எம்மதமும் சம்மதம் என்பது சரியா?
எல்லா மதங்களும் நல்லதைத் தான் போதிக்கின்றன. எல்லா நதிகளும் கடலில் தான் போய்ச் சேர்கின்றன. ஒரு ஊருக்குப் பல வழிகள் உள்ளன. எந்த வழியில் வேண்டுமானாலும் போகலாம் என்ற வாதம் சிலரால் எடுத்து வைக்கப்படுகின்றன.
எல்லா மதங்களும் நல்லதைத் தான் போதிக்கின்றன என்ற வாதம் பலவீனமான வாதமாகும்.
எல்லா மனிதர்களும் பிறப்பால் சமமானவர்கள். ஒருவரை விட மற்றொருவர் பிறப்பால் உயரவே முடியாது என்று ஒரு மதம் கூறுகிறது.
குறிப்பிட்ட குலத்தில் பிறந்தவன் உயர்ந்தவன் என்றும், மற்றொரு குலத்தில் பிறந்தவன் தாழ்ந்தவன் என்றும் இன்னொரு மதம் கூறுகிறது. இரண்டுமே நல்லது என்று எப்படிக் கூற முடியும்?
வேதத்தை அனைவரும் கற்க வேண்டும் என ஒரு மதம் கூறுகிறது! இன்னொரு மதம் ஒரு சாரார் மட்டுமே கற்க வேண்டும்; மற்றவர்கள் கற்றால் அவர்களின் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்கிறது? முரண்பட்ட இந்த இரண்டும் எப்படி நல்லவையாக இருக்க முடியும்?
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என ஒரு மதம் சொல்கிறது. குலத்தால் உயர்ந்தவர் ஒரு தவறு செய்தால் இலேசான தண்டனையும், அதே குற்றத்தைக் குலத்தால் தாழ்ந்தவர் செய்தால் கடும் தண்டனையும் வழங்க வேண்டுமென மற்றொரு மதம் கூறுகிறது. இவ்விரண்டுமே நல்லவை தாமா?
கல்யாணம், கருமாதி, பேய், பிசாசு என்றெல்லாம் மத குருமார்களுக்குத் தட்சிணை வழங்க வேண்டுமென ஒரு மதம் போதிக்கிறது. இன்னொரு மதம் எல்லா விதமான புரோகிதத்தையும் அடியோடு ஒழிக்கச் சொல்கிறது. இந்த இரண்டும் எப்படி நல்லவையாக இருக்க முடியும்?
கடவுளை வழிபடுவதில் நெருங்குவதில் ஒரு மதம் மனிதர்களிடையே பாரபட்சம் காட்டுவதில்லை. இன்னொரு மதம் கடவுளின் சன்னிதியைத் தாழ்ந்த குலத்தோர் நெருங்கக் கூடாது என்று கூறுகிறது.
உண்ணுதல், பருகுதல், மலம், ஜலம் கழித்தல், ஆசை, கோபம் போன்ற பலவீனங்களைக் கொண்ட மனிதன் ஒரு காலத்திலும் கடவுளாகவோ, கடவுளின் தன்மை பெற்றவராகவோ ஆக முடியாது என்று ஒரு மதம் கூறுகிறது. மனிதனைத் தெய்வமாக்கி அவன் காலில் சக மனிதனை விழச் சொல்கிறது மற்றொரு மதம்.
* விதவைக்கு விவாகமில்லை;
* பெண்களுக்குச் சொத்துரிமை இல்லை;
* கணவனே கண்கண்ட தெய்வம்; கணவனை இழந்தவள் உடன்கட்டை ஏற வேண்டும்;
* பெண்ணுடைய விருப்பமின்றிக் கல்யாணம் செய்யலாம் என்றெல்லாம் ஒரு மதம் கூறுகிறது.
* இவை அனைத்திலும் எதிரான கருத்தை இன்னொரு மதம் கூறுகிறது.
கடவுள் ஒருவனே; அவன் தேவையற்றவன்; அவனுக்குத் தாய் தந்தை இல்லை; மனைவி மக்களில்லை; உறக்கமில்லை; ஓய்வு இல்லை என்று ஒரு மதம் கூறுகிறது. இவை அனைத்திலும் மாற்றுக் கருத்தை இன்னொரு மதம் கூறுகிறது.
விபச்சாரம், ஓரினப்புணர்ச்சி, சூது, திருட்டு போதைப் பொருட்களை உட்கொள்ளுதல், லஞ்சம் போன்ற சமூகத்தைப் பாதிக்கும் எல்லாத் தீமைகளையும் ஒரு மதம் கடுமையாக எதிர்க்கின்றது. இன்னொரு மதம் இந்தத் தீமைகளைக் கடவுள்களே செய்துள்ளதாகக் கூறி அவற்றை நியாயப்படுத்த முயல்கிறது.
ஒருவர் பாவத்தை மற்றவர் சுமக்க முடியாது. அவரவர் செய்ததே அவரவர்க்கு என்று ஒரு மதம் கூறுகிறது. மற்றொரு மதமோ அனைவரின் பாவத்தையும் ஒருவரே சுமக்க முடியும் என்று கூறுகிறது.
கடவுள் ஒருவனே என்று ஒரு மதம் கூறுகிறது. கடவுள் மூவர் என்றும் கடவுள்கள் பலர் என்றும் மற்றொரு மதம் கூறுகிறது.
இப்படி ஆயிரமாயிரம் முரண்பாடுகள்! முரண்பட்ட இவை அனைத்தும் நல்லவை தாம் என்பதை அறிவுடையோர் எப்படி ஏற்க இயலும்?
எல்லா நதிகளும் கடலில் கலப்பது உண்மை தான். நதிகளுக்கு பகுத்தறிவு இல்லை. அவை சங்கமிக்கும் கடலுக்கும் பகுத்தறிவு இல்லை. சாக்கடைக்கும் கடலில் கலப்பதில் வெட்கமில்லை. கடலுக்கும் அதை உணரும் அறிவு இல்லை.
அறிவும், சிந்திக்கும் திறனுமில்லாத நதிகள் போன்றவர்களா மனிதர்கள்?
மனிதர்களாகிய நமக்கு அறிவு இருக்கிறது. நாம் யாரிடம் சேரப் போகிறோமோ அந்த இறைவனுக்கு நம்மை விட அதிகமாக அறிவு இருக்கிறது.
சாக்கடைகளைக் கடல் ஏற்றுக் கொள்வது போல் சாக்கடை மனிதர்களைக் கடவுள் ஏற்க மாட்டான்.
எதை உண்பது? எதைக் குடிப்பது? எதை அணிவது? எதில் குளிப்பது என்ற விஷயத்திலெல்லாம் அறிவைப் பயன்படுத்தும் மனிதன் எந்தக் கொள்கையைத் தேர்வு செய்வது என்பதில் அறிவைச் செலுத்த வேண்டாமா? அறிவும் உணர்வுமற்ற நதிகளுடன் தன்னை ஒப்பிட்டுக் கொண்டு தன்னைத் தானே தாழ்த்துவது என்ன நியாயம்?
ஒரு ஊருக்குப் பல வழிகள் இருக்கலாம். இதை அறிவு படைத்த யாரும் மறுக்க முடியாது. இங்கே எந்த வழியைத் தேர்வு செய்வது என்பது மட்டும் பிரச்சினையில்லை. எந்த ஊருக்குச் செல்வது என்பதும் முக்கியமான பிரச்சினை. வடக்கே உள்ள ஊரை நினைத்துக் கொண்டு தெற்கில் உள்ள ஊரை நோக்கிச் சென்றால் நினைத்துச் சென்ற ஊரை அடைய முடியாது.
சமத்துவம், பகுத்தறிவு, நேர்மை, ஒழுக்கம், சாந்தி ஆகிய ஊர்களுக்குச் செல்ல விரும்பும் மனிதன், தீண்டாமை, மூட நம்பிக்கை, அநீதி, ஒழுக்கக் கேடு, குழப்பம் ஆகிய ஊர்களை நோக்கிப் பயணம் செய்ய முடியுமா? பயணம் செய்தால் விரும்பிய ஊர்களை அடைய முடியுமா?
எல்லா மதங்களும் ஒரே சட்டத்தை, ஒரே அடிப்படைக் கொள்கையை வேறு வேறு வார்த்தையால் போதித்தால் ஒரு ஊருக்குப் பல வழிகள் என்று கூற முடியும். கொள்கை, சட்டம், அடிப்படை ஆகியவை வெவ்வேறாக இருக்கும் போது ஒரே ஊர் என்று எப்படிக் கூற முடியும்?