ஜும்மாவுக்கு முன் சுன்னத் என கூறும் ஹதீஸ் பலவீனமனதா

நீ இங்கே வருவதற்கு முன்னால் என்ற வாசகம் ஷாத் என்று அல்பானி கூறியுள்ளதால் ஜும்மாவுக்கு முன் சுன்னத உண்டு என்ற வாதம் தவறு சிலர் கூறுகிறார்களே அது சரியா?

அனீஸ் அஹ்மத், பேர்ணாம்பட்

பதில்

அல்பானி ஷாத் எனக் கூறிய காரணம் சரியானதல்ல.

ஷாத் என்றால் பல அறிவிப்புகளுக்கு எதிராகவும் முரணாகவும் ஒரு அறிவிப்பு இருக்க வேண்டும். ஆனால் இந்த அறிவிப்பு முரணானதாக இல்லை.

இமாம் குத்பா ஓதும் போது யாரேனும் வந்தால் என்ற அறிவிப்பும்

நீ இங்கே வருவதற்கு முன் தொழுது விட்டாயா என்பதும் ஒன்றுக் கொன்று முரண் இல்லை. இதை பின்னர் விளக்கியுள்ளோம்.

மேலும் ஜும்மாவுக்கு முன் சுன்னத் உண்டு என பல ஆதாரங்கள் உள்ளன. அதையும் கவனத்தில் கொண்டால் இது ஷாத் அல்ல. அல்பானி கூறுவது தான் ஷாத் ஆகும் என்பதை அறியலாம்.

سنن أبي داود

1128 – حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، أَخْبَرَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، قَالَ: «كَانَ ابْنُ عُمَرَ يُطِيلُ الصَّلَاةَ قَبْلَ الْجُمُعَةِ، وَيُصَلِّي بَعْدَهَا رَكْعَتَيْنِ فِي بَيْتِهِ، وَيُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَفْعَلُ ذَلِكَ»

இப்னு உமர் (ரழி) அவர்கள் ஜும்ஆவுக்கு முன்னுள்ள தொழுகையை நீட்டித் தொழுவார்கள். ஜும்ஆவுக்குப் பின்னால் தமது வீட்டில் இரண்டு ரக்ஆத்கள் தொழுபவர்களாகவும் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு தொழுதிருப்பதாகவும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: நாபிஃஉ

நூற்கள்: அபுதாவூத், இப்னு ஹிப்பான்.

ஜும்ஆவுக்கு முன்னுள்ள தொழுகையை என்ற சொல்லில் இருந்து ஜும்ஆவுக்கு முன்னால் ஒரு தொழுகை உண்டு என்பதை சந்தேகமின்றி அறியலாம். அது தஹிய்யத் மஸ்ஜித் அல்ல என்பதையும் அறியலாம்.

صحيح البخاري

731 – حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ حَمَّادٍ قَالَ حَدَّثَنَا وُهَيْبٌ قَالَ حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ عَنْ سَالِمٍ أَبِي النَّضْرِ عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اتَّخَذَ حُجْرَةً قَالَ حَسِبْتُ أَنَّهُ قَالَ مِنْ حَصِيرٍ فِي رَمَضَانَ فَصَلَّى فِيهَا لَيَالِيَ فَصَلَّى بِصَلَاتِهِ نَاسٌ مِنْ أَصْحَابِهِ فَلَمَّا عَلِمَ بِهِمْ جَعَلَ يَقْعُدُ فَخَرَجَ إِلَيْهِمْ فَقَالَ قَدْ عَرَفْتُ الَّذِي رَأَيْتُ مِنْ صَنِيعِكُمْ فَصَلُّوا أَيُّهَا النَّاسُ فِي بُيُوتِكُمْ فَإِنَّ أَفْضَلَ الصَّلَاةِ صَلَاةُ الْمَرْءِ فِي بَيْتِهِ إِلَّا الْمَكْتُوبَةَ

கடமையான தொழுகைகள் தவிர எனைய தொழுகைகளை வீட்டில் தொழுவதே சிறப்பு என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நூற்கள்: புகாரி, முஸ்லிம்.

அதற்கேற்ப ஜும்ஆவுக்கு முன்னுள்ள தொழுகையை நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டிலேயே தொழுதுள்ளார்கள் என்றே நாம் புரிந்து கொள்ள வேண்டும்..

صحيح ابن حبان

2455 – أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو الْغَزِّيُّ،قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ سَعِيدٍ الْقُرَشِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُهَاجِرٍ، عَنْ ثَابِتِ بْنِ عَجْلَانَ، عَنْ سُلَيْمِ بْنِ عَامِرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ صَلَاةٍ مَفْرُوضَةٍ إِلَّا وَبَيْنَ يَدَيْهَا رَكْعَتَانِ»

கடமையான எந்தத் தொழுகைக்கு முன்னாலும் இரண்டு ரக்அத்துக்கள் இல்லாமலில்லை என்பது நபிமொழி.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரழி)

நூல்: இப்னு ஹிப்பான்.

ஜும்ஆத் தொழுகை கடமையான தொழுகை என்பதால் அதற்கு முன்னால் இரண்டு ரக்அத்துக்கள் உண்டு என அறியலாம்.

ஜும்மாவுக்கு முன் சுன்னத் உண்டு என்பதற்கு இதுவும் ஆதாரமாகும்.

صحيح مسلم 

103 – (728) وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ النُّعْمَانِ بْنِ سَالِمٍ، عَنْ عَمْرِو بْنِ أَوْسٍ، عَنْ عَنْبَسَةَ بْنِ أَبِي سُفْيَانَ، عَنْ أُمِّ حَبِيبَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهَا قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَا مِنْ عَبْدٍ مُسْلِمٍ يُصَلِّي لِلَّهِ كُلَّ يَوْمٍ ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً تَطَوُّعًا، غَيْرَ فَرِيضَةٍ، إِلَّا بَنَى اللهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ، أَوْ إِلَّا بُنِيَ لَهُ بَيْتٌ فِي الْجَنَّةِ» قَالَتْ أَمُّ حَبِيبَةَ: «فَمَا بَرِحْتُ أُصَلِّيهِنَّ بَعْدُ» وقَالَ عَمْرٌو: «مَا بَرِحْتُ أُصَلِّيهِنَّ بَعْدُ»، وقَالَ النُّعْمَانُ مِثْلَ ذَلِكَ.

யார் தினமும் பன்னிரண்டு ரக்அத்துக்கள் தொழுகிறாரோ அவருக்கு சுவர்க்கத்தில் மாளிகை எழுப்பப்படும்.

நூற்கள்: முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா.

கடமையான தொழுகைக்கு முன்னும் பின்னும் தொழ வேண்டிய தொழுகையைப் பற்றிக் கூறும் போது தினமும் பன்னிரண்டு ரக்அத்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஜும்ஆவுக்கு முன்னர் சுன்னத் இல்லை என்று கூறினால் தினமும் பன்னிரண்டு ரக்அத்துக்கள் என்பது ஜும்ஆ தினத்தில் இல்லாமல் போய்விடும்

இல்லாமல் போய்விடும். மற்ற நாட்களில் பன்னிரண்டு ரக்அத்களும், ஜும்மா நாளில் பத்து ரக்அத்களும் தான் வரும்.

ஜும்மாவிலும் முன் சுன்னத் இரண்டு ரக்அத்கள் உண்டு என்பதற்கு இதுவும் ஆதாரமாகும்.

ஒவ்வொரு கடமையான தொழுகைக்கு முன்னும் இரண்டு ரக்அத்துக்கள் உள்ளன என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டார்கள். ஜும்ஆவுக்கு அது பொருந்தாது என்றால் நேரடியான ஆதாரம் காட்ட வேண்டும்.

அடுத்து சர்ச்சைக்குரிய அந்த ஹதீஸை எடுத்துக் கொள்வோம். நீ இங்கே வருவதற்கு முன் என்பது வேறு ஹதீஸ்களுடன் முரண்படுகிறதா என்றால் முரண்படாமல் விளங்க முடியும்.

நாம் சுட்டிக் காட்டிய இந்த மூன்று ஹதீஸ்களுடன் அது மிகவும் ஒத்துப் போகிறது. நபி (ஸல்) அவர்களும் வீட்டில் தொழுதுள்ளதால் வீட்டில் தொழுதாயா? என்று கேட்பது பொருத்தமாக உள்ளது. இந்த நான்கும் சேர்ந்து ஜும்ஆவுக்கு முன் ஸுன்னத் உண்டு என்பதை ஐயத்திற்கிடமின்றி நிரூபிக்கின்றன.

வந்த மனிதரிடம் நபி (ஸல்) அவர்கள் வருவதற்கு முன் தொழுதுவிட்டாயா? எனக் கேட்கிறார்கள். அவர் இல்லை என்கிறார். நபி (ஸல்) அவர்கள் எழுந்து தொழச் சொல்கிறார்கள். இது ஒரு ஹதீஸ்.

அதே மனிதரிடம் நீ எழுந்து இரண்டு ரக்ஆத்துக்கள் தொழு! அவ்விரண்டையும் சுருக்கமாகத் தொழு! என்று கூறிவிட்டு உங்களில் எவரேனும் இமாம் குத்பா ஓதும் போது வந்தால் அவர் சுருக்கமாக இரண்டும் ரக்த்துக்கள் தொழட்டும் என்றார்கள். இது மற்றொரு ஹதீஸ்.

இரண்டையும் ஒன்றாக இணைத்தால் எந்த முரண்பாடுமே இல்லை.

உங்களில் யாரேனும் என்பது பொதுவாக இருந்தாலும் கூறப்பட்ட சந்தர்ப்பத்தைப் பொருத்து அது யாரைக் குறிக்கிறது என்பது மாறுபடும்.

நீ வீட்டிலேயே தொழுது விட்டாயா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டு அவர் இல்லை என்று கூறிய பின் அவரை எழுந்து தொழச் சொல்லிவிட்டு இதைக் கூறியிருக்கிறார்கள். வீட்டிலேயே தொழாமல் வந்த காரணத்துக்காக நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதால் அந்த நிலையில் வரக் கூடியவரையே அது குறிக்கும்.

உங்களில் யாரேனும் வந்தால் – அதாவது இவரைப் போல் வீட்டில் தொழாமல் வந்தால் – என்று பொருள் கொண்டால் முரண்பாடு ஏதுமில்லை.

எந்தக் காரணத்துக்காக எந்தச் சந்தர்ப்பத்துக்காகக் கூறப்பட்டது என்பதைக் கருத்தில் கொள்ளாமல் உங்களில் யாரேனும் வந்தால் என்பதை ஆராய்வதால் தான் முரண்பாடாகத் தோன்றுகிறது. அதைக் கருத்தில் கொண்டால் முரண்பாடாகத் தோன்றாது.

நீ வருவதற்கு முன் என்ற ஹதீஸை ஷாத் எனச் சொல்பவர்கள் நாம் எடுத்துக் காட்டிய மற்ற ஹதீஸ்களுக்கு உரிய பதில் அளிப்பதில்லை. அந்த ஹதீஸை ஷாத் என ஏற்றுக் கொண்டாலும் நாம் எடுத்துக்காட்டிய மற்ற ஆதாரங்கள் மூலம் ஜும்மாவுக்கு முன் சுன்னத் உண்டு என்பது நிரூபணமாகும்