411. குற்றம் செய்யாதவருக்குச் சிறைவாசம் ஏன்?

இவ்வசனத்தில் (12:35) சான்றுகளைக் கண்ட பின்னர் அவரைச் சிறையில் அடைக்க வேண்டும் என அவர்களுக்குத் தோன்றியது என்று கூறப்பட்டுள்ளது.

அஸீஸின் மனைவி கையும் களவுமாக கணவரிடம் மாட்டிக் கொண்டார் என்பதும், யூஸுஃப் நபியின் சட்டை பின்புறமாகக் கிழிக்கப்பட்டதைக் கண்ட பின் யூஸுஃப் குற்றமற்றவர் என்றும், தனது மனைவி தான் குற்றவாளி என்றும் அஸீஸ் முடிவு செய்தார் என்பதும் 12:28,29 ஆகிய வசனங்களில் சொல்லப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சனையில் யூஸுஃப் நபி குற்றமற்றவர் என்று ஆதாரத்துடன் முடிவு செய்து விட்டார்கள். அவரைக் குற்றவாளியாக ஆக்க எந்த ஆதாரமும் இல்லை என்று தெளிவாகத் தெரிந்து விட்டது.

அப்படியானால் ஆதாரங்களைக் கண்ட பின்னர் அவரைச் சிறையில் அடைக்க வேண்டும் என அவர்களுக்கு எப்படித் தோன்றியது? இரண்டும் முரணாக உள்ளதே என்ற சந்தேகம் எழலாம்.

இது குறித்து அடுத்தடுத்து சொல்லப்படும் செய்திகளைப் பார்க்கும் போது யூஸுஃப் நபி மீது புதிதாக இன்னொரு பழியைச் சுமத்தி பொய் சாட்சிகளை ஆதாரமாக ஆக்கி அவரைச் சிறையில் அடைத்துள்ளனர் என்று அறிய முடியும்.

அஸீஸின் மனைவி தவறாக நடக்க முயற்சித்த விபரம் ஊருக்கே தெரிந்த பின் அஸீஸின் மனைவி ஊரில் உள்ள பெண்களை அழைத்து அவர்கள் முன்னால் யூஸுஃபைக் கொண்டு வந்து நிறுத்துகிறார். அவரைப் பார்த்த பெண்கள் அவர் மனிதரே அல்ல என்று சொல்லுமளவுக்கு பேரழகு படைத்தவராக இருப்பதைக் கண்டனர். தங்கள் கைகளில் உள்ள கத்திகளால் தங்களின் கைகளை வெட்டிக் கொண்டனர் என்று 12:31 வசனம் சொல்கிறது.

நான் இவரிடம் மயங்கியதைக் குறை கூறிய நீங்களே உங்கள் கைகளை வெட்டிக் கொண்டீர்களே? நான் மதிமயங்கியதை எப்படிக் குறை கூறலாம் என்று அஸீஸின் மனைவி தனது செயலுக்கு நியாயம் கற்பித்த விபரமும் ‎எனது இச்சைக்கு இணங்காவிட்டால் அவரைச் சிறையில் அடைப்பேன் என்று அவள் சொன்ன விபரமும் 12:32 வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அஸீஸின் மனைவி சுமத்திய குற்றச்சாட்டுக்குப் பின் யூஸுஃப் நபி அந்த வீட்டிலேயே இருந்தார். சிறைக்கு அனுப்பப்படவில்லை என்று இதிலிருந்து தெரிகிறது.

புதுக் குற்றச்சாட்டு கூறி அவரைச் சிறையிலடைக்க அவள் திட்டமிட்டாள் என்பதும் இதில் இருந்து தெரிகிறது.

இறைவா இப்பெண்கள் அழைக்கும் தீய செயலில் இருந்து என்னைக் காப்பாயாக என்று யூஸுஃப் நபி செய்த துஆவும் இவ்வசனத்தில் இடம் பெறுகிறது.

”இப்பெண்களின்” என்று யூஸுஃப் நபி பன்மையாகக் கூறியதில் இருந்து அவர்களை அடைய அஸீஸின் மனைவி மட்டுமின்றி மற்றும் சில பெண்களும் கூட்டாக முயன்றுள்ளனர்; அல்லது அஸீஸின் மனைவிக்கு இணங்குமாறு அவரை வற்புறுத்தியுள்ளனர் என்று தெரிகிறது. இல்லாவிட்டால் பெண்கள் என்று பன்மையாக சொல்லத் தேவையில்லை.

அப்பெண்களின் இச்சைக்கு யூஸுஃப் நபி‎ இணங்காததால் அப்பெண்கள் கூட்டாக யூஸுஃப் நபிக்கு எதிராகப் பொய்ப் புகார் கொடுத்து, அந்தப் பொய்யான சாட்சியத்தைப் பார்த்த பிறகு தான் யூஸுஃப் நபியவர்களைச் சிறையில் அடைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். அதைத் தான் 12:35 வசனம் கூறுகிறது.

இதை 12:50 முதல் 12:52 வசனங்கள் இன்னும் உறுதிப்படுத்துகின்றன.

மன்னரின் கனவுகளுக்கு யூஸுஃப் நபி விளக்கம் கூறியதால் யூஸுஃப் நபியை விடுவித்து தன்னிடம் அழைத்து வருமாறு மன்னர் கூறினார். அதன்படி யூஸுஃப் நபி அவர்களை ஊழியர்கள் அழைத்த போது தங்கள் கைகளை வெட்டிக் கொண்ட பெண்களின் நிலை என்ன என்பதை விசாரிக்குமாறு யூஸுஃப் நபி கூறியதாக இவ்வசனங்கள் கூறுகின்றன.

அஸீஸின் மனைவி சம்மந்தப்பட்ட பழைய சம்பவம் காரணமாக யூஸுஃப் நபி அவர்கள் சிறையில் அடைக்கப்படவில்லை. கைகளை வெட்டிக் கொண்ட பெண்களும், அஸீஸின் மனைவியும் கொடுத்த மற்றொரு பொய்யான புகாரின் காரணமாகவே அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது இதிலிருந்தும் தெரிகிறது.

அதனால் தான் அப்பெண்களை விசாரிக்குமாறு யூஸுஃப் நபியவர்கள் பதில் கூறி அனுப்பியுள்ளார்கள்.

மன்னரும் அப்பெண்களை அழைத்து விசாரித்த போது யூஸுஃபை நீங்கள் மயக்கப் பார்த்த போது நடந்தது என்ன என்று கேட்கிறார். அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை என்று அப்பெண்கள் பதில் கூறினார்கள்.

இதன் பின்னர் அஸீஸின் மனைவியும் தவறு தன்னுடையது தான் என்று ஒப்புக் கொள்கிறார். இந்த மூன்று வசனங்களிலும் இந்த உண்மையை அறியலாம்.

அஸீஸின் மனைவி யூஸுஃபை இழுத்த சம்பவத்துக்காக யூஸுஃப் நபி அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தால் கைகளை வெட்டிக் கொண்ட பெண்களை விசாரிக்க அவசியம் இல்லை. ஏனெனில் அந்தச் சம்பவத்தில் அப்பெண்கள் சாட்சிகளாக இருக்கவில்லை.

எனவே இரண்டாம் முறை கூறப்பட்ட பொய்யான புகார் காரணமாகவும், அதற்கு அப்பெண்களை சாட்சிகளாக ஆக்கியதன் காரணமாகவும் தான் யூஸுஃப் நபியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். சான்றுகளைக் கண்ட பின்னர் அவரைச் சிறையிலடைக்க வேண்டும் என்று இதனால் தான் முடிவு செய்தார்கள். எனவே இதில் எந்த முரண்பாடும் இல்லை.