ஏழாம் நாளில் தான் அகீகா கொடுக்க வேண்டுமா?
அகீகா ஏழாம் நாள் கொடுக்க முடியவில்லையானால் 14, அல்லது 21 ஆம் நாட்களில் அல்லது வேறு நாட்களில் கொடுக்கலாமா? இது தொடர்பாக நபிமொழிகள் உள்ளதா?
ஏழாம் நாளில் தான் அகீகா கொடுக்க வேண்டும் என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் உள்ளது.
سنن أبي داود 2838 – حدَّثنا ابنُ المُثنَّى، حدَّثنا ابنُ أبي عَديٍّ، عن سعيدٍ، عن قتادةَ، عن الحسنِ عن سمرةَ بن جُندب، أن رسولَ الله – صلَّى الله عليه وسلم – قال: “كلُّ غلامٍ رَهينةٌ بعقيقتِه: تُذبَح عنه يومَ سابعِه، ويُحلَقُ، ويُسمَّى”
ஒவ்வொரு குழந்தையும் அகீகாவுக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது. குழந்தையின் சார்பில் ஏழாம் நாளில் ஆட்டை அறுக்க வேண்டும். அன்று முடியை மழித்து பெயர் சூட்ட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,.
அறிவிப்பவர் : சமுரா (ரலி)
நூல்கள் : அபூதாவூத், திர்மிதி, நஸாயீ, இப்னுமாஜா, அஹ்மத்
ஏழாம் நாளில் தான் அகீகா கொடுக்க வேண்டும் என்றால் ஏழாம் நாளில் தான் பெயர் வைக்க வேண்டுமா? ஏழாம் நாள் கடந்தால் பெயர் வைக்கக் கூடாதா? ஏழாம் நாள் கடந்தால் தலைமுடியை மழிக்கக் கூடாதா? என்ற சந்தேகம் எழலாம்.
இந்த மூன்று காரியங்களில் அகீகா மட்டும் தான் வணக்கம் சம்மந்தப்பட்டதாக உள்ளது. எனவே வனக்கத்தை மார்க்கம் குறிப்பிட்ட நாளில் தான் செய்ய வேண்டும்.
மற்ற இரு காரியங்களையும் ஏழாம் நாளில் செய்தால் தான் அது நபி வழியைப் பின்பற்றிய நன்மை கிடைக்கும். பெயர் சூட்டுவது அனைவருக்கும் அவசியமான ஒன்று. அந்த அவசியம் கருதி மற்ற நாட்களிலும் பெயர் வைக்கலாம். முடியைக் களைவதும் அவசியமான ஒன்று. அதை ஏழாம் நாள் தவற விட்டால் மற்ற நாட்களில் செய்யலாம். ஆனால் ஏழாம் நாளில் செய்த சுன்னத் என்ற நன்மை கிடைக்காது.
குழந்தை பிறந்த ஏழாம் நாள் அகீகா கொடுப்பதற்கே ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் உள்ளன. 14,21 ஆம் நாட்களில் கொடுப்பதற்கு பின்வரும் செய்தியை ஆதாரமாக சிலர் காட்டுகின்றனர்.
المعجم الصغير للطبراني
723 – حَدَّثَنَا عَيَّاشُ بْنُ مُحَمَّدٍ الْجَوْهَرِيُّ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا شُرَيْحُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَطَاءٍ الْخَفَّافُ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُسْلِمٍ، عَنْ قَتَادَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ قَالَ: «الْعَقِيقَةُ تُذْبَحُ لِسَبْعٍ , أَوْ أَرْبَعَ عَشْرَةَ , أَوْ أَحَدَ وَعِشْرِينَ» لَمْ يَرْوِهِ عَنْ قَتَادَةَ إِلَّا إِسْمَاعِيلُ تَفَرَّدَ بِهِ الْخَفَّافُ
அகீகாவிற்காக ஏழாம் நாள், பதிநான்காம் நாள், இருபத்தி ஒன்றாம் நாள் (ஆடு) அறுக்கப்பட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : புரைதா (ரலி)
நூல்கள் : தப்ரானீ-அவ்ஸத், தப்ரானீ-ஸகீர், பைஹகீ
இது ஆதாரப்பூர்வமான செய்தி அல்ல. இச்செய்தியில் இடம்பெறும் நான்காவது அறிவிப்பாளர் இஸ்மாயீல் பின் முஸ்லிம் என்பவர் பலவீனமானவராவார்.
எனவே ஆதாரப்பூர்வமான செய்தியின் அடிப்படையில் ஏழாம் நாள் மட்டுமே அகீகா கொடுக்க வேண்டும்.
அந்த நாளில் கொடுக்க வசதியில்லாமல் போனால் கடன் வாங்கிக் கொடுக்க வேண்டியதில்லை. இது கட்டாயமான வணக்கம் அல்ல. வசதி உள்ளவர்கள் செய்ய வேண்டிய வணக்கமாகும்.
வசதியில்லாதவர்கள் இதற்காக சிரத்தை எடுத்து விடக் கூடாது என்பதற்காக ஏழாம் நாளில் கொடுக்க வசதி இருந்தால் கொடுங்கள். இல்லாவிட்டால் வேறு நாளில் கொடுக்க அதிக சிரமம் எடுக்காதீர்கள் என்று எளிமையான வழியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளனர்.