காரணம் கூறாமல் பெண்கள் குலா பெற முடியுமா?
கேள்வி:
கணவனைப் பிடிக்காத மனைவி அதற்குரிய காரணத்தைச் சொல்ல வேண்டியதில்லை என்று தவ்ஹீத் ஜமாஅத் கூறுகிறது. ஆனால் தஃப்ஸீர் இப்னு கஸீரில், தகுந்த காரணமின்றி கணவனிடம் விவாகரத்து கோரிய பெண்ணுக்கு சுவர்க்கத்தின் வாடை தடுக்கப்பட்டு விட்டது என்று திர்மிதி, அஹ்மத், அபூதாவூதில் ஹதீஸ் இடம் பெறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குலா பெற்று கணவனைப் பிரிந்த பெண்கள் நயவஞ்சகர்கள் ஆவர் என்ற ஹதீஸ் அஹ்மதில் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸ்களின் படி குலா பெறும் பெண்கள் தகுந்த காரணத்தோடு தான் குலா பெற வேண்டும் என்று தெரிகின்றதே?
பதில் :
நீங்கள் சுட்டிக்காட்டும் ஹதீஸ்களில் முதல் ஹதீஸ் இதுதான்:
أَنْبَأَنَا بِذَلِكَ بُنْدَارٌ أَنْبَأَنَا عَبْدُ الْوَهَّابِ أَنْبَأَنَا أَيُّوبُ عَنْ أَبِي قِلَابَةَ عَمَّنْ حَدَّثَهُ عَنْ ثَوْبَانَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَيُّمَا امْرَأَةٍ سَأَلَتْ زَوْجَهَا طَلَاقًا مِنْ غَيْرِ بَأْسٍ فَحَرَامٌ عَلَيْهَا رَائِحَةُ الْجَنَّةِ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ وَيُرْوَى هَذَا الْحَدِيثُ عَنْ أَيُّوبَ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ أَبِي أَسْمَاءَ عَنْ ثَوْبَانَ وَرَوَاهُ بَعْضُهُمْ عَنْ أَيُّوبَ بِهَذَا الْإِسْنَادِ وَلَمْ يَرْفَعْهُ- ترمذي
حَدَّثَنَا إِسْمَاعِيلُ حَدَّثَنَا أَيُّوبُ عَنْ أَبِي قِلَابَةَ عَمَّنْ حَدَّثَهُ عَنْ ثَوْبَانَ قَالَ قَالَ رَسُولُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّمَا امْرَأَةٍ سَأَلَتْ زَوْجَهَا الطَّلَاقَ مِنْ غَيْرِ مَا بَأْسٍ فَحَرَامٌ عَلَيْهَا رَائِحَةُ الْجَنَّةِ- احمد
திர்மிதீ 1108 மற்றும் அஹ்மத் 21345 ஆகிய நூற்களில் இது இடம் பெற்றுள்ளது.
எந்த ஒரு ஹதீஸும் ஆதாரப்பூர்வமானதாக ஆக வேண்டுமானால் அறிவிப்பாளர் யார்? அவரது பெயர், தகுதி ஆகியவை தெரிய வேண்டும். ஆனால் இந்த ஹதீஸ் இந்த விபரத்துடன் பதிவு செய்யப்படவில்லை.
ஸஃப்வான் யாருக்குச் சொன்னாரோ அவர் எனக்கு அறிவித்தார் என்று அபூகிலாபா என்பார் இதனை அறிவிக்கிறார். தனக்குச் சொன்னவர் யார் என்ற விபரத்தைக் கூறவில்லை. மாறாக சஃப்வானிடம் கேட்டவர் எனக்கு அறிவித்தார் என்றே கூறுகிறார். அவர் யார் என்ற விபரம் இல்லாததால் இது முற்றிலும் பலவீனமான ஹதீஸாகும்.
நீங்கள் சுட்டிக்காட்டும் இரண்டாவது ஹதீஸ் இதுதான்:
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ أَنْبَأَنَا الْمَخْزُومِيُّ وَهُوَ الْمُغِيرَةُ بْنُ سَلَمَةَ قَالَ حَدَّثَنَا وُهَيْبٌ عَنْ أَيُّوبَ عَنْ الْحَسَنِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ الْمُنْتَزِعَاتُ وَالْمُخْتَلِعَاتُ هُنَّ الْمُنَافِقَاتُ قَالَ الْحَسَنُ لَمْ أَسْمَعْهُ مِنْ غَيْرِ أَبِي هُرَيْرَةَ قَالَ أَبُو عَبْد الرَّحْمَنِ الْحَسَنُ لَمْ يَسْمَعْ مِنْ أَبِي هُرَيْرَةَ شَيْئًا
இதே கருத்தில் இடம் பெற்றுள்ள நஸாயீ 3407, அஹ்மத் 8990 ஆகிய ஹதீஸ்களும் பலவீனமானவையாகும்.
அபூஹுரைரா (ரலி) சொன்னதாக ஹஸன் அறிவிப்பதாக இதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஹஸன் என்பார் அபூஹுரைராவிடமிருந்து எதையும் செவியுற்றதில்லை. இதைப் பதிவு செய்த திர்மிதி அவர்களே இதைக் குறிப்பிடுகிறார்கள்.
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا مُزَاحِمُ بْنُ ذَوَّادِ بْنِ عُلْبَةَ عَنْ أَبِيهِ عَنْ لَيْثٍ عَنْ أَبِي الْخَطَّابِ عَنْ أَبِي زُرْعَةَ عَنْ أَبِي إِدْرِيسَ عَنْ ثَوْبَانَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْمُخْتَلِعَاتُ هُنَّ الْمُنَافِقَاتُ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ وَلَيْسَ إِسْنَادُهُ بِالْقَوِيِّ وَرُوِيَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ أَيُّمَا امْرَأَةٍ اخْتَلَعَتْ مِنْ زَوْجِهَا مِنْ غَيْرِ بَأْسٍ لَمْ تَرِحْ رَائِحَةَ الْجَنَّةِ
இதே கருத்தில் இடம் பெற்றுள்ள திர்மிதீ 1107 ல் இடம் பெற்றுள்ளது.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் மூவர் பலவீனர்களாக உள்ளனர்.
இந்தக் கருத்தில் பல்வேறு பலவீனமான ஹதீஸ்கள் இடம் பெற்றிருந்தாலும் அஹ்மதில் 21404வது ஹதீஸ் மட்டும் சரியான அறிவிப்பாளர் தொடருடன் இடம் பெற்றுள்ளது.
பெண்ணோ, ஆணோ விவாகரத்து கோருவதாக இருந்தால் அதற்குத் தகுந்த காரணம் இருக்க வேண்டும். தகுந்த காரணமின்றி விவாகரத்து கோரினால் அது குறித்து மறுமையில் அல்லாஹ் விசாரிப்பான் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால் அந்தக் காரணத்தை சபையில் சொல்ல வேண்டுமா? என்பது தான் பிரச்சனை. தகுந்த காரணம் இருக்க வேண்டும் என்பதும், அதை சொல்லத் தேவையில்லை என்பதும் ஒன்றுக்கொன்று முரணானதல்ல.
தகுந்த காரணமின்றி விவாகரத்துக் கோரிய பெண்ணுக்கு சொர்க்கத்தின் வாடை தடுக்கப்பட்டு விட்டது என்று அந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் கணவனைப் பிடிக்காததற்கான காரணத்தை ஜமாஅத் தலைவரிடம் சொல்லித் தான் விவாகரத்து கோர வேண்டும் என்று கூறுவதற்கு இந்த ஹதீஸில் ஆதாரம் இல்லை.
காரணத்தைச் சொல்லத் தேவை இல்லை என்று நாம் குறிப்பிட்டதற்கு இந்த ஹதீஸ் முரணாக இல்லை.
ஒரு பெண் தன் கணவரை விட்டுப் பிரிவதற்காக விவாகரத்து கோருகிறாள் என்றால் அதற்குத் தகுந்த காரணம் இருக்கவும் செய்யலாம்; இல்லாமலும் இருக்கலாம். தகுந்த காரணத்துடன் விவாகரத்து கோரியிருந்தால் அவள் மீது குற்றமில்லை. தகுந்த காரணம் இல்லாமல் விவாகரத்து கோரியிருந்தால் அப்போது விவாகரத்து வழங்கப்படும் என்றாலும் அவள் அல்லாஹ்விடத்தில் குற்றவாளியாகி விடுகின்றாள்.
அந்தக் காரணத்தை அவள் சொல்லித் தான் விவாகரத்து கோர வேண்டும் என்ற நிபந்தனை இந்த ஹதீஸிலோ, அல்லது வேறு ஹதீஸ்களிலோ காணப்படவில்லை.
தகுந்த காரணமின்றி விவாகரத்து கோரினால் அந்தப் பெண்ணுக்கு விவாகரத்து வழங்கக் கூடாது என்று சொல்லாமல் சொர்க்கத்தின் வாடை தடுக்கப்பட்டு விட்டது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதிலிருந்தே, அவள் அந்தக் காரணத்தை வெளியில் சொல்லத் தேவையில்லை என்பதை விளங்கலாம்.