு காலகட்டத்தில் ஒரு சமுதாயத்திற்கு இரண்டு தூதர்கள் அனுப்பப்பட்டதை இவ்வசனங்கள் கூறுவதுடன் அவ்வாறு அனுப்பப்பட்டதற்கான காரணத்தையும் கூறுகின்றன.
வேதத்தைக் கொண்டு வந்து கொடுக்கும் வேலை மட்டும் தான் இறைத் தூதர்களுடையது என்றால் மூஸா (அலை) மட்டுமே அந்தப் பணியைச் செய்யப் போதும். வேதத்தைக் கொண்டு வந்து தருவதற்கு இரண்டு தூதர்களுக்கு எந்த அவசியமும் இல்லை.
மூஸா நபியவர்கள் தம்மால் தெளிவாக விளக்க முடியாது என்றும், தம்மை விட ஹாரூன் விளக்கமளிக்கும் திறன் அதிகம் பெற்றவர் என்றும் காரணம் கூறி, “ஹாரூனையும் என்னுடன் அனுப்பு” என்று கேட்டார்கள். அல்லாஹ்வும் அவர் கூறிய காரணத்தை ஏற்றுக் கொண்டு மூஸா நபியை விட அதிக விளக்கும் திறமை பெற்றிருந்த ஹாரூன் நபியையும் துணையாக – தூதராக – அனுப்புகின்றான்.
மக்களுக்குப் புரியும்படி விளக்குவதும், அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நீக்குவதும் இறைத்தூதர்களின் பணியாக இருந்தது என்பதை இதிலிருந்து சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.