திருக்குர்ஆனில் இறைவன் தன்னைப் பற்றி தன்னிலையாகக் கூறும்போது மிகச் சில இடங்களில் மட்டுமே “நான்’ எனக் கூறுகிறான். பெரும்பாலான இடங்களில் “நாம்’ என்றே கூறுகிறான்.
தனி நபர்களும் தம்மைப் பற்றி இவ்வாறு கூறும் வழக்கம் பல்வேறு மொழிகளில் உள்ளது போல் அரபு மொழியிலும் உள்ளது.
“இது என் வீடு” என்று கூறும் இடத்தில் “இது நம்ம வீடு” என்று கூறுகிறோம். மற்றவர்களுக்கும் அந்த வீட்டில் பங்கு உண்டு என இதைப் புரிந்து கொள்ள மாட்டோம்.
சொந்த மகனைக் கூட மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தும் போது “நம்ம பையன்’ என்று கூறுவதுண்டு. இதை நேரடியான பொருளில் யாரும் கூறுவதுமில்லை. புரிந்து கொள்வதுமில்லை. இதுபோல் தான் “நாம்’ “நம்மை’ “நம்மிடம்’ என்பன போன்ற சொற்கள் “நான்’ என்ற கருத்தில் திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளன.