521.அல்லாஹ்வுடைய நான்கு பண்புகளின் விளக்கம்
இவ்வசனத்தில் 67:3 அல்லாஹ் தனது நான்கு பண்புகளைக் குறிப்பிடுகிறான்.
1, அவ்வல் (முதலானவன்)
2, ஆகிர் (முடிவானவன்)
3, ளாஹிர் (மேலானவன்)
4, பாதின் (அடித்தளமானவன்)
இந்த நான்கு பண்புகள் இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளன.
பொதுவாக ளாஹிர் என்ற சொல்லுக்கு வெளிப்படையானவன் என்று தான் பொருள் செய்யப்படுகிறது. எது கண்ணுக்கு முன்னாள் வெளிப்படையாகத் தெரிகிறதோ அதை ளாஹிர் என்பார்கள். ஆனால் அல்லாஹ் யாருடைய கண்களுக்கும் வெளிப்படையாகத் தெரிவதில்லை. அப்படியனால் ளாஹிர் என்பதற்கு இது அல்லாத வேறு அர்த்தங்கள் இருந்தால் அதைத்தான் கொடுக்க வேண்டும்.
நாம் தேடினால் வெற்றி கொண்டவன் மேல் நிலையில் உள்ளவன் என்ற பொருளும் இச்சொல்லுக்கு உள்ளதை அறியலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் துஆ செய்யும் போது நீயே ளாஹிர். உனக்கு மேல் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்கள். (முஸ்லிம் 5225)
இதன் மூலம் ளாஹிர் என்பதன் பொருள் மேலானவன் என தெளிவுபடுத்துகிறார்கள்.
அது போல் பாத்தின் என்ற சொல் அந்தரங்கமானது; பார்வைக்கு புலப்படாதது என்ற பொருளில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்தப் பண்பைக் கூறி துஆ செய்யும் போது நீயே பாத்தின் உனக்குக் கீழே எதுவும் இல்லை என்று விளக்கியுள்ளார்கள். . (முஸ்லிம் 5225)
எனவே தான் இச்சொல்லுக்கு அடித்தளமானவன் என்று நாம் தமிழாக்கம் செய்துள்ளோம்.
ஒரு பொருளுக்கு அஸ்திவாரமாக இருப்பவை தான் அப்பொருளின் இறுதியாகும். அதற்கும் கீழ் அப்பொருளின் பாகங்கள் இருக்காது. அது போல் அகில உலகுக்கும் அடித்தளமாக அல்லாஹ் இருப்பதால் அவனுக்குக் கீழேயும் எதுவும் இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர்.
நீ தான் அவ்வல் – முதலானவன். உனக்கு முன்னர் எதுவும் இருந்ததில்லை.
நீ தான் ஆகிர் – முடிவானவன். உனக்குப் பின்னர் எதுவும் இருக்காது.
நீ தான் ளாஹிர் – மேலானவன். உனக்கு மேலே எதுவும் இல்லை
நீ தான் பாதின் – அடித்தளமானவன். உனக்குக் கீழே எதுவும் இல்லை
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த நான்கு பண்புகளை விளக்கியுள்ளனர். நூல் முஸ்லிம் 5254, 5225